Store
  Store
  Store
  Store
  Store
  Store

பந்தம் அறுந்தால் மோட்சம் தெரியும்.

இந்து மத வரலாற்று தொடர் 36

    தயம் துடிக்காத மனிதன் இறந்துவிடுவான் அதே போலவே தத்துவம் என்பது இல்லாத மதம் ஒன்று தன்னை அழித்து கொள்ளும் அல்லது மற்றவர்களை அழிக்கும் கரடுமுரடான நிலபரப்பை உழுது சமபடுத்தி மென்மையாக்கி பயிர் விளைய செய்வது போல தத்துவம் என்பது மிக கடினமான மனித மனங்களை கூட இளம் நுங்கு போல் ஆக்கி விடும் அதனால் தான் இந்தியாவில் தோன்றிய எல்லா மதத்திலும் தத்துவம் என்பது மைய கருபொருளாக உடலை இயக்கம் உயிராக இருந்து வருகிறது அந்த வகையில் ஜைன மதத்தின் தத்துவம் மிக விசாலமானது நுணுக்கமான புரிந்து கொள்ள முடியாத அறிவு கேள்விக்கெல்லாம் ஜைன தத்துவம் தெளிவான பதிலை தருகிறது.

ஜைன தத்துவ ஞானத்தின் அடித்தளம் தோற்றம் மறைதல் இருத்தல் என்ற மூன்று கோட்பாடுகளை கொண்டதாக இருக்கிறது. இந்த மூன்றும் இயற்கையை குறித்த ஆராய்சியின் முடிவாக கருதபடுகிறது. உண்மையில் உள்ளது என்பது கண்ணுக்கெதிரே தெரியும் இருக்கும் பொருள் மட்டுமல்ல பெளதிகமாக தெரிகின்ற பொருள் தான் உண்மை என்று வாதிடுவது ஒரு பக்கத்தை மட்டுமே பார்ப்பதாகும் இப்படி ஒரு சார்புடைய பார்வையை ஜைன தத்துவம் ஏகாந்த வாதம் என்ற பெயரிட்டு அழைக்கிறது. எப்போதும் எந்த நிலையிலும் மாற்றம் அடையாமல் இருப்பது மட்டுமே உண்மை பொருள் என்று உபநிசதங்கள் கூறுகின்றன இந்த வாதத்தை புத்த மத தத்துவ ஞானிகளும் ஏற்றுகொள்கிறார்கள் ஆனால் ஜைனம் இதை ஏற்க்க மறுக்கிறது.


பொருள்கள் இடத்தில் நிலையான தன்மையும் மாறுபடுகின்ற தன்மையும் ஒருங்கே காணப்படுகிறன மாறாத தன்மைக்கு அடிப்படையாக உள்ள ஒருமைப்பாட்டை கவனத்தில் கொள்ளும் போது பொருள்கள் நித்தியமாகவும் அதாவது அழிவில்லாததாகவும் தெரிகிறது. அதே நேரம் மாறுபடும் தன்மையை நோக்கும் போது அநித்தியமாகவும் தெரிகிறது. வெவ்வேறு நிலைகளிலிருந்து கவனித்து கூறும் முற்றிலும் முரண் பட்ட ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லாத இரண்டு கருத்துக்களுக்கும் மத்தியஸ்தமான கருத்தை அஸ்தி நாஸ்தி என்று அறிமுகம் செய்கிறது ஜைன தத்துவம் இந்த இரண்டு பார்வைகள் எந்த தத்துவ மரபிலும் இல்லாத புதிய பார்வைகள் என்றே சொல்லலாம்

இது தவிர ஜைன தத்துவத்தில் மட்டுமே சிறப்பாக காணப்படும் மற்றொரு கருத்து திரவியங்களுக்கு ஜைனர்கள் கூறும் புது நோக்குடைய இலக்கண வரம்பு என்று சொல்லலாம் திரவியங்கள் என்பது குணங்களும் பரியாயங்களும் பொருந்தியவைகலாகும் திரவியங்கள் தங்கம் என்றால் அதன் மேல் பூசப்படும் வர்ணங்கள் குணங்களாகும். தங்கமும் வர்ணமும் இல்லை என்றால் நகைகள் இல்லை இப்போது திரவியங்களை நித்தியமென்று எடுத்துகொண்டால் பொருளின் வடிவான நகைகளை அநித்தியம் என்று கருதமுடியும் இது தான் திரவியத்தின் இலக்கணத்தில் கூறப்படும் நித்ய அநித்யங்கள்.

மேலும் ஜைன தத்துவம் உலகத்தையும் அதில் காணப்படும் பொருள்களையும் ஜீவன்கள் என்றும் அஜீவன்கள் என்றும் இரண்டுவகையாக பிரிக்கிறது தாவர பொருள்களும் மனிதன் உள்ளிட்ட மிருக வகைகளும் ஜீவ பொருளாகும். தாவர பொருள்கள் ஓரறிவு பெற்றவைகளாகும். மிருகங்கள் இரண்டு முதல் ஐந்து வரையில் அறிவை பெற்றிருக்கிறது என்று துணிந்து சொல்லாம். மனம் என்ற ஆறாவது அறிவு உடையவர்கள் மனிதர்கள் சொர்க்கத்தில் உள்ள தேவர்களும் நரகத்தில் உள்ள நரர்களும் மனிதர்கள் என்ற மக்கள் இனத்தை சேர்ந்தவர்கள் தான் இவர்களுக்கும் பிறப்பு இறப்பு வளர்ச்சி என்ற மூன்று பருவங்கள் உண்டு கர்மங்களின் தொடர்ச்சியான பந்தங்களால் ஆறாவது அறிவை பெற்றவர்களுக்கு பிறப்பும் இறப்பும் மாறி மாறி வந்தமைகிறது. ஜைன மதம் சொல்லும் இரத்தின திரவியங்கள் என்ற ஒழுக்க நெறிமுறைகளை கடைபிடித்தால் உயிர்கள் பந்தபாச தளையிலிருந்து விடுபட்டு மோட்ச நிலையில் பரமாத்மா நிலையை அடையலாம் இது ஜீவ பொருள்களை பற்றிய ஜைன மதத்தின் கண்ணோட்டமாகும்.

அடுத்ததாக அஜீவ பொருள்களின் தன்மையை பற்றி ஜைன மதம் கூறுவதை கவனிப்போம் அஜீவ பொருள்கள் புத்கலம், ஆகாசம், தர்மம், அதர்மம், காலம் என்று ஐந்து வகைப்படும் இவைகள் அசேதன திரவியங்கள் ஆகும். புத்கலத்திற்கு மூலபொருள் பரமாணு பரமாணுக்கள் கூட்டாமாக சேர்ந்து அணுக்களின் கூட்டமைப்பான கந்தங்களை உருவாக்குகிறது. ஆகாசம் என்பது திரவியங்களுக்கு அடைக்கலம் தரும் இடமாகும். உலகத்தில் உள்ள பொருள்களுக்கு இடம் தரும் ஆகாசத்தின் பெயர் உலக ஆகாசம். உலகத்திற்கு அப்பால் இருப்பது அனந்த ஆகாசம் எனப்படும். தர்மம் என்பது ஜீவ புத்கல பொருள்களின் இயக்கத்திற்கு நிமித்த காரணமாக இருக்கிறது. அதே போல அதர்மம் என்பது ஜீவ புத்கல பொருள்களின் நிலைபாட்டிற்கு காரணமாக இருப்பது.


திரவியம் என்பது வளர்ச்சி அடையும் குணத்தை இயற்க்கை இயல்பாக கொண்டதாகும். எனவே தான் இதில் காலம் என்ற ஐந்தாவது தத்துவம் இணைத்து பேசபடுகிறது. காலம் என்பது பிற பொருள்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்தாகும். இதுவும் மற்ற பொருள்களின் வளர்ச்சிக்கு மூல வித்தாக அமைகிறது. புத்கலம் பரமானுக்க்களால் ஆக்கப்பட்டு இருப்பது போலவே ஆகாசம் ஆகாஷ பரமானுக்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. காலம் கூட காலத்தின் பரமானுக்களால் சூழபட்டிருக்கிறது என்று ஜைன தரிசனம் அறிமுகம் தருகிறது.

ஒவ்வொரு உயிருக்கும் அதனதன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உடல்கள் வந்தமைகின்றன இந்த உடல் ஸ்தூல உடல் என்றும் சூட்சம உடல் என்றும் இருவகைப்படும். பிறப்பும் இறப்பும் கண்ணுக்கு தெரியும் ஸ்தூல உடலை சேர்ந்ததாகும். சூட்சம உடல் என்பது கர்ம சரீரம் எனப்படும். மனிதர்கள் சம்சார பந்தத்தில் இருந்து விடுபடும்வரை அவர்கள் கர்ம தழையிளிருந்து விடுதலை அடைய முடியாது. எனவே அத்தகைய விடுதலையை பெரும் வரை அவர்களுக்கு கர்ம சரீரம் கண்டிப்பாக உண்டு கர்மத்தை அழித்து மோட்சத்தை பெரும் வரை சூட்சம சரீரம் இருந்து கொண்டே இருக்கும். மோட்சம் கிட்டும் போது கர்ம சரீரம் தானாக அழிந்து விடும். மனிதர்களின் ஆசைவயபட்ட எண்ணங்கள் பாவ கர்மங்கள் என்று அழைக்கபடுகிறது. பாவ எண்ணங்கள் விலகி சுத்தமான நிர்மல எண்ணங்கள் தோன்றும் போது மனிதன் சுத்தனாகி சித்தனாகி விடுகிறான்.

சம்சார பந்தத்தில் சிக்கி கிடக்கும் உயிர்களின் எண்ணிக்கை அநாதி ஆனது. ஜைன சமையத்தை போலவே மற்ற இந்திய தரிசனங்கள் பலவும் சம்சாரங்களின் எண்ணிக்கை அநாதி என்றே சொல்கின்றன எனவே ஜீவனும் புத்கலமும் சம்சார பந்தத்தின் பிராதான அம்சங்களாகும். சம்சார ஜீவன்களை ஆராய்ந்தால் அதில் ஜீவன் புத்கலம் ஆகிய இரண்டும் போக மீதியாக ஆசிரவம், சம்வரம், புண்ணியம், பாவம், பந்தம், நிர்ச்சரம், மோட்சம் ஆகிய ஏழு அம்சங்கள் காணப்படுகின்றன. ஆசிரவம் என்பது மனோவிகாரங்களால் கர்ம வினைகள் ஆத்மாவிடம் வந்து சேர்வதாகும்.

இந்த மனோ விகாரங்கள் ராகம் என்ற ஆசை துவேசம் என்ற வெறுப்பு மோகம் என்ற மயக்கம் என்று மூவகைப்படும் சம்வரம் என்பது மனோ விகாரங்கள் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் தவ சிந்தனையை உருவாக்கி ஆத்மாவை கர்ம வினைகள் அண்டாதவாறு காப்பதாகும். விருப்பத்தினாலோ வெறுப்பினாலோ உருவாகும் செயல்கள் பாவ புண்ணியம் என்று அழைக்கப்படும் இந்த இரண்டு வகை செயல்களும் கர்மத்தை வளர்க்குமே தவிர குறைக்காது. அதனால் இவைகளையும் விலக்க வேண்டும்.


கர்ம வினைகள் ஆத்மாவை செயலற பிரித்து நிற்பதையே பந்தம் என்று சொல்வார்கள் இப்படி உருவாகும் பந்தத்தை அறுத்து தூர எரிவதே நிர்ச்சரம் எனப்படும் நிர்ச்சரம் என்பதை ஒருமனிதன் அடைவதற்கு அவன் தவ வழியையோ யோகமார்க்கத்தையோ கையாள வேண்டும். ஆத்மாவை சம்சாரத்தோடு இறுக கட்டிபோடும் கர்ம பந்தத்தை அறுத்து விடுதலை பெற முயற்சிக்கும் ஆத்மாவின் குறிக்கோளே மோட்சம் எனப்படும். ஆகவே சுருக்கமாக சொன்னால் ஆத்மா மோட்சம் மோட்ச வழி ஆகிய மூன்றுமே ஜைன தத்துவத்தின் மிக முக்கிய குறிக்கோள் எனலாம்

பொதுவாக தத்துவங்கள் என்பது விரிவாக விசாலமாக ஆராயப்பட வேண்டிய பொருளாகும் அதை சுருக்கமாக தெரிவிக்க முயற்சிக்கும் போது தெளிவில்லாத குழப்பங்களோ புரியாத தண்மையோ இருக்கும் இங்கே கூற்பட்டிருக்கும் ஜைன தத்துவமும் அதற்கு விதிவிலக்கல்ல எனவே ஜைன தத்துவத்தை விரிவாக அறிந்து கொள்ள வேறொரு சமையத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் இனி ஜைன மதத்தால் ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சியை அடுத்த பதிவில் ஆராய்வோம்.
Contact Form

Name

Email *

Message *