Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒரே வழி சரியான வழி !


    வாழ்க்கையில் ஏற்படும் துயரங்களை வெல்ல என்ன செய்ய வேண்டும்? எப்படி செயல்பட வேண்டும் என்று பலருக்கு தெரிவதில்லை யாரோ ஒருவர் கஷ்டப்படும் போது உபதேசம் செய்ய துணியும் நாக்குகள் அதே துன்பம் தனக்கு வரும் போது மெளனமாக ஆகிவிடுகிறது அது ஏன்? எது நன்மை எது தீமை என்று அறிய முடியாத அறியாமை தான் காரணம்

வாழ்க்கை என்பது துன்பமயமானது என்று பலர் சொல்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல வாழ்ந்து முடித்தவர்களின் வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையையும் நன்றாக உற்று பாருங்கள் அதில் படிந்திருக்கும் ஒவ்வொரு துன்பத்தின் நிழலும் நிரந்தரமானது அல்ல ஒரு மின்னல் போல அவ்வபோது வந்து செல்லும் திடீர் விருந்தாளிகள் என்பது நன்றாக புரியும்

வாழ்க்கை முழுவதுமே துன்பம் நிறைந்தது என்றால் யாரும் வாழவே ஆசைப்பட மாட்டார்கள் வீட்டிற்குள் வாழ்வதைவிட கல்லறையில் பிணமாக கிடப்பதே பெரிய வரமென்று எல்லோரும் சாகத்தான் ஆசைபடுவார்கள் ஆனால் சாக விரும்புபவர்கள் யாருமே கிடையாது எல்லோருமே வாழவே விரும்புகிறார்கள் துன்பமானது தான் வாழ்க்கை என்றால் வாழ விரும்புவது ஏன்?

துயரங்கள் என்பது வெட்டவெளியில் சருகுகளை எல்லாம் கூட்டி பெருக்கி சுழன்று வீசுமே சிறிய சுழல் காற்று அதே போன்றது வேகமாக வருவது போல் தெரியும் அவ்வளவு தான் எல்லாம் முடிந்து விட்டது இனி சொல்வதற்கு ஏதும் இல்லை என்று தோன்றும் ஆனால் மறுகணமே அந்த சுழல் காற்று வீசிய வேகத்தில் மறைந்து போன பிறகு அனைத்தும் சகஜமாகி விடும்

சுழல் காற்றை அழிக்கும் சக்தியாக கொலைக்கருவியாக எடுத்துக்கொண்டால் அது கேடு செய்வது தான் அதே சுழல் காற்றை குப்பைகளை அப்புறப்படுத்தும் சுத்துகரிப்பு கருவி என்று எடுத்துக்கொண்டால் கேடுகள் இல்லாத நன்மையையும் அதற்குள் இருப்பது நன்றாக தெரியும்

அதே போலத்தான் துயரங்கள் என்பது நம்மை சம்காரம் செய்ய வந்த கொலைக்கருவி என்று கருதாமல் நமது தவறுகளை நமது தப்பு கணக்குகளை சுட்டிக்காட்டும் நண்பனாக பாவித்தால் துயரங்கள் கூட இன்பமயமாகி விடும் இன்பம் துன்பம் என்பது நமது மனதில் தான் இருக்கிறது இந்த உலகில் இன்பமானது என்றோ துன்பமானது என்றோ எதுவும் கிடையாது சக்கரையில் உள்ள இனிப்பு ஆனந்தம் தரும் அதே சக்கரை நீரழிவு நோயாளிக்கு எமனாக முடியும் அதாவது ஒருவருக்கு இன்பமாக இருப்பது இன்னொருவருக்கு துயரமாக இருக்கும் எனவே துன்பம் துயரம் கஷ்டம் என்பவைகள் நமது மனதை பொறுத்தே நமது கண்ணோட்டத்தை பொறுத்தே அமைகிறது

நான் அனுபவிக்கின்ற நல்லது கெட்டது அனைத்தும் என்னை செதுக்கும் உளிகள் என்று கருதுபவனுக்கு வாழ்க்கை எரிமலை அல்ல குளிர்ச்சியான நீரோட்டம் மிகுந்த நதியாகவே காட்சி அளிக்கும் எனவே எல்லாவற்றையும் நேர்மறை எண்ணத்தில் அணுகுங்கள் அனைத்தும் நல்லதாகவே தோன்றும் நல்லதாகவே நடக்கும் அதுவே துன்பத்தை வெல்வதற்கு ஒரே வழி சரியான வழி.





Contact Form

Name

Email *

Message *