Store
  Store
  Store
  Store
  Store
  Store

மூடனே! மூடனே! அறியாத அசடனே...!


    ன்னை தேடி தேடி நான் களைத்து விட்டேன் என் பாதம் இரண்டும் கல்லாலும் கண்ணாடி சில்லாலும் கருவேலம் முள்ளாலும் கிழிக்கப்பட்டு ரத்த ஓவியங்களை பாதை நெடிகிலும் பதிக்க துவங்கி விட்டது என் ரத்தம் எல்லாம் வியார்வையாக கோட்டி நாவும் தோலும் வறண்டு விட்டன வயிற்று சதை முதுகெலும்போடு ஒட்டி உலர்ந்து போய்விட்டது. ஆனாலும் உன்னை காண்பதற்காக என் கண்கள் இரண்டும் மட்டும் மூடாமல் மடியாமல் இன்னும் துடித்து கொண்டிருக்கிறது. பசிதாகமெல்லாம் என் காதுகளை செவிடுகளாய் ஆக்கிவிட தடிகொண்டு தாக்கிய போதும் உன் இனிய குரலை கேட்பதற்காக இன்னும் கடேசி சக்தியை கையில் பிடித்த வண்ணம் ஏங்கி கிடக்கின்றது உன்னை தேடி தேடி நான் களைத்து விட்டேன்.

கங்கை கரையில் நீ இருப்பதாக கண்டவர்கள் சொன்னார்கள் முழுநிலா காயும் இரவு பொழுதில் நடனமாட நீ கங்கை நோக்கி வருவதாக பலரும் பேசினார்கள். கங்கையை தொட்டால் உன்னை காணலாம் என்று தெறித்து விழுந்த முட்டியை எடுத்து மீண்டும் கட்டிக்கொண்டு ஓடோடி வந்தேன். தாமரை தண்டு போன்ற உன் தளிர் மேனியை கண்டு கண்களால் சிலிர்க்கலாமென ஆவலும் துள்ளியது. உன் இனிய பாடலை கேட்டு நான் ஆடலாம்மேன்று பாதங்கள் கூட குதித்தது. தாகத்தில் தவித்தவன் காணலை கண்டவன் போல் கங்கையில் நீ இல்லாமல் தாகத்தால் மணலில் உருண்டேன். உன் பாதத்தை தொட்ட மணல் துளிகள் ஒவ்வொன்றும் நீ ஒரு மலர்ச்சோலையில் இருப்பதாய் உணர்த்தியது.


ஊரெல்லாம் கொண்டாடும் கங்கையை விட்டு ஒதுக்குபுறமாய் அமைந்த பூஞ்சோலைக்குள் வந்தேன். அப்போது மலர்ந்த புதுமலர்கள் என்னை பார்த்து சிரித்தன கண்கள் இரண்டும் குருடான பிறகு ஓவியத்தை ரசிக்க போன ஊதாரி என வந்திருக்கிறாயே! என்று என்னை பார்த்து எள்ளி நகையாடின தனது மகரந்த பொடிகளை என்மீது தூவி கேலி பேசின. இரண்டு விரல்களால் நீ கொய்து பார்த்த ரோஜா மலர் ஒன்று கீழே கிடந்தது ஆனந்த கூத்தாடியது. மனிதா மனிதா நீயும் ஒரு பிறப்பா? ஆறறிவு பெற்று நீ ஆக்கியது என்ன? ஆனது என்ன? அன்பான விரல் ஒன்று கூட உன்னை தொடவில்லையே மலரான என்னை அன்புவிரல் அல்ல கருணையின் சாகர விரலே தீண்டியதே இதுவன்றோ ஆனந்தம் என்று அது என்னை கேட்டது. மண்டியிட்டு அமர்ந்து அந்த மலரை உள்ளங்கையில் தாங்கி கேட்டேன் உன்னை கொய்து முகர்ந்து பார்த்த அந்த எழில்வடிவம் எங்கே போனது என்று இதழ் ஒன்று சுருங்கி ஆலயத்தை நோக்கி நீண்டது அங்கு நீ இருப்பாய் என்று அறிவுப்பு செய்தது.

ஆலயம் நோக்கி ஆவலாய் ஓடி வந்தேன் ஆலைய படிக்கட்டுகளில் நீண்ட கரங்கள் பல பணத்தை தா புண்ணியம் தருகின்றோம் என்று வழிமறித்தது. சொர்க்கம் நீ செல்ல வேண்டுமென்றால் இங்கே வந்து ஒரு சொம்பு தண்ணீரில் தீர்த்தமாடு என்று சில குரல்கள் ஓங்கி ஒலித்தன ஐயோ பசிக்கிறதே அடிவயிறு வேகிறதே கடவுளுக்கு ஊற்றும் பாலை எனக்கு நீ தரமாட்டாயா? என்ற குரல்களும் இடையிடையே கேட்டன எல்லாமே வயிற்ரை வளர்க்கும் வர்த்தக குரல்கள் அத்தனையும் தாண்டி கருவறைக்குள் வந்து நான் நெடுங்கிடையாய் வீழ்ந்து விட்டேன். ஊற்றென பொங்கி வரும் கண்ணீரால் ஆலயத் தரையெங்கும் கழிவி விட்டேன் கண்ணீரால் திரையிட்ட கண்களை துடைத்து கொண்டு உன்னை தேடினேன் ஐயோ நீ இங்கும் இல்லையே எங்கு உன்னை நான் தேடி பெறுவேன் உன்னை தேடி தேடி களைத்து விட்டேன்


கண்ணீரால் தரை மெழுகும் கண்ணிழந்த என்னை தோள்தொட்டு தூக்கியதோர் மெல்லிய கரம் எதற்க்காக நீ அழுது புலம்புகிறாய் காலகாலமாய் நீ தேடி அலையும் கருணையின் வடிவம் ஒரு கல்சிலையிலா இருக்கும். சரியான பொருளை தவறான இடத்தில் தேடினால் எப்படி கிடைக்கும். எழுந்துவா என்னோடு நீ தேடும் பொருளை நான் காட்டுகிறேன் என்று அன்பு குரலும் அழைத்தது. பலநாள் பசியில் பாடாய் பட்டவன் தாகமெடுத்து தவியாய் தவித்தவன் தண்ணீரும் உணவும் தருகிறேன் என்றால் சோம்பி கிடப்பானா? வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டு வறண்ட குரலை ஒலிக்க செய்து வருகிறேன் என்றேன் வழியில் நடந்தேன். கல்லுமுள்ளும் நிறைந்த பாதையை கடந்து கூட்டல் குறியாய் கட்டிய மரநிழலில் ஒட்டிய வயிறும் ஒடுங்கிய கையுமாய் நின்று உன்னை ஓங்கி அழைத்தேன் என் குரலே எனக்கு எதிரொலித்தது உன் குரலை அங்கே எங்கும் கேட்கவில்லை உன் நிழல் படிந்த மரத்துண்டு ஒன்றை கூட அங்கே நான் காணவில்லை எத்தனை நாளாய் இப்படி அலைவது எங்கோ நீ இருந்து கொண்டு செப்படி வித்தைகாரன் போல் வேடிக்கை காட்டுகிறாயே.

நான் கேட்பது என்ன ராஜபேரிகை முழங்கும் கோட்டையா? கோகினூர் வயிரம் பதித்த கிரீடமா? இழுத்து தேய்த்தவுடன் கைகட்டி நிற்கும் மாய பூதமா? அல்ல அல்ல அல்லவே உனது திருமுகத்தை ஒரே ஒரு வினாடி கண்டுகளிக்கும் பேரு கேட்டேன். உந்தன் நிழலில் இளைப்பாறி உறங்கும் உறவு கேட்டேன் அன்பின் வடியம் நீயென்றால் இதை தருவதற்கு தாமதம் ஏன்? குடிக்க குடிக்க குறையாத குவளைநிறைய மதுவுண்டு மயில் போல ஆடி குயில்போல பாடி காம ரசத்தை பிழிந்து ஊற்றும் மாது உண்டு கட்டிய கோபுரமாய் நிமிர்ந்து நிற்கும் மஞ்சள் நிறத்தில் கண்ணை பறிக்கும் வித விதமான சுகபோகங்களை கொட்டி கொடுக்கும் சூதும் உண்டு ஆனால் இவற்றில் உன்னை காணும் சுகம் கிடைக்குமா? அதனால் தான் உன்னை பூமியில் மிதித்த நாள் முதல் தேடி அலைகிறேன் கிடைக்காமல் தவிக்கிறேன்.


மேற்க்கு திசையிலிருந்து ஒரு குரல் கேட்டது வாருங்கள் எல்லோரும் சாந்தியை தரும் சக்தியை காணலாம் என்று அழைத்தது கங்கையில் காணாததை ஆலையத்தில் தரிசிக்காததை கூட்டல் மரத்தில் கூடுவதற்கு கிடைக்காததை திக்கை நோக்கி சென்றால் காணலாமென்று அங்கும் சென்றேன் வெற்று சொற்களும் விதண்டா வாதங்களும் வேதனை நிரம்பிய பெருமூச்சிகளும் அங்கு மண்டி கிடந்தன உன்னை தவிர எல்லாமே அங்கு கொலுவிருந்தன அன்பை தேடி போன நான் அனாதையாய் திரும்பினேன். பாறையின் மீது முட்டி மோதினேன் மண்டை பிளந்து குருதி வடிந்தது பிளந்த மண்டையில் குரல் ஒன்றும் கேட்டது.

மூடனே மூடனே முழுவதும் அறியாத அசடனே முட்டையில் இருந்து பொறித்து வந்த வாத்து குஞ்சிக்கும் தண்ணீரை கண்டால் நீந்த தெரியும் பிறந்த கன்றுக்கும் தாய் முலையின் இருப்பிடம் தெரியும். மரம் செடி கொடிக்கு கூட மண்ணில் விழுந்த நீரை உறிஞ்ச தெரியும். காற்றில் ஏறி வானம் தொட்டதாய் வாய்கிழிய பேசும் மானிடனே உனக்கு நான் இருக்குமிடம் எதுவென்று அறியும் ஞானம் இல்லையே நெருப்பிற்குள் வெம்மையாய் இருப்பவன் நான் பூவிற்குள் வாசமாய் பொலிந்தவன் நான் தேனுக்குள் சுவையாய் ஆனவன் நான் உனக்குள் நானே ஒதுங்கி இருக்கிறேன். என்னை உனக்குள் வைத்து கொண்டு எங்கெங்கோ நீ தேடி அலைந்தால் எப்படி கிடைப்பேன்.

கோபுர உச்சியில் நானில்லை கொடிமர தூணிலும் நானில்லை பாடும் பறவையிலும் பாய்ந்துவரும் ஆற்று நீரிலும் நானில்லை மண்டியிட்டு ஜெபித்தாலும் தொழுதாலும் கரங்கூப்பி வணங்கி நின்றாலும் நான் வரமாட்டேன். எத்தனை முறை நீ வெளியே கூவினாலும் என் செவியில் அது விழவே விழாது. அங்கம் புழுதி பட அழுது உருண்டாலும் என் விழிகள் அதை காணவே காணாது. ஆமை கூட்டுக்குள் அடங்கும் உடல் போல உனக்குள் நீ அடங்கி பார் கண்களை மூடி என்னை பார்க்க பழகு வார்த்தைகள் இல்லாமல் என்னோடு பேச பழகு இதயத்தின் உள்ளே தளும்பும் அமிர்த குளத்தில் ஆலிலை மீது உறங்கும் என்னை தரிசனம் செய்யலாம் என்றது அக்குரல் அதை செவியால் அல்ல இதயத்தால் கேட்டேன் எனக்குள் சென்றேன். அங்கே கண்டேன் ஆண்டவன் உருவை.


Contact Form

Name

Email *

Message *