Store
  Store
  Store
  Store
  Store
  Store

சிவனுக்கு தண்டனை கொடுத்தவர் !


இந்து மத வரலாற்று தொடர் 23

    பாரத நாடு பழம்பெரும் நாடு என்பது நாம் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் அறிந்த செய்தியாகும். இத்தகைய பாரத திருநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆயிரமாயிரம் பேதங்கள் மலிந்து கிடக்கிறது. பேசும் மொழியால் வாழும் வகையால் வழிபடும் முறையால் உள்ள பிரிவினைகள் எண்ணில் அடங்காது இப்படி பேதங்கள் நூறு இருந்தாலும் கல்பகோடி காலமாக பரத வர்ஷம் என்று அழைக்கப்படும். பாரத பொன்னாடு ஒன்றாக ஒருமைபாடாக இருந்து வருகிறது அதற்கு காரணம் என்ன?

மாகாகவி பாரதி மிக அழகான ஒரு உதாரணத்தால் பாரத நாட்டின் ஒற்றுமைக்கான காராணத்தை கண்டுபிடித்து சொல்வார். என் வீட்டில் ஒரு பூனை வளர்த்தேன் அது பார்ப்பதற்கு அழகாக வெள்ளை நிறத்தில் இருக்கும். நேரம் தவறாமல் அதற்கு உன்ன சோறும் உறுஞ்சி குடிக்க பாலும் கிடைத்தாலும் வாலிப வயது எதோ ஒரு கடுவன் பூனை மீது காதல் கொள்ள செய்திருக்கிறது. மனிதனுக்கு காதல் வந்தாலே கட்டுபாடுகள் உடைந்து விடும். ஐந்தறிவு ஜீவனுக்கு வந்தால் கேட்கவா வேண்டும். காதல் முற்றி கர்பத்தில் முடிந்தது.


கர்ப்பமான பூனை ஒரு சுபயோக சுபதினத்தில் சில குட்டிகளை பெற்றெடுத்தது அந்த குட்டிகளை பார்த்தவுடன் அதிசயத்திலும் அதிசயமாகி விட்டது. சாம்பல் நிறம் ஒரு குட்டி, கரும் சாந்து நிறம் ஒரு குட்டி, பாம்பு நிறம் ஒரு குட்டி, பால்போன்ற வெள்ளை நிறம் ஒரு குட்டி எந்த குட்டியும் அம்மா பூனை போல் தனி வெள்ளையாக இல்லை. பல வண்ணத்தில் குட்டிகள் பிறந்திருந்தாலும் தாய் பூனை எதையும் விலக்கிவிடவில்லை வாராது வந்த மாமணியை வாரி அணைத்தது போல் எல்லா குட்டிகளையும் ஒரே போலவே அரவணைத்து கவனித்தது.

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. ஒரே பூனை பெற்ற நான்கு குட்டிகளும் தனிதனி நிறம் இருந்தாலும் அனைத்து குட்டிகளும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் அல்லாவா? அதே போலவே தெலுங்கன், மலையாளி, தமிழன், குஜராத்தி, மாராட்டியன் என்று ஆயிரம் பிரிவுகளோடு பாரத புத்திரர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே இந்திய தாயின் குழந்தைகள் அல்லவா? என்று எளிமையான விளக்கத்தை பாரதியார் தருகிறார். இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய் மக்களாக இருப்பதற்கு இன்னும் ஒரு உதாரணமும் இருக்கிறது.


மண்ணுக்குள் கிடந்த தங்கத்தை வெட்டி எடுத்து துருத்தியில் வைத்து ஊதி ஊதி சுத்தியல் கொண்டு அடித்து வளைத்து நெளித்து பட்டையாக்கி கண்ணைகவரும் ஆபரணமாக செய்து தருகிறாரே அப்பாக்குட்டி ஆசாரி அவரும்

வானத்தை முட்டும் அளவிற்கு ஓங்கி நிற்கும் பனைமரத்தின் உச்சியில் ஏறி பாளை சீவி கலையம் நிறைய பதநீர் கொண்டு வந்து இனிப்பான கருப்பட்டி செய்ய காரணமாக இருக்கிறாரே பாண்டிதுரை நாடார் அவரும்

கல்லாபெட்டி நிறைய காசை வைத்து கொண்டு அண்டா. குண்டா, அடுக்கு சட்டி என்று அனைத்து பொருளையும் அடகுக்கு வாங்கி இலாத நேரத்தில் பணம் கொடுத்து உதவுகிறாரே அருணாச்சல செட்டியார் அவரும்

காட்டில் உலர்ந்து கிடக்கும் சமித்துக்களை எடுத்துவந்து நெய்வார்த்து நெருப்பு வளர்த்து வாய் நிறைய மந்திரம் சொல்லி வழிபாடு செய்கிறாரே சாம்பசிவ சர்மா அவரும்

தனக்கு துயரம் வந்த போது தானொரு நல்ல காரியம் செய்யும் போதும் கைகளை கூப்பி நெஞ்சம் நிறைய பக்தி ரசம் ததும்ப வணங்குவது யாரை சந்தேகமே வேண்டாம் ஜாதியாலும் செய்யும் தொழிலாலும் வேறுபட்டு கிடந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக முதல் முதலில் வணங்கி எழுவது பிரணவ வடிவான விநாயக பெருமானை தான் அந்த பெருமான் வழிபாடு கூட இந்திய ஒருமைபாட்டை கட்டி காக்கும் மாபெரும் சக்தியாக அநாதி காலம் முதல் இன்று வரை இருந்து வருகிறது என்றால் அது மிகையில்லை.


இந்திய மக்கள் அதிலும் குறிப்பாக இந்து மக்கள் அனைவரும் எந்த நற்செயலை துவங்கினாலும் விநாயகரை வணங்க வேண்டும் என்பது அவர்களின் உள்ளார்ந்த உணர்வும் மரபும் ஆகும். விநாயகர் என்றால் தனக்கு மேற்பட்ட தலைவன் யாரும் இல்லாதவன் என்பது பொருளாகும். செயல்கள் எதுவாயினும் அதில் ஏற்படுகின்ற இடையூறுகளை தடை தாமதங்களை நீக்கி விக்னங்களை களைந்து தங்கு தடையற்ற செயல்பாடை தருபவர் என்பதும் விநாயகர் என்ற திருநாமத்தின் பொருளாகும்.

சாதாரன மக்கள் கூட அல்ல தேவாதி தெய்வங்களும் முனிஸ்ரேஷ்டர்களும் விநாயகனை மதித்து போற்றி வழிபட்ட பிறகே எந்த காரியத்தையும் செய்வார்கள் என்று புராணங்கள் பல சொல்கின்றன. உதாரணமாக சொல்வது என்றால் திரிபுரத்தை எரித்த விரிசடை கடவுளான சிவபெருமான் தொடர்பான ஒரு நிகழ்வை நாம் எண்ணி பார்க்கலாம் தனது பிறப்பிற்கே காரணமான தந்தை சிவ பெருமான் தன்னை நினைக்காமல் பொருள்படுத்தாமல் முப்புரத்தை எரிக்க முற்பட்ட போது அதாவது திரிபுர அசுரர்களை வெல்வதற்கு சிவபெருமான் திருத்தேரில் புறப்படுகையில் அவர் தேரின் அச்சாணியை ஒடித்து தனது நினைப்பு உண்டாகும் படி விநாயகர் செய்ததை


முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா

            என்று அருணகிரிநாத பெருமான் மிக அழகாக தனது திருப்புகழில் பாடுகிறார். மேலும் அடியவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கி அருள் செய்து காப்பதற்காகவே விநாயகன் அவதரித்து உள்ளார் என்று திருஞான சம்மந்தர்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே

மிக எளிய பொருள்பட தெளிவாக நமக்கு சொல்கிறார் நம்பியாண்டார் நம்பிகளின் திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலையில் என் இடர் கெடுத்து தன்னை நினைக்க தருகிறான். என்றும் விநாயகர் புராணத்தில் இடர்கள் முழுவதும் அவனருளால் எரிவிலும் பஞ்சென மாயும் என்றும் வரும் குறிப்புகளால் விநாயக பெருமான் மக்களின் இடர்களை தவிர்த்து இன்பத்தை வாரி வழங்கும் பெரும் தெய்வம் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

கடவுள் வழிபாடு என்பது சாமான்ய மனிதனும் மிக சுலபமாக செய்து விட முடியும் அளவிற்கு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும் அந்த வழியில் விநாயகர் வழிபாடு மட்டும் தான் எளிய மக்களின் மனப்பாங்குக்கு ஏற்றவாறு சுலபமான முறையில் இருக்கிறது. விநாயகரின் உருவத்தை வடிவமைத்து வழிபடுவது கடினமான காரியமல்ல மண்ணாலும் அவரி பிடிக்கலாம், மஞ்சளாலும் அவரை பிடிக்கலாம் பல நேரங்களில் கோமாதாவின் சானத்தாலும் கூட அவரை பிடித்து வழிபடலாம் அத்தகைய விநாயக பெருமானின் உருவ தத்துவத்தையும் வழிபாட்டு முறைகளையும் இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
Contact Form

Name

Email *

Message *