Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆசை என்ற மகா நதி...

இந்து மத வரலாற்று தொடர் 40

    பூமியில் வாழுகின்ற மனிதர்களின் வாழ்க்கையை மிக நுணுக்கமாக ஆராய்ந்தால் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் பெறுகின்ற துக்கங்களை மட்டுமே பெரிய அளவில் காணமுடிகிறது. மனிதர்கள் தங்களது துன்பங்களை துயரங்களை நீக்கி ஆனந்த மயமாக வாழவேண்டும் என்பதே புத்தரின் மிக முக்கிய கோட்பாடுகளாகும். உலகம் துன்பமையமானது என்றால் துக்கம் என்றால் என்ன? அதற்க்கான மூலகாரணம் என்ன? அவைகளை நீக்குவதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை ஆராய்வதே பெளத்த மதத்தில் ஆரிய சக்தியம் அதாவது மேலான உண்மைகள் என்ற பெயரில் அழைக்கபடுகிறது. 

துக்கம் அது உற்பத்தியாகும் நிலை அதை நிவாரணம் செய்தல் நிவாரணத்திற்கான வழிவகைகள் என்பவைகள் புத்த மதத்தில் மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் கூறப்படும் உண்மைகளாகும் இதில் நிவாரணத்திற்கான மார்க்கத்தை கண்டறிந்து நிவாரணம் அடைவதே நிர்வாணம் என்று அழைக்கபடுகிறது. இங்கு நிர்வாணம் என்ற வார்த்தை ஆடைகள் இல்லாத உடம்பை குறிப்பது அல்ல. ஆசைகள் இல்லாத இன்பமையமான ஆத்மாவின் உயர் நிலையை குறிப்பதே ஆகும். 


நிர்வாணம் என்பதை மனிதர்கள் பேசுகின்ற வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. காரணம் நமக்கு தெரிந்த நமக்கு மிகவும் பழக்கப்பட்ட கருத்துக்களையும் பொருள்களையும் குறிக்கும் அடையாளங்களே வார்த்தைகளாகும். வார்த்தைகளுக்கு எல்லாவற்றையும் புரியவைக்கும் ஆற்றல் இருப்பதாக கூறிவிட இயலாது. சத்தியத்தை எந்த மொழியும் இது தான் என்று அறுதியிட்டு கூரிவிடாது. சரியான பொருளுக்கு தவறான விளக்கம் கொடுத்து நம்மை வார்த்தைகள் தடுமாற வைத்து விடும். ஆகையால் வார்த்தைகளால் விவரிக்கப்படும் நிர்வாண அனுபவங்கள் இன்னெதென்று நம்மால் விளங்கி கொள்ள இயலாது என்று வல்பொல ராகுல என்ற சிங்கள புத்த மத அறிஞர் சொல்கிறார். 

ஆனாலும் நிர்வாணத்தை சிவம், ஷேமம் முதலிய சொற்களாலும் சரணம், அக்கறை, சாந்தி முதலிய சொற்களாலும் பெளத்த நூல்கள் அழைக்கின்றன. அவைகள் மனிதன் இறந்த பிறகு அடைவதாக நம்பப்படும் சொர்க்கம் அல்ல நிர்வாணம் அது உயிரோடு மனிதன் இருக்கும் போதே பெறக்கூடிய ஒரு உன்னத அனுபவம் என்று சொல்கின்றன. நான் எனது என்ற அகங்காரத்தை அழித்து ஒழுக்கம் மற்றும் தியானத்தின் மூலம் பெறுகின்ற சமாதி நிலை என்ற சாந்த நிலையே நிர்வாணம் என்று சொல்லலாம் இந்த உயரிய நிர்வாண நிலையை புத்த பெருமான் தமது முப்பத்தி ஐந்தாவது வயதிலையே அடைந்து விட்டார். புத்தரின் முக்தி நிலையை புத்த மதம் பரிநிர்வாணம் என்ற பெயரில் அழைக்கிறது. 


ஆசையினாலும் அறியாமையாலும் பெறுகின்ற துன்பங்களை முற்றிலுமாக நீக்கி பேரின்ப பெருநிலையை வாழும் காலத்திலையே ஒரு மனிதன் பெற்றுவிட வேண்டும். காமம், வெகுளி என்ற கோபம், ஒன்றை மற்றொன்றாக புரிந்து கொள்ளும் அறிவின் மயக்கம் ஆகிய இந்த மூன்றுமே மனித வாழ்வை பீடித்து ஆட்டுவிக்கும் கொடிய நோய்களாகும். அத்தகைய கொடிய நோயான துயரத்திற்கு புத்தமதம் பல விளக்கங்களை தருகிறது. 

பொதுவாக துக்கம், துயரம் என்ற வார்த்தைகள் மனிதன் அனுபவிக்கின்ற கஷ்டங்களை குறிப்பதாக இருக்கிறது. இவைகளுக்கு இது தான் பொருள் என்றாலும் துக்கம் என்பது ஒன்று அல்ல அது பல மனிதனாக பூமியில் பிறப்பெடுத்ததே முதல் துக்கம் அந்த பிறவியில் நமது உடல் அனுபவிக்கும் நோய்நொடிகள் முதுமை என்பது இரண்டாவது வகை துக்கம் இவைகளை எல்லாம் அனுபவித்தாலும் கடேசியில் பாடுபட்டு சேர்த்த பொருள்களையும் அறிவையும் பிறந்த நாள் முதல் கூடவே வருகின்ற உடலையும் விட்டு விட்டு இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத ஒரு மகா சூன்யத்திற்குள் போகின்ற மரணம் என்பது மிகபெரிய துக்கம் அது மூன்றாவது துக்கம்.


இந்த மூன்று துக்கங்களை எந்த மனிதனும் தவிர்த்து விட முடியாது. அனுபவித்தே ஆக வேண்டிய கட்டாய துக்கங்களாகும். இது தவிர தாய், பிள்ளையாய் பிரிவது, கணவன் மனைவியை பிரிவது, நண்பன் நண்பனை பிரிவது என்று எத்தனையோ பிரிவு துயரங்களும் உண்டு இது மட்டும் அல்லாமல் எதிரிகளால் அனுபவிக்கும் பகைமை துயரம் விரும்பியது கிடைக்காத கையறு நிலை துயரம் என்று துயரங்களின் பட்டியல்கள் நீண்டுகொண்டே போகிறது. கண்ணுக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிகின்ற இந்த உலகத்தை சற்று ஆழ்ந்து நோக்குவோம் என்றால் உலகம் முழுவதுமே துன்பமையமாக இருக்கிறது. மரம் படுவது, மலர் வாடுவது, நீர் நிலைகள் காய்வது எல்லாமே துயரங்கள் அல்லாது வேறு என்ன? 

அண்டத்தில் இருந்து நாதம் பிறக்கிறது, விதையிலிருந்து மரம் பிறக்கிறது, கொடியில் இருந்து மலர் பிறக்கிறது கண்ணுக்கே தெரியாமல் கண்களை குருடாக்கும் இந்த துக்கம் என்பது எதிலிருந்து பிறக்கிறது? நாம் சொல்வோம் என் தந்தையார் சொத்து சுகம் சேகரிக்கவில்லை ஆரோக்கியமான உடம்பை என் பெறோர்கள் எனக்கு தரவில்லை நான் பட்டம் பதவிகளை பெற உற்றார் உறவினர் நண்பர்கள் யாருமே உதவ வில்லை எனவே எனது துயரங்களுக்கு காரணம் மற்றவர்களே தவிர நான் அல்ல என்போம். ஆனால் புத்தர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை நமது துயரங்களுக்கு காரணம் நமது ஆசைகளே என்று அடித்து சொல்கிறார். கண்களை மூடி நிதானமாக யோசித்து பாருங்கள் புத்தர் சொல்வதில் உள்ள உண்மை தெரியும். 


கார வகைகள் நன்றாக இருக்கிறது. மாமிச போஜனம் சுவையாக இருக்கிறது. புகையிலை, மது, கஞ்சா முதலிய லாகிரி வஸ்துக்கள் தெகட்டாத சந்தோசத்தை தருகிறது என்று நம் நாக்கு நம்மை அடிமையாக்குகிறது. நாக்கு என்ற சுவை உணர்ச்சிக்கு அடிமையாகும் போது கடேசி முடிவு துயரமாக வருகிறது. நாக்கு சுவைக்கு அடிமையாவது போல அழகான பொருள்களை ரசிக்கவும், அனுபவிக்கவும் துடிக்கிறோம். அவைகள் கிடைக்கும் போது ஆனந்தத்தில் மிதக்கிறோம். கிடைக்கவில்லை என்றால் துயரம் என்ற பெறும் சேற்றில் விழுந்து துடி துடித்து அழுகிறோம் ஆண் பெண்ணை மோகிப்பதும் பெண் ஆணை வசிகரிப்பதும் கடேசியில் இன்பத்தை தருவதில்லை.

ஆக நமது துயரங்கள் அனைத்துமே புலன் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையிலிருந்து உற்பத்தி ஆகிறது. மனித துயரங்களுக்கு ஊற்றுகண்ணாக ஆசைகள் மட்டுமே இருக்கிறது. ஆசை என்ற மோகினி பிசாசுக்கு லட்சியம் நோக்கம் இலக்கு என்ற அழகான பெயர்களை சூட்டி இருக்கிறோம். அந்த பிசாசு நம்மை படுகுழியில் தள்ளபோகிறது என்பதை தெரியாமலையே ஆசை என்ற நதி இழுக்கின்ற இழுப்புக்கெல்லாம் இடம் கொடுத்து வாழ்க்கை பாதையில் ஓடி கொண்டே இருக்கிறோம். 

வெளிச்சம் மிகுந்த பரவெளியில் வாழ வேண்டிய நம்மை இருள் சூழ்ந்த பிரதேசத்தில் குப்புற தள்ளி போட்டு விட்ட ஆசையை ஒழிக்காமல் துயரத்திலிருந்து மீண்டுவர முடியாது. ஆசையை ஒழிக்க வேண்டும் எல்லாவிதமான ஆசையையும் ஒழிக்க வேண்டும் அப்பொழுது தான் பிறப்பிறப்பு என்ற சங்கிலி தளையிலிருந்து விடுபட்டு பிறவாத நிலையாகிய வீடுபேற்றை அடைய முடியும். பற்றுகளை விட்டு விட்டு என்னை மட்டுமே பற்றிகொள் என்று கண்ணபரமாத்மா சொன்னதையே ஆசையை விடு விடுதலை பெரு என்று புத்தர் சொல்கிறார்.


ஆசைப் படபட ஆய்வரும் துன்பம் 

ஆசை விடவிட ஆனந்தமாமே 
                             என்று திருமூலரும் 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் 
                            என்று வள்ளுவரும் சொல்கிறார்கள். 

   இதையே தான் பெளத்தமும் சொல்கிறது விளக்கில் நெய்யை உற்ற உற்ற அது சுடர்விட்டு பிரகாசிக்கும் அடுப்பில் விறகை போட போட அது கொழுந்து விட்டு எரியும் நெய் தீர்ந்தால் விளக்கும் குளிர்ந்து விடும் விறகு இல்லை என்றால் அடுப்பும் அணைந்து விடும். அதை போலவே ஆசைகள் என்பது பெருக பெருக துயரங்கள் என்பது வளர்ந்து கொண்டே போகிறது. ஆசைகள் குறைய வேண்டும் ஆசைகள் ஒழிய வேண்டும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? புத்தர் அதற்கும் வழிகாட்டுகிறார். அதை அடுத்த பதிவில் சிந்திப்போம்.Contact Form

Name

Email *

Message *