Store
  Store
  Store
  Store
  Store
  Store

மயிலாக மாறிய ஆணவம்.


இந்து மத வரலாற்று தொடர் 29

   திருமுருகனின் திருக்கரங்களில் இருக்கும் வேலுடைய சிறப்பினை இதுவரை பார்த்தோம். முருகனுடைய ஆயுதங்கள் மட்டுமல்ல அவனுடைய பிறப்பே பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. சூரபத்மன் என்ற அசுரன் சாகாத வரம் பெற்று ஆணவம் தலைக்கேறி தேவாதி தேவர்களையும் ரிஷிகள் முனிவர்களையும் கொடுமை படுத்தினான் யாகங்களும் தான தர்மங்களும் உலகத்தில் எங்கும் நடைபெராதவண்ணம் தடுத்து நிறுத்தினான் அப்பாவி உயிர்கள் பலவற்றை கொன்று வடிந்தோடும் குருதி சேற்றில் ஆனந்த கூத்தாடினான் அவனை அழிக்க முருக பெருமான் வந்தார் வென்றார் என்று நாம் அனைவரும் அறிவோம். முருகனின் இத்தகைய அவதார சிறப்பை கந்த புராணம் பரிபாடல் கந்தர் கலிவெண்பா போன்ற அமுதினினும் இனிய தமிழ் நூல்கள் அழுகபட சொல்வதை சிறிது சுவைத்து பார்ப்போம்.

வெண்மேகங்கள் பவனி வருகின்ற திருக்கைலாய மலையில் அன்னை ஆதிபராசக்தியோடு நம் அப்பன் சிவபெருமான் அமர்ந்திருக்கிறான். அப்போது அசுரனின் கொடுமைகளை தாங்காத தேவர்கள் வந்து அவரிடம் தங்களது கஷ்டங்களை முறையிட்டு நிற்கிறார்கள். அடியவர்களின் குறைகளை கேட்டு அருள்பாலிக்க தன் இருப்பிடத்தில் இருந்தே இறங்கி ஓடோடி வரும் எம்பெருமான் தன்னிடத்திற்கே வந்து தன்னையே சரணமென கருதி தன்னிடமே முறையிட்ட பிறகு சும்மா இருப்பாரா? தனது ஈஸ்வர தத்துவமான ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம் என்ற தனது ஐந்து முகங்களோடும் கீழ்நோக்கி இருக்கும் அதோ முகமென்னும் ஆறாவது முகத்தையும் கொண்டு ஆறு நெற்றி கண்ணில் இருந்து தீ பொறிகள் ஆரை வெளியிடுகிறார்.


ஈசனது முகத்திலிருந்து வரும் ஆறு அக்னி ஜூவாளைகளை உலகத்தால் தாக்குபிடிக்க முடியாமல் அண்ட சராசரங்கள் அனைத்தும் அஞ்சி நடுங்கின கிடுகிடுத்தன அதனால் தன்னிடமிருந்து வெளிவந்த நெருப்பு பொறிகளின் வீரியத்தை தன்னால் மட்டுமே கட்டுபடுத்த முடியும் என்று கருதிய ஈசன் ஆறு பொறிகளையும் தனது திருக்கரத்தில் ஏந்தி அதை குளிர்விக்க வாயு தேவனிடம் கொடுத்தார். ஈசனின் அக்னியை தாங்க முடியாத வாயு அதை அக்னி பகவானிடம் கொடுத்தார். உலகத்தையே சுட்டெரிக்கும் நெருப்பு கடவுளுக்கு சிவ நெருப்பை தாங்க முடியவில்லை எனவே அவன் கங்கை ஆற்றில் விட்டு விட்டான் குளிர்ந்த கங்கை ஆறு கொதிக்கும் நீராகி விட்டது. எனவே கங்கை தனது சூட்டை தனித்து கொள்ள சிவ பொறிகள் ஆரையும் சரவண பொய்கையில் தந்தாள்.

சரவண பொய்கைக்கு வந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறியது. அந்த குழந்தைகளுக்கு கார்த்திகை பெண்களாகிய ஆறு பேர் பாலூட்டி வளர்த்தார்கள். சிவ பெருமான் கார்த்திகை பெண்களிடம் வளருவது நம் குழந்தையே என்று உலகத்தின் தாயிடம் தெரிவிக்க அன்னை அன்புருவாகி கருணை என்னும் கங்கை தனக்குள் பொங்கி வழிய ஆறு குழந்தைகளின் இளந்தளிர் மேனியை வாரி அணைத்தாள் அப்போதே அங்கங்கள் ஒன்றாகி முகங்கள் ஆறு கொண்ட ஆறுமுகனின் திரு அவதாரம் நிகழ்ந்தது. ஆறுமகம் கொண்ட அந்த குழந்தைக்கு கந்தன் என்று அம்மையப்பன் பெயரிட்டார்கள். முருகனின் இத்தகைய பிறப்பை பற்றி சொல்லும் போது சிலருக்கு ஒரு சந்தேகம் வரும். நெருப்பில் இருந்து ஒரு குழந்தை தோன்றியது என்று சொல்வது அறிவு பூர்வமாக நோக்கும் போது நம்ப கூடியதாக இல்லையே என்று தோன்றும் ஆனால் அப்படி தோன்ற வேண்டிய அவசியமே இல்லை காரணம் நமது புராணங்கள் எல்லாமே பல விஞ்ஞான ரகசியங்களை பரிபாசையில் சொல்லுகின்றன இதில் முருகனின் பிறப்பும் ஒரு விஞ்ஞான ரகசியமே ஆகும்.


தினசரி காலையும் மாலையும் வணங்கப்படும் சூரியன் விஞ்ஞான பார்வையில் ஒரு எரிகோளே ஆகும். அதாவது சதாசர்வ நேரமும் எரிந்து கொண்டே இருக்கும் ஒரு நெருப்பு பந்து சூரியன் அந்த நெருப்பு பந்தை மூன்றுவிதமாக விஞ்ஞானம் பிரிக்கிறது முதலாவது நடுவில் உள்ள ஒளிக்கோலம் இதிலிருந்து தான் வெளிச்சமும் வெப்பமும் உண்டாகிறது. இரண்டாவது நடுப்பகுதிக்கு அடுத்துள்ள வண்ண பகுதியாகும் இது ஹைட்ரஜன் வாய்வு நிறைந்தது இதற்கு அடுத்து வெண்மையாக முத்து போல் தெரியும் பகுதி இருக்கிறது. இந்த மூன்றாவது பகுதியில் உள்ள வெப்பமே பூமி உட்பட மற்ற கிரகங்களுக்கு சென்று உயிர் துடிப்பை ஏற்படுத்துகிறது.

சூரியனை ஒரு நெருப்பு பந்து என்று மட்டுமே கருதிவிடவும் முடியாது. அது பல பொருட்களை தன்னை நோக்கி இழுக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மாண்டமான காந்தமும் ஆகும். இந்த காந்த சக்தியாலையே சூரியனை சுற்றி உள்ள எல்லா பொருட்களும் ஒழுங்குமுறை மாறாமல் ஈர்க்கப்பட்டு முறைப்படி நகர்ந்து வருகிறது. சூரியனின் நகர்வு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் DIFFUSED GAS என்ற ஆறுவிதமான வாயுவுகள் பரவுகின்றன. இந்த ஆறு வாயுக்களும் கார்த்திகை நட்ச்சத்திர கூட்டத்தால் ஈர்க்கபடுகிறது. கார்த்திகை நட்சத்திர குடும்பத்தில் ஆறு நட்ச்சத்திரங்கள் இருப்பது இங்கே குறிப்பிட தக்கது.


உலகுக்கு ஒளி கொடுக்கும் சூரியனை சிவபெருமானாகவே நமது முன்னோர்கள் கருதுகிறார்கள். சிவன் என்றாலே வெளிச்சம் சூரியன் என்பது தான் அர்த்தமாகும். சூரியனை சுற்றியுள்ள மூன்று ஒளிப்பகுதிகளும் சிவபெருமானின் மூன்று கண்களாகும். சூரிய வெளிச்சத்தை நேரடியாக உடனுக்குடன் பெறுவது கார்த்திகை நட்சத்திரங்கள் ஆகும். இதனாலையே சிவப்பொறிகள் ஆரை கார்த்திகை நட்சத்திரங்கள் தாங்கி வளர்க்கின்றன என்று சொல்வார்கள், கார்த்திகை நட்சத்திரங்கள் செவ்வாயின் ஆட்சிக்கு உட்பட்ட மேஷ ராசி மண்டபத்தில் அடங்குகிறது. செவ்வாய் கிரகத்தை போர் குணமிக்க கிரகமாக கருதுவார்கள். செவ்வாயின் அதிதேவதையான முருக பெருமானும் போர் கடவுள் தேவ சேனாதிபதி ஆவார் இது தான் முருகனின் அவதாரம் சொல்லும் பாரத விஞ்ஞான உண்மையாகும்.

அம்மை அப்பனின் அன்பு குழந்தையான சரவணன் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களை போர்களத்தில் வெற்றி பெற துணையாக நவ வீரர்கள் பார்வதி தேவியால் தோற்றுவிக்க பட்டார்கள். அதாவது உமையன்னையின் காற்சிலம்பில் இருந்து மாணிக்க வல்லி, முத்து வல்லி, புஸ்பராக வல்லி, கோமேதக வல்லி, வைடூர்ய வல்லி, வைர வல்லி, மரகத வல்லி, பவள வல்லி, நீல வல்லி என்ற நவ சக்திகள் தோன்றி அவர்கள் சிவபெருமானை விருப்பமோடு நோக்க அவர்களிடமிருந்து. வீரவாகு, வீர கேசரி, வீர மகேந்தரர், வீர மகேஸ்வரர், வீர புரந்தவர், வீர ராட்சசர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என்னும் ஒன்பது வீரர்கள் தோன்றினார்கள் இவர்களை படைத்தளபதியாக கொண்டு முருகன் சூரனை வென்றான் என்பது புராணங்கள் சொல்லும் ஆதாரங்களாகும்.

சூரபத்மனை இரண்டு கூறுகளாக யுத்த முடிவில் பிளந்து முருகன் கொன்றான். இரண்டு துண்டுகளான சூரனின் உடல் பகுதிகள் சேவலாகவும் மயிலாகவும் உருமாறி வந்தன அவைகளை தனது வெற்றியின் சின்னமாக முருகன் ஏற்றுகொண்டான். மயில் என்பது முருகனின் வாகனம் என்று நமக்கு தெரியும். இந்த மயில்வாகனத்தை ஆணவத்தின் உருவமாகவும். விந்துதத்துவத்தின் விளக்கமாகவும் குடில சக்தி என்றும் கெளமார மரபு சொல்கிறது. வானவில்லில் உள்ள நீலம் முதல் சிவப்பு வரை உள்ள ஏழு நிறங்களையும் மோகம், மதம், அராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம் ஆகிய எழுவையான ஆணவத்தின் தன்மையோடு ஒப்பிட படுகிறது. இந்த் ஏழு வண்ணத்தையும் மயிலில் காணலாம். எனவே தான் மயிலானது ஆணவத்தின் உருவமாக சொல்லபடுகிறது. இந்த ஏழு வண்ணத்தில் இருந்தே உலகில் உள்ள அனைத்து வண்ணங்களும். பிறந்தன என்பதனால் இதுவே விந்து தத்துவமாகவும் இருக்கிறது. முருகனுக்கு யானை, ஆட்டு கிடா, போன்ற வாகனங்கள் இருந்தாலும் ஆணவத்தை வென்றவன் ஆணவத்தை கொல்பவன் என்பதை விளக்க மயில் வாகனமே சிறப்பான வாகனமாக பக்தர்களால் கருதபடுகிறது.Contact Form

Name

Email *

Message *