Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனிதனை தருமா இன்றைய படிப்பு...?

   திகாலத்தில் ஆடைகள் இல்லாமல் வாழ்ந்த மனிதனை நாகரிகமற்றவன் என்கிறோம். மனிதனின் கை கால்களை வெட்டி எண்ணெய் கொப்பறையில் போட்டு வேக வைத்து வேடிக்க பார்த்த மன்னர்களை காட்டுமிராண்டிகள் என்கிறோம். கொலை செய்வதையே தொழிலாக கொண்ட ரவுடிகளை மனித தன்மையற்ற மிருகங்கள் என்கிறோம்.

 நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி, விரல் நுனியில் கூட அழுக்கு ஒட்டாமல் கோட் சூட் அணிந்து நடமாடும் கனவான்களை நாகரீகத்தின் சிகரம் என்கிறோம். மேடையில் ஏறி நின்று மனித நேயத்தை பற்றியும் மனித உரிமைகளை பற்றியும் மணிகனக்காக பேசுபவர்களை அமைதியின் தூதர்கள் என்கிறோம். வறுமையை வெளிச்சம் போட்டு காட்டி, நோய்களை விளம்பரபடுத்தி தொண்டு செய்வதாக கூறிக்கொள்ளும் பலருக்கு சேவை திலகம் என்று பாராட்டி பதக்கம் கொடுத்து கௌரவிக்கிறோம்.

 இப்படி எல்லா வகையிலும் ஆதிகால மனிதர்களை விட தற்கால மனிதர்கள்தான் உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள், மனித நேய மாண்புடையவர்கள் என்று நினைக்கிறோம். இதை எல்லாம் விட கொடுமை தற்காலிக இளைய தலைமுறையினரின் மனதில் நமது முன்னோர்கள் பற்றி இருக்கின்ற கருத்துக்கள் தான்


சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் ஒரு பையன் பேசினான். அந்த காலத்தில் இருந்த மன்னர்கள் படிப்பறிவு அற்றவர்கள் அவர்களாயே நல்ல முறையில் நாடாள முடிகிறது என்றால் இக்கால படித்த தலைவர்கள் அவர்களை காட்டிலும் சிறப்பாக நிச்சயம் அரசாளவார்கள் என்றான்.

அவன் சொல்லிய கருத்து சரியா? தவறா? என்று விவாதம் செய்ய நான் வரவில்லை. முக்கால மன்னர்களை படிக்காதவர்கள், கல்வியறிவு இல்லாதவர்கள் என்று நினைக்கும் மனப்பாங்கு வந்திறுக்கிறதே அது சரிதானா? இத்தைகைய சிந்தனை குழந்தைகளுக்கு ஏற்படுத்தியது யார் என்பது என் கேள்வி.
          
  பல வருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ் திரைப்படம் ஒன்றில் பகுத்தறிவு பாதையில் வந்த நடிகர் ஒருவர் தலையில் குடுமி வைத்தவனுக்கெல்லாம் அறிவு குறைவு என்று என்னால் சவால் விட முடியும் என்று வசனம் பேசுவார். அவர் குறிப்பிட்டு பேசுவது குடுமி வைத்திருக்கும் பிராமணர்களை என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து பார்த்தால் பிராமணர்கள் மட்டும் தான் குடுமி வைத்திருந்தார்களா என்ன? அந்த காலத்தில் எல்லா ஜாதியை சேர்ந்த ஆண்களும் தானே குடுமி வைத்திருந்தார்கள் என கேட்க தோன்றுகிறது.

  அவர் கூறுகிறப்படி குடுமி வைத்தவர்கள் அறிவில் குறையுடையவர்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஒத்து கொண்டாலும் குடுமி என்பது பொதுவாக பார்த்தால் தலையில் நிறைய முடி வளர்த்து கொண்டையாக போடுவது தான். அதனடிப்படையில் பெண்கள் அனைவருமே குடுமி வைத்தவர்கள் தான். அப்படியென்றால் அவர்கள் எல்லோருமே அறிவில் குறையுடையவர்களா?

உலக பொதுமறை தந்த திருவள்ளுவரின் படத்தை கூட தலையில் குடுமி வைத்தவராகத்தான் வரைந்திருக்கிறார்கள் இந்த கணக்கில் பார்தால் உலகமே வியந்து போற்றும் உயர்ந்த கருத்துகளை சொன்ன வள்ளுவரும், நிறைமதி உடையவரல்ல,

பகுத்தறிவு என்ற போர்வையில் வாய்க்கு வந்தது எல்லாம் பேசினால் இப்படித்தான் விபரீதமாக அர்த்தங்கள் வந்து சேரும். பின் விளைவுகளை யோசித்து பார்க்காமல் கை தட்டல் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேசுகின்ற பேச்சாளர்களின் கருத்துக்களை கேட்டு மயங்கி போனதினால் தான் இப்பொழுது உள்ளது தான் படிப்பு இதை படிப்பவன் தான் அறிவாளி என்ற மனோபாங்கு இளைஞர்களிடம் அமைந்துள்ளது.


  எவ்வளவு தான் சப்பை கட்டு கட்டினாலும் இப்போது இருப்பது போன்ற அறிவு வளர்ச்சி அந்த காலத்தில் கிடையாது. மக்களிடம் முன்கோபமும், மூர்க்கதனமுமே மிகுதியாக இருந்ததினால் தான் சின்ன விஷயத்திற்கு கூட வேல் கம்பால் குத்தி சாய்த்து இருக்கிறார்கள். தனக்கு பிடிக்காதவர்களை, எதிரிகளை சுலபமாக வெட்டி சிதைத்திருக்கிறார்கள், உப்புக்கு பெறாத விஷயத்திற்கு கூட மல்லு கட்டி கொண்டு காலகாலத்திற்கும் நின்று இருக்கிறார்கள்.

 இன்றைய மனிதனுக்கு அறிவு மட்டுமல்ல மனதும் விசாலப்பட்டு இருக்கிறது. நீ தாழ்ந்த ஜாதிக்காரன் என்னிடமிருந்து பத்தடி நகர்ந்து நில் என்ற ஆணவ பேச்சுகள் எல்லாம் ஒரளவு குறைந்து விட்டது. என்று சிலர் சொல்கிறார்கள். அவர்கள் பேச்சை கேட்கும் போது அழுவதா? சிறிப்பதா? என்று நமக்கு தெரியவில்லை.

   அந்த கால முஸ்ஸிம் மன்னர்களும் சுதேசிய மன்னர்களும் விரோதிகளின் தோலை உறித்து உப்பு மிளகாய் தடவி கொடுமைபடுத்தியது போல் இன்று யாரும் செய்வதில்லை என்று ஜம்பம் பேசுபவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். அக்கால மன்னர்களும் சர்வதிகாகளும் செய்த தவறுகளை யாரும் நியாயப்படுத்தவில்லை என்றாலும் இப்போது நடப்பதை போல குள்ளநரித்தனம் எந்த காலத்திலும் கொடிகட்டி பறந்ததில்லை. தங்களது நாடுபிடிக்கும் ஆசைக்கும் அதிகார வேட்கைக்கும் மாற்றானை சுரண்டி உண்டு கொழுக்க வேண்டும் என்ற ஆசைக்கும் அப்பாவி மக்களை மோதவிட்டு வடியும் ரத்தத்தை எந்த ஓநாயும் நக்கி குடிப்பதில்லை.


  இன்று நாகரீக மக்கள் நிறைந்த பகுதியாக கருதப்படுகின்ற அமெரிக்கர்கள் எண்ணெய் வளத்திற்காக அப்பாவி அரபு மக்களை கொன்று குவிப்பதை மனித நேய கணக்கில் சேர்த்து கொள்ள முடியுமா? தங்களது சட்ட விரோத நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்காக பல உயிர் கொலைகள் நமது நாட்டில் நடைபெற்ற வண்ணமே உள்ளது. அதை எந்த நாகரீக கணக்கில் எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. பணத்தை கொடுத்து பதவியால் ஆண்டவனையே பணிய வைத்து விடலாம் என்ற மமதையால் துடிப்பதும் நாகரீகத்தின் உச்சம் என்றால் அது நமக்கு வேண்டாம் என்றே சொல்ல தோன்றுகிறது.

 சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றில் நான் கண்ட ஒரு காட்சி என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. ஒரு வீட்டில் ஐந்து வயது குழந்தை ஒன்று இறந்து விட்டது. தாயும் தகப்பனும் கதறி அழுத வண்ணம் உள்ளனர். உறவினர்கள் எல்லாம் சோகத்தில் உறைந்து போய் நிற்கிறார்கள்.

 அந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டிலோ ஓரே சிரிப்பு சத்தம், முப்பது வயதுக்கு கீழ் உள்ள ஆணும் பெண்ணும் சேர்ந்து சீட்டாடுகிறார்கள். குடித்துவிட்டு கைகளை தட்டி நடனமும் ஆடுகிறார்கள். யார் சொல்லியும் கேட்கவில்லை. எங்கள் வீட்டிற்குள் நாங்கள் ஆடுவதும் பாடுவதும் எங்கள் உரிமை அதை தடுக்க நீங்கள் யார், என்று நியாயம் பேசினார்கள். பக்கத்து வீட்டில் நடந்த சாவுக்கு வருத்தபட தெரியாதவன் அக்கால கொடுங்கோல் மன்னர்களை விட மேம்பட்டவர்கள் அல்ல.

     ஒரு முறை சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்தேன். எனது வாகனத்திற்கு முன்னால் அரசாங்க விரைவு பேருந்து ஒன்று மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பின்புறம் இருந்த இரும்பு ஏணியில் ஒரு மனிதன் தொங்கி கொண்டிருந்தான்.

அவனை பார்த்தவுடன் மனநோயாளி என்று சொல்லி விடலாம். காற்றில் பறக்கும் பரட்டை தலை எப்போது வேண்டுமென்றாலும் அவிழ்ந்து விழ தயாராக இருக்கும் ஆடைகள் அவன் சிறந்த பைத்தியம் என்பதை பறையறிவிக்காமல் தெரிவிக்கும்.

 நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறி தொங்கியிருக்க வேண்டும் அவன் தொங்கியதை அறியாத ஓட்டுனர் வண்டியை எடுத்திருக்க வேண்டும். சராசரியான மனிதன் என்றாலும் கூட பேருந்து நின்றவுடன் நிதானமாக இறங்கி விடுவான். இவன் பைத்தியம் இறங்கவேண்டும் என்று தோன்றியவுடன் இறங்கி விடலாம்

 நெடுஞ்சாலையில் குறைந்தது மணிக்கு எழுபது கிலோ மீட்டர் வேகத்திலாவது சென்று கொண்டிருக்கும் பேருந்தில் இருந்து சட்டென்று இறங்கினால் ஒரு மனிதன் என்ன ஆவான்? நிச்சயம் சிதறி போய்விடுவான். பின்னால் வந்து கொண்டிருக்கின்ற வாகனங்கள் நிதானம் தவறி பலருக்கு உயிர் இழப்பு கூட ஏற்படலாம்.


  நினைத்து பார்க்கவே நெஞ்சு பதைப்பதைத்தது. என் கார் ஓட்டுநரை வேகமாக ஓட்டும் படி சொல்லி பேருந்தை முந்தி வண்டியை நிறுத்த பேருந்து ஓட்டுநருக்கு சைகை செய்தேன். அவரும் வண்டியை நிதானப்படுத்தி ஒராமாக நிருத்தினார். விவரத்தை சொன்னவுடன் அந்த மனநோயாளியை கீழே பிடித்து இழுத்து இறக்கினார்.

அதுவரை எல்லாம் சரியாகத்தான் நடந்தது. ஆனால் பயணிகளில் சிலர் அந்த பைத்தியகாரனை போட்டு அடிக்க ஆரம்பித்து விட்டனர். நீ விழுந்து செத்துருந்தால் எங்கள் பயணமல்லவா? தடைப்பட்டு இருக்கும் என்பது அவர்கள்ன் ஆதங்கம். அவர்களிடம் இருந்து அந்த பைத்தியத்தை மீட்டெடுக்க போதும் போதும் என்றாகிவிட்டது.

 ஒரு சக மனிதனை அதுவும் சூழ்நிலையை உணர முடியாத ஒரு குழந்தையை போன்ற மனநோயாளியை ரத்தம் சொட்ட சொட்ட அடிக்கிறோமே என்று யாரும் கவலைப்படவில்லை. மனிதர்களின் கொடூரதன்மையை மிக அருகில் இருந்து பார்த்து திடுக்கிட்டு விட்டேன். இப்போது சொல்லுங்கள் அக்கால மண்ணாசை பிடித்த மண்ணர்களை விட இன்றைய நாகரீக மனிதன் எந்த வகையில் உயர்ந்து போய்விட்டான்?

      இந்த உலகில் ஒரு மனிதன் எப்படி வாழ கூடாது எப்படி வாழ வேண்டும் என்ற நாகரீக நெறிமுறைகளை வகுத்து கொடுத்து நமது முன்னோர்கள் தான். நாடாளும் அரசர்கள் மோதிக்கொள்ளும் யுத்த நேரத்தில் கூட போர்ப்படை தலைவனும் வீரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று இலக்கணம் வகுத்து கொடுத்து அவர்கள் தான்.

 எதிரி நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரணடைந்தவர்களை புறமுதுகுகாட்டி ஓடியவர்களை தாக்க கூடாது பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் யுத்தத்தால் பாதிப்படைய கூடாது. எந்த நிலையிலும் பின்புறமாக ஆயுத பிரயோகம் செய்யகூடாது, சூரியன் மறைந்த பிறகு யுத்தம் தொடர கூடாது என்று இன்னும் எவ்வளவோ சட்ட திட்டங்களை மனிதாபினமான முறையில் வகுத்தவர்கள் நாகரீக அரசியல் சிற்பிகள் அல்ல, பழைய பத்தாம் பசலிகள் என்று ஏளனம் செய்யப்படும் நமது முன்னோர்கள் தான்.

     இன்றைய யுத்தங்கள் எப்படி நடக்கிறது அரசியல் விவகாரங்களில் சம்பந்தமே படாத சாதாரண பொது ஜனங்களின் மீதும் பச்சிளம் குழந்தைகளின் மீதும் இரக்கமே இல்லாமல் குண்டு மழை பெய்யப்படுகிறது. ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தவிர மருத்துவமனைகள், வழிப்பாட்டு கூடங்கள் தவிடு பொடியாக்கப்படுகின்றன. பிள்ளைகள் பயிலும் பாடசாலைகள் கூட நாசகார சக்திகளின் கையில் கிடைத்து சின்னாபின்னம் படுகிறது. இன்னும் வார்த்தைகளில் எழுத முடியாத எத்தனையோ கொடூரங்கள் நவீனகால யுத்தங்களால் எற்பட்டு இருக்கின்றன. இப்படி வக்கரித்து போன மனித மனங்களின் அடையாள சின்னமாக தெரிவதினால் தான் நவீன நாகரிகம் வேண்டாம் பழங்கால மனமே போதும் என்று நமக்கு தோன்றுகிறது.  
Contact Form

Name

Email *

Message *