Store
  Store
  Store
  Store
  Store
  Store

நம்மை தவிர அனைவருமே முட்டாள்கள்...


   வார்த்தை என்பதை வெறும் சத்தமாக ஒலியாக மட்டுமே யாரும் அதிகமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் காரணம் அப்படி எடுத்துக்கொள்ளும் அளவிற்கு பலருக்கு பக்குவம் கிடையாது ஒருவனை புத்திசாலி என்று போற்றுவதும் வார்த்தை தான் முட்டாள் என்று திட்டுவதும் வார்த்தை தான் இந்த இரண்டு விதமான வார்த்தைகளுமே ஒரு மனிதனை உயர்த்துவதும் இல்லை தாழ்த்துவதும் இல்லை ஆனால் இது பலருக்கு தெரிவதுமில்லை 

மேதாவி அறிவாளி அறிஞன் என்று பாராட்டப்படும் போது நமது மனம் சந்தோசத்தால் துள்ளிக்குதிக்கிறது ஆகா எப்பேர்பட்ட பாராட்டுதலுக்கு உரியவன் நான் என்று எண்ணி எண்ணி பூரித்து போகிறோம் இந்த பாராட்டு மொழிகள் பல திசையிலிருந்தும் நம்மை வந்து தீண்டும் போது நாம் அறியாமலே ஒரு வித மயக்கம் ஒரு வித கெளரவம் நம்மை ஆட்டுவிக்கிறது நான் புத்திசாலி நான் புத்திசாலி நான் மட்டும் தான் புத்திசாலி என்று பித்து பிடித்தவன் போல் ஆனந்த கூத்தாடுகிறோம் நம்மை தவிர அனைவருமே முட்டாள்கள் மூடர்கள் அசடர்கள் பிழைக்க தெரியாத பிறவிகள் என்று ஏளனமாக நினைக்கிறோம் 


அதே வேளை நீ மூடன் எதையும் அறிந்து கொள்ள வகையறியாத அசடன் காரியங்களை செய்ய முடியாமல் கால்கடுக்க ஒடியலையும் கோமாளி என்று மற்றவர்கள் நம்மை பார்த்து கொடிய வார்த்தைகளை அள்ளிவீசும் போது ஐயோ என்று சுருண்டு விழுந்து விடுகிறோம் நான் முட்டாளா? எதையும் செய்ய தெரியாத அறிவிலியா என்று அழுது புலம்புகிறோம் யாருமே என்னை பாராட்ட மாட்டேன் என்கிறார்கள் அதனால் நான் நிச்சயம் சிந்திக்க தெரியாத ஜென்மமாகத்தான் இருக்க வேண்டும் எல்லோரையும் விட நான் கீழ்பிறப்பு அனைவருக்கும் தொண்டு செய்தே வாழ வேண்டிய அடிமை என்று எண்ணி எண்ணி தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு உயிரோடு இறந்து போய் நடமாடுகிறோம் 

இந்த நிலை சரியானது தானா? முறையானது தானா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் அப்போது உங்களுக்கு புகழ்வதை கண்டும் இகழ்வதை கண்டும் மனதை மாற்றிக்கொள்வது அறியாமை என்பது தெளிவாகத்தெரியும் நீ ஒரு மனிதன் கடவுள் படைப்பில் மிக உன்னதமான சிருஷ்டி நீ உன்னால் வானை அளக்க முடியும் மீனை அளக்க முடியும் சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிய முடியும் கொத்தும் பாம்பையும் சீறி தாக்கும் அரிமாவையும் அடக்கி ஆழ முடியும் அப்படி பட்ட உன்னை ஒரு சிறிய வார்த்தை கீழே தள்ளி நெஞ்சில் மிதிப்பதையும் ஆணவத்தால் மதிமயங்கி நடப்பதையும் அனுமதிக்க வேண்டுமா? வேண்டாம் பாராட்டு மொழி கேட்டு மயங்குவதும் பதைக்க வைக்கும் சொல் கேட்டு கலங்குவதும் வெற்றியாளனுக்கு அழகல்ல 


சிலர் தமிழ் மொழி உயர்ந்தது என்கிறார்கள் சிலர் வடமொழி தான் சிறந்தது என்கிறார்கள் வேறு சிலரோ இரண்டு மொழிகளுமே எல்லைகளுக்குள் அடங்கி போனது ஆங்கிலம் மட்டும் தான் உலகத்தை ஆழ தகுதி படைத்தது என்கிறார்கள் என்னை கேட்டால் வயல்வெளியில் கதிரறுத்து பதர் நீக்கி மூட்டைகளில் கட்டிவைக்கபட்டுள்ள நெற்பயிரை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு ஒரு மாட்டு வண்டி எப்படி பயன்படுகிறதோ அப்படி தான் மனித சிந்தனையை வெளிப்படுத்த மொழி பயன்படுகிறது மொழி என்பது பயணத்துக்கு உதவும் ஒரு வாகனமே தவிர அது வாழ்க்கையாகாது சிந்தனை தான் வாழ்க்கை என்பேன் 

போற்றுதலும் இகழ்வதும் மொழியை பயன்படுத்தி வெளிப்படுத்தும் சத்தங்கள் தான் அதை சத்தமாக கருதாமல் சத்தாக கருதினால் வளர்ந்து நிற்கும் உறுதியான பனைமரம் கூட பொடிபொடியாக உதிர்ந்து போகும் என்னை பாராட்டவில்லை அதனால் நான் செத்து போகப் போகிறேன் என்பதும் எல்லோரும் என்னை பாராட்டுகிறார்கள் அதனால் மற்றவர்கள் வாழ்வதே வீண் என்று கருதுவதும் குப்பை மேட்டை மலைமுகடாக எண்ணுகின்ற மாயாவாத கற்பனையாகும் 


இது எப்படி என்றால் தமிழ்வாழ வேண்டும் தமிழ்பண்பாடு வாழ வேண்டும் என்று விரும்புகிறவன் தமிழனை பட்டினி போட்டு சாகடித்தால் எவ்வளவு பொறுப்பற்றவனோ அவ்வளவு பொறுப்பற்ற செயலாகும் உன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் ஊராரின் அங்கிகாரம் இருந்தால் தான் அடுத்தடுத்து காரியங்களை செய்வேன் என்று நீ எதிர்பார்த்து நின்றால் எதையும் செய்ய முடியாதவனாக ஆகிவிடுவாய் 

அதாவது தமிழ் வாழவேண்டுமென்றால் தமிழன் வாழவேண்டும் நீ வாழ வேண்டுமென்றால் மாற்றானின் வார்த்தையை கேட்டு மயங்காமல் இருக்க வேண்டும் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனதை பார்த்துக்க நல்லபடி என்று தெய்வீக கவிஞன் கண்ணதாசன் சொல்வதை மறக்காமல் இரு மாமனிதனாக மாறுவதற்கு இது சிறந்த வழி 

நீ செய்வது உன் மனசாட்சியை உறுத்த கூடாது கடவுளின் முன்னால் குற்றவாளியாக உன்னை நீ நிறுத்திக்கொள்ள கூடாது என்ற உறுதி மட்டும் உனக்குள் இருந்தால் போதுமானது பாராட்டு பதக்கம் வந்தாலும் சரி கல்லடியும் சொல்லடியும் கிடைத்தாலும் சரி உன் பாதையில் தடையில்லாமல் உன்னால் நடக்க முடியும் மனசாட்சிக்கும் கடவுளுக்கும் கட்டுப்பட்டவன் எப்போதுமே தவறு செய்ய மாட்டான் தவறியும் நடக்க மாட்டான் இது ஒன்று தான் வெற்றி பாதை.


Contact Form

Name

Email *

Message *