Store
  Store
  Store
  Store
  Store
  Store

ராஜ மந்திரம் போற்றும் ராஜ கிரகம் !

இந்து மத வரலாற்று தொடர் 32


       ண்ணுக்கு நேராக தெரிகின்ற கடவுளாகிய சூரிய பகவானை வழிபடுகின்ற மக்கள் ஒருகாலத்தில் உலக முழுவதும் பரவி இருந்தார்கள். நமது பாரத நாட்டில் சூரியனை வழிபடாத மக்களே இல்லை என்று சொல்லுகின்ற அளவிற்கு செளர மத பிரிவு மிகுந்த செல்வாக்கை ஆறாம் நூற்றாண்டு வரை பெற்று இருந்ததாக சில ஆய்வுகள் சொல்கின்றன சூரிய கடவுளுக்கான தனிகோயில்கள் ராஜஸ்தான், கூர்ஜரம், காஷ்மீர், வங்காளதேசம், தமிழ்நாடு போன்ற பகுதிகளில் பரவலாக இருந்திருக்கின்றன. அவற்றில் அன்னியர் படையெடுப்பால் பல அழிந்து விட்டாலும் ஒருசில இன்றும் உயிரோடு இருந்து சூரிய வழிபாட்டின் சிறப்புகளை கல்லில் வடித்த எழுத்துக்களாக நமக்கு காட்டி நிற்கின்றன.

உலகத்தின் உயிராக இருக்கும் சூரியனுடைய வழிபாடு இப்போது தான் ஏற்பட்டது என்று கால அளவு வைத்து சொல்லிவிட முடியாது. கால கணிதங்களுக்கு அகப்படாத காலம் தொட்டே சூரியனை மக்கள் வழிபட்டு வந்தார்கள். சர்வ வியாபியாகவும் சர்வ சாட்சியாகவும் அஞ்ஞான இருட்டை போக்குவதாகவும் கால தேச பருவ சூழலால் பாதிக்க படாததாகவும் நிற்பது சூரியன் இறைவனுடைய பரதத்துவத்தை விளக்குவதற்கு கண்ணுக்கு தெரியும் பொருளாக இருப்பது சூரியனாகும். அதனால் இது தான் மனிதனின் முதல் உபாசனையாக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தால் கூட அது தவறல்ல என்று தோன்றுகிறது.


 மனிதகுலம் சூரிய தேவனை எப்படியெல்லாம் ஆராதனை செய்கிறது என்பதை நான்கு வேதங்களிலும் மிக தெளிவாக காண முடிகிறது. அறிவுடைய மனிதனின் முதல் சிந்தனை தொகுப்பான ரிக் வேதம் சூரியனை மூன்றுவித அக்னிகளில் ஒருவனாக புகழ்கிறது. உதய ஜோதி என்ற பெயர் கொடுத்து ரிக் வேதம் சூரியனை வழிபடுவதை பார்த்தால் மனதில் நிச்சயம் சிலிர்ப்பு ஏற்படும். யஜூர் வேதம் ஜோதியை உண்டாக்குபவன் என்றும் சகல உலகங்களையும் ஒளிபெற செய்பவன் என்றும் சூரியனை கொண்டாடுகிறது. அருண கடாகம் என்ற தனி பகுதியை சூரியனை பற்றி யஜுர் வேதத்தில் இருக்கிறது. இசையின் வடிவான சாம வேதம் உலகம் முழுவதும் ஒளிர்பவன் என்ற சிறப்பு பெயரை சூரியனுக்கு தருகிறது. இறைவனின் கண் என்றே அதர்வண வேதம் சூரியனை போற்றுகிறது.

சதபத பிராமணம் சூரியனை ஜோதி பிழம்பு என்றும் பொன் ஆரங்களான வட்டங்களை உடையவன் என்றும் போற்றுகிறது. இது தவிர பவிஷ்ய புராணம், பிரம்ம புராணம், வராக புராணம், மச்ச புராணம்,அக்னி புராணம், கருட புராணம், பவிஷ்யோத்ர புராணம், காளிகா புராணம், மார்கேண்டைய புராணம் ஆகிய பழம்பெரும் புராண நூல்கள் சூரியனின் சிறப்புகளை வரலாற்றை நமக்கு மிக தெளிவாக காட்டுகிறது. இதுமட்டும் அல்ல உலகத்தை காத்து ரச்சிக்கும் முழுமுதலான கடவுள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தமது திருவாய் மலர்ந்தருளிய பகவத் கீதையில் வேத சாஸ்திரத்தில் நான் சாம வேதமாகவும், பிரகாசிக்கும் பொருட்களில் நான் சூரியனாகவும் இருக்கிறேன் என்று அழகுபட சொல்கிறார்.

 மந்திரங்களில் தலைசிறந்தது என்றும் ராஜ மந்திரம் என்றும் சொல்லபடுவது காயத்திரி மந்திரமாகும் இந்த மந்திரத்தை பிரபஞ்ச வெளியில் இருந்து கண்டறிந்து உலக மக்களுக்கு தந்தவர் விஸ்வாமித்ர மகரிஷி இந்த காயத்திரி மந்திரம் சூரியனை உபாசனை செய்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி.
“ஓம் பூர் புவஹ ஸ்வஹ
ஓம் தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமகி
த்யோ யோநஹ ப்ரசோதயாத்”

என்ற இந்த காயத்திரி மந்திரத்தின் பொருள் எந்த தேவன் உலகத்தில் உள்ள இருட்டை நீக்கி வெளிச்சத்தை தருகிறானோ ஒளியை பரப்புகிரானோ அவன் நமது புத்தியை பிரகாசிக்க செய்யட்டும் என்பதே ஆகும். இதை அப்பர் சுவாமிகள் மிக இனிமையான தமிழ் நடையிலும் நமக்கு தருகிறார்.
அருக்கன் பாதம் வணங்குவார் அந்தியில்
அருக்கன் ஆவான் அரனுரு வல்லானோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கண்மனவரே

என்று சூரிய வழிபாட்டின் பெருமையை நம்மை போன்ற சாதாரண மனிதரும் அறியும் படி செய்கிறார். வராகமிகிரர் என்ற புகழ்பெற்ற இந்திய வானியல் சாஸ்திரி தாம் எழுதிய ப்ருஹத் சம்ஹிதை என்ற நூலில் சூரியனுக்கு காலில் இருந்து தொடை வரை கவசமும் கரங்களில் தாமரை மலரும் தலையில் மகுடமும் காதில் குண்டலமும் இடுப்பு கச்சும் புன்முறுவல் பூத்த வாயும் பிரசன்ன முகமும் குருதி சிவப்பான வட்டத்திற்குள் அடங்கிய வடிவமாகவும் சூரியனின் சிற்பம் செதுக்கப்பட வேண்டும் என்று கூறி ஆதிகால சூரிய தேவனின் வழிபாட்டு உருவத்தை நமக்கு தெளிவு படுத்தி விடுகிறார்.


 தமிழ் இலக்கியங்களும் சூரிய பகவானை விட்டு வைக்கவில்லை தமிழ் புலவர்களின் அழகிய கற்பனைக்கும் தத்துவ மோகத்திற்கும் சூரியன் பல கொடைகளை வாரி வழங்கி இருக்கிறன். நமது புலவர்களின் செந்தமிழ் விருந்தில் சூரிய சித்திரம் வடித்து காட்டபடுவதை மனகண்ணில் பார்க்கும் போது கொலைகாரனுக்கு கூட ஆன்மிக சிந்தனை ஊற்றெடுத்து பெருகி விடும். பேராழி உலகனைத்தும் அகல இருள் நீங்க ஏறாழி தனை நடத்தும் ஒளிசுடர் பரவுதுமே என்றும் ஒருகால் தேர்ச்செல்வன் என்றும் ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு சக்கரமே கொண்ட தேரில் பவனி வரும் நாயகன் என்றும் சூரியன் பலவாறு போற்ற படுகிறான்.

ஆலய நெறிமுறைகளையும் ஆன்மீக கோட்பாடுகளையும் தெளிவாக விளக்கும் ஆகம நூல்களில் சூரிய மண்டலத்தில் நடுநாயகமாக இறைவனாகிய சிவபெருமான் இருக்கிறான் என்றும் இதனால் சூரியன் சிவ சூரியன் என்ற சிறப்பு பெயரை பெறுகிறான் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் சிவபெருமானின் அஷ்ட மூர்த்திகளில் சூரியனும் ஒருவன் அவனே சிவனாரின் வலது கண்ணாக திகழ்கிறான் என்றும் ஆகமங்கள் சூரியனை பக்தர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.


 ஆதிகாலத்தில் சூரிய வழிபாடு மந்திர வழிபாடாகவே இருந்தது. ஆகமங்கள் சூரியனை பஞ்சாயதன பூஜை முறையில் வழிபாடு செய்யும் மார்க்கத்தை மிக விரிவாக பேசுகின்றன. அதுமட்டும் அல்ல சூரியனுக்கான தனி யந்திர வழிபாட்டையும் ஆகமங்கள் வலியுறுத்துகின்றன. கங்கை கொண்ட சோழபுரத்து சிவாலயத்தில் கல்லில் ஒருகமல யந்திரம் வடிவமைக்க பட்டுள்ளது. இந்த யந்திரத்தில் சூரியனின் உதயகோலம் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சிலை வழிபாடுகள் மந்திர வழிபாடுகள் யந்திர வழிபாடுகள் இவைகளையும் தாண்டி சூரியன் மக்கள் மத்தியில் ஜோதிட ரீதியாக வணங்கப்படும் மிக முக்கிய தெய்வமாக கருதபட்டான்.

இந்திய ஜோதிட சாஸ்திரம் சிம்ம ராசிக்குரிய கிரகமாக சூரியனை காட்டுகிறது. கிரகங்களில் நடுநாயகமாக சூரியன் கருதபடுவதோடு அவனே நவக்ரகங்களில் நாயகனாக இருக்கிறான். ஒரு ஜாதகத்தில் முன்னோர்களின் தலைவனாகவும் ஆயுளை கொடுப்பவனாகவும் ஆரோக்கியத்தை காப்பவனாகவும் சூரியன் இருக்கிறான். ஜோதிட சாஸ்திரம் சூரியனை சத்வ குணம் நிரம்பியவன் என்று சொல்கிறது. கோதுமை தானியம் அவனுக்கு மிகவும் பிடித்தது என்றும் மனித சரிரத்தில் பித்தத்தை ஏற்படுத்துபவன் என்றும் சொல்லபடுகிறது.


 சூரியன் மாதம் ஒரு ராசியில் அமர்கிறான் அவன் வருடத்தில் ஒருமுறை மகர ராசிக்கு வருகை தருவதை சங்கராந்தி என்றும் பொங்கல் திருநாள் என்றும் இந்திய மக்கள் கொண்டாடுகிறார்கள். சூரியன் ஆண்டு தோறும் ஆடி மற்றும் தை மாதங்களில் உத்தராயணம் தட்சணாயணம் என்ற இரண்டு பகுதிகளுக்கு மாறுவதை மகா புண்ய காலமாக இந்துக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த காலங்களில் சூரியனின் பார்வை தெற்கில் இருந்து வடக்கேயும் வடக்கே இருந்து தெற்கேயும் மாறு படுகின்றது. இதனால் உலகின் பருவ கலங்களும் முறைப்படி மாறி மாறி வந்தமைகின்றன. மழை வருவதும் வெயில் அடிப்பதும் பனி பொழிவதும் சூரிய மாற்றத்தினாலே என்பதை நாம் அறிவோம். உலகின் போக்கையே தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் சூரிய வழிபாடு எங்கெங்கு இருந்தன என்பதை அடுத்த பகுதில் சிந்திப்போம்.
Contact Form

Name

Email *

Message *