Store
  Store
  Store
  Store
  Store
  Store

சீடர்கள் என்ற குருதேவர்கள்

இந்து மத வரலாற்று தொடர் 42

    ந்தியர்களை பொறுத்தவரை தங்களது சொந்த நாட்டை பற்றிய வரலாற்று அறிவும் பண்பாட்டு தெளிவும் முழுமையாக பெற்றிருக்கிறார்கள் என்று சொல்ல இயலாது. பாரத நாட்டின் வரலாற்றை பற்றி விரிவாக பேசும் போது விஷயம் தெரிந்தவர்கள் கூட வேத காலம் பெளத்த ஜைன மதங்களின் காலம் மெளரிய பேரரசு குப்தர் பேரரசு என்று பேசுவார்கள் சற்று ஆழமாக விஷயம் தெரிந்தவர்கள் ராஷ்டிர கூடர்கள் சாளுக்கியர்கள் சேர, சோழ, பாண்டிய விஜயநகர அரசுகளை பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மொகலாய சாம்ராஜ்யம் அதன் அரசர்கள் ஆங்கில கவர்னர் ஜெனரல்கள் போன்றர்களை பற்றி மிக அதிகமாகவே அறிந்திருப்பார்கள். காரணம் நம் நாட்டு மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இருநூறு வருஷகாலமாக அந்நியர்களை பற்றி அவர்களின் மாட்சிமைகளை பற்றி போதனை நடத்த படுகிறதே தவிர சொந்த மண்ணை பற்றிய விவரங்கள் தெரிவிக்க படுவது கிடையாது. 

இன்னும் சொல்ல போனால் இந்தியாவின் சிறப்புகளை யாரவது தெளிவாக எடுத்து சொன்னால் அவர்களுக்கு பழமைவாதிகள் பிற்போக்கு வாதிகள் என்ற பட்டங்களை கொடுத்து வாய்மூட செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடக்குமே தவிர நமது சுய பெருமையை காதுகொடுத்து கேட்க கூட அதிகம் பேருக்கு ஆர்வம் கிடையாது. வரலாறு பற்றிய அறிவிலேயே இத்தகைய குறைபாடுகள் என்றால் இந்திய சமயங்களை பற்றிய அறிவில் பலபேருக்கு அக்கறையே இல்லை என்று தெளிவாக சொல்லலாம். ஒரு சமயம் தமிழகத்தில் புகழ் பெற்ற அரசியல் வாதி ஒருவரின் மேடை பேச்சை கேட்க நேரிட்டது. அவர் தமது உரையில் இந்தியாவில் ஹிந்து, முஸ்லிம், கிருஸ்தவம் ஆகிய மூன்று மதங்கள் மட்டுமே இருக்கிறது அந்த மதங்களை பின்பற்றுவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள் என்று சொன்னார். நாட்டை ஆளுகின்ற வாய்ப்பு கிடைத்த ஒரு மனிதர்க்கே இத்தகைய குறைவான விஷய ஞானம் இருக்கும் போது சாதாரண மக்களை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 


பேராசிரியர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் போன்றோரை அணுகி இந்திய மதங்களை பற்றிய விவரங்களை தாருங்கள் என்றால் அவர்களும் கூட மேற்குறிப்பிட்ட மூன்று மதங்களை பற்றிய தகவல்களை மட்டுமே தருவார்கள். இஸ்லாம் மதமும் கிருஸ்தவ மதமும் இந்தியாவில் தோன்ற வில்லையே அவைகள் எப்படி இந்திய மதங்களாகும். என்று சற்று அறிவு பூர்வமாக கேள்விகள் எழுப்பினால் அவைகள் அந்நிய நாட்டில் தோன்றிய மதங்களாக இருந்தாலும் கூட ஆயிரம் வருடத்திற்கு மேல் அம்மத மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் எனவே அவைகளும் இந்திய சார்புடையவைகளே என்று சொல்வார்கள். ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும், ஆஸ்ரேலியாவிலும் கூட ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களே அதற்காக இந்து மதம் அந்நாடுகளை சேர்ந்த மதமென்று சொல்லிவிட முடியுமா? என்று திருப்பி கேட்டால் நீ என்ன தீவிரவாதியா? என்று நமக்கு முத்திர குத்த பார்ப்பார்கள்.

ஒரு மதத்தை பின்பற்றும் மனிதர்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழலாம் அப்படி வாழ்கிறார்கள் என்பதற்காக அந்த மதங்கள் தான் தோன்றிய இடத்து பூர்வ கோத்திரங்களை எந்த சமயத்திலும் விட்டு விடாது. கிருஸ்தவ மதம் என்பது சில நூறு ஆண்டுகளாக இந்திய மக்களால் பின்பற்ற பட்டாலும் அதில் இந்திய தன்மை என்பது ஓரளவு கலந்து விட்டாலும் அதன் அஸ்திவாரத்தில் உள்ள ஐரோப்பிய வாசத்தை யாரும் மாற்றி விட முடியாது. அது அதற்கென்று தனித்தனியான முகங்கள் உண்டு எனவே இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் இந்தியாவில் இந்தியர்களாக வாழ்ந்தாலும் கூட அவர்கள் மதம் வெளியில் இருந்து வந்தது தான். இந்திய பண்பாட்டிற்கும் அவைகளுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது தான். இது மறுக்க முடியாத மறைக்க வேண்டாத உண்மையாகும். ஆனாலும் இதை சிலபேர் ஏனோ ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள். 


இதை விடுத்து இந்திய மதங்களை பற்றிய தகவல்களை மீண்டும் வலிந்து நாம் பெற முயற்சி செய்தோம் என்றால் அறிவில் சிறந்த சான்றோர்கள் பெளத்தமும், ஜைனமும் இந்தியாவில் தோன்றிய சிறப்பான மதங்கள் என்று தகவல்களை தருவார்கள் ஆனால் இவர்களில் யாரும் நாமும் கூட ஹிந்து, பெளத்தம், ஜைனம் தவிர வேற மதங்கள் எதுவும் இந்தியாவில் இல்லையா? என்று கேட்கவும் மாட்டோம் கேட்டாலும் பதிலை தேடி சொல்லவும் மாட்டோம். காரணம் நமது கவன குறைவு மட்டுமல்ல விஷயங்களை பற்றிய அறியாமையும் கூட அப்படி உள்ளது. இந்தியாவில் பஞ்சாப் என்ற ஒரு பகுதி இருக்கிறது. அங்கே வாழுகின்ற மக்கள் இந்து மதத்தில் இருந்து மாறுபட்ட மத பிரிவை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள் அவர்களை சீக்கியர் என்று அழைப்போம் அவர்கள் மதத்திற்கு சீக்கிய மதம் என்று பெயர் அந்த மதமும் இந்தியாவில் தோன்றிய மிக முக்கியமான மதம் என்று நம்மில் பலருக்கும் தெரியும். ஆனாலும் அது பலருடைய கவனத்திற்கு வராது காரணம் நம்மை சூழ்ந்துள்ள நமக்கு அருகாமையில் உள்ள விஷயங்களில் அக்கறை கொள்ளாத வண்ணம் பல காலமாக பயிற்றுவிக்க பட்டு விட்டோம். 

சீக்கியர் என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பஞ்சாப் தீவிரவாதிகள் தான் பிந்திரன் வாலே என்ற தீவிர வாத தலைவனின் வழிகாட்டுதலில் இயங்கிய காலிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கை நமக்கு நினைவிற்கு வரும். அப்படி நமது நினைவில் வருவதற்கு கூட முக்கிய காரணம் அம்மக்களை பற்றிய அறிவால் அல்ல சீக்கிய சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களால் நமது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதே காரணமாகும். இதை விடுத்து சீக்கியர்களை பற்றி நாம் நினைக்கும் போது நமது நினைவில் முன்னால் வந்து நிற்பவர்கள் முன்னாள் குடியரசு தலைவர் கியானி ஜையில்சிங் அவர்களும் இப்போதைய பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுமே ஆகும். இவர்கள் இரண்டு பேர் மட்டும் நமது கவனத்தை கவர்வதற்கு முக்கியமான காரணம் இரண்டு பேருமே நேரு குடும்பத்து விசுவாசிகள் அந்த குடும்பத்தின் அடிமைகள் போல் இருப்பவர்கள் என்பதனால் தான். 


முரட்டு தனமான நெடிய உருவம் சவரம் செய்யபடாத நீண்ட தாடி தலையில் அழகான தலப்பாகை இடுப்பில் சிறிய கத்தி இந்த தோற்றத்தோடு யாரை பார்த்தாலும் சீக்கியர்கள் என்று சொல்லிவிடுவோம். திரைபடங்களில் இவர்களை காட்டியவுடன் பல்லே பல்லே என்ற சந்தத்தில் வருகின்ற இசையை கேட்டவுடன் உருவங்களை பார்க்கவில்லை என்றாலும் இன்னாரை தான் குறிப்பிடுகிறார்கள் என்று நமக்கு தெரிந்து விடும். இந்தியாவின் தெற்கு பகுதியில் வாழுகின்ற நமக்கு சீக்கியர்களை பற்றிய இவ்வளவு விஷயங்கள் தான் தெரியுமே தவிர அவர்களை பற்றி மேலதிக விபரங்கள் எதுவும் நமக்கு தெரியாது. நம்மை பற்றியே நாம் முழுமையாக அறிந்து வைத்திராத போது அண்டைய வீட்டுக்காரனை பற்றி இதற்கு மேல் தெரிவதற்கு ஒன்றும் இல்லை என்று நீங்கள் சொன்னாலும் அதை ஒத்து கொள்வது தவிர வேறு வழியில்லை.

சீக்கியர்களும் சீக்கிய மதமும் இந்து மதத்தோடு மிக நெருக்கமான உறவு கொண்டவர்கள் இந்து மதத்தின் அற்புதமான பரிணாம வளர்ச்சி சீக்கிய மதமென்று துணிந்து சொல்லலாம். குருநானக் என்ற மகான் பஞ்சாப் பகுதியில் பிறக்கவில்லை என்றால் இந்தியாவின் வடக்கு பகுதி முழுவதுமே இஸ்லாமிய மயமாக மாறி இருக்கும் என்பதை யாரும் மறுக்க இயலாது. சீக்கிய மதம் போதனைகளால் உருவானது அல்ல போராட்டங்களால் உருவானதாகும். அம்மதத்தை சார்ந்த மாபெரும் குருமார்களில் பலர் ஒளரங்கசீப் மற்றும் முகலாய அரசர்களால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்பதை அறியும் போது சீக்கிய மதம் எவ்வளவு ரத்தத்தில் வளர்ந்தது என்பது நன்றாக தெரியவரும். சீக்கிய மதத்தில் இந்து மதத்தினுடைய தாக்கம் அதிகம் என்றாலும் சீக்கியர்கள் எவரும் ஹிந்து மதத்தை மாற்று மதமாக கருதுவது இல்லை என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.


சீக்கிய மதத்தின் முதல்வர் அல்லது அம்மதத்தை உருவாக்கியவர் குருநானக் என்ற மாபெரும் யோகி ஆவார். குருநானக் முதல் குரு கோவிந்தர் வரையில் பத்து குருமார்கள் சீக்கிய மதத்தினுடைய முக்கிய தலைவர்கள் என்று துணிந்து சொல்லலாம். இந்தியாவில் தோன்றிய அற்புதமான தலைசிறந்த இரண்டு ஞானிகள் உண்டு அவர்களில் ஒருவர் கெளதமபுத்தர் மற்றொருவர் குருநானக் என்று புகழ்பெற்ற உருதுகவிஞனர் இக்பால் தெரிவிப்பது வெறும் புகழ்ச்சி அல்ல சத்தியமான உண்மையாகும். குருநானக்கின் சரித்திரத்தை படிக்கும் எவரும் அவரின் தியாகத்தையும் அர்பணிப்பையும் விசாலமான அறிவையும் ஞானத்தையும் உணர்ந்து கொண்டு இக்பால் அவர்களின் கருத்துக்கள் சத்தியமானது என்று ஒத்து கொள்வார்கள். 

சீக்கியர் என்ற சொல்லுக்கு சீடர்கள் என்பது பொருளாகும். நமது மகாகவி பாரதி கூட சீக்கியர்களை பற்றி குறிப்பிடும் போது சீடர்தம் மார்க்கம் என்று அழகான வார்த்தையால் கூறுகிறார். பெளத்தம், ஜைனம், சீக்கியம் இவைகளை தனிமனிதர்களால் உருவான மதமென்று சிலர் கருதுவார்கள். அதாவது சனாதன தர்மமான ஹிந்து மதம் தனி ஒரு மனிதனால் உருவாக்க பட்டது அல்ல பல குருமார்களின் அனுபவ ஆன்மீக தேடலே ஆகும் என்று சொல்பவர்கள் உண்டு இந்து மதத்தை போலவே அதிலிருந்து தோன்றிய சீக்கிய மதமும் பல குருமார்களால் உருவானது என்றால் அது மிகை இல்லை சீக்கியர்களின் புனித நூல் குரு கிரந்தம் ஆகும். சீக்கிய வழிபாட்டு கூடங்களை குருத்துவாரா என்று அழைப்பார்கள் குருத்துவாரா என்றால் குரு வாழும் இடம் என்பது பொருளாகும். சீக்கியர்கள் தங்களது புனித நூலை குருவாகவும் இறைவனாகவும் கருதி தங்களது குருத்துவாராக்களில் வைத்து வழிபடுகிறார்கள். இவர்களை பற்றிய இவர்களின் ஆன்மிக தத்துவங்களை பற்றிய அறிவை ஓரளவாவது பெற்றால் தான் இந்து மதத்தின் ஆழம் இன்னெதென்று நமக்கு சிறிது தெரியும் எனவே சீக்கியத்தை பற்றிய சிந்தனையை சிறிது பெறுவோம்.



Contact Form

Name

Email *

Message *