Store
  Store
  Store
  Store
  Store
  Store

புத்தன் நடந்த புனித வழி...!

இந்து மத வரலாற்று தொடர் 38

   ர்த்தமான மகாவீரர் கண்டறிந்த ஜைன சமயம் இந்துமதத்தின் ஒரு அங்கம் இந்துமத வேதங்களும் உபநிஷதங்களும் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் பகவத்கீதை வேதாந்த சூத்திரம் போன்ற புனித நூல்களும் வலியுறுத்துகின்ற அஹிம்சா தத்துவத்தை சுவிகரித்து கொண்டு வர்தமானரும் அவருக்கு பின்வந்த பல்வேறு தீர்தங்கர்களும் ஜைன மதத்தை விரிவாக்கம் செய்தனர் என்று நான் எழுதியிருந்ததை படித்து விட்டு எனது சில ஜைன நண்பர்கள் நேரடியாகவும் வேறு சில ஜைன நண்பர்கள் தொலைபேசி வழியாகவும் உங்கள் கருத்தை எங்களால் ஏற்றுகொள்ள முடியாது காரணம் ஜைன மதம் என்பது மகாவீரரின் சொந்த உருவாக்கம் எனவே நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிகொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னார்கள்.

அவர்கள் சொல்லுவது அவர்களுக்கு சரி நான் சொல்வது எனக்கு சரி எனவே எனது கருத்தை மாற்றி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் சொல்வது தர்க்கப்படி சரியாக இருக்கலாம். ஆனால் அறிவார்ந்து யோசிக்கும் போது நான் ஏன் அப்படி கருதுகிறேன் என்று விளக்கம் கூறுவதும் அந்த விளக்கத்தை அவர்கள் கேட்ட பிறகு ஏற்றார்களா இல்லையா என்பதை வைத்து இன்னும் ஆழமாக ஆய்வு செய்வதுமே சரியாக இருக்கும் ஆனால் நம்மில் பலர் இதை போல யோசிப்பது கிடையாது நமது கருத்துக்கு ஒரு மாற்று கருத்து வந்தவுடன் மாற்றுகருத்து சொன்னவரை வசைபாடுவதும் அவரை விரோதியாக பார்ப்பதுமே வழக்கமாக இருக்கிறது. இந்த பழக்கத்தால் தான் நாட்டில் பல விஷயங்களுக்காக குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் உருவாகுகின்றன.


இந்தியாவிற்கு வெளியே உருவான மதங்கள் அனைத்திற்கும் சொராசிரியம் என்ற மதம் எப்படி மூல கருவாக அமைந்துள்ளதோ அதே போலவே இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களுக்கும் நான்கு வேதங்களே மூலமாகவும் முதலாகவும் அமைந்துள்ளது இந்து சமையத்தின் நேரடி உட்பிரிவுகளான காணாபத்யம் துவங்கி சைவ சித்தாந்தம் வரையில் வேதங்களை தங்களது கருத்தாக்கங்களுக்கு அடிப்படையாகவும் அஸ்திவாரமாகவும் எடுத்து கொள்கின்றன. அதாவது சுருங்க சொல்வது என்றால் அவைகள் வேதங்களை ஏன்? எதற்கு? என்ற கேள்விகளே கேட்காமல் அப்படியே ஏற்றுகொள்கின்றன. அதே போலவே இந்து சமையத்தின் வெளிபிரிவுகளான ஜைனம் துவங்கி சீக்கியம் வரையில் வேத கருத்துக்களை எதிர்த்து நின்று அதே நேரம் வேதங்களுக்கு மாற்று விளக்கங்கள் சொல்லி வளருகின்றன. அதாவது இந்திய மதங்கள் அனைத்துமே ஒன்று வேதத்தை ஆதரித்து அல்லது எதிர்த்து உருவானவைகள் தான். ஆக ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் மூல காரணம் வேதங்களே ஆகும்.

வர்த்தமான மாகாவீரர் ஹிந்துமதத்தில் உள்ள வீணான சடங்கு ஆச்சாரங்களை எதிர்த்தார். யாகங்களை எதிர்த்தார். யாகங்களில் பலியிடப்படும் உயிர் வதையை எதிர்த்தார். இவைகளை ஹிந்து வேதங்கள் வலியிருத்துகின்றன என்றால் அவைகளும் தேவையில்லை என்று வேதங்களையும் எதிர்த்தார். இதை நான் மறுக்கவில்லை இதை அறியாதவனும் இல்லை இவைகளை எல்லாம் எதிர்த்த மகாவீரர் ஹிந்துமதம் சொன்ன ஆத்மாக்களை உண்டென்று ஏற்றுகொண்டார். தேவ,தேவிகள் இருப்பதை ஒத்துகொண்டார் நல்லது செய்தால் நல்லது விளையும் தீயது செய்தால் தீமை விளையும் என்ற கர்ம வினை பலனையும் ஏற்றுகொண்டார். இவைகளை வைத்து பார்க்கும் போது அவர் இந்துமதத்தில் ஏற்காதது சில ஏற்றது பல என்ற முடிவிற்கு என்னால் வர முடிந்தது. அதையே ஹிந்துமதத்தின் ஒரு அங்கமே ஜைன மதம் என்று எழுதினேன் அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை மற்றவர்கள் அப்படி நினைத்தால் அது அவர்களது சிந்தனை சுகந்திரம்.

ஜைன மதத்தை இந்துமத அங்கமென்று சொல்வதில் கருத்து பேதம் உள்ளவர்கள் கூட பெளத்த மதம் இந்துமதத்தின் இன்னொரு வளர்ச்சி என்பதை ஒத்துகொள்வார்கள். இந்து மதத்தில் உள்ள அத்வைத தத்துவத்தை நன்கு அறிந்தவர்கள் பெளத்த தத்துவம் உபநிஷதங்களில் இருந்து உருவானது என்பதை ஏற்றுகொள்வார்கள். காரணம் அத்வைதம் பிரபஞ்சம் அனைத்துமே பிரம்மத்தின் தோற்றம் என்கிறது. புத்த தத்துவம் பிரம்மம் என்ற வார்த்தைகளுக்கு பதிலாக சூன்யம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது. வித்தியாசம் இவ்வளவே தவிர வேறு ஒன்றுமில்லை.


இறைவனாகிய மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றே புத்த அவதாரம் என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்து மத புராணங்களில் சிலவும் இந்த கருத்தை ஆமோதிக்கின்றன. கெளதம புத்தர் கூட துன்பத்திற்கான மூலகாரணம் ஆசையே என்பதை தான் புதிதாக கண்டறியவில்லை தனக்கு முன்னால் பல ஞானிகள் தங்களது அனுபவத்தால் கண்டறிந்தவைகளை நானும் உணர்ந்து உபதேசிக்கிறேன். என்று சொல்கிறார் ஆனால் புத்த மதத்தை தனி ஒரு மதமாக நிலைநிறுத்த வேண்டுமென்ற ஆசைகொண்ட பல அறிஞர்கள் புத்த மதமானது ஹிந்துமதத்திற்கு மாறுபட்டது விரோதமானது துளி கூட சம்மந்தமில்லாதது என்று ஆயிரகணக்கான ஆண்டுகளாக வாதிட்டு வருகிறார்கள். ஆனாலும் கூட பெளத்த தத்துவ மரபில் உபநிசதங்களின் கருத்துக்கள் பல இடங்களில் பளிச்சிடுவதை யாரும் மறுக்க இயலாது.

புத்த மதம் இந்து மதத்திற்கு முற்றிலும் வேறுபட்டது என்பதை காட்ட புத்தர் கடவுளை பற்றி உபதேசிக்க வில்லை கடவுள் இருப்பதாக எங்கும் சொல்ல வில்லை என்று வாதிடுகிறார்கள். அவர்களின் கருத்துக்களை மட்டுமே கேட்கும் பலருக்கு இதனால் குழப்பம் வருகிறது. புத்த மத கருத்துக்களை பற்றிய குழப்பங்கள் இருப்பது ஆச்சரியம் அல்ல காரணம் அந்த தத்துவம் சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மிகவும் கடினமானது. புத்தருக்கு போதி மரத்தடியில் உதயமான ஞானம் என்ன? அவர் நீண்ட நெடுங்கால தவத்தின் விளைவாக கண்ட முடிவுகள் என்ன? இன்று பெளத்த தத்துவங்கள் என்று சொல்லபடுபவைகள் அனைத்துமே புத்தரால் சொல்லப்பட்டது தானா? அல்லது அவருக்கு பின்னால் உருவாக்கம் செய்யபட்டதா? அப்படி என்றால் புத்தரின் சொந்த கருத்து எது? மற்றவர்கள் உருவாக்கிய கருத்து எது? என்று ஆயிரம் கேள்விகள் இன்னும் பதில் இல்லாமல் இருக்கிறது. அவைகளுக்கான விளக்கங்களை பெற்ற பிறகே புத்தர் கடவுளை ஒத்துகொண்டாரா? இல்லையா? என்ற முடிவற்கு நம்மால் வரமுடியும். காரணம் புத்தர் நம்மை போன்று சாதாரண அறிவு படைத்த மனிதர் அல்ல அவர் நிறைவான ஞானி.

ஒரு பெரிய மலை இருக்கிறது அந்த மலையின் உச்சியில் ஒருவன் இருக்கிறான் மலையடிவாரத்தில் வேறொரு மனிதன் இருக்கிறான் உச்சியில் இருக்கும் மனிதன் தூரத்தில் ஒரு வாகனம் வருவதாக சொல்கிறான் அடிவாரத்தில் இருக்கிறவன் கண்ணில் வாகனம் எதுவும் தென்படவில்லை எனவே அவன் எதுவும் வரவில்லை என்று மேலே இருப்பவனின் கருத்தை மறுதலிக்கிறான். சிறிது நேரம் கழித்து மலையடி வாரத்தில் அருகில் வாகனம் வருகிறது கிழே இருப்பவன் இப்போது தான் வண்டி வருகிறது இது தான் உண்மை என்கிறான் வண்டி அவனை விட்டு நகர்ந்ததும் அது போய்விட்டது என்று சொல்கிறான். ஆனால் மேலே இருப்பவனோ வாகனம் இன்னும் போகவில்லை சாலையிலேயே தென்படுகிறது என்று சொல்கிறான் கிழே உள்ளவன் மீண்டும் அவன் -பேச்சை நம்ப மறுக்கிறான்.

முக்காலத்தை உணர்ந்த ஞானிக்கும் நமக்குள் உள்ள வித்தியாசம் இப்படி பட்டது தான் புத்தர் போன்ற ஞானிகள் மலை உச்சியில் இருப்பதை போன்றவர்கள் நம்மை போன்ற சாதாரண ஜீவன்கள் அடிவாரத்தில் கிடப்பவர்கள். மேலே இருப்பவர்களால் முக்காலத்தையும் உணர முடியும் நம்மால் நிகழ்காலத்தை மட்டுமே காண முடியும். நமக்கு நிகழ்காலம் மட்டுமே சத்தியமானது அதை மட்டுமே வைத்து கொண்டு எல்லாவற்றையும் அளவிடுகிறோம் கடவுள் என்பதும் முக்காலத்திலும் இருக்க கூடிய சக்தியே ஆகும். மூன்று காலத்தையும் உணர்ந்த பிறகே கடவுளை உணர முடியும். இதை மனதில் வைத்தே புத்தர் கடவுள் பற்றிய விஷயத்திற்கு மெளனம் சாதித்திருக்கலாம் அதை உணராத அற்ப ஜீவிகளான நாம் புத்தர் கடவுள் இல்லை என்று தான் சொன்னார் என்று வறட்டு வாதம் செய்துகொண்டிருக்கிறோம்

புத்தர் தமது சொந்த உபதேசங்களில் ஹிந்துமத கருத்துகளையே பெருவாரியாக பேசுகிறார். மிக குறிப்பாக சொல்வது என்றால் இந்துமதத்தின் ஆதர கொள்கை மறுபிறப்பு என்பது கர்மாவின் ஆளுகையும் இந்து மதத்தால் உலகுக்கு சொல்லப்பட்டது தான் இந்த இரண்டு முக்கிய கோட்பாடுகளை புத்தர் மறுப்பேதும் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு உபதேசிக்கிறார். இன்னும் ஒருபடி சொல்வது என்றால் புத்தர் கூட பல பிறவிகளை எடுத்தவர் ஆவார். புத்த மத ஆதர நூல்கள் பல இதற்கு சான்றுகளாக இருக்கின்றன.


பெளத்த மதத்தை உருவாக்கியது கெளதம புத்தர் என்று நம்மில் பலர் நம்பிவருகிறோம் ஏன் புத்த மதத்தை பற்றிய முழுவிபரங்கள் தெரியாத பல பெளத்தவர்கள் கூட அப்படி தான் சொல்கிறார்கள். ஆனால் புத்த மத நூல்கள் அப்படி சொல்லவில்லை புத்தருக்கு முன் பல புத்தர்கள் இருந்தார்கள் அவர்களின் எண்ணிக்கை இருப்பத்தி நான்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புத்தர்கள் வந்தார்கள் அவர்கள் உடலால் வேறுபட்டவர்களாக இருந்தாலும் ஆத்மாவால் ஒன்று பட்டவர்கள் ஒன்றானவர்கள் என்று சொல்கின்றன. இதை

இறந்த காலத் தெண்ணில் புத்தர்களும்
சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்து

என்று தமிழில் உள்ள மணிமேகலை காப்பியம் அழகாக கூறுவதை இங்கு நினைவு படுத்த வேண்டும். அதாவது இறந்த காலத்தில் எண்ணில் அடங்காத புத்தர்கள் இருந்தார்கள் என்பது இந்தபாடலில் பொருளாகும் எனவே புத்தருக்கு முந்திய புத்தர்கள் பலர் புத்த மத கருத்துக்கள் வடிவாக்கம் பெற உழைத்திருக்கிறார்கள் அவர்களின் கருத்துக்கள் எதுவும் இன்று நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும் அவர்களில் பலர் உபநிஷத் காலத்து ஞானிகள் என்பதை மறுக்க இயலாது. எனவே புத்த மதத்திற்கு மூத்த மதமான ஜைன மதம் எப்படி இந்துமதம் என்ற மகாவிருஷத்தின் ஒரு கிளையோ அதே போலவே பெளத்த மதமும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகும், இனி அந்த மதத்தின் தத்துவத்தை சிறிது ஆராய்வோம்.
Contact Form

Name

Email *

Message *