Store
  Store
  Store
  Store
  Store
  Store

கைத்தொழில் ஒன்றை கற்றவன்...


   அறந்தாங்கியில் எனது தந்தையார் ஒருகாலத்தில் புகழ்பெற்ற நகை தொழில் செய்பவராக இருந்தார். அவருக்கு நாங்கள் நான்கு மகன்கள் நான் தான் மூத்தவன் எங்களில் யாருக்குமே படிப்பு அவ்வளவாக வரவில்லை இதனால் எங்களது தகப்பனார் பரம்பரை தொழிலான நகை செய்தலையே எங்களுக்கு கற்பித்தார். எனக்கும் ஆரம்பத்தில் அந்த தொழில் மீது நல்ல ஆர்வம் இருந்தது. காலம் செல்ல செல்ல ஏனோ தெரியவில்லை அந்த ஆர்வம் குறைய ஆரம்பித்து விட்டது. 

தகப்பனார் உயிரோடு இருக்கும் போதே அண்ணன் தம்பிகளான எங்களுக்கு சொத்துக்களை பிரித்து கொடுத்து விட்டார். என் பங்குக்கு ஒரு வீடும் இரண்டு கடைகளும் கையில் ஐந்து லட்ச ரூபாய் ரொக்க பணமும் வந்தது அந்த பணத்தை வைத்து நகைக்கடை ஆரம்பித்து கொள்ளும் படி அப்பா அறிவுரை சொன்னார். 1990 -ல் ஐந்து லட்சம் என்பது மிக பெரிய தொகை அதை வைத்து தொழிலை நல்லபடியாக நடத்தி இருந்தால் இன்று நான் கோடிஸ்வரனாக வாழ்ந்திருப்பேன்.

ஆனால் கெட்டு போன புத்தி தவறான பாதையை காட்டி குழிக்குள் தள்ளிவிடும் என்பது என் வரையில் சரியாக இருந்தது அதிகபடியாக சம்பாதிக்கும் ஆசையில் கையில் இருந்த பணத்தை பங்கு சந்தையில் முதலிடு செய்தேன். ஆரம்பத்தில் லாபம் தந்த பங்கு சந்தை நாளாவட்டத்தில் சரிய ஆரம்பித்தது கைமுதல் எல்லாமே இரண்டு வருடத்தில் தீர்ந்து போனது. ஒரு பொருளை தொலைத்து விட்டால் அதை தொலைத்த இடத்தில் தான் தேடி பெற வேண்டுமென்று சித்தாந்தம் பேசிய நான் முக்கிய கடை தெருவில் இருந்த இரண்டு கடைகளையும் விற்று பங்கு சந்தையிலையே விட்டேன் எல்லாம் போய்விட்டது. இன்று வீடு மட்டுமே மனைவியின் பிடிவாதத்தால் நிலைத்து இருக்கிறது. 

எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் ஒரே ஒரு பையன் பெண்கள் இருவரும் திருமண வயதில் நிற்கிறார்கள் பையனுக்கு படிப்பு செலவுக்கு கூட பணம் இல்லை என் தம்பிமார்களின் ஆதரவோடு தான் இன்று குடும்பம் நகர்கிறது. என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை பழையபடி நகை தொழிலை செய்யலாம் என்றால் முதல் வேண்டும் தங்கம் தந்து வேலை தருபவர்கள் நம்பவும் வேண்டும். என் கடந்த கால நடைமுறையை தெரிந்தவர்கள் என்னை நம்புவதற்கு தயங்குவார்கள் ஐம்பது வயதை தொட்டு விட்டேன் இந்த வயதில் வேறொருவரிடம் வேலைக்கு சேர்வதும் பிடிக்கவில்லை என்னால் பிறருக்கு அடங்கி நடக்க முடியாது. அதனால் வீட்டை அடமானம் வைத்தாவது பழையபடி பங்கு சந்தை தொழிலை செய்யலாம் என்று யோசிக்கிறேன். குருஜி அவர்கள் என் ஜாதகத்தை கணித்து பார்த்து தக்க அறிவுரை தருமாறு வேண்டுகிறேன். 
இப்படிக்கு 
மணிவாசகம் 
அறந்தாங்கி      கவான் ராமகிருஷ்ணர் ஒரு கதை சொல்வார் பாலைவனத்தில் பயணம் செய்ய உதவுமே ஒட்டகம் அந்த ஒட்டகத்திற்கு கள்ளி செடியை உண்பது என்றால் ரொம்ப பிரியமாம் கள்ளியை கடித்து மெல்லும் போது அதிலுள்ள முட்கள் ஒட்டகத்தின் வாயை கிழித்து ரத்தம் கொட்ட செய்யுமாம் ஆனாலும் ஒட்டகம் கள்ளி செடியின் சுவையை விட்டு விட மனமில்லாமல் மீண்டும் மீண்டும் கள்ளியையே தின்னுமாம் அதே போலவே உலக பந்த பாசத்தில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்கள் ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் சம்சார வாழ்வை விட்டு இறைவனின் பாதங்களை அடைய முயற்சிக்க மாட்டார்களாம். 

ராமகிருஷ்ணர் அந்த கதையை உலக ஆசையில் அடிமைகளாகி போன மனிதர்களை பற்றி சொன்னார்கள் இங்கே அதே கதையை சற்று திருத்தி சூதாட்டத்தால் அழிந்து போனாலும் அதன் மீது உள்ள பற்று போகாத மனிதர்களை பற்றியும் சொல்லலாம். நல்ல தந்தை நல்ல சகோதரர்கள் பொறுப்பு மிக்க மனைவி என்று ஆயிர சாதக அம்சங்களை இறைவன் இவருக்கு கொடுத்திருந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் பந்தயம் கட்டு நான் கெட்டு போகிறேன் பார் என்று சொல்பவர்களை போல தனக்கு தானே துன்பத்தை வரவழைத்து கொள்கிறார்கள். 

ஐந்தறிவு உடைய பூனை கூட ஒருமுறை சூடான பாலை வாய் வைத்தது விட்டால் மறுமுறை பாலை கண்டாலே ஓடிவிடும் என்று கதைகளில் படிக்கிறோம். ஆனால் இந்த பூனை எத்தனை முறை சூடு பட்டாலும் பரவாயில்லை நான் அதையே தான் குடிப்பேன் என்று அடம்பிடிப்பதை வேறு எந்த வார்த்தையில் சொல்வது. ஐயா மணிவாசகம் ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள் தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்று ஒரு பழமொழி உண்டு.

நமக்கு என்ன முடியுமோ என்ன தெரியுமோ அதை செய்ய வேண்டும். அடுத்ததாக புதிதாக ஒன்றை செய்ய ஆர்வம் வந்தால் சோதனைக்காக சிறிய முதலிடு செய்து துவங்கலாம். அதில் லாபம் வந்தால் அந்த லாபத்தையே மீண்டும் மீண்டும் அதில் முதலிடு செய்து பெருக்கி கொள்ளளலாம். நஷ்டம் வந்து விட்டால். சரி இதோடு போய்விட்டது என்ற திருப்தியில் ஒதுங்கி விட வேண்டும். இது தான் ஒரு நல்ல வியாபாரியின் அழகு. உங்களிடம் அந்த அழகு குடிகொள்ள இறைவனை பிரத்தனை செய்யுங்கள். 

உங்கள் ஜாதகப்படி சந்திரனுக்கு பத்தாவது வீட்டில் செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் இருக்கின்றன. இந்த மாதிரி கிரக அமைப்பு உடையவர்கள் கலை சம்மந்தமான கைத்தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். நகை மற்றும் மாலை கட்டுதல் போன்ற தொழிலை செய்தால் விருத்தி அடையலாம். எனவே நீங்கள் நகை தொழிலை வீட்டில் வைத்தே செய்வது உங்கள் முன்னேற்றத்திற்கு ஆரம்பமாக இருக்கும். அதை விட்டு விட்டு பங்கு சந்தையில் இனியும் இறங்கினால் மனைவி மக்கள் கூட உங்களை ஆதாரிக்க மாட்டார்கள். நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை வரும். 

நகை தொழில் செய்ய மூலதனத்திற்கு எங்கே போவது என்று குழம்ப வேண்டாம். உங்கள் தம்பிமார்களிடம் கடனாக கேளுங்கள். அல்லது அவர்கள் தங்களது சுய வேலைக்காக வாங்குகின்ற தங்கத்தை சிறிது வாங்கி நீங்கள் தொழிலை துவங்குகங்கள் உங்கள் விருப்ப தெய்வமான சுப்ரமணியன் எப்படியும் உங்களை கைவிட மாட்டான். நல்லதை நினையுங்கள் நல்லது நடக்கும்.


Contact Form

Name

Email *

Message *