Store
  Store
  Store
  Store
  Store
  Store

பழைய சாதமும் பச்சை மிளகாயும்...

   ன்மிகம் அரசியல் இலக்கியம் தவிர்த்து சில சாதாரண விஷயங்களை பற்றி குருஜியிடம் சில கேள்விகளை கேட்டோம் அதற்கு அவர் தந்த பதில்கள் இதோ


  • பழைய சாதத்திற்கு தொட்டுக்கொள்ள எது சிறப்பாக இருக்கும்?


    பழைய சாதம் சாப்பிடுவதே ஒரு ஆனந்தமான அனுபவம் நீரை பிழிந்து சாதத்தை பித்தளை வட்டிலில் போட்டு கெட்டியான தயிரை அதன் தலையில் கொட்டி நன்றாக பிசைந்து அதிகாலை நேரத்தில் சாப்பிடும் போது வயிற்றில் ஏற்படுமே ஒரு சிலிர்ப்பும் குளிர்ச்சியும் அதை வர்ணிப்பதற்கு வார்த்தைகளே கிடையாது. வார்த்தைகளில் சொன்னால் நன்றாகவும் இருக்காது அனுபவித்தால் தான் அந்த சுகம் என்னவென்று தெரியும்.

இரவில் வடித்த புழுங்கரிசி சாதம் பழைய சாதமாக மாறும் போது வருகின்ற வாசம் இந்த உலகிலேயே எதோடும் ஒப்பிட முடியாத அற்புத வாசம் அந்த வாசத்தோடு பச்சைமிளகாய் கடித்து சாப்பிட்டால் அடடா அதுதான் சொர்க்கலோகம்.


  • நீங்கள் முதல்முறையாக பார்த்த சினிமா எது?

  மிக சின்ன வயதில் ஏற்பட்ட அனுபவம் என்பதனால் நிழல் போல தான் ஞாபகம் இருக்கிறது. சிவாஜி கணேசன் நடித்த படம் அது தேன்னுண்ணும் வண்டு மாமலரை கண்டு திரிந்தலைந்து பாடுவது ஏன்? ரீங்காரம் கொண்டு என்ற பாடல் வரிகள் நன்றாக நினைவிருக்கிறது. விவரம் தெரிந்த பிறகு தான் அந்த படத்தின் பெயர் அமரதீபம் என்பதை தெரிந்து கொண்டேன்.

நாகர்கோவிலில் எதோ ஒரு தியேட்டரில் பார்த்தேன். என் அம்மாவும் என் பெரியம்மாவும் என்னை கூட்டி போயிருந்தார்கள். எனக்கு அப்போது படம் பார்க்கும் ஆர்வத்தை விட வேர்க்கடலை சாப்பிடும் ஆர்வம் அதிகமாக இருந்தது. இரண்டுமுறை வேர்கடலை வாங்கி கொடுத்தார்கள் மூன்றாவது முறையும் கேட்டேன் வாங்கி தரவில்லை அதனால் அழுதுகொண்டே இருந்தேன். சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டேன். இதுதான் நான் முதல் முதலில் சினிமா பார்த்த அனுபவம்.

குருஜியும் நான்காம் வகுப்பு நண்பர் முருகன்

  • சின்ன வயதில் செய்த தவறுகள் எதாவது நினைவில் இருக்கிறதா?

   ஒன்றல்ல ஏரளாமான தவறுகளை செய்திருக்கிறேன். அவைகளை எல்லாம் இங்கு சொல்வது என்றால் இடம் போதாது ஆனாலும் மறக்கவே முடியாத ஒரு தவறு அது இன்னும் எனது மனசாட்சியை சுட்டு கொண்டே இருக்கிறது. நான் நான்காவது வகுப்பு படிக்கும் போது எனது தகப்பனார் ஒரு பேனா வாங்கி கொடுத்திருந்தார். அதை நான் எங்கோ தொலைத்துவிட்டேன் இதற்காக வீட்டில் திட்டும் வாங்கியிருந்தேன். நான் அதை தொலைத்து இரண்டுமாதம் கழித்து எங்கள் ஊர் துப்புரவு தொழிலாளியின் மகன் முருகன் அதே போல ஒரு பேனாவை வைத்திருந்தான்.

நான் அது என் பேனாதான் அதை அவன் திருடி வைத்திருக்கிறான் என்று ஆசிரியரிடம் சொன்னேன் அவன் எவ்வளவோ மறுத்தான் நான் பேனாவை திருடவில்லை இது என் சித்தி வாங்கி கொடுத்தது என்று சொல்லி பார்த்தான் நான் பிடிவாதமாக இது என் பேனாதான் என்று சொல்லி அழுதேன் ஆசிரியரும் அதை வலுகட்டையமாக வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டார். அதுமட்டுமல்ல திருடியதற்காக அவனை அடிக்கவும் செய்தார்.

இந்த பேனாவை நான் வைத்திருந்த இரண்டாவது நாளில் தொலைந்து போன என் பேனா கிடைத்து விட்டது. ஆனால் நான் அதை யாரிடமும் வெளியில் சொல்லவில்ல நமக்கு இரண்டு பேனாக்கள் இருக்கிறது என்று சந்தோசபட்டனே தவிர அநியாமாக ஒருவனை திருட்டு பட்டம் கட்டிவிட்டோமே என்று சிந்திக்கவே இல்லை. பெரியவனான பிறகு ஐயோ பாவம் தப்பாக ஒருவனுக்கு துன்பம் கொடுத்து விட்டோமே என்று வருத்தப்பட்டேன். அதற்காக அந்த நண்பனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆசையும் பட்டேன் ஆனால் இன்றுவரை அவனை நான் பார்க்க முடியவில்லை அவன் எங்கிருக்கிறான் என்றும் தெரியவில்லை ஆனாலும் ஒருநாள் பார்ப்பேன் என் தவறை சொல்லி மன்னிப்பு கேட்பேன் என்று நம்புகிறேன்.

அவன் பெயர் முருகன் அவனது அப்பா பெயர் எனக்கு தெரியாது. ஆனாலும் எல்லோரும் அவரை பகடை என்று அழைப்பார்கள் நிறைய சாராயம் குடிப்பார் அதற்காக அவர் மனைவியிடம் அடியும் உதையும் கூட வாங்குவார். ஆனாலும் அவர் வாயில் இருந்து வருகின்ற கெட்ட வார்த்தைகள் சாராயத்தை விட அதிகமாக நாறும் அவரை கண்டாலே என்னை போன்ற பையங்களுக்கு அப்போது பயமாக இருக்கும். வீட்டில் எதாவது நாங்கள் தப்பு செய்தால் அவரிடம் பிடித்து கொடுத்துவிடுவதாக தான் மிரட்டுவார்கள் அவரை பற்றி நான் எழுதிய நான் பயித்தியமான கவிதை என்ற கவிதை தொகுப்பில் சொந்த ஊருக்கு எழுதிய மடல் என்ற கவிதையில் சொல்லியிருக்கிறேன்.

பேட்டி        
சதீஷ் குமார்

Contact Form

Name

Email *

Message *