Store
  Store
  Store
  Store
  Store
  Store

அட ச்சீ! என்ன ஜென்மங்கள்...!


   டிகார அலாரமும் தொலைபேசி மணியோசையும் ஒரே நேரத்தில் அடித்தது கண்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்த தூக்கத்தை அரைமனதோடு இறைக்கி வைத்து அலாரமணியை நிறுத்தி தொலைபேசியை எடுத்தேன் ஏன்டா ஈஸ்வரா காலம்காத்தால ஒரு கெட்ட செய்தி என்று எதிர்முனையில் ராஜேஸ்வரன் படபடத்தான் எனக்கு எரிச்சாக வந்தது எதுவாக இருந்தாலும் நேரடியாக விஷயத்திற்கு வராமல் சுற்றி வளைத்து பேசுவதே இவன் பிழைப்பு அதனால் சரி நீயும் அறுத்து சோதனை பண்ணாத சங்கதியை சொல்லு என்றேன். உங்க சித்தப்பா செத்து போய்ட்டார் உடனே புறப்பட்டு வா நீ வந்து தான் எல்லா காரியமும் நடக்கணும் என்று போனை வைத்து விட்டான். இருதயத்தில் சம்மட்டி கொண்டு அடித்தது போல் இருந்தது. கட்டுபடுத்த முடியாத கண்ணீர் துளி கண்களின் ஓரத்தில் முட்டி கொண்டு வந்தது. 

காப்பி டம்ளரை ஆற்றிய படி வந்த மைதிலி என்னங்க காலகாத்தால போன் என்ன செய்தி என்று கேட்டாள் அவளுக்கு பதில் சொல்ல மனமில்லாமல் தலையை கவிழ்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் அவள் பதறி போனாள். என்ன என்னாச்சி யாருக்காவது உடம்பு முடியலையா? என்றாள் அதெல்லாம் ஒன்றும் இல்லை சித்தப்பா போய்ட்டாராம் என் பதிலை கேட்ட அவள் எதுவும் பேச வில்லை எங்கள் இருவருக்கும் மத்தியில் கனமான மெளனம் நிலவியது. சரி காப்பியை குடியுங்க கிளம்பலாம் என்றாள் எனக்கு காப்பி குடிக்கும் மனநிலை இல்லை இன்று சித்தப்பா இறந்த செய்தி பலருக்கு சாதாரணமாக இருக்கும் ஒரு சிலருக்கு ஆறுதலாக கூட இருக்கலாம். ஆனால் அவர் கடந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் கலங்காமல் இருக்க மாட்டார்கள். 

அப்போது எனக்கு பதினாறு வயது இருக்கலாம் பத்தாம் வகுப்பு தோற்று போய் அப்பாவிடம் அடி வாங்கி மூலையில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது தான் முதல் முறையாக சித்தப்பா வந்தார் அவர் தான் சித்தப்பா என்று எனக்கு தெரியாது நல்ல உயரமாக சிவப்பான நிறத்தில் அழகான இளைஞனாக அவர் நின்றது சினிமா நடிகர் ஜெயசங்கரே எங்கள் வீட்டிற்கு வந்தது போல் இருந்தது. அப்பாவுக்கு கூட அவரை சட்டென்று அடையாளம் தெரியவில்லை. கண்ணுக்கு நேராக கைகளை குவித்து நீங்க யாரு என்று கேட்டார் அட என்ன அண்ணே என்னை அடையாளம் தெரியலையா நான் தான் உங்க தம்பி மாணிக்கவேலு என்று சொன்னார். அப்பவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. பத்து வயதில் வீட்டை விட்டு ஓடிய தம்பி மீசை முளைத்து ஆளுயர ஆண்பிள்ளையாக எதிரே வந்து நிற்பான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

சித்தப்பா சின்னபிள்ளையாக இருந்த போது பாட்டியின் முந்தானையில் முடிந்து வைத்திருந்த பணத்தை திருடி விட்டாராம் இதனால் அடியும் வாங்கினாராம் வலிதாங்க முடியாமல் தெருவில் ஓடி போனவர் போனவர் தானாம் பாட்டியும் போய் சேர்ந்து விட்டார்கள் இப்போது தான் ஊருக்கு வந்திருக்கிறார் சின்ன வயதில் போனாலும் கூட எப்படி அடையாளம் கண்டுபிடித்து வந்தார் என்று எல்லோரும் அதிசயமாக பேசி கொண்டார்கள் ஆனால் சித்தப்பா அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை என்ன தம்பி பத்தாம் வகுப்பு போச்சா இனி படிக்கனுமா? வேலைக்கு போணுமா? என்று கேட்டார் எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை இரண்டு நாள் கழித்து அப்பாவிடம் அவர் சொன்னார் அவன் படிக்கவில்லையே என்று விட்டு விடாதே எப்படியும் படிக்க வை நம்ம குடுமபத்தில் ஒருவனாவது அரசாங்க உத்தியோகம் பார்க்கணும் என்று சொன்னார். 

அதன் பிறகு அவர் என்னை படிக்க வைத்த பாடு நான் அவருக்கு கொடுத்த தொந்தரவு எல்லாம் மிகவும் அதிகம் ஆனாலும் சித்தப்பா அதை பற்றி எல்லாம் வருத்தப்பட மாட்டார். என் மகன் படிச்சி கலெக்டர் துரைகணக்கா வருவான் பாரு என்று சொல்வாரே தவிர ஒருமுறை கூட கடிந்து பேச மாட்டார். என்னிடம் மட்டுமல்ல சித்தப்பா யாரிடமும் கடிந்து பேசியதை நான் பார்த்ததே இல்லை வயதில் சிறியவனாக இருப்பவர்களை கூட மரியாதை குறைவாக நடத்த மாட்டார். சின்ன வயதில் அம்மா அப்பாவோடு வளராத ஒருவருக்கு இத்தனை பண்பாடு எப்படி வந்தது என்று பலருக்கும் அதிசயமாக இருக்கும் அவரிடம் இதை பற்றி கேட்டால் ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பாரே தவிர பதில் வராது. 

மைதிலி எல்லா பொருள்களையும் காரில் எடுத்து வைத்து விட்டு கிளம்பலாம் என்றவுடன் தான் சுயநினைவு வந்தது அவசர அவசரமாக முகம் கழுவி நேற்று போட்ட சட்டையையே மாட்டி கொண்டு காரில் உட்கார்ந்தேன். இப்போ கிளம்பினா எத்தன மணிக்கு வள்ளியூர் போகலாம் என்று டிரைவரிடம் கேட்டேன். ரோடு எல்லாம் முன்பு மாதிரி இல்ல நல்லா இருக்கு தாம்பரம் தாண்டிட்டா ஒரே மிதி தான் எட்டு மணி நேரத்தில் ஊருக்கு போயிடலாம் என்றான். சரி பார்த்து நிதானமாக ஒட்டு என்று பின்னிருக்கையில் அமர்ந்தேன். பக்கத்தில் உட்கார்ந்த மைதிலிக்கு என் மனநிலை புரிந்திருக்க வேண்டும் அனுதாபத்தோடு என்ன பார்த்தவள் ஆதரவாக தோள்களில் சாய்ந்து கொண்டாள் கடவுள் ஒரு மனுஷனுக்கு பெண் துணை வேண்டுமென்று இதற்கு தான் விதித்தான் போலிருக்கிறது. அளவுக்கு மீறிய துக்கம் வந்து நெஞ்சை அடைக்கும் போது ஒரு பெண்ணின் அருகாமை ஆறுதலை மட்டும் தருவதில்லை துக்கத்தில் நீ முழுவதுமாக கரைந்து போய்விட்டால் உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது உன்னை நம்பி நானிருக்கிறேன் எனவே துயரத்தை ஒரு எல்லையோடு வைத்துகொள் என்று சொல்லால் சொல்வதுபோல் பெண்ணின் அருகாமை அமைந்து விடும்.

ஆனாலும் மனது சித்தப்பாவை நோக்கியே சென்றது. மூன்று முறை கடுமையாக போராடி நான் பத்தாம் வகுப்பு தேறிய போது சித்தப்பாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அண்ணே இனி பையன் தெரிடுவான் அவன் நிறைய படிக்கணும் உன் கரிசல் காட்டு விவசாயத்தை நம்பி அவன் படிக்க முடியாது. நானும் வேலைக்கு போனால் தான் கையில் நாலு காசு பார்க்க முடியும். என்று அப்பாவிடம் சொன்னவர் சூட்டோடு சூடாக நாகர்கோவிலில் ஒரு ஜவுளிக்கடையில் குமாஸ்தா வேலையில் சேர்ந்து விட்டார். நான் பனிரெண்டாம் வகுப்பை ஒரே ஜம்பில் தாண்டிய போது சித்தப்பா மிகவும் சந்தோசபட்டார். அநேகமாக சித்தப்பா அடைந்த கடேசி சந்தோசம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் தான் அப்பா அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். வேண்டாம் அண்ணே தம்பி காலேஜ் போகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் என்று தடுத்தார். அப்பா அதை காதில் வாங்கி கொள்ளவில்லை போடா உனக்கு இப்போவே முப்பத்தி ஐந்து வயசு ஆயிடிச்சு இனியும் வருஷம் போனால் எவன் பொண்ணு தருவான்? எல்லாம் எனக்கு தெரியும் சும்மா இரு என்று சொல்லி விட்டார். 

திருசெந்தூரில் தான் சித்தப்பாவுக்கு பெண் பேசி முடிக்க பட்டது. பெண் பார்த்து வந்த கையோடு அண்ணே இந்த குடும்பம் நல்லதா தெரியல பெண்ணோட ஆத்தாகாரி எடுத்த எடுப்பிலேயே கல்யாணத்திற்கு அப்புறம் குடும்பத்த நாகர்கோவில்ல தான் வைக்கணும் என்கிறாள் எனக்கது பிடிக்கல நாம அண்ணன்தம்பி கடேசி வரையும் ஒற்றுமையா இருக்கணும்னு ஆசைபடுறேன் இது சரிவராது என்றார். அப்பா அதை காதில் வாங்கி கொள்ளவில்லை. பொண்ணு நம்ம வீட்டுக்கு வரட்டும் பேசிக்கலாம் என்று சொல்லி விட்டார். கல்யாணம் முடிந்து நாலு நாட்கள் தான் ஆயிருக்கும் புதுசா வந்த சித்தி சட்டி பானைய தனியா தூக்க ஆரம்பிச்சுட்டா வள்ளியூர்ல குடும்பம் நடத்தணும்னா நான் திருசெந்துருக்கே போயிருவேன் என்று அழ ஆரம்பித்தாள் யார் சொல்லியும் கேட்கவில்லை வேண்டா வெறுப்பாக அப்பா சொல்லுக்கு கட்டு பட்டு நாகர்கோவிலில் தனியாக வீடு பார்த்து குடும்பம் போனார் சித்தப்பா.

தனியா குடும்பம் போனாலும் சித்தப்பாவுக்கு என் மேல் உள்ள பாசம் போகவில்லை சித்திக்கு தெரியாமல் என் படிப்பு செலவுக்கு பணம் கொடுத்தார். கடையில் வேலை செய்த நேரம் போக மற்ற வேளையில் வேறு கடைகளுக்கு கணக்கு வழக்கு எழுதி கொடுத்து தூக்கமில்லாமல் சம்பாதித்தார் அவரது பொறுப்பும் கஷ்டமும் வளர்தந்து போலவே சித்தியின் அடங்காபிடாரி தனமும் வளர்ந்தது. எதற்கெடுத்தாலும் சண்டை போட்டாள் தலையை விரித்து போட்டு அழுதாள் சித்தப்பாவை கண்டமேனிக்கு திட்டி தீர்த்தாள் சிரித்த முகமாகவே இருந்த சித்தப்பா மிகவும் மாறி போனார். சவரம் செய்யாத முகம், அழுக்கான ஆடை, பிடிப்பில்லாத பேச்சி இதுவே சித்தப்பாவின் தோற்றமாகி விட்டது. கல்யாணமாகி இரண்டு வருடம் ஆனபிறகும் குழந்தை இல்லை என்பதனால் சித்தி நீ ஒரு ஆண்பிள்ளையா? ஒரு இரண்டான் கெட்டானுக்கு கட்டிவைத்து விட்டதாக அப்பாவை சாபம் இட்டாள் ஒரு சின்ன சண்டையில் கோவித்து கொண்டு பிறந்த வீடு போனவள் திரும்பி வரமாட்டேன் என்று அடம் பிடித்தாள். 

பலமுறை சென்று அழைத்த பிறகும் சித்தி வரவில்லை ஒவ்வொரு முறையும் சித்தப்பா அவமானபட்டே திரும்பினார். அப்படியே ஆறுமாதம் ஓடியது. ஒருநாள் மாலையில் வந்த செய்தி சித்தப்பாவின் வாழ்க்கையை சீட்டுக்கடு மாளிகையை போல் கலைத்து போட்டு விட்டது. உள்ளுரில் யாரோ ஒருவருடன் தொடர்பு வைத்து கொண்டு சித்தி ஓடிபோய் விட்டாளாம். அவமானத்தால் சித்தப்பா குறுகி விட்டார். அழுவதற்கு கூட அவருக்கு முடியவில்லை பித்து பிடித்தவரை போல நாகர்கோவில் போனவர் திரும்ப வரவே இல்லை அங்கே அவர் கடையில் வேலையை விட்டு நின்றுவிட்டதாகவும் இரவு பகல் எப்போதும் குடித்து கொண்டு அலைவதாகவும் அப்பாவுக்கு தகவல் வந்தது. அப்போது நான் கல்லூரி படித்து விட்டு வேலை தேடி வீட்டில் இருந்தேன் நானும் அப்பாவும் நாகர்கோவிலுக்கு சென்று சித்தப்பாவை தேடி அலைந்தோம். ஒரு சாராயக்கடை பக்கத்தில் உள்ள கீத்துகொட்டகையில் இடுப்பில் வேஷ்டி இல்லாமல் தன்னை மறந்த போதையில் படுத்து கிடந்தார். எழுப்பி அவரை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

ஊருக்கு வந்தபிறகும் சித்தப்பா குடிப்பதை நிறுத்தவில்லை கூலி வேலை செய்வார் கிடைக்கும் பணத்தை குடிப்பார் குடிக்க காசு இல்லாத போது அப்பாவிடம் சண்டை போட்டு பணத்தை பிடுங்குவார். சில நேரங்களில் வீட்டில் உள்ள பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடி கொண்டு போய் குடிக்கவும் செய்வார். இதனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். இதுவரை அமைதியாக இருந்த என் வீடு இப்போது ஒரு மயானம் போல ஆகி விட்டது. சித்தப்பாவின் மேல் கோபப்படவும் முடியவில்லை அவரை வைத்து கொண்டு குடும்பம் நடத்தவும் முடியவில்லை. குடித்து விட்டால் யார்மேலும் அவருக்கு பாசம் வராது. மரியாதை இருக்காது. தாறுமாறாக பேசுவார். 

இதனால் நான் ஊரை விட்டு சென்னைக்கு வந்து விட்டேன். சின்ன கம்பெனிகளில் வேலைக்கு அமர்ந்து படிப்படியாக தொழிலை கற்று இன்று பல்லாவரத்தில் தனியாக தோல் தொழிற்சாலை சிறிய அளவில் நடத்தும் தகுதியை பெற்று விட்டேன். இவை எல்லாம் சித்தப்பா போட்ட பிச்சை என்பது எனக்கு தெரியும். அவர் மட்டும் இரவு பகல் பாராமல் உழைத்து என்னை படிக்க வைக்காமல் விட்டுருந்தால் இப்போ எனக்கு தொழில் ஏது? மனைவி ஏது? வாழ்கை தான் ஏது? இந்த எண்ணத்தில் சித்தப்பா குடிப்பதற்கென்றே பணம் அனுப்புவேன் இனி அவரை திருத்த முடியாது. என்பது எனக்கு தெளிவாகி விட்டது. அவர் விருப்பபடி வாழ வைப்பது ஒன்று தான் நம்மால் முடிந்தது என்ற எண்ணம் எனக்கு வலுவாகவே வந்து விட்டது. 

நாலு மணிக்கெல்லாம் வள்ளியூர் வந்து விட்டேன். நடுவீட்டில் சித்தப்பாவை படுக்க போட்டிருந்தார்கள். முதல் முறையாக அவரை நான் பார்த்த போது இருந்த அழகு இப்போது அவர் முகத்தில் இருப்பதாக பட்டது. இனியும் என்னை யாரும் துன்பபடுத்த முடியாது என்ற இறுமாப்பு அவரிடத்தில் இருப்பது போல எனக்கு தோன்றியது. அவர் தலைமாட்டில் எதையோ பறிகொடுத்தவர் போல அப்பா உட்கார்ந்திருந்தார். அவர் அங்கே பார் என்று சித்தப்பாவின் கால்களை நோக்கி கண்ஜாடை காட்டினார். பார்த்த நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். காரணம் அங்கே சித்தி தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தாள். முதுமையின் அடையாளமாக தலைமுடி நரைத்து போய் இருந்தாலும். உடம்பில் தளர்ச்சி தெரியவில்லை என்னை பார்த்தவுடன் எழுந்து நின்றாள் .

ஏண்டா தம்பி உன்னை ஆளாக்கி விடுவதற்கு தானே உன் சித்தப்பன் என்னை கொடுமை படுத்தி துரத்தி விட்டான். அவன் கொடுமை தாங்காமல் தானே நானொரு கழிசடையோடு ஓடி போனேன். ஆயிரம் நான் கெட்டு போனவளாக இருந்தாலும் செத்து போன இவனுக்கு பெண்டாட்டி நான் மட்டும் தானே இவனுக்காக தாலியறுக்க போவது நான் தானே உங்க குடும்பத்திற்கு உழைச்சி என் புருஷன் தெண்டமா போய்ட்டான். நீயும் இப்போ சூட்டும் கோட்டும் போட்ட பெரிய மனுசனா ஆயிட்ட உனக்கு எம்புருசன் செஞ்ச உபகாரத்துக்கு எனக்கு நாலு லட்சமோ அஞ்சி லட்சமோ பணத்த கொடு நான் எப்படியோ கடைசி காலத்த ஒட்டிக்கிறேன். என்று சொன்னவள் ஐயோ என் ராசா என்னை அனாதையா விட்டுட்டு போய்ட்டியே என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள். எனக்கு மனிதர்களை பார்த்தாலே அருவருப்பாக தோன்ற ஆரம்பித்து விட்டது.

Contact Form

Name

Email *

Message *