இந்து மத வரலாற்று தொடர் 30
சிவபெருமானுக்கும் அருள் சக்தி அம்மைக்கும் மகனாக வந்து பிறந்த முருகப்பெருமானுக்கு ஆறு திருமுகங்கள் உண்டு ஆறு திருமுகமும் அமர்ந்து அருள் செய்ய ஆறுபடை வீடுகளும் உண்டு ஆறு திருமுகத்தில் அருள் மழை பொழியும் பன்னிரு திருவிழிகளும் உண்டு அருள்சுரக்க பன்னிரு திருவிழிகள் என்றால் அருள்கொடுத்து காக்க பன்னிரு கரமும் உண்டு அழகிய இப்பன்னிரு கரத்தை திருமுருகாற்றுப்டை பாடிய நக்கீர பெருமான்
வண்புகழ் நிறைந்து வசித்து வாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபில் ஐவர் கேந்தியது
ஒருகை, உக்கஞ் சேர்த்தியது ஒருகை,
நலம்பெறு கலிங்கத்து குறங்கின்மிசை யசை இயது ஒருகை
அங்குசம் கடாவ ஒருகை, இருகை
ஐயிரு வட்டமோடு எக்குவலந் திருப்ப ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட ஒருகை
நீனிர் விசும்பின் மலிதுளி பொலிய ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட
ஆக்க பன்னிரு கையும் பார்பட இயற்றி
என்று அழகு தமிழில் பாடுகிறார். மேலோட்டமாக படிக்கும் போது சில வார்த்தைகள் இடரும் சில பொருள் புரியாமல் தெறித்தும் ஓடும் மனதை உள்முகமாக செலுத்தி ஆழ்ந்த தமிழரிவோடு சிந்தித்தால் இலைகளுக்குள் மறைந்திருக்கும் சுவை மிகுந்த கனி கண்ணுக்கு தட்டுபடுவது போல் பாடலின் பொருளும் நன்றாக விளங்கும்.
நாக்கீரர் சொல்கிறார் நலமார் ஆருமுகம்கொண்ட திருமுருகனுடைய பன்னிரு கரங்கள் பகைவரை அடக்கவும் துஷ்டர்களை சம்ஹாரம் செய்யவும் அடியவர்களை காக்கவும் அமைந்துள்ளது என்று சொல்லி மோட்சம் அடைவதற்கு வழிவகை சொல்லி ஞானிகளை வழிநடத்துவதற்கு ஒரு கரமும் மருங்கிலே வைக்கப்பட்டது மற்றொரு கரமும். செம்மை நிறமுடைய ஆடையால் அழகுபட மூடப்பட்டிருக்கும் முருகனின் திருதொடையில் ஊன்றி இருக்கும் ஒரு கரமும் அங்குசம் பிடித்து யானையை செலுத்த ஒருகரமும். அழகிய பெரிய பரிசையோடு வேற்படையை வலமாகச் சுற்றி ஒரு கரமும். முனிவர்களுக்கு தத்துவங்களை விளக்கி பொருளை உணர்த்தும் பொருட்டு திருமார்போடு ஒருகரமும். அதற்கு இணையாக மார்பில் மற்றொரு கையும் கீழ் நோக்கி விழுகின்ற தொடியொடு மேலே சுழன்று வேள்விக்கு முத்திரை கொடுப்பது ஒருகரமும் ஓசையில் இனிதாக ஒலிக்கின்ற மணியை ஒலிக்க செய்ய ஒருகரமும். நீல நிறமுடைய மேகத்தை கரிய மேகமாக்கி மழைபொழிய வைக்க ஒரு கரமும். தெய்வ மகளிர்களான வள்ளி தெய்வானைக்கு மண மாலை சூட்டி நிற்க ஒரு கரமும். பயன்படுவதாக சந்தம் மிக்க தமது கவிதை நடையில் அழகுபட சொல்கிறார்.
திருமுருகாற்று படையில் நக்கீரர் முருகன் மீது கொண்ட காதலை அழகு தமிழில் கவிதையாக வடித்ததை படித்து ரசித்து உள்ளம் உருகி பக்தி பழமாக ஆனவர் குமரகுருபர அடிகளார் இவரும் தானறிந்த செந்தமிழில் தமிழுக்கே தலைவனான கார்த்திகேயனை நெஞ்சம் உருக பல பாடல்களை பாடி தந்திருக்கிறார். முன்னோரான நக்கீர பெருமான் முருகனின் பன்னிரு கரத்தை பாடியது போலவே குமரகுருபர அடிகளும் தனக்கே உரிய தமிழ்நடையில் பாடுகிறார். அந்த பாடலையும் ரசித்து விட்டு நாம் அடுத்த விஷயத்திற்கு சென்றால் தான் முழுமையான மன திருப்தி ஏற்படும்.
வேரி கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பார புறசைலம் பன்னிரண்டும் - ஆரமுதம்
தேவர் குதவும் திருக்கரமும் சூர்மகளிர்
மேவக் குழைந்தனைத்த மென்கரமும் - ஓவாது
மாறி பொழிந்த மலர்கரமும் பூந்தொடையல்
சேர வணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கிலொரு கரமும் - மொய்த்த
சிறுதுடிசேர் கையுமணி சேர்ந்த தடங்கையும்
கறுவுசமர் அங்குசம் சேர் கையும் - தெறுபோர்
அதிர்கே டகஞ் சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும்
இவைகளெல்லாம் புராணங்களை அடியொற்றி கூறப்பட்ட வர்ணனைகள் இந்த வர்ணனைகளை தாண்டி சிந்தனைக்கு விருந்துவைக்கும் ஞான விஷயங்களும் முருகனின் பன்னிரு திருக்கரத்தில் அமைந்துள்ள ஆயுதங்களுக்கு உண்டு முருகனின் கரத்திலுள்ள தோமரம் சுத்த தத்துவங்களைப் படைக்கும் ஆற்றலை குறிக்கும் அடையாளமாகும். அதே போலவே துவசம் அதாவது கொடி பிரபஞ்ச வெளிப்பாட்டையும் வாள் ஜனன மரணத்தை அறுப்பதையும் வஜ்ராயுதம் எவராலும் வெல்லபடாததையும் ஈட்டி மற்றும் கோதண்டம் உயிர்களிடம் மண்டிக்கிடக்கும் மும்மல இருட்டை அழிப்பதையும் அங்குசமும் அம்பும் முக்குணங்களை இயக்குவதையும் கண்டை பரநாதம் என்ற ஓம்கார தத்துவத்தையும் கமலம் நியதி படி உலகத்தை படைத்து அழிப்பதையும் மழு உயிர்களின் துன்பங்களை போக்குவதையும் வேல் அஞனத்தை அகற்றுவதையும் குறிக்கும்.
முருகன் என்ற அழகான வடிவத்திற்குள் மறைந்திருக்கும் அரும்பொருளை இதுவரை கண்டோம். இதுமட்டுமா முருகனின் சிறப்பு இன்னும் ஏராளம் இருக்கிறது. அவைகளை எல்லாம் சொல்ல போனால் பலநூறு பக்கங்கள் எழுத வேண்டும். முருகனின் உருவம் மட்டும் சிறப்பு வாய்ந்தது அல்ல முருகன் என்ற பெயரே பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. இந்திய திருநாடு எங்கும் பரவி கிடக்கும் கெளமார சமயத்தின் ஆதர தத்துவமே முருகன் காக்கும் கடவுளாகவும் படைக்கும் கடவுளாகவும் அழிக்கும் கடவுளாகவும் அதாவது மும்மூர்த்திகளாகவும் இருக்கிறான் என்பதே இந்த தத்துவம் முருகு என்ற வார்த்தைக்குள் அடங்கி விடுகிறது.
அதாவது முருகு என்ற பதத்தில் முதல் எழுத்தாக வரும் மு காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் முகுந்தன் என்ற திருநாமத்தை சுட்டுகிறது. அடுத்ததாக வரும் ரு என்ற எழுத்து ஆனந்த தாண்டவம் ஆடிநிற்கும் சிவபெருமானின் ருத்திரன் என்ற திருபெயரை காட்டுவதாகும். கடேசியாக வரும் கு படைக்கும் கடவுளான பிரம்மனை குறிப்பது அது எப்படி என்றால் பிரம்ம தேவனுக்கு குரு இருளை போக்குபவன் என்ற மற்றொரு பெயரும் உண்டு அந்த குரு என்ற பதத்தில் வரும் முதல் எழுத்தே முருகு என்ற திருநாமத்தில் வரும் கடேசி எழுத்தாக இருக்கிறது.
அதாவது முருகு என்ற பதத்தில் முதல் எழுத்தாக வரும் மு காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் முகுந்தன் என்ற திருநாமத்தை சுட்டுகிறது. அடுத்ததாக வரும் ரு என்ற எழுத்து ஆனந்த தாண்டவம் ஆடிநிற்கும் சிவபெருமானின் ருத்திரன் என்ற திருபெயரை காட்டுவதாகும். கடேசியாக வரும் கு படைக்கும் கடவுளான பிரம்மனை குறிப்பது அது எப்படி என்றால் பிரம்ம தேவனுக்கு குரு இருளை போக்குபவன் என்ற மற்றொரு பெயரும் உண்டு அந்த குரு என்ற பதத்தில் வரும் முதல் எழுத்தே முருகு என்ற திருநாமத்தில் வரும் கடேசி எழுத்தாக இருக்கிறது.
எனவே இந்து மதத்தில் எந்தப் பிரிவை நீங்கள் எடுத்தாலும் ஒவ்வொரு பிரிவுக்கும் தனிதனி தெய்வங்களை சுட்டி காட்டினாலும் அந்த தனிதனி தெய்வங்கள் வேறு வேறு அல்ல எல்லாமே ஒன்றான மூலப்பரம்பொருளை சென்றடைவதே ஆகும் என்ற தத்துவத்தில் தான் முடிவடைகிறது. மூல பரம்பொருளின் மூன்று தன்மைகள் படைத்தல் காத்தல் அழித்தல் என்பதாகும். விஷ்ணுவை தலைவனாக கொண்ட வைஷ்ணவமும் அவனே முத்தொழிலுக்கும் அதிபதி என்கிறது. சிவபெருமானும் அப்படியே கருதபடுகிறார். சக்தியும் விநாயகரும் கூட முத்தொழிலின் அதிபதியாகவே வணங்க படுகிறார்கள். அதே போலவே கண்கண்ட தெய்வமான கந்த சாமியும் மூன்று தொழிலை ஒருங்கே செய்யும் மூம்மூர்த்தியின் வடிவமாகவே பக்தர்களால் கண்ணார கண்டு பக்தி செய்ய படுகிறார்.
இதுவரை இந்து மதத்தில் சிவன் விஷ்ணு சக்தி விநாயகர் முருகன் ஆகிய ஐம்பெரும் தெய்வங்களை வழிபாடும் மார்க்கங்களையும் தத்துவங்களையும் சிந்தித்து பார்த்தோம் இனி ஆறாவதாக உள்ள செளரம் என்ற பிரிவில் உள்ள சூரிய வழிபாட்டை பற்றி சிந்திப்போம் சூரிய வழிபாட்டின் ஆழத்தையும் தெரிந்து கொண்டால் தான் இந்து மதத்தின் முழு வடிவத்தை ஓரளவு புரிந்து கொள்ளலாம். இனி அடுத்து வரும் அத்தியாயங்களில் சிறிது சூரிய நமஸ்காரம் செய்வோம்.
இதுவரை இந்து மதத்தில் சிவன் விஷ்ணு சக்தி விநாயகர் முருகன் ஆகிய ஐம்பெரும் தெய்வங்களை வழிபாடும் மார்க்கங்களையும் தத்துவங்களையும் சிந்தித்து பார்த்தோம் இனி ஆறாவதாக உள்ள செளரம் என்ற பிரிவில் உள்ள சூரிய வழிபாட்டை பற்றி சிந்திப்போம் சூரிய வழிபாட்டின் ஆழத்தையும் தெரிந்து கொண்டால் தான் இந்து மதத்தின் முழு வடிவத்தை ஓரளவு புரிந்து கொள்ளலாம். இனி அடுத்து வரும் அத்தியாயங்களில் சிறிது சூரிய நமஸ்காரம் செய்வோம்.