Store
  Store
  Store
  Store
  Store
  Store

அப்பன் நீ ! அரசன் நீ !! அடிமை நான் !!!

இந்து மத வரலாற்று தொடர் 19

   சென்ற அத்தியாயத்தில் கடவுளின் தன்மைகளை என்னவென்று சிந்தித்தோம் இப்போது அவ்வளவு உயரிய உயர்ந்த திருமாலிடம் சாதாரண ஜீவர்களாகிய நாம் எப்படியெல்லாம் உறவு பாராட்டலாம் என்பதை சிறிது சிந்திப்போம் ஸ்ரீ வைஷ்ணவத்தில் தென்கலை பிரிவை சார்ந்த பிள்ளை லோகாச்சாரியார் என்ற மாபெரும் ஞானபுருஷன், தாம் எழுதிய நவ வித சம்பந்தம் என்ற புகழ்பெற்ற நூலில் பகவானுக்கும் பக்தனுக்கும் உடைய ஒன்பது விதமான உறவுகளை மிக எளிமையான முறையில் பட்டியலோடு தருகிறார்.

அதில் முதல் உறவாக கூறப்படுகின்ற பித்ரு புத்ர சம்பந்த உறவில் அதாவது தந்தை - மகன் உறவில் உள்ள சிறப்புகளை மிகவும் சிலாகித்து பேசிகிறார். உலகத்தை படைத்த பரம்பொருளை தந்தையாகவும், படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தையும், புத்திரனாகவும் அனுபவித்து பாடப்படும் பாடல்கள் பலவற்றை ஆழ்வார்களின் பாசுரங்களில் காணலாம். மனிதனாகிய நமக்கு ஆயிரம் உறவுகள் இருக்கலாம். அத்தனை உறவுகள் இடத்திலும் உரிமை என்பது இருக்குமா என்றால் இருக்காது. ஆனால் தகப்பனிடம் உள்ள உரிமை தனித்தன்மையானது இன்னும் ஒரு படி சொல்லப்போனால் தகப்பனிடம் மட்டும்தான் நமக்கு உரிமையிருக்கிறது.


யாரிடம் கையேந்தினாலும் கௌரவம் குறையும், யாரிடம் உதை வாங்கினாலும் அவமானம் ஏற்படும். ஆனால் தந்தையிடம் கையேந்தினால் அது கௌரவக் குறைச்சல் அல்ல. கௌரவச்சின்னம்மாகும். என்னைப் பெற்றவன் நீ இந்த பூமியில் வந்து விழுவதற்கு எப்படி நீ காரணமோ அப்படியே நீ நான் எழுந்து நடப்பதற்கும் காரணமாக இருக்க வேண்டும். நான் சுகமாய் வாழ வளர நீ தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று தகப்பனைத் தவிர வேறு யாரிடம் உரிமையோடு கேட்கமுடியும்? கடவுள் ஞானத்தைதருபவன் செல்வத்தை தருபவன் சௌந்தர்யத்தை தருபவன் தைரியத்தை தருபவன் எவனோ அவன் தந்தையாகிறான். அதனால்தான் பிள்ளை யோகாச்சாரியார் ஒன்பது உறவுகளில் தந்தை உறவை முதன்மை படுத்துகிறார்.

மும்மூர்த்திகளில் பிரம்மன் படைப்பவன், பரமசிவனோ சம்ஹாரமூர்த்தி, திருமால்தான் உலகத்தை காக்கும் கடவுள். அதனால் திருமால் லோக ரட்சகனாகிறான். அவன் மீது பக்திகொள்ளாவிட்டாலும் அவனையே பரமவிரோதியாக எதிர்த்து நின்றாலும் தாக்க வேண்டியது அல்ல காக்க வேண்டியதெ அவனது கடமையாகிறது. பகைவர்களையே பாதுகாக்கும் பகவான் தன்னையே நினைத்து அல்லும் பகலும் உருகுகின்ற பக்தனை கைநழுவ விடுவானா? ஆற்றல் பொருந்திய ஒரு மன்னனின் ஆட்சியில் மக்கள் அனைவரும் பயமின்றி சுதந்திரமாக சந்தோஷமாக இருப்பது போல் பல கோடி மன்னர்களுக்கு இணையான பரந்தாமன் அரவணைப்பில் பாமரன் கூட பசும் தளிர் போல் செழித்து வளர்வான். ஆகவே பக்தன் தன்னை காக்கும். சக்தியாக கடவுளை கருதுவதை ரட்சிக்க ரட்ச்சிக்க சம்பந்தம் அதாவது காப்பவன் காக்கப்படுபவன் உறவு என்று ஸ்ரீ வைஷ்ணவம் இரண்டாவது உறவை சிறப்பிக்கிறது.

ஒருவனை முதளாளியாகவும், இன்னொருவனை தொழிலாளியாகவும் பார்ப்பது, பாவிப்பது, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழி வகுக்கும் என்று பொருள் முதல்வாதிகள் கூறுகிறார்கள்.ஆனால் ஆன்மீக உலகில் ஆண்டான் அடிமை என்பது ஆதிக்கம் செலுத்துகின்ற விஷயமாக கருதப்படுவது இல்லை. ஒரு உயிரின் பந்த பாசத்தழை அறுந்து போவதற்கும் உயிரானது தனது வாழ்க்கை பயணத்தில் முக்தியை நோக்கி நடைபோடுவதற்கு கிரியா உக்கியாகவும் பயன்படுகிறது என்று நம்பப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் சொந்தக்காரனாக, உரிமையாளனாக இறைவன் கருதப்படுகிறான். இதனை கருத்தில் வைத்தே அவனை எஜமானன், ஆண்டான், ஆண்டவன் என்று அழைக்கிறோம். அத்தகைய இறைவனால் முறைப்படி ஆளப்படுகின்ற உயிர்களை அடிமையென்றும் கருதுகிறோம். எனது உடல், எனது உடமை அனைத்துமே எனது தகப்பனார் எனக்கு தந்தது எனும்போது அவருக்கு நான் அடிமையாக இருப்பது அவமானமல்ல உடலைத்தந்த தகப்பனுக்கே நாம் அடிமை எனும்போது உலகத்தை தந்த இறைவனுக்கு அடிமையாக இருப்பது தனிச்சிறப்பு தானே

மூலப்பரம் பொருளான இறைவனை எஜமானன் என்று நம்பும் போது நமக்கு இன்னொரு வகையான விடுதலையும் கிடைக்கிறது. பகவத்கீதையில் நிஷ்காமய கர்மம் அதாவது பலனை விரும்பாத செயல் என்று ஒன்று பேசப்படுகிறது. அதனடிப்படையில் பார்க்கும் போது எந்தவொரு செயலையும் பயனை நோக்கி செய்கின்ற போது செயலின் முடிவு நம்மை துக்கத்திற்கோ சந்தோஷத்திற்கோ ஆட்படுத்தி விடுகிறது. அதாவது தம்மை அறியாமலே அந்த செயலுக்கு நாம் கர்த்தவாகி விடுகிறோம். அப்போதே அகங்கார உணர்வு நம்மை விலங்கு போட்டு பூட்டி விடுகிறது.


அதே நேரம் இந்த காரியம் கடவுளுக்கானது இதன் பயன்கள் எனக்கானது அல்ல இதனால் ஏற்படும் லாப நஷ்டங்கள் முழுமையும் கடவுளைச் சார்ந்ததே எதுவும் என்னைச் சார்ந்தது அல்ல என்ற நம்பிக்கையோடு நான் செயல்பட்டேன் என்றால் கீதை சொல்லும் நிஷ்காமியகர்மத்தை கடைபிடித்தவனாகவும் ஆகிவிடுவேன். அதனால் சேஷ சம்பந்தம் என்ற ஆண்டான் அடிமை உறவை கடவுளோடு கொள்ளும் உறவுமுறையில் மூன்றாவது நிலையாக ஸ்ரீ வைஷ்ணவம் கூறுகிறது. இந்த சேஷ சேஷி சம்பந்தத்தை எவனொருவன் செய்கிறானோ அவனது காரியங்கள் அனைத்துமே பகவத் கைங்கரியாமாக ஆகிவிடுவதை அனுபவத்தில் உணரலாம்.

பிரபஞ்ச தண்டவாளத்தில் உலகம் என்ற ரயில் வண்டி இன்று வரை நிற்காமல் ஓடிக்கொண்டு இருப்பதற்கு மூலமான காரணமே உலக ஜீவன்கள் அனைத்தும் ஆண் பெண்ணாக இருப்பதுதான். ஆண் பெண் உறவில் சிரேஷ்டமானது கணவன் மனைவி உறவாகும். ஊமையாக பிறக்கும் குழந்தையை தாயும் தகப்பனும் புறக்கணிக்காமல் பாதுகாப்பது ரத்தப்பாசம். ஆனால் கணவனோ மனைவியோ உருகுலைந்து போனாலும் உருப்பறுந்து போனாலும் ஒருவருக்கொருவர் கைவிடாமல் பாதுகக்க கடைசிவரை போராடுவது. எந்த பாசத்தின் அடிப்படையில்?

கண்ணுக்கே தெரியாத வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஏதோ ஒரு சூட்சம பந்தம் இருவரையும் கட்டிபோடுகிறது. அந்த கட்டை அந்த பாசத்தை அழிந்து போகும் மனித சரிரங்களின் மீது காட்டாமல் சாஸ்வதமான இறைவனின் மீது திருப்புவதே பர்த்தா பாரியா சம்பந்தம் என்ற கணவன் மனைவி உறவு என்ற பக்தி பாதையாகும். நாயகன் நாயகி பாவம் என்னும் மதுர பக்தியும் இந்த வகையை சார்ந்ததுதான்.


இந்த பக்தி பாவத்தின் ஆதாரத்ததுவம் என்னவென்றால் இந்த உலகத்தை படைத்தவன் இறைவன் என்பதால் அவன் புருஷனாகிறான். அவனுக்கு ஈடு இணையாக யாருமே இல்லை என்பதனால் அவனே புருஷோத்தமனாகிறான். புருஷர்களில் மிக உயர்ந்தவன் இறைவன் மட்டும்தான் என்பதனால் அவன் ஒருவனே ஆண் மகனாகவும் இருக்கிறான். உயிர்கள் அனைத்தும் அவைகள் பெண் உடலை தாங்கியிருந்தாலும் ஆண் உடம்பில் இருந்தாலும் பெண் பாலாகவே கருதப்பட வேண்டும் தன்னை பெண்ணாக கருதி இறைவனை ஆணாக கருதி பக்தி செலுத்தும் போது மிக விரைவில் பரமபத வாசலை தொட்டுவிட முடியும்.

நாச்சியார் திருமொழியை தமிழ் உலகிற்கு தந்த ஆண்டாளும், ஏராளமான பக்திரசம் சொட்டப்படும் கவிதைகளை இந்தி இலக்கியத்திற்கு வழங்கிய மீராவும் இயல்பாகவே பெண் என்பதால் அவர்களுக்கு கார்மேக வண்ணனை நாயகனாக பாடுவதில் நெஞ்சார நினைத்து மனதார கூடுவதில் எந்த சிரமமும் இருப்பதற்கு இல்லை. ஆனால் ஆண்மை சரிரத்தை பெற்ற அடியார்கள் தங்களை பெண்ணாக பாவித்து பக்தியில் கலப்பது உணர்வு பூர்வமான சிக்கலாகும். ஆனால் இறைவன் பால் வைக்கின்ற தீவிரமான அன்பால் அழகு தமிழில் பாசுரங்கள் பல தந்த திருமங்கை யாழ்வார் தன்னை பரகாலனாக உருவகப்படுத்தி பாடுகின்ற போது பரகால நாயகியாகவும் உருவகப்படுத்தி இறைவன் மீது தனது தீராத காதலை வெளிப்படுத்தினார். இதைப் போலவே நம்மாழ்வாரும் தன்னை பாராங்குச நாயகியாக பாவித்து பரந்தாமன் மீது மையல் கொள்கிறார்.


காதல், பாலுணர்ச்சி என்பதெல்லாம் உயிர்களை கீழ்நிலைபப்டுத்தும் உறவுகள் தான் என்றாலும் அதே உணர்வுகள் அழியாத வஸ்துவான இறைவன் மீது வைக்கும் போது விவரிக்க முடியாத ஆன்மீக அனுபவங்களை வாழ்க்கை பற்றிய ஞான அனுபூதிகளை மனிதனுக்கு தருகிறது.

ஐந்தாவது உறவாக ஸ்ரீ வைஷ்ணவம் அறிபவன், அறியப்படுபவன் உறவு என்ற “ ஞாத்துரு ஞேய” சம்பந்தம் என்பதை பேசுகிறது. எதை அறிந்த பிறகு வேறு எந்த பொருளும் அறியக்கூடிய விஷயமாக இல்லையோ அந்த பொருளே பரம்பொருளாகும். அதாவது விஷ்வரூபியான மகா விஷ்ணுவை அறிந்த பிறகு அறிவதற்கு வேறு ஒன்றுமே உலகத்தில் கிடையாது. அத்தகைய அறிவு மூலப்பரம்பொருளை அறிந்தவனுக்கு பெயர்தான் ஞானி அந்த சொல் அறிபவனையும் “ஞேயம்” என்ற சொல் அறியப்படும் பொருளையும் குறிப்பதாகும். இதனடிப்படையில் ஞானியாக விழைப்பவன் உலக விஷயங்களை புறம் தள்ளி பரமாத்திக விஷயங்களை நோக்கி நடைபோட வேண்டும். அப்படி நடைபோடும் போது ஞானத்தின் இறுதி எல்லையான வைகுண்ட வாசஸ்தலம் நிரந்தரமாக கிடைத்துவிடும்.

ஆறாவதாக சுவசுவாமி சம்பந்தம் என்ற உடைமை, உடையான் உறவு வருகிறது. உடைமை என்பது நமக்கு சொந்தமான பொருளை குறிக்கும். அந்த உடைமையானது நம்மிடருந்து விலகிப்போகாமல் பாதுகாப்பது நமது நித்திய கடமையாகும். காரணம் உடைமைகள் இல்லாத உடையவன் பெருமைக்குரியவனாக மாட்டான். மனிதர்களாகிய நாம் அனைவரும் திருவரங்கத்தானின் பரம உடைமையாவோம். நம்மை பாதுகாக்க வேண்டியது உடையவனின் கட்டாய கடமையாகும். இக்கட்டாய கடமை எப்படிப்பட்டது. என்று “ஸ்ரீ வைஷ்ணவம்” எளிமையான விளக்கம் தருகிறது.


ஒரு அரசன் இருக்கிறான் அவன் தன்னை அலங்கரித்து கொள்ள ஏராளமான அணிகலங்களை உடல் முழுவதும் அணிந்து கொள்கிறான். அப்போது அவன் விரலில் இருக்கும் மரகத கணையாழி ஒன்று காணாமல் போகிறது. பச்சை பசும் ஒளியை விரல்களிலிருந்து நாலா திசையும் வாரி இறைத்து கொண்டிருந்த கணையாழி காணாமல் போனது யாருக்கு இழப்பு அணிந்து கொண்டிருந்த அரசனுக்கா அணியப்பட்ட பொருளுக்கா சந்தேகமே வேண்டாம். பொருள் இழப்பு என்பது அரசனுக்குத்தான்.

அதே போல கடவுளின் உடைமையாக இருக்கும் என்னை சரியான முறையில் பாதுகாக்காமல் காம சேற்றில் தவற விட்டுவிட்டால் நான் சாக்கடையில் கிடந்து நாறுகிறேன் என்பது வேறு விஷயம்.ஆனாலும் பக்தனாக இருக்கும் என்னை காமுகனாக ஆக்கி இழந்து நாராயணன் தானே ஆகவே என்னை இழக்காமல் என் மீது சேறும் சகதியும் பூசாமல் பாதுகாக்க வேண்டியது பகவானின் கடமையாகிறது. ஆஹா என்ன அழகான ஒரு உறவு முறை இது என்னை இழந்தால் இழப்பு உனக்குத்தான் அதனால் என்னை நீ பாதுகாத்தே ஆகவேண்டும் என்று கடவுளுக்கே கட்டளை போட அவனிடம் நமக்கு எவ்வளவு உரிமையிருக்க வேண்டும், எவ்வளவு பாசம் இருக்க வேண்டும்.

ஏழாவதாக தாரிய தாரக சம்பந்தம் அதாவது தாங்குபவன் தாங்கபடுபவன் உறவு என்பதாகும். ஒரு நிமிடம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நகர்ந்து கொண்டேயிருக்கும் இந்த பிரபஞ்சம் எதன் மீது நகர்கிறது. சுற்றிக்கொண்டேயிருக்கும் பூமியும் மற்ற கிரகங்களும் எதை ஆதாரமாக பிடித்து சுற்றிக்கொண்டு இருக்கிறது. கடவுள் என்ற “பரப்பிரம்மமே” இவையணைத்தையும் தாங்கும் பொருளாக இருக்கிறது. கோவர்த்தண மலையை இடையாக பிடித்து கோபாலன் நின்ற கோலமே இந்த தத்துவத்தின் உருவக விளக்கமாகும். தாரிய என்ற சொல் தாங்குகின்ற தாமோதரனையும் தாரக என்ற சொல் தாங்கப்படும் தரணியையும் காட்டுவதாகும்.


எட்டாவதாக ஓங்கி உலகளந்த உத்தமனுக்கு ஜீவன்கள் அனைத்தும் உடம்பாகவும் அவனே எல்லாவற்றின் உயிராகவும் கருதப்படும். சரிர சாரிர சம்பந்தம் என்ற உடம்பு உயிர் உறவாகவும் போத்துரு போக்கிய சம்பந்தம் என்ற நுகர்பவன் நுகரப்படும் பொருள் உறவு என்ற ஒன்பதாவது உறவும் சிறப்பாக பேசப்படுகிறது.

இவைகளை பொதுவாக நவவித சம்பந்தம் என்று வைஷ்ணவர்கள் கருதினாலும் இது தவிர தாய் குழந்தை உறவு குலமகள் கணவன் உறவு குடிமகன் கோமகன் உறவு நோயாளி மருத்துவன் உறவு என்று பல்வேறுபட்ட உறவு முறைகள் கடவுளோடு மனிதன் மிகநெருக்கமாக உறவு வைத்துக்கொள்ளும் வழிமுறைகள் கூறுகிறது. இது தவிர இன்னும் வைஷ்ணவத்த்தின் தெய்வீக கருத்துக்கள் மிக ஏராளமாக உள்ளன. அவைகளையும் இனி வரும் அத்தியாயங்களில் தொடர்ந்து சிந்திப்போம்.Contact Form

Name

Email *

Message *