Store
  Store
  Store
  Store
  Store
  Store

பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை...!


    ந்த உலகத்திலேயே மிகவும் பொறுப்பு மிக்க பணி எது ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதா பிரதம மந்திரியாக இருப்பதா? அல்லது இராணுவத்தின் தலைமை பொறுப்பபை வகிப்பதா? இதில் எதுவுமே இல்லை ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பது தான் சிறப்புமிக்க சிரமமிக்க பணியாகும்

சூரியன் உதிக்கவில்லை என்றால் உலகத்தில் எதுவுமே நடக்காது காற்று வீசாது கடலில் அலையடிக்காது பசும்புல் வெளியெல்லாம் காய்ந்து போய்விடும் ஜீவராசிகள் அனைத்தும் பூண்டற்று போய்விடும் உலகத்தின் உயிர் துடிப்பிற்கு சூரியன் எவ்வளவு அவசியமோ அதே அளவு அவசியம் உலக சமூகமானது அமைதியாக வாழ்வாங்கு வாழ நல்ல பெற்றோர்களாக மனிதர்கள் இருக்கவேண்டும் என்பது

இன்று இல்லற வாசிகளாக வாழுகின்ற பலருக்கு குடும்பம் நடத்துவது என்றால் உழைப்பது உண்பது உறங்குவது சமயம் கிடைத்தால் ஆடிபாடி களிப்பது என்பது மட்டும்தான் தெரிகிறது ஆனால் இல்லறம் என்பது இவைமட்டுமல்ல தனி நலத்தையும் தாண்டி மிகப்பெரும் பொதுநலம் இல்லறம் என்ற சோலைக்குள் புதையல் பூவாக மலர்ந்து மறைந்து கிடக்கிறது கணவன் மனைவி மட்டும் இன்புற்று வாழ்வதல்ல இல்லறம் நல்ல குழந்தைகளை இந்த நாட்டிற்கு அல்ல அல்ல உலகத்திற்கு வழங்குவதே இல்லறவாசிகளின் தலையாய பணியாகும்


நான் பிள்ளை பெற்றால் அந்த பிள்ளை வளர்ந்து பெரியவனாகி சம்பாதித்து என்னை காப்பாற்ற வேண்டும் ஒருவேளை அவன் என்னை கைவிட்டாலும் எனது மூதாதையரின் பிரநிதியாக இன்னாரின் வாரிசு என்று ஊரார் புகழ வாழவேண்டும் அதுவுமில்லை என்றால் அவன் மட்டுமாவது சந்தோசமாக இருக்க வேண்டும் இதுதான் ஓவ்வொரு தாய்தகப்பனின் எண்ணமும் பேச்சுமாகும் இதிலெங்கே பொதுநலம் இருக்கிறது என்று சிலர் எண்ணக்கூடும்

என்மகனை வெறும் சுயநலத்தோடு நான் வளர்க்க விரும்பினால் அவனது விருப்பத்திற்கு மட்டுமே ஆசைகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுப்பேன் குடிக்க வேண்டுமென்று அவன் விரும்புகிறானா மதுவை கிண்ணத்தில் ஊத்தி கொடுக்க எனது கை தயங்காது மங்கையர்களோடு கூடி களிக்க ஆசைபடுகிறானா விலைமகளிரின் இல்லத்திற்கு அழைத்து செல்வதில் நானே பெருமையடைவேன் போதை பொருட்களையும் பாதைமாரும் உபதேசங்களையும் அவனுக்கு நானே கொடுப்பேன்

ஆனால் உலகத்தில் இதுவரை எந்த பெற்றோரும் இந்த விபரீதத்தை செய்ததுமில்லை செய்ய நினைப்பதுமில்லை நான்தான் கெட்டு போய்விட்டேன் காய்ந்து போன ஒலைமட்டையாக கரிந்து போய்விட்டேன் என் பிள்ளை அப்படி இருக்க கூடாது அவன் வீதிலே நடந்துபோனால் மகராசன் போகிறான் பாரென்று நாலுபேர் கையெடுத்து வணங்க வேண்டும் ஐயோ இவனா படுபாதகன் இவனன்றோ என்று காறித்துப்ப கூடாது என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள்


அதனால் தான் இந்த் மனித சமூகம் இன்றும் சமாதான சகவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறது உலகில் எதோ ஒரு மூலையிலாவது சன்மார்க்கத்தின் மங்களகரமான கொடி பறந்துகொண்டிருக்கிறது மனிதன் தெரிந்தோ தெரியாமலோ தான் ஏற்றிருக்கும் தாய் தகப்பன் என்ற பொறுப்பை மிக கவனத்துடன் கடைப்பிடித்து வருகிறான்

ஆனாலும் சில பெற்றோர்கள் தங்களது பொறுப்பை மறந்துவிடுகிறார்கள் அல்லது இன்னதென்று தெரியாமல் கைநழுவ விட்டுவிடுகிறார்கள் ஒரு குழந்தையின் சந்தோசம் அவன் கேட்பதெல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும் விரும்பியதெல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் இருக்கிறதென்று தவறான கணக்கை தடுமாற்றத்தோடு போட்டு தன்னையும் கெடுத்து தனது பிள்ளையையும் கெடுத்து சமூதாயத்தில் அழிக்கவே முடியாத விபரீத காயங்களை உருவாக்கி கொள்கிறார்கள்

சமீபத்தில் ஒன்பதாவது படிக்கும் ஒரு சிறுவன் தனது ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்தது ஒரு சிறு பிள்ளையின் சிதைந்து போன மனதை காட்டவில்லை சீரழிந்து போன பொறுப்பற்று போன ஒரு பெற்றோரின் அவலத்தை தான் நமக்கு காட்டுகிறது பிள்ளையின் மகிழ்ச்சிக்காக பணத்தை செலவழிக்க தெரிந்த அவர்களுக்கு பிள்ளையின் உடல் வளர்ச்சிக்காக விதவிதமான உணவுகளை கொடுக்க தெரிந்த அவர்களுக்கு அவனின் மன வளர்ச்சிக்கான ஒழுக்க வளர்ச்சிக்கான பண்பாட்டு போதனையை கொடுக்க தெரியவில்லை


பிள்ளை பெறுவது குடும்பத்தை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தி செல்வது தான் என்றாலும் அந்த குழந்தைக்கு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் எல்லாவற்றிக்கும் மேலாக சகலரையும் நேசிக்க கற்றுகொடுக்கவில்லை என்றால் குடும்பம் என்பது காற்றில் அகப்பட்ட சிலந்தி கூடுபோல கலைந்து போய்விடும் என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும் ஒரு குழந்தை பள்ளியில் கற்றுக்கொள்ளும் ஒழுக்கம் அவனது வாழ்நாள் முழுவதும் கூடவருவதில்லை அது வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும் வழிநடத்துவதில்லை வீட்டில் அம்மா அப்பாவிடம் கற்றுக்கொள்வது தான் சுடுகாட்டுக்கு செல்லும்வரை கூடவரும்

பள்ளிபடிப்பு அறிவை மட்டும் தான் தரும் தாய் தந்தையரின் அரவணைப்பு அறிவோடு கூடிய அன்பையும் தரும் இதை மறந்தால் நம் ஒவ்வொருவரின் வாரிசுகளும் அந்த கொலை செய்த சிறுவனை போல தான் உருவாவார்கள் அதனால் பிள்ளை பெறுவது பிள்ளையை வளர்ப்பது விளையாட்டல்ல அது ஒரு தவம் அது ஒரு யோகம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டும்

நான் என் தகப்பனிடம் கற்றுக்கொள்ளாத எந்த ஒழுக்கத்தையும் வேறு எவரிடமும் கற்றுக்கொள்ள முடியாது எனது தாய் தராத அன்பு வேறுயார் தந்தாலும் எனக்கு புரியாது எனவே பெற்றோராக இருபவர்களும் பெற்றோராக போகிறவர்களும் மீண்டும் ஒருமுறை நிதானமாக யோசனை செய்யுங்கள் பணத்தை எப்போது வேண்டுமென்றாலும் சம்பாதித்து கொள்ளலாம் நல்ல குழந்தையை இளம்வயதில் மட்டுமே சம்பாதிக்க முடியும் எனவே தம்பதிகளின் சண்டைகளை விட்டுவிட்டு நல்ல பெற்றோராக வாழ முயற்சி செய்யுங்கள் இல்லை என்றால் உங்கள் குழந்தை வருங்கலத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வாழ வேண்டிய அவல நிலையை நீங்களே கொடுத்தவர் ஆவிர்கள்.

Contact Form

Name

Email *

Message *