Store
  Store
  Store
  Store
  Store
  Store

படித்தால் மட்டும் போதுமா...?


    ருமனிதன் காதலிக்க ஆரம்பித்துவிட்டால் எழுதபடிக்க தெரியவில்லை என்றால் கூட கவிஞனாக ஆகிவிடுவான் என்று சொல்வார்கள். இது முற்றிலும் சரியான வார்த்தை அவனுக்கு கவிதை எழுத தெரிகிறதோ இல்லையோ குறைந்தபட்சம் காதல் கவிதைகளை ரசிக்க துவங்கி விடுவான். திரைப்படங்களில் வரும் காதல் பாடல்களை வரிக்கு வரி விமர்சனம் செய்து ரசித்து அனுபவிக்க துவங்கி விட்ட எத்தனையோ இளைஞர்களை பார்த்திருக்கிறோம்.

காதல் வந்தால் கவிதை எழுதுவது என்பதெல்லாம் அந்த காலம் இப்போது காதலும் மாறிவிட்டது காலமும் மாறிவிட்டது கவிதை எழுவதற்கு காதலர்களுக்கு நேரம் காலம் இல்லை எல்லாமே அவசரமாகிவிட்ட நிலையில் உட்கார்ந்து நிதானமாக சிந்தித்து கவிதை எழுத யாரும் தயாராக இல்லை யாரோ ஒருவர் எங்கோ படித்த அல்லது எழுதிய ஒரு குறுஞ்செய்தியை அலைபேசி வழியாக பரிமாறி கொள்வதே இப்போதைய காதல் என்கிறார்கள். கடந்தகாலத்து நினைவுகளில் இருந்து விடுபட்டு தற்கால சூழலுக்குள் பிரவேசித்து பார்த்தால் இது தான் நிஜமென்று தெரிகிறது.


கிராமங்களில் வீட்டுக்கு வீடு குடிதண்ணீர் இணைப்பு பரவலாக அப்போது இருப்பதில்லை ஊர் பொது கிணற்றுக்கு சென்று தான் தண்ணீர் எடுத்துவர வேண்டும். வீட்டிலுள்ள இளம் பெண்களின் மிக முக்கியமான வேலை தண்ணீர் கொண்டுவருவது. வெல்லம் இருக்கும் இடத்திற்கு எறும்புகள் கடிதம் போடாமலே வருவது போல் தண்ணீர் எடுக்க வரும் பெண்களை பார்க்க ஊரிலுள்ள இளவட்டங்கள் எல்லாம் கிணற்றடியில் கூடி விடுவார்கள். பாட்டும் ஜாடை பேச்சும் அமர்க்கள படும் அப்படி அவர்கள் ஜாடையாக பேசி கொள்வதை கவனித்தால் பல இலக்கிய மேடைகள் ஒருங்கே நடப்பது போல் இருக்கும். அத்தனை ரசமிகுந்த வார்த்தைகள் வர்ணனைகள் உதாரண உருவகங்கள் காற்றில் சிறகு கட்டி பறக்கும்.

வீட்டு வாசலில் பெண்கள் கோலம் போடும் போதும். கோவிலுக்கு போகும் போதும் தெருவில் கேட்கும் சைக்கில் மணி ஓசையும் விசில் சத்தத்தில் வந்து விழும் பாட்டும் ரசிக்க ரசிக்க திகட்டாததாக இருக்கும். இப்போது அத்தகைய காட்சிகள் எந்த கிராமத்திலும் இல்லை எல்லாம் கனவாக போய்விட்டது. இளவட்ட ஆண்களும் பெண்களும் பரிமாறி கொள்ளும் வார்த்தை ஜாலங்கள் வண்ண மயமாக இருந்தது மறைந்து வக்கிரமாக மாறி விட்டது. கிராமத்தின் கதையே இப்படி என்றால் நகரத்தை பற்றி கேட்க வேண்டாம். அசிங்கமும் அநாகரீகமும் ஒவ்வொரு நாளும் சாலை நெடுகிலும் அரங்கேறி கொண்டிருக்கிறது.


இதற்க்கெல்லாம் காரணம் என்ன? ஒரு தலைமுறையே இயந்திரமையமாக மாறி போனதின் ரகசியம் என்ன? என்ற கேள்வியை பலரும் கேட்கிறார்கள். யாருக்கும் விடை மட்டும் தெளிவாக இன்னும் கிடைக்கவே இல்லை அவரவருக்கு தோன்றியதை அவரவர் பேசுகிறார்கள்.

நானும் இதை பற்றி யோசித்து பார்த்தேன் ஜனங்கள் மத்தியில் தொண்ணூறு வரை இருந்த ஈரப்பதம் காய்ந்து போய் இப்போது பாலைவனமாக மாரிகொண்டிருக்கிரார்களே அந்த ஜால வித்தை எப்படி நடந்தது யாரால் நடத்தி வைக்க பட்டது. சினிமாவும் தொலைக்காட்சியும் இணையதளமும் செல் பேசிகளும் மனிதனை உலர்ந்து போக செய்துவிட்டதா? என்று எனக்கு நானே கேள்வி கேட்டேன். மனிதன் மனிதனாக பிறந்த காலமுதலே விஞ்ஞானம் என்பது வளர்ந்து வருகிறது. ஒரு கனமான பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து போக சக்கரத்தை எப்போது மனிதன் கண்டுபிடித்தானோ அன்று முதலே விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. மனிதனை வளர்த்தியும் விட்டு வருகிறது.

அப்படி பட்ட விஞ்ஞானம் தனது இயல்பில் சிறிய கேடுகளை கொண்டதாக இருந்தாலும் மொத்தமாக மனிதனை கெடுத்துவிட வில்லை அவனுக்கு பல புதிய வழிகளை பல புதிய உபாயங்களை ஏற்படுத்தி கொண்டு தான் வருகிறதே தவிர மனித வளர்ச்சிக்கு அவனது மனதின் செழுமைக்கு முட்டுக்கட்டை போடுவதாக பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டிவிட முடியாது . அப்படி என்றால் இந்த மனிதன் விறகு கட்டை போல ஆகி போனதற்கு யார் காரணம்? அல்லது எது காரணம்?


கரடு முரடுமாக கிடந்த ஆதி மனிதனை பளபளப்பாக மாற்றி அமைத்ததில் முக்கிய பணியாற்றிய துறைகள் இரண்டு ஒன்று விஞ்ஞானம் என்னொன்று கல்வி விஞ்ஞானத்தில் உள்ள கெடுதியை கூட இன்னெதென்று அடையாளம் கண்டுபிடிக்கும் ஆற்றலை கொடுப்பது கல்வி ஆகவே விஞ்ஞானத்தை மட்டுமே குற்றவாளியாக பார்ப்பதை விட்டு விட்டு கல்வி துறையையும் சற்று உன்னிப்பாக அவதானித்து பார்த்தால் மனிதன் ஈரம் இல்லாத விறகு கட்டையாகி போனதன் காரணம் தெரியவரும் என்று நினைக்கிறேன்.

ஒரு பையன் நன்றாக படிப்பான் பத்தாம் வகுப்பில் அவன் வாங்கிய மதிப்பெண் ஐநூறை தொட சில எண்களே குறைவு பனிரெண்டாம் வகுப்பிலும் ஆயிரத்தி நூறுக்கு மேல் மதிப்பெண் வாங்கியவன் கல்லூரி படிப்பிலும் சோடை போகவில்லை தங்க பதக்கங்கள் பல வாங்கியவன் அவன் படிப்பு திறமையை பார்த்த நிறுவனங்கள் அவன் கல்லூரி படிக்கட்டுகளை தாண்டுவதற்கு முன்பே வேலை கொடுத்து அலுவலகத்தில் உட்கார வைத்து கணிசமான சம்பளமும் கொடுக்க துவங்கி விட்டது. அவனுக்கு ஒரு பிரச்சனை ஒரு வீடு வாங்கினான் பத்திர பதிவு எல்லாம் முடிந்து விட்டது. என்ன காரணத்தினாலோ அதை வங்கியில் அடமானம் வைத்து பணம் வாங்க விரும்பினான் வங்கி அதிகாரிகள் வீட்டுக்கான பட்டாவை பார்க்க வேண்டும் கொண்டு வாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை பதிவு அலுவலகத்தில் கொடுத்த பத்திரம் இருக்கிறது அதையும் தாண்டி பட்டா என்பது என்ன என்று தெரியாமல் விழித்தான் கடேசியில் எப்படியோ பட்டா என்றால் என்ன என்று புரிந்து கொண்டான் இதை இங்கே நான் சொல்வதற்கு என்ன காரணம் என்றால் அவன் படித்த படிப்பு அவனது அன்றாட வாழ்க்கையை அவனுக்கு கற்றுகொடுக்கவில்லை அவன் படிப்பு சம்பளத்தை கொடுத்ததே தவிர சமூகத்தில் உள்ள நடைமுறையை கொடுக்கவில்லை ஆயிரம் புத்திசாலியாக அவன் இருந்தாலும் சமூக வாழ்வில் அவன் ஒரு மூடனே.

இப்படி தான் இன்றைய கல்வி இருக்கிறது. அதாவது மனிதனுக்கு எது தேவையோ அதை இன்றைய பாடத்திட்டம் கொடுக்கவில்லை வேண்டுமென்றே திட்டமிட்டே பள்ளிகளை தனியார் மயமாக்கி விட்டு குழந்தைகளின் இயற்கை ஆற்றலை அதாவது சுய சிந்தனையை மழுங்கடித்து நாகரீக இயந்திரங்களாக இன்றைய தலைமுறையை உருவாக்கி விட்டிருக்கிறார்கள். அதனால் தான் இன்றைய தலைமுறைக்கு பாசம் பரிவு காதல் என்பதெல்லாம் பொருள் சார்ந்த செயல்களாக தெரிகிறதே தவிர உணர்வு பூர்வமானதாக அவர்கள் கருதவில்லை அம்மாவின் பாசத்தை கூட காசுக்காக காட்டப்படும் கரிசனமென்று நினைக்கிறார்கள்.


இன்றைய பாடசாலைகள் படி படி என்று குழந்தைகளை கட்டாயபடுத்தி மனப்பாடம் செய்யும் பொம்மைகளாக உருவாக்குகிரார்களே தவிர குழந்தைகளின் சுய திறமையை வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சுயமாக சிந்திக்கும் குழந்தைகளை ஊக்கபடுத்துவதற்கு யாருமே கிடையாது. அச்சடித்த காகிதத்தின் எழுதி வைத்ததை அப்படியே நெட்டுரு போடும் குழந்தைகள் அதில் சொல்லபட்டிருக்கும் கருத்துக்களை புரிந்து கொள்வது கிடையாது. காரணம் அவர்களுக்கு அதை யாரும் விளக்கி சொல்வதும் கிடையாது.

இதனாலையே குழந்தைகள் சுயதன்மையை இழந்து செயற்கையான சந்தோசங்களை தேடி கெட்டு போகிறார்கள் கற்பு, ஒழுக்கம், மனிதாபிமானம் போன்றவைகள் அவர்களுக்கு பத்தாம் பசலி தனமாக தெரிகிறது. குடித்து விட்டு கூத்தடிப்பது தான் உல்லாசம் என்று நினைகிறார்கள். பத்து பேரோடு படுக்கையை பகிர்ந்து கொள்வது தான் காதல் என்று கருதுகிறார்கள் ஆணும் பெண்ணும் கூட்டாக சம்பாதிப்பதே குடும்பம் என்று நம்புகிறார்கள். இந்த நிலைமை இப்படியே நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நமது நாடு முழுவதும் பல மனநல காப்பகங்கள் கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.

இப்படி நான் சொல்வது சற்று அதிகபடியாக கூட தெரியலாம் ஆனால் இது தான் நடக்க போகும் நிஜம். காரணம் தனக்குள் இருக்கும் ஆற்றல் என்னவென்று தெரியாமலே வளரும் குழந்தைகள் நாளாவட்டத்தில் மன கொந்தளிப்பை அடக்க தெரியாமல் கொடூரமான செயல்களை புரிவார்கள் அந்த செயல்களை வெளியில் காட்ட துணிச்சல் இல்லாதவர்கள் தனக்குள்ளையே போட்டு அழுத்தி மனம் பேதலித்து சட்டையை கிழித்து கொண்டு தெருவில் ஓடுவார்கள்.

அதனால் பள்ளிகூட பாடம் மட்டுமே போதும் மற்ற விவகாரங்களில் குழந்தைகள் தலையிட வேண்டாம் என்று நினைக்கும் மனபாவத்தை தயவு செய்து கைவிடுங்கள். குழந்தைகள் ஆடி பாடட்டும் கற்பனையான விளையாட்டுகளை கண்டுபிடித்து குதுகலிக்கட்டும். சின்ன சின்ன விஷயங்களை சொல்லி அவர்களை சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ள தூண்டுகோலாக இருங்கள். அப்படி இருந்தால் மட்டுமே மனிதனின் இயற்க்கை தன்மையான ஈரமிகுந்த மெல்லிய மனது வளர்ந்து செளுமையாகி உங்களையும் இந்த பூமியையும் கெட்டு போகாமல் நீண்ட நெடுங்காலம் பாதுகாக்கும்.





Contact Form

Name

Email *

Message *