Store
  Store
  Store
  Store
  Store
  Store

தாயாக வந்த தவப்புதல்வன்...!

இந்து மத வரலாற்று தொடர் 26

   காணாபத்யம் என்ற விநாயகரை முழுமுதற்கடவுளாக கொண்டு வழிபடும் மதத்திலும் சரி மற்ற மதங்களிலும் விநாயகரின் வழிபாடு பரவலாக இருக்கிறது என்று எழுதியிருந்தேன் அதுமட்டும் அல்ல உலகம் முழுவதுமே பிள்ளையாரை வழிபாடும் வழக்கம் இருந்தது என்றும் எழுதியிருந்தேன் இதை படித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூரை சார்ந்த அன்பர் ஒருவர் கணபதியை வழிபடும் வழக்கம் அனைத்து மதத்திலும் இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள் படிப்பதற்கு மிகவும் ஆனந்தமாக தான் உள்ளது ஆனால் இந்து மதத்தில் மிக முக்கிய பிரிவுகளில் ஒன்றாகிய ஸ்ரீ வைஷ்ணவத்தில் விநாயகர் வழிபாடு என்பது இல்லையே அது ஏன்? இந்தியாவிற்குள் உள்ள இந்து மத பிரிவில் ஒன்றில் கூட இல்லாத கணேச வணக்கம் எல்லா மதத்திலும் எல்லா பகுதியிலும் இருந்தது என்பதை எப்படி நம்ப என்று கேட்டு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த வாசகரின் மனக்குறை தவறுதலானது என்று நான் சொல்லவரவில்லை வைஷ்ணவ மரபை சார்ந்த பலரும் கூட நாங்கள் விநாயகரை முதலில் வழிபட்டு எந்த காரியத்தையும் துவங்குவது இல்லை அதனால் எங்கள் செயல்கள் எதுவும் விக்னம் அடைந்ததாக சொல்ல முடியாது நாங்கள் விநாயகரை வணங்குவது கூட கிடையாது என்றும் சொல்கிறார்கள். இப்படி அவர்கள் சொல்லுவது சரியானது போல் பலருக்கு தோன்றும் ஆனால் இவர்களை விவரம் தெரியாதவர்கள் சமய அறியாமையில் இருப்பவர்கள் என்று சொன்னால் அதில் தவறு இருப்பதாக கூற இயலாது. காரணம் நாராயணனை மட்டுமே முழுமுதற்கடவுளாக கொண்ட ஸ்ரீ வைஷ்ணவத்திலும் விநாயகர் வழிபாடு மிக செழிப்பான முறையிலேயே இருக்கிறது. இதை துரதிஷ்டவசமாக பலரும் தெரிந்து வைக்கவில்லை.


 விநாயகர் ஒரு சமஷ்டி கடவுள் என்பதை நான் மீண்டும் மீண்டும் வாசகர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். வைஷ்ணவர்கள் பிள்ளையாருக்கு அந்த பெயர் கொடுத்து வணக்கம் செலுத்தவில்லையே தவிர விஸ்வசேனர் என்ற பெயரில் அவரை முதலில் வணங்கியே எந்த காரியத்தையும் துவங்குகிறார்கள் விஸ்வசேனரை சேனை முதலியார் என்றும் அதாவது படைத்தலைவர் என்றும் சேனை நாதர் என்றும் அழைப்பது வைஷ்ணவ மரபாகும். சைவ சமயத்தில் சிவபெருமானுக்கு ஸ்ரீ சண்டேஸ்வரர் எப்படி முக்கியமோ அப்படியே வைஷ்ணவத்தில் விஸ்வசேனர் முக்கியம். நித்திய சூரிகளில் ஒருவராக கருதப்படும் இவர் விஷ்ணு ஆலையத்தில் அன்றாடம் நடைபெறும் திருப்பணிகளை மேற்பார்வை இடுபவர் என்ற ஐதீகம் இன்றும் உண்டு.

விநாயக பெருமானுக்கு பல்வேறு வடிவங்கள் உண்டு ஒவ்வொரு வடிவமும் தனிதனி நோக்கத்திற்காக உள்ளது என்ற மரபும் உண்டு ஆனால் விஷ்வ சேனரின் திருவுருவம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு பெருமாளுக்கு பாதுகாப்பாளராக போற்றப்படுகிறார். விஸ்வசேனரால் பாதுகாக்கப்படும் இறைவன் கரிய நிற திருமால் என்பதால் வைஷ்ணவ பிள்ளையாரும் கருநிற வடிவாகவே இருக்கிறார். தலையில் திருமுடியும் நான்கு கரங்களும் கொண்ட அவர் இரண்டு திருக்கைகளில் சங்கு சக்கரம் தாங்கியும் மற்ற கரங்களில் கதாயுதமும், பிரம்பும் இருக்க தரிசனம் தருகிறார். வேறு ஒரு வகை சிற்பத்தில் சங்கு சக்கரத்தோடு இருகைகளும். இடது கை இடுப்பில் ஊன்றியபடியும் வலது கை வேலை செய்ய கட்டளையிடுவது போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறது.


 வைஷ்ணவ சமய கொள்கையில் மூல தத்துவம் பரம்பொருளான நாராயணன் மட்டுமே அதனால் அவன் முதல் இடத்தில் வைத்து போற்றப்படுகிறான் திருமாலின் திருமார்பில் குடிகொண்டிருக்கும்.ஸ்ரீ மாகலக்ஷ்மி தாயாரும் கூட இரண்டாம் இடத்திலேயே வைத்து வணங்கப்படுகிறாள் தாயாருக்கு அடுத்த மூன்றாவது அந்தஸ்து வைஷ்ணவத்தில் விஷ்வ சேனருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கும் இறைவிக்கும் அடுத்த நிலையில் உள்ள விஸ்வசேனரை யாரும் புறம்தள்ளிவிட முடியாது. சிவாலயங்களில் பைரவர் சன்னதி எப்படி வடகிழக்கு திசையில் அமைக்கப்பட்டு கருவறை சாவி பூஜை முடிந்த பிறகு பைரவர் வசம் ஒப்படைக்க படுமோ அதே போலவே பெருமாள் கோவிலில் சேனை முதலியார் சன்னதி வடகிழக்கு மூலையில் அமைக்கபட்டதோடு மட்டுமல்ல கருவறை சாவியும் இவரிடமே ஒப்படைக்க படுகிறது.

வைஷ்ணவத்தில் விஸ்வசேனர் என்ற விநாயக பெருமானின் அவதார திருநட்சத்திரம் ஐப்பசி மாத பூராட நன்னாளாகும். இவரின் தேவியாரின் பெயரி சுந்தராவதி என்பதாகும். வைஷ்ணவ சமய சடங்குகள் எதுவாக இருந்தாலும் அது துவங்குவதற்கு முன்பு விஸ்வசேனரே முதல் வணக்கத்தை பெறுகிறார். ஸ்ரீ ரங்கம் திருப்பதி போன்ற புண்ணிய ஷேத்திரங்களில் பிரம்மோத்சவம் துவங்குவதற்கு முன்னால் திருவீதி உலா வந்து பகவான் தரிசனம் கொடுப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் சரியாக இருக்கிறதா? என்று பார்த்தறிவது விஸ்வசேனரின் தொன்று தொட்ட சம்பிராதய பணியாகும்.


 பொதுவாக ஓம்கார வடிவான விநாயக பெருமான் மக்களுக்கு வருகின்ற கஷ்ட நஷ்டங்களை போக்கி அருளும் பெரும் தெய்வமாக கருதப்படுகிறார். அவரையே தலைவராக கொண்ட காணாபத்ய மதமானாலும் சரி சைவ, வைஷ்ணவ சமயங்கனாலும் சரி அதிலேயே முதலிடம் விநாயகருக்கு கொடுக்கபடுவது இயற்க்கை ஆனால் பெண்மையை போற்றும் சாக்த மதத்தில் விநாயகருக்கு சிறப்பிடம் கொடுக்கபடுகிறதா? என்ற ஒரு கேள்வி நமக்கு எழும்புவது இயற்கையானது. ஆலகாலமுண்ட நீலகண்டனையே காலின்கீழ் போட்டு நிற்கும் மாகாசக்தியான அம்மை தனக்கு முன்னால் விநாயகனை ஏற்றுகொள்வாளா? சக்தியின் பக்தர்கள் கணபதிக்கு முதலிடம் கொடுப்பார்களா? அதாவது தத்துவப்படி என்ற கேள்வி எழும்பும்.

ஆனால் சாக்தம் மற்ற அனைத்து மதங்களைவிட ஒருபடி மேலே சென்று ஆண்தெய்வமாக மட்டுமே இருந்த கணபதியை பெண்ணாக மாற்றி பெண்மையின் மென்மை தன்மையை கொடுத்து வழிபடவும் செய்கிறது. பஞ்சகச்சம் கட்டிய கணேசருக்கு பதினாறு முழ புடவை கொடுத்து கணேசாணி என்ற பெண் பெயரில் வழிபாடுகளையும் நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள சுசிந்தரம் தாணுமாலைய பெருமாள் கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிர்புறமாக புடவை கட்டிய கணேசாணி விநாயகர் கம்பீர சிற்ப வடிவில் காட்சி தருகிறார். திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலிலும் பெண் வடிவ விநாயகர் திருமேனியை தரிசனம் செய்ய முடிகிறது. இதே போன்ற திருவுருவம் மத்திய பிரேதேசத்தில் உள்ள பேராகட் என்ற ஊரில் உள்ள யோகினி கோவிலிலும் திபத் நாட்டில் பல இடங்களிலும் காணமுடிகிறது. இதன் தத்துவம் என்னவென்றால் சகல தெய்வங்களின் அம்சங்களையும் தனக்குள் கொண்டுள்ள விநாயக பெருமான் பெண்ணாகவும் இருக்கிறான் ஆணாகவும் இருக்கிறார். இவை அனைத்தையும் கடந்த தெய்வ நிலையிலும் இருக்கிறார் என்பது தான்.



 கடவுளை நாம் வழிபடும் முறையானது எப்படி இருந்தாலும் அதை கருணையே வடிவான இறைவன் பொருட்படுத்துவது இல்லை ஆகம விதி படி ஆலயம் சமைத்து சாஸ்திரப்படி பூஜை செய்து வழிபட்டாலும் கண்ணப்ப நாயனார் போல் தனது சொந்த இஷ்டப்படி வழிபட்டாலும் இறைவன் அதை மரியாதையாகவோ மரியாதை குறைவாகவோ எடுப்பது இல்லை நீ எந்த வழியை பின்பற்றினாலும் கவலை இல்லை நீ என்னை எத்தனை ஈடுபாடோடு வணங்குகிறாய் என்பதை மட்டுமே நான் கவனத்தில் கொள்வேன் என்பது தான் முழுமுதற் பொருளின் நெஞ்சார்ந்த கட்டளை இது பலருக்கு புரிவதில்லை ஆடை அணிகலன் ஆடம்பரங்கலையே பூஜையின் பிரதானம் என்று கருதி தடமாறி போகிறார்கள் உன் கையில் இருப்பது ஒரு துளி நீரோ ஒரு சிறு இலையோ அது பொருட்டல்ல அதை நீ எனக்கு அற்பணிக்கும் மனப்பாங்கே பெரிது என்பது தான் கீதையில் பரமாத்மா தரும் விளக்கமாகும்.

இதை நினைவு படுத்துவது தான் விநாயகரின் வழிபாடு நீ என்னை சந்தனத்தில் செய்தாலும் சாணத்தில் செய்தாலும் அதில் நான் இருக்கிறேன் என்று நீ உறுதியாக நம்பினால் நான் இருப்பேன் என்பது தான் அவர் நமக்கு தரும் செய்தியாகும் அதனால் தான் அவர் சகல வடிவங்களையும் தனக்குள் வைத்திருக்கிறார். சகல வடிவமாகவும் நமக்கு காட்சி தருகிறார். கடவுள் காண்பதற்கு அறிய பொருளல்ல காணக்கூடிய உன் அருகிலேயே பார்க்க கூடிய உன்னாலையே உணரத்தக்க வகையில் இருக்கிறார். அவரை நீ அடையாளம் கண்டு கொண்டால் அது போதும் அது மட்டுமே உனது முத்திக்கான வழி என்பது காணபத்திய தர்மத்தின் நித்திய தத்துவம். இதை உணர்த்துவது தான் பிரணவ வடிவான கணபதி வணக்கம். இதுவரை அந்த வணக்கத்தின் உட்பொருளை சிறிது சிந்தித்தோம் அடுத்துவரும் அத்தியாயங்களில் பன்னிரு விழியும் பவள செவ்வாயும் ஆறுமுகமும் கொண்ட ஆண்டவனாகிய திருமுருகனின் திருவருள் தத்துவத்தை சிறிது பார்ப்போம்.



Contact Form

Name

Email *

Message *