Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாக்குகளின் நாடகம்...!


   டியே வைதேகி தெரியுமா உனக்கு சங்கதி என்று நீட்டி முழங்கினாள் மீனாட்சி சூரியன் முளைச்சும் முளைக்காத நேரத்துல நீ வந்து வேற புதிர்போடுரியா? ராவுல முழுக்க தூக்கம் இல்லாமல் கண்ணுல எரிச்சல் தாங்கல வந்த சங்கதிய சொல்லித்தொல என்றாள் வைதேகி 

வைதேகியின் கோபமும் எரிச்சலும் மீனாட்சியை எதுவும் செய்யவில்லை ஏதோ கனவுலகில் இருப்பவள் போல பேச ஆரம்பித்தாள் ஒன்பது ஓட்ட ஒடம்புக்குள்ள உசுரு ஓடுற வரையும்தாண்டி மனுசனோட ஆட்டம் பாட்டம் எல்லாமும் காத்து கப்புன்னு அடங்கி பூட்டா அரசனா இருந்தாலும் பொணம் தாண்டி என்று தத்துவம் பேசினாள் 

அடி என்னடி இது புது கூத்தா இருக்கு நேத்து ராத்திரி வரைக்கும் மருமகளுக்கு போயில காம்பு கொடுக்காதவ விடிஞ்சதும் வேதாந்தம் பேசுறா என்று ஆச்சரியப்பட்ட வைதேகி கன்னத்தில் ஒத்துக்கிருந்த வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டு சும்மா பூடகமா பேசாதே சொல்லவந்தத சொல்லு என்றாள் 


ஊரல்லாம் வட்டிக்கு கொடுத்து கொள்ளையடிச்சாளே செல்லம்மா கிழவி அவளுக்கு நேத்து ராத்திரி நெஞ்சுவலியாம் டவுனு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க பொழைக்கிறது கஷ்டமாம் என்று துக்க செய்தியை சொன்ன மீனாட்சியின் குரலில் சோகம் இல்லை மகிழ்ச்சி இருந்தது 

அடியாத்தி அப்படியா சங்கதி நேத்து சாயந்திரம் கிழவியை பார்த்தேன் சும்மா மண்ணுல புடுங்குன மரவள்ளி கிழங்க்காட்டும் இருந்தா அதுக்குள்ள நோவு வந்துடிச்சா இதுதான் மனுசபய ஆட்டம் என்பது கடவுள் நினைச்சால் நிமிச நேரத்துல எல்லாத்தையும் தலைகீழா போட்டுடுவான் வைதேகியின் குரலில் சற்று வருத்தம் இருந்தது 

அட நீ என்ன பொசக்கெட்டவளா இருக்கே வேறு யாருக்கும் நோவு வந்த வேதனபடலாம் இந்த கிழவிக்கு எல்லாம் சீக்கு வந்தா ஊருக்கே தீவாவளி தானடி எத்தனை பேர் வைத்தெரிச்ச்சலை வாரி கொட்டியிருப்பா இவா செத்தா ஒன்னும் குடிமுழுகி போகாது மாசம் மூணு வேளையும் மழைதான் வரும் என்ற மீனாட்சி திண்ணையில் அமர்ந்தாள் 


நீ சொல்லுரதிலேயும் நெசம் இருக்கு நம்ம ராமசாமி நாயக்கரு வட்டிக்கு வாங்குனத கொடுக்க முடியல என்று அவர் பொண்டாட்டி பொணத்த கூட தூக்க விடல செல்லம்மா கிழவி பண்ணிய அநியாயம் ஒன்னா ரண்டா மனுஷன் அடிக்கிற கூத்த ஆண்டவன் பார்த்திக்கிட்டு தானேயிருக்கிறான் சும்மா விட்டுடுவானா இது வைதேகி 

ஊர் காரங்கள விடு சொந்த மறுமகள என்ன பாடுபடுத்தினா நகைய குறைச்சி கொண்டுவந்தான்னு வைத்து பிள்ளகாரின்னும் பாக்காம நெருப்பு வச்சி கொளுத்தினாளே படுபாதகி அந்த பாவம் சும்மா விடுமா வீட்டுல பத்துபாத்திரம் தெச்ச அன்னக்கிளி மகள மகன்காரன் கையை பிடிச்சு இழுத்தத மறச்சி அந்த சின்ன பொண்ணு மேல தேவடியா பட்டம் கட்டி விட்டாளே அதுக்கெல்லாம் கூலி கொடுக்க வேண்டாமா இது மீனாட்சி 

செல்லம்மா பண்ணிய அட்டுவழியத்திற்கு இந்த கூலி போதாது நெஞ்சு வலிக்குன்னு பொசுக்குன்னு போயிட்டா என்ன அர்த்தம் இருக்கு அடுத்தவங்க பட்ட கஷ்டத்த கொஞ்சம் கூட உணர வேண்டாமா இந்த கிழவியெல்லாம் லக்குவான் அடிச்சி கையும் காலும் இழுத்து படுக்கையில கிடக்கணும் பீ மூத்திரம் அள்ள ஆளில்லாமல் நாரி போகனும் உடம்பெல்லாம் புண்ணுவந்து புழுத்து சாகனும் அப்பத்தான் மத்தவங்களுக்கும் புத்தி வரும் இது வைதேகி 



நானும் பார்கிறேன் நல்ல மனுஷன் தான் நீ சொன்ன மாதிரி அவதிப்பட்டு சாகுறான் இந்த மாதிரி கூறுகெட்ட ஜென்மங்கள் எல்லாம் சுகமா கஷ்டமே இல்லாமல் நிமிச நேரத்தில செத்து போறாங்க ஆண்டவனுக்கு கண் இருக்கோ இல்லியோ தெரியல இருந்தாலும் இந்த படுபாதகி போயிட்டா ஊரு நல்லா இருக்கும் இது மீனாட்சி 

நாம நெனச்சப்படி எல்லா நடந்திட்டா கடவுள் எதுக்கு அவன் கணக்கு யாருக்கு புரியும் ஒரு வேள செத்த பிறகு இவுங்களேல்லாம் நரகத்துல எண்ணெய் சட்டியில போட்டு வருத்தெடுப்பானோ என்னவோ யாருக்கு தெரியும் இது வைதேகி 

இவர்கள் பேச்சு இப்படி நீண்டு கொண்டு போகும் நேரத்தில் தெருவில் சிறு சலசலப்பு இரண்டு பெண்களும் தெருவுக்கு வருகிறார்கள் நான்கைந்து பேர் வேகமாக போகிறார்கள் அதில் ஒரு பெண்ணை நிறுத்தி வைதேகி கேட்டாள் என்ன சங்கதி செல்லம்மா கிழவி செத்துப்போன தகவல் வந்தாச்சா இல்லன்னா பொணத்தேயே கொண்டு வந்துட்டாங்களா என்று அதற்கு அந்த பெண் வாய மூடு செல்லம்மா பாட்டிக்கு ஒன்னும் ஆகல சும்மா வாய்வு கோலாருலதான் நெஞ்சு வலி வந்திருக்கு ஜம்முன்னு பாட்டி வீட்டுக்கு வந்துட்டாங்களாம் நான் போயி பாக்க போறேன் நீயும் வரியா என்று கூறியவாறே வேகமாக நடந்து போனாள் 


மீனாட்சிக்கும் வைதேகிக்கும் ஒன்றும் புரியவில்லை இது என்ன அதிசயம் நாம ஒன்னு நினைச்சா வேறு ஒன்னு நடக்குது என்று வியந்தாவாறு செல்லம்மா கிழவி வீட்டை நோக்கி இவர்களும் நடக்க ஆரம்பித்தார்கள் 

வீட்டு வரண்டாவில் போடபட்டிருந்த கட்டிலில் மீது செல்லமா கிழவி கல்லுபிள்ளையார் போல் உட்கார்திருந்தாள் அதை பார்த்த மீனாட்சி ஓடி சென்று கிழவியை கட்டிபிடித்து கொண்டாள் அம்மா மகராசி உனக்கு நெஞ்சுவலின்னு தெரிஞ்சவுடனே என் நெஞ்சே நின்னு போச்சு இன்னும் நூறு வருஷம் நீ நல்லா இருக்கணும் இந்த நோவு கண்ணேறு கழிப்பா போகட்டும் என்று கிழவிக்கு நெட்டி முறித்தாள் 

வைதேகியால் மட்டும் சும்மா இருக்க முடியுமா நீங்க எத்தனை பேருக்கு தான தருமம் செஞ்சியிருக்கிங்க உங்களுக்கு கஷ்டம் வருமா கடவுளுக்கு கண்ணில்லியா என்ன நீங்க ஒரு கொறையும் இல்லாம இனி இருப்பிங்க என்று தன்பங்குக்கும் கிழவியை வாழ்த்தினாள் 

இதற்கெல்லாம் அசருகிற ஆளா செல்லம்மா கிழவி அவள் மீனாட்சியை பார்த்து நான் நல்லா இருப்பேன்னு எனக்கு தெரியும் நீ எதுக்கு ரண்டுமாசமா வட்டி பணம் தரல நாளைக்கு கண்டிப்பா கொண்டுவந்து கொடுத்துடு என்று கடுமையான குரலில் பேசினாள் கிழவி மீனாட்சியின் தலை தானாக தாழ்ந்தது சரிங்கம்மா கண்டிப்பா கொண்டு வாரேன் என்று முணுமுணுத்த உதட்டிற்குள் கிழவியை இன்னும் எப்படி தாஜா பண்ணலாம் என்று நாக்கு யோசித்தது 

வைதேகின் சிந்தனை இதுக்குத்தான் கிழவி சாகனும்ன்னு இந்த பாவி நினைச்சளா என்று ஓடியது நல்லவேளை நான் வட்டிகட்டவில்லை என்று எல்லோர் முன்னாலும் கிழவி கேட்கவில்லை என்று சந்தோசமும் பட்டது

Contact Form

Name

Email *

Message *