Store
  Store
  Store
  Store
  Store
  Store

கைகளை மடக்கி கடவுளை பார் !


    வதாரங்கள் என்று வந்துவிட்டாலே மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களை பற்றி மட்டுமே பலருக்கு தெரியும் சிவபெருமான் அவதாரங்கள் எடுத்திருக்கிறாரா? இல்லையா? என்று ஒருவர் கூட யோசித்து பார்த்து கேள்விகள் கேட்டிருக்க மாட்டோம். போக சுகத்தை அள்ளித்தந்து முக்தி தருகின்ற பெருமாள் மட்டுமல்ல யோக மார்க்கத்தை மனிதகுலத்திற்கு தந்த சிவபெருமான் கூட சில அவதாரங்களை எடுத்திர்க்கிறார். சிவபெருமானின் அவதாரங்கள் பக்தர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அவ்வளவாக பேசபடாததற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். ஒன்று பெருமாளின் அவதாரம் போல் சிவனின் அவதாரம் மனதை சுலபமாக கவரக்கூடியதாக இல்லை இரண்டாவது சிவன் எடுத்த அவதாரங்கள் மிக கடினமான முக்தி வழியை காட்டுவதாக இருப்பது. 

சிவபெருமான் விறகு வெட்டியாக பிட்டுக்கு மண் சுமப்பவராக சுந்தரரை தடுத்தாட்கொள்ள பித்தனாக பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது தஷ்ணாமூர்த்தி அவதாரமாகும். இந்த அவதாரத்தின் மூலம் சாதாரண மனிதன் தனது மனித நிலையிலிருந்து படிப்படியாக மாறி கடவுள் நிலையை அடைவதற்கான பல வழிவகைகளை அவர் சொல்லியிருக்கிறார். அதனால் தான் தஷ்ணாமூர்த்தி அவதாரத்தை யோக தஷ்ணாமூர்த்தி என்றும் ஜெகத்குரு என்றும் ஞானிகள் போற்றி வணங்குகிறார்கள். 


பகவான் தஷ்ணாமூர்த்தியாக வந்தபோது சனகாதி முனிவர்களுக்கு நான்மறையை உபதேசித்து உலக வாழ்வுக்கான சரியான இலக்கணம் என்று கருதபடுகிற அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு தத்துவங்களையும் வரிசை படுத்தி சொல்லி முடித்து உலக வாழ்வில் பரிபூரண நிலையை அடைந்தவர்கள் இறைவனோடு நேரடியாக தொடர்பு கொள்ள விரும்பினால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன வழிமுறையை பின்பபற்ற வேண்டும்? என்பதை நாளை சொல்கிறேன் நீங்கள் இன்று போய் நாளை வாருங்கள் அப்படி நீங்கள் வரும் போது எனது உபதேசம் வார்த்தைகளாக இருக்காது நீங்கள் அனுமானித்து புரிந்துகொள்ளும் வண்ணம் குறியீடாக இருக்கும் என்று கூறி அனுப்பி வைத்தார். 

மகாகுருவான ஸ்ரீ தஷ்ணாமூர்த்தி பகவானின் கட்டளையை ஏற்ற சனகாதி முனிவர்கள் அடுத்த நாள் சூரிய உதையத்திற்கு முன்பே குளித்து முடித்து சிவ சின்னங்களை அணிந்து குருநாதரை தரிசனம் செய்ய சென்றார்கள். அபோது அவர்கள் அங்கே கண்ட காட்சி மிகவும் வியப்பாகவும் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வண்ணமும் இருந்தது. தென்முக கடவுள் யோக சமாதி நிலையில் அமர்ந்திருந்தார். அவரின் இரண்டு கரமும் தொடைகளின் மீது மேல் நோக்கிய வாறு இருந்தது. கைவிரல்களில் ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் இணைந்திருக்க மற்ற மூன்று விரல்களும் தனித்தனியாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உரசாமல் பிரிந்து இருப்பதை கண்டார்கள். 


பிரிந்து நிற்கும் நடுவிரல் மோதிரவிரல் சுண்டுவிரல் ஆகிய மூன்று விரல்களும் ஆணவம், கர்மா, மாயை ஆகிய தத்துவங்களை குறிப்பதாகவும் அந்த மும்மலங்கள் விலகிய ஜீவாத்மாவாகிய ஆள்காட்டி விரல் பரமாத்மா என்ற கட்டை விரலோடு இணைந்திருக்கும் தத்துவத்தை புரிந்து கொண்டார்கள். அதாவது ஒரு மனிதன் கடவுள் நிலையை அடைய வேண்டுமானால் அவனுக்கு தவம் என்பது முக்கியம் அந்த தவத்திற்கு ஆசனமும் முத்திரையும் மிக தேவையானது என்பதை தஷ்ணாமூர்த்தி பகவான் சொல்லாமல் சொன்னார். ஆசனம் என்றால் என்னவென்று பலருக்கு புரியும் முத்திரை என்பதை பற்றி ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள். அதிலும் குறிப்பாக தஷ்ணாமூர்த்தி காட்டிய முத்திரையின் அடையாளம் சின்முத்திரை என்பது வெகு சிலருக்கே தெரியும்.

முத்திரைகள் பல உண்டு அவற்றில் சின் முத்திரை என்பதை முத்திரைகளின் தலை ராஜ முத்திரை என்றே சொல்லலாம். கோவில்களில் உள்ள தெய்வங்களின் திருவுருவ சிலைகள் எதாவது ஒரு முத்திரையை காட்டியவண்ணம் இருப்பதை நாமறிவோம். இந்த முத்திரைகள் அழகுக்காக சிற்பங்களின் கலைத்தன்மையை எடுத்து காட்டுவதற்காக அமைக்கப்பட்டது அல்ல அதில் பல அற்புதமான சங்கதிகள் அடங்கி உள்ளன. நமது முன்னோர்கள் கடுகை தரித்து கடலை புகுத்துவதில் வல்லவர்கள் மிக சிறிய காரியத்திற்குள்ளேயே மிகபெரிய விஷயங்களை அடக்கி விடுவார்கள். அதே நேரம் அறிவை உழைத்து பெற எவன் தகுதி வாய்ந்தவனாக இருக்கிறானோ அவனுக்கு மட்டுமே உண்மைகள் விளங்க வேண்டும் என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து பல விஷயங்களை சூசகமாகவே தெரிவிப்பார்கள். அவற்றில் ஒன்று இந்த சின்முத்திரை. 


முத்திரைகள் ஒவ்வொன்றும் உலகத்தில் உள்ள ஜீவராசிகளை இயக்குகின்ற தேவதைகளை அல்லது தெய்விக சக்திகளை குறிப்பதாகும். தெய்வ உலகத்தோடு மனித ஜென்மங்கள் தொடர்பு வைத்து கொள்ள முத்திரைகள் காரணமாக இருக்கிறது அதாவது கண்ணுக்கு தெரியாத தெய்வீக சக்திகளுக்கும் நமக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்துவது முத்திரைகளே இந்த முத்திரைகளின் பயனாகவே மனிதனின் பிராத்தனைகள் தெய்வ சக்திகளிடம் சென்றடைந்து அவர்கள் தருகின்ற அருள்சக்தி நம்மிடம் வந்து சேருகிறது. இறைசக்திகள் நமக்கு தருகின்ற இத்தகைய ஆற்றலால் நாம் பெறுகின்ற பயன்கள் ஒன்றிரண்டு அல்ல ஏராளம் மிக குறிப்பாக சொல்வது என்றால் சின்முத்திரையின் மூலம் நாம் அடைகின்ற உடல் மற்றும் உளவியல் ரீதியிலான பயன்கள் நிறையவே உண்டு என்று சொல்ல்லலாம். 

ஒரு விரலை இன்னொரு விரலோடு சேர்த்து வைப்பதில் என்ன பெரிய பயன் கிடைத்துவிட போகிறது. என்று சிலர் நினைக்க கூடும். நானும் அப்படி தான் ஆரம்பகாலத்தில் நினைத்திருந்தேன். ஆனால் காலம் செல்ல செல்ல மனிதர்களை பற்றிய அனுபவ அறிவு முதிர்ச்சி அடையும் போது நமது முன்னோர்கள் சொல்லி சென்ற எந்த விஷயமும் தவறானது அல்ல மிகவும் பயனுடையது என்பதை புரிந்துகொண்டேன். ஹஸ்த ரேகை சாஸ்திரம் என்ற கைரேகை சாஸ்திரத்தை நான் படிக்கும் ஆரம்ப கட்டத்தில் அதில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் எனக்கு வியப்பை தந்தன. ஆனால் அவைகளை அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது பெரிய உண்மைகள் பல எனக்கு தெரிந்தன.


உதாரணமாக இரண்டு கைகளையும் எப்போதும் ஆடைகளுக்குள் மறைத்து வைத்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை பழிவாங்குவதில் கொக்கை போல காத்திருப்பார்கள் என்றும் கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு நடப்பவர்கள் ஆளுமை தன்மை அதிகமாக உடையவர்கள் என்றும் படித்திருக்கிறேன். அதை பரிசோதனை செய்து பார்த்த போது அது வெறும் படிப்பல்ல அனுபவ சத்திய வார்த்தை என்பதை தெரிந்து கொண்டேன். அதே போலவே சாதாரணமாக விரல்களை மடக்காமல் கைகளை துவைய வைத்து கொண்டிருந்தால் மனதில் குழப்பங்களும் சஞ்சலங்களும் மட்டுமே வரும் உறுதி இருக்காது மன உறுதி அடைய வேண்டுமானால் வேலை நேரத்தில் தவிர மற்ற நேரங்களில் கைகளை இறுக மூடிக்கொள்ள வேண்டும் அதுவே பழக்கமாகி விட்டால் நாளடைவில் அசாத்தியமான மன துணிச்சல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளதை என் சொந்த வாழ்விலும் கடைப்பிடித்து அதனால் நல்ல பலனை இதுவரை பெற்றும் வருகிறேன். 

அதன் அடிப்படையில் முத்திரையை பற்றி நமது முன்னோர்கள் சொல்லியிருக்கும் சங்கதிகளை நாம் புறக்கணித்து விட கூடாது. அவைகளை பயன்படுத்தி பல நல்ல பலன்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் மேற்குலக விஞ்ஞான ஆய்வு படி சின்முத்திரையை நாம் முறைப்படி செய்தால் உடம்பில் இரத்த ஓட்டம் சுறுசுறுப்பாக இருக்கும் கோபம் குறைந்து மன இறுக்கம் மறையும் நல்ல நினைவாற்றல் ஏற்படும் தூக்கமின்மையும் அதீத தூக்கமும் பக்கத்திலயே வராது. மனநோய் கூட குணமாகிவிடும் என்று சொல்லபட்டிருக்கிறது. 


நமது நாட்டு ஞானிகள் சின்முத்திரையை அன்றாட வாழ்வில் சிறந்த பழக்கமாக கொண்டால் மனம் எப்போதுமே மகிழ்வாக இருக்கும் துக்கம் என்பதே நம்மை தீண்டாது மன ஒருநிலைப்பாடு ஏற்படுவதனால் பிரபஞ்ச ரகசியத்தையும் இறைவனோடு ஐக்கியமாகும் நிலையையும் மனிதன் பெறலாம் என்று சொல்கிறார்கள். இது நம்மை திருப்தி படுத்துவதற்காக சொல்லப்பட்டவைகள் அல்ல நம் வாழ்வை சீரமைப்பதற்காக கூரியவைகளே ஆகும். இது உண்மையா? பொய்யா? என்பதை அறிந்துகொள்ள நடைமுறைபடுத்தி பார்க்கலாம். 

நீங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது பேருந்து பயணத்திலோ இருக்கும்போது கூட ஆள்காட்டி விரலையும் கட்டைவிரல் நுனியையும் இணைத்து வைத்து பாருங்கள் இந்த பழக்கம் தொடர தொடர உங்கள் மனவளம் வளருவதை கண்கூடாக காண்பீர்கள். சாதாரண பலன்கள் வேண்டாம் இறை அனுபவம் வேண்டும் என்பவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரையை பழகி பாருங்கள் இறைவன் என்ற மகர ஜோதி உங்கள் புருவ மத்தியில் சுடர்விடுவதை காண்பீர்கள்.


Contact Form

Name

Email *

Message *