Store
  Store
  Store
  Store
  Store
  Store

முந்திரியில் முடிந்த பொங்கல் !


பொத்தி பொத்தி பொக்கிஷமாய் வளர்த்த 
முத்தான முந்திரி மூட்டோடு சாய்ந்ததம்மா!
கத்திவிழி மங்கைக்கு கைவளையல் கொடுத்ததும் 
புத்தியுள்ள பிள்ளைக்கு புதுபள்ளி தந்ததும் 
பச்சரிசி பொங்கலிட பால்பசு ஈன்றதும் 
நச்சரிக்கும் மனைவிக்கு நகைநட்டாய் வந்ததும் 
முந்திரி மரம்தந்த மூலதனம் என்பதை 
எப்படி மறப்பேன் எப்படியினி வளர்ப்பேன் 
இப்படியொரு காற்றுவீசி என்கதையை முடித்ததே! 

நாற்றுநட்டு பயிர்வளரும் நல்ல தென்றால் 
காற்றுவீசி உயிர்வளரும் காற்று வீசியதால் 
கண்ணிர் பெருகியதை கண்டேன் மலைத்து 
மண் மீது சரிந்தேன் மரமாய் நானும் 

மாற்றாடை கட்ட மனமில்லை துணியில்லை
காற்றாட நடக்க கால்களில் பலமில்லை 
செங்கரும்பு வாங்கி சிரிக்கும் குழந்தைக்கு 
இங்கிதமாய் கொடுக்க என்கையில் பணமில்லை 
புதுப்பானை வாங்கி புத்தரிசி வெல்லமோடு 
புதுக்காலை வேளையில் புனித சூரியனுக்கு 
பொங்கல் வைக்க பொங்குகிறது இளமனது 
செங்கல் சூளையாய் சிறிய வாழ்க்கை 
வெந்து போனதனால் வெறுமைதான் பொங்குகிறது 

முந்தும் துயரத்தை முழங்காலில் கட்டிவைத்து 
உலகம் படைத்த உத்தமன் திருவடியை 
அலகிலா விளையாட்டை ஆனந்தமாய் செய்பவனை 
பணிந்து கேட்கிறேன் பரம்பொருளே! எங்கள் 
குனிந்த தலையை குட்டியே வைப்பதுன்
ஆசையா? விதியென்று ஆடும் நாடகமா ?
பூசை ஏற்கும் புவனத்து நாயகனே !

போனது போகட்டும் புதிதாய் வரும் நாட்கள் 
வானத்து சொர்க்கமாய் வடிவாய் மலரட்டும்! 
வறுமை விலகி வளமை பொங்கட்டும்! 
கருமை மறைந்து கடமை பொங்கட்டும்! 
வீழ்ந்த மரங்கள் வீறுகொண்டு பொங்கட்டும் !
தாழ்ந்த கரங்கள் தர்மத்தில் பொங்கட்டும்! 
புயலை காணமல் புதுவாழ்வு பொங்கட்டும் !
வயலில் வாய்க்காலில் வளர்பசுமை பொங்கட்டும் !
துன்பத்தை சுமந்து துடிக்கும் இதையங்கள் 
இன்பத்தில் பொங்கட்டும் இனிதாய் வளரட்டும்! 

பொங்கல் என்பதே புதுவாழ்வு என்பதாகும் 
பொங்கல் வந்தால் புதுவாழ்வும் கூடவரும் 
பொங்கலில் சிரிக்கும் புத்திளமை நெஞ்சங்களே!
பொங்கல் நாளில் பொசுங்கிய எம்வாழ்வு 
பொங்கி பெருக பிராத்தனை செய்க 

ஊருக்கு வேண்டினால் உங்களுக்கும் பொங்கல் !
ஊருக்கு உழைத்தால் உலகத்துக்கு பொங்கல்! 
உலக பொங்கலை உவந்து செய்து 
பலகற்று பல்லாண்டு பார்போற்ற வாழ்வீர் !

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG


Contact Form

Name

Email *

Message *