Store
  Store
  Store
  Store
  Store
  Store

உயிர்களை உடலாக கொண்ட உத்தமன் !


 இந்து மத வரலாற்று தொடர் 20

    ஸ்ரீ வைஷ்ணவத்தின் முக்கிய தூண்களில் ஒருவரான நம்மாழ்வார் வணக்கும் துறைகள் பலப்பலவாக்கி மதிவிகற்பால் பிணக்கும் சமயம் பலப்பலவாக்கி என்று திருவிருத்தத்தில் சொல்வார். அவருடைய கூற்றுப்படியே உலகில் பல மதங்கள் இருந்தாலும் நமது இந்தியாவை பொறுத்தவரை மதங்கள் என்பது இரண்டுவகைப்படும் ஒன்று வேதங்களை சத்தியப்ரமானமாக ஏற்றுக்கொள்ளும் வைதீக மதங்கள் இரண்டு வேதங்களை ஏற்றுக்கொள்ளாத அவைதீக மதங்கள். வைதீக மதங்களில் மிகவும் முக்கியமானது இந்துமத சம்ராதய தர்மங்களில் கண்களை போன்றது ஸ்ரீ வைஷ்ணவம் என்பது உலகோர் அறிந்த உண்மை செய்தியாகும்.

ஊனக் கண்களால் நேருக்கு நேராக பார்க்க முடியாமலும் அனுமானத்தாலோ அறிவாலோ அறிந்துகொள்ள முடியாததும் பரப்பிரம்மம் என்று சதுர்மறைகள் சொல்கின்றன. அத்தகைய பரம்பொருளை வார்த்தைகளால் விளக்க முயன்று எழுந்த ஆன்மிக கருவூலங்களே வேதங்களாகும் வேதங்களை எதிர்க்கும் சார்வாக,சமண,பெளத்த மதத்தினரை பாஹ்யர் என்று அதாவது புறச்சமையத்தார் என்று அழைப்பதும் மரபு வேதங்களை ஏற்றுக்கொண்டாலும் அவைகளுக்கு சரியான விளக்கத்தை எடுத்துக்கொள்ளாமலும் மனம் போனப்படி வழிபாட்டு முறைகளையும் ஆன்மிக பாதைகளையும் வகுத்து கொள்பவர்களை குத்துருஷ்டி அதாவது மாறான பார்வை உடையவர் என்று அழைப்பது வைதீக மரபாகும்.


   வேதம் கர்மகாண்டம் ப்ரஹம காண்டம் என்று இரு வகுப்பாக உள்ளது அதாவது பூர்வ பாகம் என்ற முதல்பகுதி கர்ம காண்டம் என்றும் உத்ரபாகம் என்ற கடேசி பகுதி ப்ரஹம காண்டம் என்றும் வழங்கப்படுகிறது பிரம்மாகிய பகவானுக்கு ஆராதனை ரூபமாகிய வேள்வி முதலிய கர்மங்களை விஷேசமாக விவரித்து கூறுவது கர்மகாண்ட பகுதியாகும். அந்த வேள்வியில் வணக்கப்படும் ஆதிபகவான் ஆன இறைவனின் இயல்புகளையும் நலங்களையும் திருவடிவங்களையும் விவரித்து விளக்கமாக சொல்லும் பகுதி ப்ரஹம காண்டம் என்று வழங்கப்படுகிறது இந்த பகுதியே உபநிஷத் என்ற புகழ்பெற்ற பகுதியாகும்.

உபநிஷத் என்ற சொல்லுக்கு பரம்பொருளின் அருகில் இருப்பது என்பது பொருளாகும் வேதச்ச ஸர்வை அஹமேவ வேத்ய என்று கீதையின் சொல்படி கர்ம காண்டம் என்பது சிறந்தது உயர்ந்தது என்றாலும் அதுவும் இறைவனுக்கு மிக அருகாமையில் உள்ள அல்லது பக்தனை மிக அருகாமையில் அழைத்து செல்ல வல்லது என்றாலும் உத்ரகாண்டத்திற்கு மட்டும் உபநிஷத் அதாவது இறைவனுக்கு அருகாமையில் உள்ளது என்ற விசேஷ பெயர் எதற்க்காக வரவேண்டும் என்று யோசிக்கும் போது ஒரு உண்மை நமக்கு தெளிவாக தெரிகிறது. வேள்வி பூஜை முதலிய சத்கர்மங்கள் பகவானை வழிபடும் பொருளாகவும் ஞான விசாரம் என்ற ஆத்ம விசாரத்தை தருகின்ற உபநிஷத் போன்ற தத்துவ விளக்கங்கள் பகவானோடு தோழமை பாராட்டுவது போல் அமைந்துள்ளதால் பகவானுக்கு அருகில் உள்ளது என்ற சிறப்பு பெயரை தாங்கி இருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.


பூஜை புனஸ்காரம் மற்றும் யாகங்கள் செய்யும் போது சில சந்தேகங்கள் மனித மனதில் எழுவது இயற்கை அந்த சந்தேகத்தை நிவர்த்திக்க ஜைமினி என்ற மகரிஷி பதினாறு அத்தியாயங்கள் கொண்ட ஒரு சாஸ்திரத்தை இயற்றி உள்ளார். அதற்கு பூர்வ மீமாம்சை என்பது பெயராகும் இதை போல உபநிஷத் போன்ற தத்துவ விஷயங்களை கருத்தூன்றி படிக்கும் போது சந்தேகம் எழலாம் அந்த சந்தேகத்தை போக்க வியாசர் நான்கு அத்தியாயங்கள் கொண்ட ஒரு சாஸ்திரத்தை வடிவமைத்து உள்ளார். அதற்கு பெயர் சாரீரக மீமாம்சை என்பதாகும் இதை உத்திர மீமாம்சை என்று அழைப்பாரும் உண்டு. இந்த சாஸ்திரத்தை தான் ஆதிசங்கர பகவத்பாதாள் போன்ற அத்வைதிகள் பிரம்ம சூத்திரம் என்று அழைக்கிறார்கள்.

இந்த பிரம்ம சூத்திரத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்கள் உண்டு எனவே அத்தியாயத்திற்கு நான்கு வீதம் நான்கு அத்தியாயத்திற்கும் சேர்த்து பதினாறு பாதங்கள் கொண்டது பிரம்ம சூத்திரமாகும் இதில் ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து விஷயங்களை நிலைநிறுத்துவதற்கு அதிகரணம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது அப்படி பட்ட அதிகரணங்கள் பிரம்ம சூத்திரத்தில் நூற்றி ஐபத்து ஆறு உள்ளன. தத்துவங்களின் உண்மை இயல்பை அறிந்துகொள்ளவும்,உலக பொருள்களில் பகவத்தன்மையானது எந்த வகையில் பதிந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளவும் உபநிஷதங்களை விட்டால் வேறு வழி இல்லை. அத்தகைய உபநிஷத்களின் பொருளை ஐயம்திரிபுகள் இல்லாமல் மிக தெளிவாக சொல்வது பிரம்ம சூத்திரம் மட்டுமே என்று வேதாந்திகள் அடித்தும் சொல்கிறார்கள்.



பிரம்ம சூத்திரம் என்பது சூத்திரவடிவில் அதாவது ஏறக்குறைய திருக்குறள் போல குறைவான வார்த்தைக்குள் நிறைவான பொருளை கொண்டிருப்பதனால் சாதரண அறிவு படைத்த சராசரி மனிதனால் புரிந்து கொள்வது மிகவும் கடினமாகும் அந்த கடினத்தை போக்க அறிவில் முதிர்ச்சி பெற்ற சான்றோர்கள் பலர் விளக்க உரை தந்திருக்கிறார்கள் இந்த விளக்க உரைக்கு வைதீக பரிபாஷையில் பாஷ்யங்கள் என்பது பெயராகும். இப்படி பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யங்கள் எழுதியதில் புகழ் வாய்ந்தவர்கள் சங்கரர்,இராமானுஜர்,மத்வர் போன்ற அவதார புருஷர்களாகும். சங்கரரின் விளக்கம் அத்வைதம் என்றும் மத்வரின் விளக்கம் துவைதம் என்றும் ஸ்ரீ இராமனுஜரின் விளக்கம் விசிஷ்டாத்வைதம் என்றும் அழைக்கப்படுகிறது இந்த விசிஷ்டாத்வைத தத்துவமே ஸ்ரீ வைஷ்ணவத்தின் அஸ்திவாரம் என்று சொல்லலாம்.

துவைதம் என்ற வார்த்தைக்கு பேதம் என்று பொருள் எனவே பேதம் இல்லாததை அத்வைதம் என்று அழைக்கவேண்டும் என்ற விதி ஏற்படுகிறது. அத்வைதம் என்ற பதத்தோடு விசிஷ்ட என்ற பதத்தை சேர்த்தால் விசிஷ்டாத்வைதம் அதாவது விஷேசமான சிறப்பான அத்வைதம் என்று இதற்கு பொருள் சொல்லலாம். அதாவது சேதனங்கள் என்ற தன்னுணர்வு கொண்ட பொருள்களும் அசைதேனங்கள் என்ற தன்னுணர்வு இல்லாத பொருள்களும் பரப்பிரம்மம் தன்னோடு கொண்டுள்ளது என்பதையே விசிஷ்டாத்வைதம் என்ற வார்த்தைக்கு நிஜ பொருளாகும்.


இந்த உலகம் என்பதே ஒரு மாய தோற்றம் தான் பிரம்மத்தின் நிழல் அவித்தை என்ற மாயையில் விழுவதால் இல்லாதது இருப்பது போல் தோன்றுகிறது உண்மையில் பிரம்மத்தை தவிர வேறு எதுவுமே இல்லை என்பது அத்வைத தத்துவத்தின் ஆதர சுருதியாகும். இதற்கு முற்றிலும் மாறுபட்டு பகவான் என்று ஒருவன் இருக்கிறான் அவனிடம் இருந்து தனியாக பிரிந்து உயிர்கள் இருக்கின்றன எனவே இந்த உலக தோற்றமே இரண்டு என்று துவைதம் சொல்கிறது ஆனால் உயிர் ஜடம் இவை இரண்டையும் விட்டு பிரியாத அல்லது இவை இரண்டையும் தனது சரீரமாக கொண்ட பிரம்மம் மூன்றாவதாக இருக்கிறது என்று விசிஷ்டாத்வைதம் மிக தெளிவாக பறைசாற்றுகிறது.

பிரம்மம் ஒன்றே சாத்தியமானது மற்ற அனைத்தும் பொய்யானது என்று சொல்கின்ற அத்வைதிகள் பிரம்மத்திடம் உள்ள சித்தையும் அசித்தையும் ஒத்துக்கொள்வது இல்லை பிரம்மன் எப்படி சத்யமான பொருளோ அதே போலவே கண்ணுக்கு தெரிகிற உலகமும் சத்தியமானது தான் என்று சொல்லுகின்ற துவைதிகளும் சேதன அசேதன பொருள்களுக்கும் பிரம்மத்திற்கும் காக்கப்படும் காத்து நிற்கும் தொடர்பை தவிர ஐக்கியம் என்ற ஒரு நிலைபாட்டை ஏற்றுக்கொள்வது கிடையாது அதாவது அவர்களும் பிரம்மத்தில் சித்தும் அசித்தும் விசேஷ தன்மையாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வது கிடையாது


விசிஷ்டாத்வைத தத்துவமோ பிரம்மத்தையும் ஒத்துக்கொள்கிறது உலகத்தையும் ஒத்துக்கொள்கிறது அதே நேரம் பிரம்மத்தில் உலக பொருள்கள் அனைத்தும் நிறைந்துள்ளது என்பதையும் அதாவது ஐக்கிய பாவத்தையும் ஒத்துக்கொள்கிறது இந்த தன்மையை சரீர சரீரி சம்மந்தம் என்று அழைக்கிறது அதாவது சரீர சரீரி சம்மந்தம் என்றால் ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை ஆனால் ஒற்றுமையால் ஒன்று போல் தெரிவதனால் ஒன்று தான் என்று உலக வழக்கில் பேசப்படுகிறது அல்லவா? அதே போலவே உலகத்தோடு ஒட்டாமல் பிரம்மம் தனியாக இருந்தாலும் அது உலகத்தை தன்னக்குள் வைத்திருப்பதனால் இரண்டும் ஒன்று போலவே தெரிகிறது என்பது இதன் மைய கருத்தாகும்.

வேதங்களில் எவனுக்கு பூமி சரீரமோ? எவனுக்கு ஆத்மா சரீரமோ? எவன் ஆத்மாவில் உறைகிறானோ? என்ற வார்த்தைகள் பல இடங்களில் வருகின்றன இவைகள் கடகசுருதிகள் என்று அழைக்கப்படும் கடகம் என்றால் சேர்ப்பது என்பது பொருள் இத்தகைய பொருள்களே பகவான் இடத்தில் உலகத்துக்கு உள்ள சேர்மானத்தை காட்டுவதாகும் உயிர்,ஜடம்,ஈஸ்வரன் ஆகிய மூன்று தத்துவங்களையும் தனித்தனியாக பார்த்தால் பேதம் தெரியும் அசேதனமாகிய அறிவற்ற உடல் வேறு அதனுள் மறைந்திருக்கும் சேதன பொருளாகிய அறிவு வேறு அந்த அறிவுக்குள் மறைந்திருக்கும் பரம சேதனன் என்ற பரம்பொருள் வேறு என்று சாஸ்திரங்கள் பேத உணர்சிகளை விவரித்து கூறுகின்றன பல உறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டு வடிவமான உடம்பில் கை,கால்,காது,மூக்கு போன்றவற்றை தனித்தனியாக பார்க்கும் போது பேத உணர்வும் ஒன்றாக ஒரே உடம்பாக பார்க்கும் போது அபேத உணர்வும் ஏற்படுகிறது.


உதாரணமாக ராமசாமி மெலிந்திருக்கிறான். சங்கரன் பருத்திருக்கிறான் என்ற இரண்டு வார்த்தையை எடுத்துக்கொள்வோம் இதில் ராமசாமி,சங்கரன் ஆகிய பெயர்கள் நிச்சயம் உடம்பை மட்டுமே குறிக்கிறது என்பது நமக்கு தெரியும்.அதே போலவே ராமசாமி அறிவாளி சங்கரன் புத்திசாலி என்று சொல்லும் போது இந்த இரண்டு பெயர்களும் உடம்பை குறிக்கவில்லை ஆத்ம இயல்பை குறிக்கிறது என்பதும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு ராமசாமி சங்கரன் ஆகிய இரண்டு வார்த்தைகள் சரீரத்தையும் சரீரத்தை இயக்கம் சரீரியையும் குறித்து இரண்டும் ஒன்று என்பது போல் நமக்கு காட்சி அளிக்கிறது.

இதே போலவே தான் பிரஹம,ஏகமேவ என்ற வேத வார்த்தைக்கு பொருள் கொள்ள வேண்டும்.உயிர்,ஜடம் ஆகிய இரண்டு வகுப்புகளை பிரம்மம் தனது சரீரமாக கொண்டிருக்கிறது என்பதே வேத வாக்கியத்தின் பொருளாகும் இதை வைத்து தான் விசிஷ்டாத்வைத தத்துவத்தை ஸ்ரீ வைஷ்ணவத்திற்கு ஆதார தத்துவமாக ஸ்ரீ ராமானுஜர் கொண்டு வந்தார் அதாவது ஸ்ரீ வைஷ்ணவத்தின் உண்மையான பொருள் கடவுளுடைய சரீரமாக அதாவது உடம்பாக இந்த உலகம் இருக்கிறது அவர் உலகத்தில் வேறுபட்டவராகவோ அல்லது உலகம் அவரிடமிருந்து வேறுபட்டதாகவோ இல்லை இரண்டும் அருகில் இருந்தாலும் எண்ணெயும் தண்ணீரும் போல பிரிந்து இருக்கிறது. ஆனாலும் ஒன்றை ஒன்று எப்போதும் பிரியாது என்பதே இதன் மைய கருத்தாகும்.


இங்கே இந்த நீண்ட விளக்கத்தை சொல்வதற்கு மிக முக்கிய காரணம் உண்டு பொதுவாக நம் அனைவருக்கும் ஒரு கேள்வி அடிக்கடி தோன்றும் அதாவது இறைவன் எப்படி இருக்கிறான்? அவனது இயக்கத்தை எதை வைத்து நாம் அறிந்து கொள்வது என்பதே அந்த கேள்வியாகும் இதற்கு மிக சரியான விளக்கத்தை ஸ்ரீ வைஷ்ணவம் தருகிறது அதாவது இந்த உலகத்தையும் உயிர்களையும் இயக்குபவன் இறைவன் அவன் இவை அனைத்தையும் அல்லது அனைத்திற்குள்ளும் வியாவித்து நின்று இயக்குகிறான் நமது உடலை உயிர் எப்படி இயக்குகிறதோ அதே போலவே உயிரை இறைவன் இயக்குகிறான் அப்படி இயக்கம் சக்தியாக எது இருக்கிறதோ அது தான் இறைவன் அது தான் இறைவனின் செயல்பாடு என்று ஸ்ரீ வைஷ்ணவம் தெளிவாக சொல்கிறது.

இறைவனை பொருத்தமட்டில் அவனது உடல் நமது உயிர்களாகும். உயிர்கள் மட்டுமல்ல அண்டசராசரம் அனைத்துமே இறைவனின் உடலாக இருக்கிறது. ஆக காணுகின்ற காணப்படுகின்ற பொருள்கள் அனைத்துமே இறைவன் தான் அந்த பொருள்களுக்குள் சதா சர்வகாலமும் நிற்காமல் இயங்கி கொண்டிருக்கும் இயக்கு சக்தியும் இறைவன் தான் இதில் இன்னொரு விசேஷம் அடங்கி இருக்கிறது நமது உடம்புக்கு சுதந்திரம் என்பது அவ்வளவாக கிடையாது நம் இஷ்டப்படி உடலை பேன முடியாது அப்படி பேணினால் உடல் விரைவில் கெட்டு போய்விடும். எனவே உடல் விரும்புகிறப்படி அதை விட்டு விட முடியாது ஆனால் உயிர் சர்வ சுதந்திரமானது அதை நம்மால் கட்டுபடுத்தவோ நிறுத்தி வைக்கவோ கட்டளை இடவோ முடியவே முடியாது.


அதே போலவே இறைவனின் சரீரமாக இருக்கும் உலகத்துக்கும் அண்ட சராசரங்களுக்கும் சுதந்திரம் என்பது கிடையாது அவைகள் தன்னிஷ்டப்படி செயல்படவும் முடியாது அப்படி செயல்பட்டால் அழிவு மட்டுமே ஏற்படும் ஆனால் அவைகளை இயக்கும் உயிராகிய இறைவனுக்கு சர்வ சுதந்திரம் உள்ளது. தத்வமசி என்று உபநிஷத் சொல்கிறது அதாவது நீ அதுவாக இருக்கிறாய் என்பது இதன் பொருள் அதே உபநிஷத் அகம் பிரம்மாஸ்மி என்றும் சொல்கிறது அதாவது நானே பிரம்மம் என்பது இதன் பொருள் இதை அத்வைதிகள் கடவுள் மட்டுமே நிஜம் மற்ற அனைத்தும் நிழல் என்று பொருள் கொள்கிறார்கள் ஆனால் வைஷ்ணவம் இதை அந்த நோக்கில் காணவில்லை.

தத்வமசி என்ற வார்த்தையில் துவம் என்ற சொல் மறைந்திருக்கிறது இச்சொல் நீ என்ற பொருளை நேரடியாக சொன்னாலும் உனக்குள்ளே என்ற பொருளையே இதயமாக கொண்டிருக்கிறது அப்படி என்றால் உபநிஷத் உனக்குள் இருக்கும் இறைவன் உலகுக்கு வெளியேயும் இருக்கிறான் அல்லது வெளியே உள்ள இறைவன் உள்ளேயும் இருக்கிறான் அதாவது வெளியே உள்ள இறைவன் எப்படி சர்வ சுதந்திரம் பெற்றவனோ அதே போல உனக்குள் இருக்கின்ற இறைவனும் சுதந்திரம் உடையவன் உனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்துகொள் என்பதே இந்த வார்த்தையின் உண்மை பொருளாகும். என்று ஸ்ரீ வைஷ்ணவம் விளக்கம் தருகிறது.

நானே கடவுள் என்றால் கடவுளுக்கு இருக்கும் சக்தி அனைத்தும் எனக்குள் இருக்க வேண்டும் ஆனால் நிலைமை அப்படி அல்ல என் உடம்பு கடவுளின் இருப்பிடமாக இருக்கலாம் அதனால் உடலை கடந்து உள்ளுக்குள் பிரகாசிக்கும் இறைதரிசனத்தை பெறுவதே எனது நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே வைஷ்ணவத்தின் மைய கருத்து இதுதான் நம்மை போன்ற சாதரண மனிதர்களுக்கு பொருந்தி வரக்கூடிய கருத்தாகும். நானும் கடவுளும் ஒன்றல்ல அதே நேரம் கடவுள் எனக்குள் இருக்கிறான் அவனை நான் நெருங்க நெருங்க அவன் தனது அருள் மழையால் என்னை நனைத்து என் பாவங்களை கழுவி என் கர்ம தளைகளை கட்டவிழ்த்து ஜீவன் முத்தனாக மாற்றுகிறான் அப்படி மாறும் போது நானும் கடவுளும் ஒன்றை போல் இருப்பதை உணர்வேன் என்ற எண்ணம் நமக்குள் வரவேண்டும் என்பதே வைஷ்ணவத்தின் நோக்கமாகும்.

அதாவது ஒரு பொம்மை உப்புக்கல்லால் செய்யபட்டிருக்கிறது. இப்போது இது உப்பாக இருந்தாலும் கடலில் உள்ள உப்பாக இல்லை அதே வேளை பொம்மை சமூத்திரத்தில் விழுந்துவிட்டால் சிறிது சிறிதாக தனது இருப்பை இழந்து கடலோடு கடலாக கலந்துவிடும் பக்தனும் அப்படி தான் பகவானை தனது இதையத்தில் சுமந்து கொண்டு இருந்தாலும் இதயதாமரையில் வீற்றிருக்கும் திருமாலின் திருவடியில் தன்னை பூரணமாக அற்பணிக்கும் போது பகவத் தன்மையை தானாக பெற்று விடுகிறான் ஸ்ரீ ராமச்சந்திரனால் அரவணைக்கப்பட்ட ஹனுமானும் ராமனை போல் மாறிவிட வில்லையா? அதே போலவே சாதாரண பக்தனும் ஆவான் என்பதே வைஷ்ணவத்தின் முடிவாகும்.




Contact Form

Name

Email *

Message *