Store
  Store
  Store
  Store
  Store
  Store

மன நோய் தரும் கிரகங்கள்...!


   ன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். மிகுந்த மன வேதனையில் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். எனது மூத்த மகளை மிகவும் கஷ்டப்பட்டு மருத்துவ படிப்பில் சேர்த்தேன். ஒரு வருட காலம் நன்றாகத்தான் படித்தாள். எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டாம் வருடத்திலிருந்து பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டது. சரிவர படிப்பில் கவனம் செலுத்தவில்லை. வகுப்பு தோழிகள், விடுதி தோழிகள் என்று யாரிடமும் அவள் அதிகமாக பேசவில்லை. விடுமுறையில் வீட்டுக்கு வந்தாலும், தனி அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொள்வார். கலகலப்பாக பேசி திரிந்த அவள் திடீர் என்று மவுனமாகி விட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தீடிரென ஒரு நாள், அவள் கல்லூரியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இயல்புக்கு மாறாக அவள் இருப்பதாகவும், உடனடியாக வந்து அழைத்து செல்லும் படியும் சொன்னார்கள். அதிர்ச்சியால் எங்களுக்கு கை-கால் ஓடவில்லை. உடனடியாக சென்று அவளை வீட்டுக்கு கூட்டிவந்து விட்டோம். முழுமையான மன நோயாளியாகவே அவள் இருந்தாள். என்னென்னவோ வைத்தியம் பார்த்தோம். சில பேர் பேய் பிடித்திருக்கலாம் என்றார்கள். அதையும் பார்த்தோம் எந்த பயனும் இதுவரை இல்லை.

கடந்த இரண்டு வருடங்களாக மருத்துவமனை, கோவில், மந்திரவாதிகள் என்று அலைந்து கொண்டிருக்கிறோம். சில ஜோதிடர்களையும் பார்த்தோம். இப்போது சரியாகும், அப்போது சரியாகும் என்றார்கள். பலன் தான் இன்னும் கிடைத்த பாடில்லை. இதில் வேதனை என்னவென்றால் அவள் எதற்காக மனநோயாளியாக ஆனால் அவள் மனதை அந்த அளவு பாதித்த சம்பவம் என்ன என்பது எங்களுக்கும் தெரியவில்லை. அவளோடு நெருங்கி பழகிய பெண்களுக்கும் தெரியவில்லை.

ஆண் பிள்ளைக்கு பைத்தியம் பிடித்தாலே பெரிய கஷ்டம். நம் சமூகத்தில் பெண் குழந்தைக்கு மன நோய் என்றால் எவ்வளவு பெரிய துன்பம் என்று உங்களுக்கு தெரியும். இவள் மட்டும் தான் ஒரே குழந்தை என்றால் பரவாயில்லை. இவளுக்கு கீழும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவளால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதை அறிந்து தாங்க முடியாத வேதனையில் இருக்கிறோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. இவள் எதற்காக மனநோயாளி ஆனாள் என்றும், இவளது மன நோய் தீருமா தீராத என்றும் அறிந்து கொள்ள ஆசைபடுகிறேன். எனவே குருஜி அவர்கள் தயவு செய்து விளக்கம் தர வேண்டுகிறேன். என் மகள் குணமாவதற்கு எதாவது வழி இருந்தாள் சொல்லுங்கள். ஆயுள் முழுவதும் உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன்.
இந்துமதி,குடியாத்தம்


    லகிலேயே மிக கொடிய நோய்கள் என்று புற்று நோயும், எய்ட்ஸும் சொல்லப்படுகிறது. என்னை கேட்டால் அவைகளை விட கொடியது மன நோய் என்பேன். காரணம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவனுக்கு கூட, தனக்கு நேர்ந்தது என்னவென்று தெரியும். தான் அனுபவிக்கும் துயரத்தை இன்னதென்று மற்றவர்களுக்கு சொல்லமுடியும். ஆனால் மன நோய் தன்னையும் தெரியாது, தன்னைச் சுற்றி இருக்கும் எதுவுமே தெரியாது. அப்படி பட்ட கொடிய நோய் உங்கள் இளம் மகளை பீடித்துள்ளது. மிகவும் வருந்த தக்கது. ஆனாலும், இறைவன் கருணை உள்ளவன். நிச்சயம் எதாவது ஒரு நல்வழியை காட்டி உங்களது துயரத்திற்கு முடிவு கட்டுவான்.

என்ன காரணத்தால் மன நோய் உங்களது மகளுக்கு வந்தது என்று தெரியவில்லை என்று சொல்கிறீர்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் குழந்தைகளிடம் ஏற்படும் சிறிய மாற்றத்தை கூட தாய் அரை நொடியில் கண்டுபிடித்து விடுவாள். தகப்பனால் கூட கண்டுபிடிக்க முடியாது. நோய் அவளை முழுமையாக தாக்குவதற்கு முன்பு, அவள் நடத்தையில் ஏற்பட்ட சின்ன சின்ன மாறுதல்களை நன்றாக நினைத்து பாருங்கள். ஓரளவு உங்களால் காரணத்தை கணித்து விட முடியும்.

உங்கள் மகள் ஜாதகத்தில் புதனும், கேதுவும் இணைந்து இருக்கின்றன. இப்படி கிரக இணைப்பு ஏற்படும் ஜாதகர்கள் காதல் வலையில் வீழ்வார்கள் என்று கெளசிக நாடி ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இந்த ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, உங்கள் மகள் தன்னை விட வயதில் மிகவும் மூத்த யாரோ ஒரு ஆண்மகனை காதலித்து இருப்பதும், அதை வெளிப்படுத்த முடியாமலும், மனதிற்குள் போட்டு அழுத்தி இருக்க வேண்டும். என்றும் தெளிவாக தெரிகிறது.

அதோடு ஜாதக சிந்தாமணி என்ற நூல், குரு சூரியன் சனி ஆகிய கிரகங்கள் ஆறாம் அதிபதியோடு கூடி இருந்தால் மன நோயின் தாக்கம் இருக்கும் என்றும் சொல்கிறது. துரதிருஷ்டவசமாக உங்கள் பெண்ணின் ஜாதக அமைப்பு அப்படியே உள்ளது.

ஆனால், இந்த ஜாதகத்தில் குருவும் - கேதுவும் நல்ல நிலையில் இருப்பதனால், மன நோய் சிறிது காலம் இருந்து, பிறகு விலகும் என்று ஜாதக அலங்காரம் சொல்கின்றது. இதன் அடிப்படையிலும் எனது அனுபவத்தின் வாயிலாகவும் உங்களது மகளின் கஷ்ட காலம் மிக விரைவில் விலகும் என்று சொல்ல முடியும்.

உங்கள் மகள் ஜாதகத்தை மிக நுணுக்கமாக ஆராயும் போது, உங்கள் குடும்பத்தில் பித்ரு தோஷம் இருப்பதாக தெரிகிறது. எனவே உடனடியாக அந்த தோஷம் நீங்க தக்க பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். அதுவும் இல்லாமல் வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி காசிக்கு சென்று அங்குள்ள கால பைரவரை வணங்கி, மந்திர கயிறு வாங்கி உங்கள் மகளுக்கு வலது கையில் கட்டுங்கள். காலபைரவரின் அருளாலும், மருந்துகளின் துணையாலும், உங்கள் மகள் நவம்பர் மாதத்திற்குள் பரிபூரண குணமடைவாள். கவலைப்படாதீர்கள். பெரிய, பெரிய மருத்துவர்களாலும், மருந்துகளாலும் தீராத பிரச்சனையை ஒரு மந்திர கயிற்றால் தீருமா என்று நீங்கள் நினைக்கலாம். எனது அனுபவ உண்மை என்னவென்றால் மருத்துவர்கள் மருந்து மட்டும் தான் தருகிறார்கள். இறைவன் தான் நோயை குணப்படுத்துகிறான்.

Contact Form

Name

Email *

Message *