Store
  Store
  Store
  Store
  Store
  Store

பேஸ்புக் பேய் புக்கான கதை...!


தாமரை திரி போட்டு 
தடாகம் போல் நெய்விட்டு 
குளத்தங்கரை தெய்வத்திற்கு 
குலவழக்க நோம்பிருந்து 
கடவுள் தந்த பரிசாக 
வந்து பிறந்த என் மகனே !

கன்னத்தில் குழி விழ 
கடைவாயில் அமுது வடிய 
கள்ளம் இல்லாமல் சிரித்து 
என் கலிதோஷம் தீர்த்தவனே 
மார்மீதும் தோள்மீதும் 
மாறி மாறி ஆடி என்
மலடு பட்டம் நீக்கிய 
மன்னாதி மன்னனே 

புத்தக பை தோள்மீது தொங்க 
தண்ணீர் புட்டி உன் தளிர்கரம் எந்த 
அப்பாவின் சைக்கிள் முன் 
அம்பாரியில் அமர்ந்தவனே 
கால்சட்டை மேல்சட்டை 
கால்களில் தோல் செருப்பு 
புதுசாக பளபளக்க 
தகப்பனின் தோள்மீது 
ஊர்வலம் போனவனே 

கருவேலம் முள்ளிற்குள் 
ஆத்தாவும் அப்பனும் 
செம்மண்ணில் புல்பரித்து 
செம்பரியாடு வளர்த்த பணத்தில் 
கல்லூரி போனவனே 
கலெட்டர் துறையாக நீ வந்து 
கண்முன்னே நிற்ப்பாய் என 
கனவுகாண வைத்தவனே 

வெள்ளை சட்டையும் 
வெள்ளைக்கார சூட்டும் 
கழுத்தை இறுக்கி பிடிக்கும் 
கருப்புநிற டையும்
கச்சிதமாய் போட்டு நீ 
காரில் ஏறி வேலைக்கு 
கனதூரம் போகணுமுன்னு 
வைத்ததுக்கு சோறு போட்ட 
வயகாட்ட வித்துக் கொடுத்தோம் 

அடுத்த ரயில் பிடிச்சு 
அப்பனோடு ஆத்தாவையும் 
கூட்டிகிட்டு போவானென்று 
பல்லாடும் வயசில் இந்த 
பாவி மக்க காத்திருந்தோம் 
பெத்த புள்ள உழச்சி ரெண்டு 
பச்சரிசி தந்தாலும் அது 
பரலோகம் தருகின்ற 
அமுதாகும் 
வரமாகும் 

கைபுடிச்சு நடந்த புள்ள 
வழிகாட்ட வருவானென்று 
வாசல்கதவை திறந்து வச்சி 
வருசம் மூணு காத்திருந்தோம் 
வந்து நின்றாய் என் மகனே 
வாய் கட்டிய பிணமாக 

பேஸ்புக் என்ற ஒரு '
பேய்புக் வழியாக 
காதலித்த பெண்ணொருத்தி 
கைகழுவி விட்டாள் என்று 
கயிற்றில் தொங்கினாயே என் மகனே 

சுருக்கு கயிறு மாட்டும் முன்பு 
பருப்பு சாதம் தந்த
பாசக் கயிறை மறந்தாயா
முகந்தெரியா காதலுக்கு 
முடிவுரை எழுதும் முன்பு 
அம்மா அப்பா முகத்தை 
அரை நிமிஷம் நினைத்தாயா 

நீ நிழலில் நடந்துபோக 
எங்கள் முதுகை குடையாக 
வெயிலுக்கு காட்டியதை 
அவள் மெயிலுக்கு கத்திருக்குமுன் 
கணநேரம் சிந்தித்தாயா 

கற்றாழை காட்டிற்குள் 
அடைகாக்கும் கெளதாரியை
முட்டையோடு தூக்கி தின்னும் 
முழு நீள பாம்பு போல் 
எங்கள் சிதைக்கு ஏற்ற இருந்த கொள்ளியை 
தனக்கே வைத்துக்கொண்ட தங்கமே 

பெற்றவனை விடவா உன் 
பேஸ்புக் உறவு பெருசாச்சி 
நிழலை நிஜமென்று 
நிஜத்தை கொன்றுவிட்டு 
நீயும் செத்தாயே 
இது ஒரு சாவா...? 
ச்சி! ச்சி! இது ஒரு அவமானம் !!

உன்னை பெற்றதற்கு 
கல்லூரலை பெற்றிருந்தாலும் 
முட்டி முட்டி சாகலாம் 
அழுத கண்ணீர் ஆறலாம்
நீ இருந்த கருப்பைக்குள் 
நெரிஞ்சுமுள் வளர்ந்திருந்தால் கூட 
அப்பனுக்கு வென்னீர் வச்சு 
அவன் வலியை தீத்திருப்பேன் 

எதற்கும் உதவாத நீ பிறந்தது ஏன்
எதற்கும் உதவாமல் நீ இறந்தது ஏன்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *