Store
  Store
  Store
  Store
  Store
  Store

புத்தர் பெற்ற ஞானம் என்ன?

இந்து மத வரலாற்று தொடர் 39

    ழகான மனைவியை விட்டும் அன்பான தந்தையை விட்டும் அருமை குழந்தையை விட்டும் அரண்மனை சுகபோகங்கள் அனைத்தையும் விட்டும் புத்த பெருமான் எதற்காக காடு சென்றார்? அங்கு சென்று அவர் பெற்றது என்ன? அதனால் மனித குலம் அடைந்தது என்ன? என்பவைகள் உலக முழுவதும் உள்ள எல்லா தரப்பு மக்களும் அறிந்தவைகளே புத்தரை அன்பு வடிவாக அறத்தின் தெய்வமாக ஏற்றுகொள்ளாத எவருமே மண்ணில் கிடையாது. அப்படி யாரவது ஒருவர் இருந்தால் அவரை இவர் மனிதர்தானா என்று சந்தேகப்பட வேண்டிய நிலை அன்றும் இன்றும் என்றும் இருந்து கொண்டே இருக்கிறது. 

காட்டுக்கு சென்ற புத்தர் வைதீக நெறியில் உள்ள ஞானிகளை சந்தித்தார் ஜைன தர்மத்தின் குறிக்கோளை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுங்கு மாறாது வாழ்ந்த துறவிகள் பலரையும் சந்தித்தார். ஆசீவதம் என்ற மிக தீவிரமான அஹிம்சை நெறியில் பற்றுகொண்ட முனிவர்கள் பலரையும் சந்தித்தார் இவர்கள் யாரிடத்திலும் புத்தரின் அறிவுபூர்வமான தேடுதலுக்கு விடை கிடைக்கவில்லை. சுமார் பதினான்கு ஆண்டுகள் தாகத்தோடு அலைகின்ற பாலைவன பயணி போல தனது ஞான பசிக்கு உணவு தேடி காடுகள் மலைகள் சமவெளிகள் நாடு நகரங்கள் என்று அலைந்தார் எங்குமே அவர் தேடியது கிடைக்கவில்லை கடேசியில் தான் தேடுவது வெளியில் கிடைக்காது. காரணம் அது வெளியில் இல்லை என்ற முடிவிற்கு வந்து போதி மரத்தடியில் கண்களை மூடி தனக்குள் ஆழ்ந்தார். அப்படி ஆழ்ந்த போது ஆயிரம் ஆயிரம் வருடமாக பல ஞானிகளும் தவ சிரேஷ்டர்களும் அனுபவத்தால் கண்ட ஆசையை விடு பற்றை அறு அதுவே துன்பத்தின் நிவாரண மார்க்கம் என்ற தெளிவை கண்டறிந்தார். அன்றுமுதல் அவர் ஆசிய ஜோதியாக நாடு முழுவதும் தெரியபட்டார்.


புத்தரின் வாழ்க்கை வரலாற்றை லலிதா விஸ்தரம் அஷ்வகோசரின் புத்த சரிதம், செளந்தர நந்தம் போன்ற வடமொழி நூல்களின் அறிய முடிகிறது. புத்தரின் நேரடி சீடர்களான சாரி புத்தர், மெளத்த கல்யானர், காசியபர், ஆனந்தர் ஆகியோர்கள் மக்களுக்கு வழங்கிய ஞான உபதேசத்தில் மிக தெளிவாகவும் உறுதியாகவும் புத்தர் வாழ்க்கையையும் அமுத வாக்கையும் தெரியபடுத்தி உள்ளனர். அக்காலத்தில் மகத பேரரசின் குடிமக்கள் பேசிய பாலி மொழிலேயே புத்தரும் பேசினார் அவரின் அற்புதமான கருத்துக்களும் அந்த மொழியிலேயே பதிவு செய்ய பட்டும் இருக்கிறது. 

முதல் முதலில் பீகார் மாநிலத்தில் உள்ள நாலந்தா அருகில் ராஜகிருகம் என்ற பிந்துசார மன்னனின் தலைநகரத்தில் ஒரு அறிஞர்கள் சபை கூடியது. அஜாத சத்துருவின் தந்தையான பிந்துசாரன் புத்தர் நிர்வாணம் அடைந்த சில வருடத்தில் மகா காசியபர் தலைமையில் புத்த துறவிகளை கூட்டி அவரது உபதேசங்களை அதிகாரபூர்வமாக தொகுத்தார். அதன் பிறகு சில நூற்றாண்டுகள் கழித்து வைஷாலி நகரத்தில் சர்வ காம மகாதேரர் தலைமையில் சுமார் எழுநுரு பிட்சுகள் அமர்ந்து ஆராய்ந்து இன்று மிக புகழ்பெற்றதாக திகழும் திரிபிடகங்களை தொகுத்து வழங்கின்றார்கள் மூன்றாவது முறையாக மாமன்னன் சாம்ராட் அசோகன் புத்தமதத்தை ஏற்று நாடு முழுவதும் பிரச்சாரத்தை துவங்கிய காலத்தில் மொக்கலிபுத்த திஸ்ஸ என்ற துறவியின் தலைமையை கொண்டு ஆயிரம் பிட்சுகள் கூடி அபிதம்ப பிடகம் என்ற அற்புத கருத்து செறிவை தொகுத்து வழங்கினார்கள். 

அன்றுமுதல் இந்த திரிபிடகம் என்பது புத்த மதத்தில் பிட்சுகள் என்ற துறவிகள் வேதங்களை வாயால் சொல்ல காதுகளால் கேட்டு மனதில் பதிய வைப்பது போல பரம்பரை பரம்பரையாக அழியாமல் பாதுகாத்து வந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஸ்ரீலங்காவில் உள்ள ஆலுவேன் என்ற இடத்தில் வட்டகாமினி என்ற அரசன் ஆதரவின் இதுவரை வாய்மொழியாக மட்டுமே இருந்த திரிபீடகங்க்களை எழுத்து வடிவங்களாக ஆக்கினார்கள் இது தான் இன்று கிடைக்கும் திரிபிடகத்தின் மூல நூலாகும். இதன் பிறகு இரண்டாம் நூற்றாண்டில் துவங்கி ஆறாம் நூற்றாண்டு வரை சீன மொழியிலும் மங்கோலிய மொழியிலும் திபத்திய மொழியிலும் திரிபிடங்கள் எழுதப்பட்டன. 

பொதுவாக புத்தமதம் என்றவுடன் அதில் பிரிவுகள் இல்லை உலக முழுவதுமே ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது என்று நம்மில் பலர் நினைத்து வருகிறோம். இந்த எண்ணம் மிகவும் தவறு காரணம் புத்த மதம் எந்த மண்ணில் தோன்றியதோ அதே இந்திய மண்ணில் இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் பெளத்தம் மாகாயானம் என்றும் ஹீனயானம் என்றும் இரண்டாக அதாவது இரண்டு தத்துவ கோட்பாடுகளாக பிரிந்தது. மாகாயானம் என்றால் பெரிய வழி என்று அர்த்தம். ஹீனயானம் என்றால் சிறிய வழி என்பது பொருளாகும் மகாயான மரபு சார்ந்த நூல்கள் அனைத்துமே சம்ஸ்கிருத மொழியில் இருக்கிறது. ஹீனயான நூல்கள் புத்தர் பேசிய பாலி மொழியிலேயே இன்றும் இருக்கிறது. இது தவிர நாகார்ஜுனர் என்ற மாபெரும் தத்துவ ஞானி மாத்யமிக வாதம் என்ற ஒரு பிரிவை தோற்றுவித்தார். நாங்காவது நூற்றாண்டில் வாழ்ந்த அசகர், வசுபந்து ஆகிய சகோதர ஞானிகள் விஞ்ஞான வாதம் என்ற ஒரு புதிய பிரிவை உருவாக்கினார்கள்.

இது தவிர கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த போதி தர்மர் என்ற அரச வம்சத்து துறவி ஒருவர் சீன நாட்டிற்கு சென்று புத்த தத்துவங்களோடு தியான மார்க்கத்தையும் கலந்து மக்களுக்கு உபதேசம் செய்தார். அந்த மதபிரிவே இன்று சீனாவிலும் ஜப்பானிலும் புகழ்பெற்ற ஜென்மார்க்கமாக வளர்ந்து வருகிறது. புத்த தர்மத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு யுவான் சுவாங், நாலந்தா பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற போது அதன் தலைவராக இருந்த தர்மபாலர் என்ற தலைமை பிட்சு காஞ்சி மன்னனின் அமைச்சரின் புதல்வராவார். வஜ்ரபூதி என்ற மிகபெரும் தத்துவ ஞானி பாண்டியநாட்டை சேர்ந்தவராவார் இவரே புத்த மதத்தில் இன்று திபத் லாமாக்கள் வழிவழியாக பின்பற்றி வரும் தாந்திரிக புத்தர் என்ற பிரிவை உருவாக்கியவர். 

நாகார்ஜுனர் எழுதிய மாத்தியமிக சாஸ்திரம் விக்கிரக வியார்தனி என்ற நூல்களும் அசகர் எழுதிய மகாயான சூத்திர அலங்காரம் என்ற நூலும் வசுபந்து எழுதிய அபிதர்ம கோசம். விக்ணய மாத்திரதா சித்தி என்ற நூல்களும் தர்மகீர்த்தி எழுதிய பிரமான வார்தீகள், ரத்தின கீர்த்தி என்ற நூல்களும் சாவகன சித்தி ஈஸ்வர சாதன தூஷணம், ஷனபங்க சித்தி தத்துவ சங்கிரகம் போன்ற நூல்களும் பெளத்த தத்துவத்தை மிக தெளிவாக நமக்கு புரிய வைக்கும் நூல்களாகும். இவைகள் வடமொழியில் உள்ள நூல்கள் இது தவிர பாலி மொழியில் விஷுத்தி மங்கள், மிலிந்த பண்ஹா என்ற நூல்கள் உள்ளன. இவைகளும் வடமொழி நூலுக்கு இணையான பொருள்களை தன்னுள்ளே கொண்டுள்ளன. 


இந்துமத உபநிசதங்களின் கருத்துக்கள் பிற்காலத்தில் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்று மூன்று தத்துவ பிரிவுகளாக ஆனது போலவே புத்தரின் உபதேசங்களும் அவர் காலத்திற்கு பிறகு செளந்திராத்திகம், வைபாஷிகம், மாத்தியமிகம், யோகாசாரம் என்ற நான்கு பிரிவுகளாக உருவானது. பாலி மொழியில் உள்ள திரிபீடகங்களுக்கு முதல் மரியாதை கொடுப்பவர்கள் செளந்திராத்திகர் அபிதர்ம பிடகத்திற்கு மரியாதை கொடுப்பவர்கள் வைபாஷிகர் நாகார்ஜுனரின் தத்துவங்களை ஏற்று மாகாயான பிரிவாக செயல்படுபவர்கள் மாத்யமிகர், அசகர், வசுபந்து போன்றோரின் தத்துவங்களை ஏற்றுகொடவர்கள் யோகசாரர். இவர்களை விஞ்ஞான வாதியர், சூன்ய வாதியர் என்றும் அழைப்பார்கள் இந்த நான்கு பிரிவுகளில் தத்துவங்களை அறிந்து கொள்ள தமிழில் உள்ள சிவஞான சித்தியார் பரபக்கத்தை படித்தால் மிகவும் உதவியாக இருக்கும். 

புத்தமத தத்துவம் என்பது மிகவும் சிக்கலானது புரிந்துகொள்ள கடினமாக இருப்பது எனவே தத்துவத்திற்குள் நேரடியாக செல்வதற்கு முன்னால் இந்த முன்னோட்டத்தை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது காரணம் அப்போது தான் புத்த தத்துவத்தின் கனம் என்னவென்று தெரியும் இனி புத்தர் சொன்ன தத்துவங்களை சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.Contact Form

Name

Email *

Message *