Store
  Store
  Store
  Store
  Store
  Store

தெய்வ மாதத்தில் தெய்வ மாது!


     ரு மார்கழி மாதத்தின் மதிய பொழுது சித்திரை வைகாசியில் சீறி கிளம்பும் கதிரவன் வெப்பம் கதகதப்பாக இன்ப லகரியை உள்ளத்திலும் உடம்பிலும் ஒன்றாக கொடுக்கும் அற்புத வேளை அந்த நேரத்தில் மயில் தோகை போர்த்திய மானிட பெண்ணாக எனது அருகில் நீ வந்தாய் உன் கண்களில் இருந்த சோகமும் நெஞ்சில் எழும்பிய வேகமும் ரசிக்கப்பட வேண்டிய உன்னை யோசிக்கப்பட செய்தது. பெண் என்றால் உடம்பு அழகின் பொக்கிஷம் தன்னை மறந்து வாழ இறைவன் கொடுத்த பிரசாதம் என்று மட்டுமே இதுவரை நினைத்திருந்தேன். 

உன்னை கண்ட அந்த நேரமுதல் அழகு என்ற பதுமைக்குள்ளும் ஆழமான சுழற்சிகளும் சூறாவளிகளும் உணர்சிகளின் புயல்காற்றும் இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். சிவந்த உன் உதடுகள் வழியாக சிதறி விழுந்த வார்த்தைகள் பெண்மை என்ற பேரேழிலுக்குள் புகைந்து கொண்டிருந்த எரிமலையை எனக்கு அடையாளபடுத்தியது. பெண்கள் போகத்தை தேடும் போகியர்களுக்கு போதை மருந்து ஞானத்தை தேடும் யோகியர்களுக்கு பாதையை அடைக்கும் பாறாங்கல் நீ என் பயணத்தை தடுக்கும் பாரசுமை என்று தான் முதலில் நினைத்தேன் நான் தடுப்பு சுவரல்ல அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் படகின் துடுப்பு என்று சொல்லாமல் சொன்னாய்.

பத்து மாதம் என்னை சுமக்காத அன்னை நீ! நான் தளிர் நடை போடும்போது தாங்கி பிடித்த சோதரி நீ!. மாங்காய் திருடி புளியங்காய் தின்னும் போது பக்கத்தில் வந்து பாதி கேட்ட வகுப்பு நட்பு நீ!. கடன்காரன் வந்து கதவை தட்டும் போது உடனிருந்து என் மானம் காத்த சோதரன் நீ!. மது என்ற மாய அரக்கனும் சூது என்ற அழகு மோகினியும் மாது என்ற பைசாசமும் எனை தேடி வந்து அடைக்கலம் கேட்ட போது அடித்து உதைத்து என்னை காத்த ஆசிரியன் நீ!. நோய்ப்பட்டு நான் வீழ்ந்த போது மருந்து தடயவிய மருத்துவன் நீ!. காதல் பற்றி பேசும் காதலிக்காத காதலி நீ!. சரீர தீண்டலுக்கு அப்பாலும் உறவு உள்ளது என்று மெஞ்ஞானம் காட்டிய ஞானி நீ!. நான் தவறு செய்யும் நினைக்கும் நேரமெல்லாம் என்னை தடுத்தாட்கொண்ட தன்னிகரில்லா தலைவி நீ!.

ஆமாம் தோழியே உன்னை இப்படி மட்டுமே என்னால் நினைக்க முடிகிறது. ஆண் பெண் உறவு என்றால் அதுமட்டுமே என்று கருதுகின்ற உலகில் அதையும் தாண்டி உறவு உண்டு என்று உண்மை வெளிச்சத்தை உலகுக்கு காட்டும் உன்னை இப்படி அழைக்காமல் எப்படி அழைப்பது? எனக்கொரு துயரமென்றால் அன்னை அழுவது இயற்கை கட்டிய மனைவி அழுவது தாலி என்ற பந்தம் உடன்பிறந்த சொந்தம் அழுவது ரத்த பாசம் இவைகளில் எவைகளும் இல்லாமல் நீ அழுவது எந்த வார்த்தையில் செதுக்கி காட்டுவது?

திறமைகளை பயன்படுத்தி உணர்வுகளை புரியாமல் உரிமைகளை கூட தரமுடியாத உறவுகள் உண்டு என்பதை உனைகண்ட பிறகுதான் அறிந்துகொண்டேன். தன்நலன் என்று வரும்போது தாய்மை பாசத்தில் கூட கலப்படம் சேரும் என்பதை உன் வாழ்வை பார்த்த பிறகு தான் புரிந்து கொண்டேன். சுற்றிலும் கழுகுகள் ஆலவட்டம் போடும் போது மான்குட்டி ஒன்று தப்பி பிழைக்க எப்படி ஓடுமென்று உன்னிடமிருந்து தான் தெரிந்து கொண்டேன். கதறி அழும் போது பாசத்தோடு தட்டி கொடுக்கும் கரம் ஒன்று இல்லையே என்று ஏங்கும் போது உனக்கு நிழல் தரும் மரமாக நானிருப்பேன் என்பதை மறந்து விடாதே 

நீருக்குள் விழுந்து விட்ட ஆட்டுக்குட்டியை கரையேற்ற யாரும் இல்லாமல் கதறி கதறி ஓலமிட்டு மாய்ந்து போகுமாம். ஆட்டுக்குட்டியின் ஓலம் கேட்டு பசியெடுத்த ஓநாய்கள் சுற்றிவந்து கும்மி கொட்டுமாம். பள்ளத்தில் விழுந்து கிடந்தால் தண்ணீர் அதை மூழ்க வைத்து சாகடிக்கும். தப்பி பிழைத்து கரையில் வந்தால் நரிக்கூட்டம் அதை விருந்து வைக்கும் மரணம் மட்டுமே கண்முன்னால் தெரியும் அரக்கனை போல் எழுந்து நிற்கையில் தும்பிக்கை நீண்ட யானை ஒன்று ஆட்டுக்குட்டியை கரை சேர்க்குமாம். நம்பிக்கை உனக்கு கொடுத்து தூக்க நானிருக்கிறேன். நீ காற்றில் அணைந்து போகும் அகல்விளக்கு அல்ல மலையில் சுடர்விடும் ஒளிவிளக்கு நீ! இருட்டு என்பதே உனக்கில்லை நீ கொடுக்கும் வெளிச்சம் பலருக்கும் பாதை காட்டும். 

நட்பு என்பது கொடுத்து வாங்கும் வியாபாரம் அல்ல கொடுக்கவே நினைக்காத கருமி தனமும் அல்ல கேட்காமல் பெற்றுக்கொள்ளும் செல்வம் கொடுக்காமல் எடுத்துகொள்ளும் உரிமை தாகத்தால் தவித்து நீ தள்ளாடி விழும் போது தாங்கி பிடித்து கொள்ள நான் வருவேன். தோல்வியால் துவண்டு நான் விழும் போது கரம் கொடுத்து கரையேற்ற நீ வருவாய் உனக்கொரு இன்பமென்றால் எனக்கது திருவிழா வெற்றிவாகை சூடி நான் நின்றால் உனக்கது கோலாகலம்.

கையில் பணமிருந்தால் கை நனைக்க சொந்தங்கள் ஆயிரம் வீடு முழுவதும் கூடுவார்கள். உடலை விட்டு உயிர் பிரிந்தால் கட்டிய மனையாள் கூட பிள்ளையை நினைத்து கணவனை மறப்பாள். சொத்து சுகம் சேர்த்து வைத்து பாதுகாக்கும் பிள்ளை கூட கொள்ளி போட்ட பிறகு மறந்து போவான். பெற்ற அன்னை மட்டுமே பிறந்த அன்றே நான் செத்து போனாலும் அவள் உயிர் பிரியும் வரை எனை நினைப்பாள். அன்னையை போன்ற பாசம் உன் பாசம் என்னை எனக்காகவே நேசிப்பவள் நீ. அதனால் எப்போதும் உன் நினைவில் நான் இருப்பேன்.

உன் நினைவில் எப்படி கல்சிலை போல நான் நிலைத்து நிற்பேனோ அப்படியே என் நினைவெல்லாம் உதிரம் உதிர்ந்து போனாலும் நீ நிற்பாய். கம்பனும் சடையப்ப வள்ளலும் கர்ணனும் துரியோதனனும் நட்பு என்ற மந்திரத்தால் காலங்கள் கடந்தாலும் அழியாமல் வாழ்வது போல் நீயும் நானும் அழியாமல் வாழ்வோம்.

காரணம் அன்பு என்ற பழம் பறித்து பாசம் என்ற பால் ஊற்றி நேசம் என்ற கற்கண்டால் இனிப்பாகி திகட்டாமல் தித்திக்கும் அமிர்தம் நமது நட்பு இதில் ஆண் என்றும் பெண் என்றும் பேதமில்லை உயர்வு தாழ்வு என்ற நிலையில்லை இமய சிகரத்தில் நீ இருந்தாலும் வானத்தின் மீது ஜொலிக்கும் சூரிய சிம்மாசனத்தில் நானிருந்தாலும் நீயும் நானும் சமமாகவே எப்போதும் இருப்போம். 

அதனால் தான் மார்கழி மாத உச்சி பொழுதில் கதகதப்பான சீதோஷ்ண நிலையில் குளிரும் வெம்மையும் சமமாக இருக்கும் நேரத்தில் சந்தித்தோம். மார்கழி தெய்வங்களின் மாதம் நட்பும் தெய்வங்களின் சன்னதி.



Contact Form

Name

Email *

Message *