Store
  Store
  Store
  Store
  Store
  Store

பிள்ளையார் என்ற நண்பன் !


    பிள்ளையாரை நினைத்தவுடன் பக்தி வருகிறதோ இல்லையோ நம்மையும் அறியாமல் ஒரு தோழமை உணர்ச்சி வருகிறது. அவரை வானத்தில் எங்கோ நம்மால் எட்டிபிடிக்க முடியாத கடவுளாக யாரும் நினைப்பது இல்லை நம் வீட்டில் உள்ள ஆயிரம் சொந்தங்களில் அவரும் ஒருவராகவே இருகிறார். கல்யாணம் துவங்கி கர்ம காரியம் வரையில் நம் வாழ்வோடு அவர் இணைந்து வருவதனால் அந்த எண்ணம் நமக்கு வருகிறதா? அல்லது நமது ஊரில் அக்கம்பக்கத்தில் ஆற்றக்கரையில் சந்துமூலையில் ஜம்மென்று நாம் பார்க்கும்படி எப்போதுமே இருப்பதனால் வருகிறதா? என்பது பட்டிமன்ற கேள்வியை போல் முடிவே இல்லாமல் நம்மோடு தொடர்கிறது.

எனக்கும் பிள்ளையாருக்கும் ஏற்பட்ட உறவு எப்போது ஆரம்பமானது என்று தெரியவில்லை ஆனால் முதல முதலில் எனக்கு உலகத்தை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தியதே அவர்தான் ஆரம்பத்ததில் எங்கள் ஊரில் அரசமரத்தடியில் ஒரு பிள்ளையார் அமர்ந்திருப்பார் இடுப்பில் ஒரு துண்டும் அருகில் இரண்டு நாக சிலைகளுமே அவர் சொத்தாக இருக்கும் யாருடைய வம்புதும்புக்கும் போகாமல் தன்பாட்டிற்கு அமர்ந்திருந்த பிள்ளையாரை ஒருநாள் காலையில் காணவில்லை எங்கள் கிராமமே பெரிய பரபரப்பாக ஆகிவிட்டது. அப்போது எனக்கு ஐந்து வயதிற்கு கீழே தான் இருக்கும் நடந்த சம்பவங்கள் எதுவும் தெளிவாக நினைவில் இல்லை ஆனாலும் நம் வீட்டில் ஒருவர் காணமல் போய்விட்டால் எப்படி வருத்தபடுவோமோ அப்படியே ஒவ்வொரு வீட்டிலும் வருத்தபட்டார்கள் சில பாட்டிமார்கள் ஒப்பாரி வைத்து அழவும் செய்தார்கள்

பிள்ளையாரை புதியதாக வாங்கி வந்து கோவிலில் வைப்பதை விட திருடி கொண்டு வந்து வைப்பது தான் விஷேசமாம் அந்த வகையில் எங்கள் ஊர் பிள்ளையாரையும் யாரோ களவாடி போய்விட்டார்கள். பிறகென்ன நம் ஊர் பிள்ளையார் திருடு போனதை போல நாமும் வேறு ஊரிலிருந்து ஒரு பிள்ளையாரை திருடி வந்து வைப்பது தான் சிறந்தது என்று ஊர்பெரியவர்கள் முடிவு செய்தார்கள் அந்த முடிவின் படி ஏதோ ஊரிலிருந்து ஒரு அழகான பிள்ளையார் திருடி வரப்பட்டார். அவரை திருடி வந்ததில் முக்கிய பங்குபணி ஆற்றியது ஏசு பாதம் அண்ணன் தான் அவர் பிள்ளையாரை திருடிய கதையை மிக சுவாரசியமாக சொல்வார். மிக சின்ன பசங்களான நாங்கள் திறந்தவாய் மூடாமல் அதை கேட்டுக்கொண்டு இருப்போம். அந்த கதையை கேட்ட நாள் முதலே எனக்கு பிள்ளையாரை மிகவும் பிடித்து விட்டது.

பிள்ளையாரை எனக்கு மிகவும் பிடித்ததற்கு இந்த கதை மட்டும் காரணமல்ல நான் ஒன்றாம் வகுப்போ இரண்டாம் வகுப்போ படிக்கும் போது காலில் கலிபர் மாட்டிகொண்டு பள்ளிகூடத்திற்கு நடந்து போவேன் என் வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழியில் தான் பிள்ளையார் இருப்பார் அப்போது எங்கள் ஊர் நூலகராக இருந்த கணபதி ஐயரின் அப்பா காலையிலேயே எழுந்து பிள்ளையாருக்கு குளிப்பாட்டி புது வேட்டி கட்டி பூஜை செய்ய ஆரம்பித்து விடுவார் அவர் பூஜை செய்ய துவங்கினால் நேரம் காலம் என்பது கிடையாது. சில நாளில் அதிகாலையில் துவங்கும் பூஜை நடுப்பகல் தாண்டியும் நடக்கும். பள்ளிக்கூடம் போகும் நானும் எனது நண்பர்களும் அரசமரத்து மேடையில் மிகவும் நல்ல பிள்ளைகளாக அமர்ந்து கொள்வோம். நாங்கள் காத்திருப்பது கற்பூர ஆரத்தி எடுத்துகொள்ள அல்ல பிள்ளையாருக்கு படைத்த சுண்டல் பொரிகடலை போன்றவைகளை ஒருகை பார்ப்பதற்கே

சில நாளில் அவர் பொங்கலும் வடையும் பிள்ளையாருக்கு படைப்பார் சூடான பொங்கலை பூவரசன் இலையில் வாங்கி கைகள் சுட சுட தரையில் பாதியும் வாயில் பாதியும் போடுகின்ற சுகமிருக்கிறதே அதற்கு இந்த உலகத்தையே எழுதி கொடுக்கலாம் ஆனால் பல நேரங்களில் சூடான பொங்கல் எங்களுக்கு கிடைப்பது கிடையாது, அவர் தன்னை மறந்து பூஜையில் இருப்பதனால் பள்ளிக்கூடம் துவங்கும் நேரம் வந்துவிடும் ஏமாற்றத்தோடு போகவேண்டிய நிலை இருக்கும் ஆனால் எல்லா நேரத்திலும் எங்களால் காத்திருக்க முடியாது அவர் கண்களை மூடி மந்திரம் சொல்லும் போது எங்கள் கை நீண்டு விடும். அவர் பார்த்துவிடுவாரோ? என்ற பயத்தில் அவசர அவசரமாக பொங்கலையும்,வடையையும் உள்ளே தள்ளும் எங்கள் வேகத்ந்திற்கு முன்னால் பி.டி உஷா கூட தோற்று விடுவார்

சில வருடங்கள் கிழித்து அரசமரத்தடியில் சுகமாக காற்று வாங்கி கொண்டு இருந்த பிள்ளையாரை கோவில்கட்டி உள்ளே உட்கார வைத்து விட்டார்கள் பிள்ளையார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவருக்கு செல்வ விநாயகர் என்ற பெயரையும் கொடுத்து விட்டார்கள் ஆயிரம் தான் பிள்ளையார் வசதி ஆகி கோயிலுக்குள் போய் உட்கார்ந்தாலும் மரத்தடி வினாகருக்கு இருந்த அழகும் கம்பீரமும் இப்போது இருப்பதாக என்னால் சொல்ல முடியவில்லை அவர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த நாளை மறக்கவே முடியாது பெரியதாக யாக சாலை அமைத்து நிறைய சாஸ்ரிகள் வந்து யாகமெல்லாம் செய்தார்கள் நானும் எனது நண்பர்கள் பட்டாளமும் யாக சாலையை விட்டு நகரவே இல்லை காரணம் அங்கே இருந்த ஏரளாமான பழங்களும் இனிப்பு வகைகளும் என்பதை சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. சலிக்க சலிக்க குரங்கு பட்டாளங்களை போல பழங்களை தின்றோம்.

சின்ன வயதில் ஐந்து பைசா மிட்டாயை கூட காக்கா கடி கடித்து யார் தருகிறார்களோ அவர்கள் தான் மிகசிறந்த கூட்டாளிகள் அந்த வகையில் பிள்ளையார் எங்களுக்கு ஆத்மார்த்தமான கூட்டாளியாவார் அவர் எதையுமே தனித்து தின்றது இல்லை நாங்கள் அவரை அப்படி உண்ண விட்டதும் இல்லை. அடித்து பிடித்து பிடுங்கி சாப்பிடாத குறைதான் அவரிடம் ஆனால் பாவம் அவர் எந்த பதிலுமே சொல்ல மாட்டார் போங்கடா போக்கரி பசங்களா என்று திட்டவும் மாட்டான் நாங்கள் பர்ட்சையில் காப்பி அடித்தால் வாத்த்தியாரிடம் அகப்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது தப்பி தவறி எங்கள் தில்லுமுல்லுகளை வாத்தியார் கண்டுபிடித்து விட்டால் பிள்ளையார் இருக்கும் பக்கமே ஒருமாதம் எட்டி பார்க்க மாட்டோம் அதன் பிறகு அவருக்கு எதாவது திருவிழா வரும் ஊரில் யாரவது சிறப்பு பூஜை செய்வார்கள் பிள்ளையாருக்கு பிரசாதம் சாப்பிட ஒத்தாசை பண்ண நாங்கள் போயாகவேண்டிய சூழல் வந்து விடும்

அவருக்கு சதுர்த்தி நாள் வந்தால் எங்கள் உற்சாகம் எல்லை மீறி இருக்கம் காரணம் அன்று பாட்டு கச்சேரி இருக்கும் கரகாட்டம் கூட நடக்கும் முதல் முதலில் திரைப்பட பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான எ.எம்,ராஜா அவர்களின் இன்னிசை கச்சேரியை பார்க்க கூடிய வாய்ப்பும் பிள்ளையார்தான் எங்களுக்கு தந்தார் அந்த காலத்தில் ஒரு திரைப்பட பின்னணி பாடகரின் கச்சேரியை ஒரு சின்ன கிராமத்தில் நடத்துவதும் அதை பார்ப்பதும் மிக பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி இன்னும் எவ்வளவோ இனிமையான நினைவுகள் பிள்ளையாரோடு இருக்கிறது அதை சொல்லிக்கொண்டே போனால் நேரம் போவதே தெரியாது அதனால் இத்தோடு விடை பெறலாம் என்று நினைக்கிறேன்,,


Contact Form

Name

Email *

Message *