Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜாதகப்படி நோய் தீருமா...?


    அன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். எங்களுக்கு திருமணமாகி பதினான்கு வருடங்களுக்கு பிறகு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இப்போது வயது மூன்றாகிறது. அவன் நல்ல சுறுசுறுப்பானவன். எதையும் சட்டென்று புரிந்து கொள்வதில் வல்லவன். வயதுக்கு ஏற்ற குறும்புத்தனமும், மழலை விளையாட்டும் அவனிடம் நிறையவே உண்டு. அவனை பார்த்துக் கொண்டிருந்தாலே எங்கள் துயரங்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடும்.

இப்படிப்பட்ட எங்கள் குழந்தைக்கு, ஒரு தீராத பிரச்சனை இருக்கிறது. அடிக்கடி அவனுக்கு சளி பிடிக்கும். தொடர்ச்சியாக தும்முவான். அடுக்கடுக்கான தும்மலை தாங்க முடியாமல் அவனது பிஞ்சு முகம் கன்றி போய்விடும். கண்கள் பயங்கரமாக விரிவடைந்துவிடும். சில நேரம் மூச்சிறைப்பால் மிகவும் சிரமப்படுவான். ஈரத்தை தொட்டுவிட்டாலே நோய் தாக்கிய கோழிக்குஞ்சு போல் ஆகி விடுவான். மழை மற்றும் பனிக்காலங்களில் அவன் அனுபவிக்கும் கொடுமைக்கு அளவே இருக்காது. மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைவது தான் எங்களது முக்கிய பணியாக இருக்கும்.

பணத்தை பணம் என்று பாராமல் குழந்தைக்காக செலவு செய்கிறோம். யார் எந்த மருத்துவரை பற்றிச் சொன்னாலும், அவரிடம் ஓடிப் போய் சிகிச்சை பெறுகிறோம். மருந்தும், பணமும் செலவாகிறதே தவிர பயன் என்பது இல்லவே இல்லை. டாக்டர்கள் புரியாத பாஷையில் தெரியாத நோய்களை அடுக்கடுக்காக சொல்கிறார்கள்.

எங்களுக்கு பயமாக இருக்கிறது. எங்கள் பிள்ளை படும் வேதனையை காண சகிக்க முடியவில்லை. தவமிருந்து பெற்ற பிள்ளை அடிக்கடி நோய்வாய்பட்டு துடிப்பதை எந்த தாய் தகப்பனால் தாங்கிக்கொள்ள இயலும். உங்களை பற்றியும், உங்களது பரந்த ஞானத்தை பற்றியும் எனது தோழி சொன்னாள். அதனால், உங்களை கடவுள் மாதிரி நம்பி முறையிடுகிறேன். எங்கள் பிள்ளை இந்த நோயில் இருந்து விடுபடுவானா? சராசரியான வாழ்க்கை அவனுக்கு இருக்கிறதா? எங்கள் துயரம் தீருமா? எப்போது தீரும் என்பதை தயவு செய்து விளக்கமாக சொல்ல வேண்டுகிறேன். உங்கள் பதிலுக்கு காத்திருப்பேன்.


                                                                                                                  மைதிலி சுப்பிரமணியன்,சென்னை

       பொதுவாக, ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், எங்கோ வெகு தொலைவில் இருக்கின்ற கிரகங்கள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும். எதற்காக அது ஒருவனுக்கு நன்மையையும், இன்னொருவனுக்கு தீமையும் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள். அந்த கேள்வி சரியானதாகவும் நமக்கு தோன்றும்.

ஆனால், ஒரு விஷயத்தை மிகச் சுலபமாக நாம் மறந்துவிடுகிறோம். பூமி மேல்பரப்பின் மீது உயிர்கள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும், அயன வெளியில் கிரகங்கள் ஒழுங்கு முறையில் சுற்றுவதற்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு வித ஈர்ப்பு சக்தி காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானம் சொல்வதை நாம் அறிவோம்.

பூமியில் உள்ள தாவரங்கள், ஒளிச்சேர்க்கையினால், தங்களது உணவை தாங்களே சமைத்துக் கொள்வதை விஞ்ஞானம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து காட்டுகிறது. சூரிய ஒளியை சின்னஞ்சிறிய செடிகள் எப்படி ஈர்த்து கொள்கிறதோ? அதற்கு எந்த விதமான சக்தி தாவரங்களுக்குள் மறைந்திருந்து செயலாற்றுகிறதோ அதே போன்ற சக்தி அல்லது அதை விட சற்று மேம்பட்ட சக்தி மனித சரீரத்துக்குள்ளும் மறைவாக இருந்து செயலாற்றுகிறது.

அப்படிப்பட்ட மறைபொருளான ஈர்ப்பு சக்தி, கிரகங்களின் சுபம் மற்றும் அசுப தன்மைகளை மனிதனுக்குள் கொண்டு வந்து, பல காரியங்களை செய்கிறது. செய்விக்கிறது. சரி அப்படி செய்வதாக இருக்கட்டும். எதனால், இந்த கிரகங்கள் மனிதனுக்கு நல்லதையும், கெட்டதையும் செய்ய வேண்டும். அதன் மூல காரணம் என்ன? என்ற அடுத்த கேள்வி நம் மனதிற்குள் எழும்.

இந்த இடத்தில் நமது விஞ்ஞான புத்தியை சற்று தூரவைத்து விட்டு, மெய்ஞானத்தை நாட வேண்டும். உலகில் வேறு எந்த மதமும் சொல்லாத அல்லது அறியாத கர்ம கொள்கையை நமது இந்து மதம் சொல்கிறது. இந்த கர்ம கொள்கைக்கு எளிமையான விளக்கம் சொல்ல வேண்டுமென்றால், ஒரு செயலுக்கான பலனை பெறுவது என்று சொல்லலாம். அதாவது, நன்மை செய்தால், நன்மையான பலனும் தீமை செய்வதினால் தீமையான பலனும் அடைவது இதன் அடிப்படையாகும்.

மனிதன் தனது வாழ்நாளிலும், வாழ்வுக்கு முந்தைய நாளிலும், நல்லதும் கெட்டதுமாக பல செயல்களை செய்கிறான். அதனுடைய விளைவுகளையும் வாழ்நாளை தாண்டியும் அனுபவிக்கிறான். அப்படி என்றால் நன்மை செய்தவனுக்கு நன்மையையும், தீமை செய்தவனுக்கு தீமையும் வகையறிந்து வழங்க சக்தி மிக்க நீதிபதி வேண்டும். அந்த நீதிபதியை தான் ஆத்திகன் கடவுள் என்கிறான். நாத்திகன் இயற்கை என்கிறான்.

நீதிபதியின் தீர்ப்பை செயல் வடிவமாக்க சில புறக்கருவிகள் வேண்டும். அதே போலவே, கடவுளின் தீர்ப்பையும் மனிதனுக்கு கொண்டு வந்து சேர்க்க சில புறக்கருவிகள் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் தான் ஜோதிட சாஸ்திரம் நுழைகிறது. கடவுளின் தீர்ப்பை செயல்படுத்தும் கருவிகளே கிரகங்கள் என்கிறது. அதாவது கர்மாவின் பயனை மனிதனுக்கு நேரடியாக கொடுப்பது கிரகங்கள் தான்.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது, மனிதன் அனுபவிக்கும் எல்லாவிதமான அனுபவங்களுக்கும், கிரகங்கள் என்பது கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் காரணமாக இருக்கிறது. அதாவது, மனிதனுக்கு நோய் வருவதற்கும், விலகுவதற்கும் கூட கிரகங்கள் காரணமாக இருப்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

சின்னஞ்சிறிய குழந்தை என்ன பாவம் செய்தது? அதற்கு ஏன் இத்தகைய பிணிகள் வந்து துயரத்தை கொடுக்க வேண்டும் என்று நமது இளகிய பணம் சிந்திக்கும். இப்போது கண்ணெதிரே குழந்தையாக இருக்கும் இந்த சிறிய குழந்தை நேற்று அதாவது முற்பிறப்பில் பெரியவனாக இருந்து தான் மாண்டிருக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் செய்த வினைகளுக்கான பலனை இப்போது அனுபவிக்க வேண்டிய சூழல் இருக்கலாம். அதன் விளைவுதான் பல குழந்தைகள் நோய்களாலும், வறுமையாலும் துன்பப்படுவது.

திருமதி மைதிலி சுப்ரமணியன் குழந்தை அனுபவிக்கும் வேதனைக்கும் இது தான் காரணம் என்று ஜாதகம் சொல்கிறது. குழந்தையின் ஜனன ஜாதகத்தின் சந்திரன் வலுவிழந்து மாந்தியால் பார்க்கப் படுகிறான். இதனால் தான் சீதள சம்பந்தமான நோய் அந்த குழந்தையை வாட்டி வதைக்கிறது. மேலும், அதன் ஜாதகப்படி வரப்போகும் குரு பெயர்ச்சி நல்ல பலனை கொடுக்க இருப்பதினால், கர்மாவினால் ஏற்பட்டிருக்கும் இந்த நோய் இன்னும் மூன்று மாதத்திலிருந்து படிப்படியாக குறையத் துவங்கி விடும்.

]இருந்தாலும், குழந்தை தற்போது அனுபவிக்கும் வேதனையிலிருந்து விடுபட, ஒரு எளிய வழிமுறை இருக்கிறது. அந்த வழிமுறை நமது சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டதாகும். அதை பின்பற்றினால் குழந்தையின் கஷ்டம் ஓரளவு குறைய ஆரம்பிக்கும்.

அதாவது நூறு கிராம் ஓமத்தை லேசாக இடித்து, அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும். அது நூறு மில்லி அளவு வற்றியவுடன் வடி கட்டி அரைலிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி பதம் வந்ததும் இறக்கி வைத்து, ஐம்பது கிராம் கற்பூரத்தை பொடி செய்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு, மூச்சிறைப்பு மற்றும் சளித் தொல்லை ஏற்படும் போது, மேலே நான் சொன்ன எண்ணெயை மார்பிலும், முதுகிலும் போட்டு நன்றாக அழுத்தாமல், அனல் பறக்க தேய்த்து விட வேண்டும். இது உடனடியாக நல்ல பலனை தரும். மேலும் இந்த எண்ணெய் ஆஸ்துமா, நெஞ்சுவலி, முதுகுவலி போன்றவைகளுக்கு நல்ல நிவாரணத்தை தரக்கூடியது.

சித்தர்கள் குறிப்பிட்ட இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி பாருங்கள். இப்போது கிரகங்கள் நல்ல நிலையில் வர ஆரம்பித்து இருப்பதினாலும், இந்த மருந்தின் வேகத்தாலும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Contact Form

Name

Email *

Message *