Store
  Store
  Store
  Store
  Store
  Store

மோகத்தை கொன்றுவிடு !

இந்து மத வரலாற்று தொடர் 41

    றைவனை அடைவதற்கு ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய மனம் மற்றும் உடல் சார்ந்த வழிகள் எதுவென்று கண்டறிந்து சொல்லிய பதஞ்சலி மகரிஷி தனது மார்க்கத்திற்கு அஷ்டாங்க யோகம் என்று பெயரிட்டார். கெளதம புத்தரும் ஒரு மனிதன் நிறை ஞானியாக ஆவதற்கான வழிக்கு அஷ்டாங்க மார்க்கம் என்று பெயரிட்டார். அதாவது மனிதனின் துன்பங்களுக்கு காரணம் ஆசையே என்பதை கண்டறிந்த புத்தர் அந்த ஆசையை விலக்கி துன்பத்திலிருந்து பரிபூரணமாக விடுதலை பெறவும் வழிவகை செய்திருக்கிறார். இன்னது தான் நோயென்று கண்டறிந்த வைத்தியன் அந்த நோயை நீக்குவதற்கு மருந்தை கண்டுபிடித்து கொடுக்கவில்லை என்றால் அவனை எப்படி மருத்துவன் என்று ஒத்துகொள்ள முடியும் உடல் பிணியை போக்குகின்ற வைத்தியனுக்கே இத்தனை கடமை இருக்கும் போது வாழ்க்கை என்ற பெரும்பிணியை போக்குகின்ற மாபெரும் ஞான வைத்தியன் வழிமுறையை சொல்லாமல் போகமுடியுமா? 

எனவே புத்தர் துன்பத்திலிருந்து மனிதன் முற்றிலுமாக விடுபட மெய்யான அறிவு என்ற நற்காட்சி நல்லெண்ணம் நல்லுரை நற்செயல் நல்லூதியம் அதாவது சிறந்த வாழ்வுக்கான வழிமுறை நல்முயற்சி நல்லூற்றம் நற்சமாதி என்று எட்டுவகையான அஷ்டாங்க மார்க்கத்தை நமக்கு தந்திருக்கிறார். இதையே வடமொழியில் சம்யக் சிருஷ்டி, சம்யக் சங்கல்பம், சம்யக் வாணி, சம்யக் கர்மானித, சம்யக் ஆஜீவிகா, சம்யக் வ்யாபாரம், சம்யக் ஸ்மிருதி, சம்யக் சமாதி என்று சொன்னார்கள் இந்த அஷ்டாங்க மார்க்கத்தை ஆரிய மார்க்கம் அதாவது உயர்ந்த வழி என்று அழைப்பதும் பெளத்த மரபாகும். 

இந்த எட்டில் முதல் இரண்டு மார்க்கங்கள் பிரக்ஞா என்னும் மெய்யறிவை மனிதன் தேடி அடைவதாகும். இந்த அறிவின் படி வாழ்வின் நெறிமுறைகளை கடைபிடித்தலே பெளத்தம் சிறப்பித்து கூறும் சீலம் அல்லது ஒழுக்கமாகும். அடுத்ததாக சொல்லப்படும் மூன்று மார்க்கங்கள் ஒழுக்கம் என்ற சீலம் சார்ந்ததாகும். கடேசியாக கூறப்படும் மூன்று மார்க்கங்களும் அறிவாலும் ஒழுக்கத்தாலும் கனிந்து ஒருமனிதன் பெறக்கூடிய சமாதி என்ற உயர்நிலை அமைதியை அல்லது சாந்தியை குறிப்பதாகும். இந்த எட்டு அங்கங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு ஒருவனது வாழ்க்கையை நெறிபடுத்தபட்டதாக ஆக்கி விடும் என்று புத்தமதம் நம்பிக்கை தருகிறது.


இது மட்டுமல்ல கொல்லாமை என்ற அஹிம்சா தர்மமும் திருடாமை பொய் கூறாமை உடல் ஒழுக்கம் என்ற பிரம்மசரியம் மது மற்றும் போதை பொருள்களை தவிர்த்தல் என்னும் பஞ்ச சீலத்தையும் அதாவது ஐந்து வகையான ஒழுக்கத்தையும் ஒருமனிதன் கடைபிடித்தே ஆக வேண்டிய கட்டாயமாகும். புத்தரின் வழியில் நடப்பவர்கள் மட்டுமல்ல புத்தரை அறியாதவர்கள் கூட இந்த பஞ்சசீல கொள்கையை புறம்தள்ளிவிட முடியாது. புத்தசமையத்தார் போதையை தவிர்க்க கூறுவதை போல ஜைனமதத்தாரும் மது மற்றும் மாமிச பொருள்களை தவிர்க்க வேண்டும் என்பதை பரிமித பரிக்ரகம் என்னும் அதிக பொருள்களின் மீது ஆசை வைக்காதே என்று சொல்லுகின்ற இடத்தில் வலியுறுத்தி இருப்பதை இங்கு கவனிக்க வேண்டும். 

இந்த அறநெறி கோட்பாட்டில் திருமணம் முடிந்து பிள்ளைகுட்டிகளோடு வாழுகின்ற சம்சாரிகளும் பிரம்மசரியமாக வாழுகின்ற துறவிகளும் தனித்தனியாக பலவித நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்று பெளத்தம் வகுத்து தந்திருக்கிறது. புத்தர் தமது திருவாக்கால் பிச்சுகள் அதாவது துறவிகள் எத்தகைய ஒழுக்க நெறிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருப்பதை வினையபிடகம் என்ற புத்த புனித மறை தெளிவாக சொல்கிறது. அதன் அடிப்படையில் நிர்வாண நிலை என்ற மேல்நிலைக்கு செல்கின்ற மனிதர்கள் நான்கு வகைகளாக இருக்கிறார்கள். அதாவது அவர்கள் ஸ்ரோதாபன்னர், சக்ருதாகாமி, அனாகாமி, அர்ஹத் என்று அந்த நான்கு வகை துறவிகள் வகைபடுத்த படுகிறார்கள். 


அதாவது ஸ்ரோதாபன்னர் துறவியாக மாறிவிட்டாலும் கூட அவர் நிர்வாண நிலையை அடைய ஒழுக்க நெறியை இன்னும் அதிகபடியாக பின்பற்ற வேண்டும். அதை போல சக்ருதாகாமி என்பவர் நிர்வாண நிலையை அடைவதற்கு இன்னும் ஒரு பிறவி எடுக்க வேண்டியவர் என்பதாகும். ஒழுக்கத்தில் மிக சிறந்தவராக அனாகாமி கருதபடுகிறார். இந்த ஜென்மாவிலே பரிநிர்வாண நிலையை எட்டி பிடிக்கும் தகுதி உடையவர் என்பவர் அர்ஹத் என்ற வகையை சேர்ந்த தவசீலர் ஆவர். இவரே போதி சத்துவர் என்ற மாபெரும் நிலையை அடைய கூடியவராகவும் இருக்கிறார். 

ஒரு மனிதன் போதி ஞானத்தை பெற பஞ்ச நவரனங்கள் என்ற சில தீமைகள் தடையாக இருக்கின்றன. அந்த தீமைகள் எவை என்றால் காமச்சந்தம் என்ற ஆசை, வியாபாதம் என்ற பகைமை, குரோதம், துவேசம் தீனமித்த என்ற சோர்வு மற்றும் சோம்பல் உத்தச்ச குக்குச்ச என்னும் சஞ்சலம் அகங்காரம் கவலை விகிட்சா என்ற சந்தேகம் மயக்கம் ஆகியவைகள் ஆகும். இந்த ஐந்தும் நீங்க பெற்றால் போதி ஞானம் மனிதனை தேடி வரும். இந்த ஐந்து அதாவது பஞ்ச நவரனங்கள் நம்மிடமிருந்து விலகுவதற்கு மைத்திரி என்ற நேயம் கருணா என்ற இரக்கம் முகிகா என்ற மகிழ்வு உபேட்ச்சா என்ற சமநோக்கு ஆகியவைகள் கண்டிப்பாக வேண்டுமென்று பெளத்தம் வலியுறுத்துகிறது. 


அதாவது புத்தரின் மிக முக்கிய கோட்பாடுகளாகிய அன்பு அருள் இரக்கம் சமநோக்கு ஆகிய நான்கும் பிரம்ம விஹாரம் என்ற பெயரால் பார்க்க படுகிறது. உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த ஒருவன் பழக வேண்டும். தன்னை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது சாராதவர்களின் மீதும் ஒருவன் இரக்கத்தை காட்ட வேண்டும். ஒருவருடைய பசி ஒருவருடைய நோய் ஒருவருடைய வறுமை உண்மையான ஆன்மநேயனின் மனதை உருக்க வேண்டும். பசி, பிணி, வறுமையை போக்க அவன் பாடுபட வேண்டும். தனக்கு இருப்பது போதும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற ஆசை அறவே ஒழிக்கப்பட வேண்டும் பொறாமை, கோபம் இல்லாதவனாக ஒருவன் வாழ பழக வேண்டும். புலன்கள் இச்சைபடுகின்ற வண்ணம் செயல்படாதவனாக பணக்காரன், ஏழை என்ற ஏற்ற தாழ்வை கருதாதவனாக இருக்க வேண்டும் என்பதே புத்தரின் மிக முக்கிய கட்டளைகள் ஆகும். 

இது தவிர புத்தர் நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு தசபாரமிதா என்ற பத்து கட்டளைகளை தந்திருக்கிறார். அவைகள் தானம், ஒழுக்கம், தன்னலம் கருதாமை, மெய்யறிவு, முயற்சி, பொறுமை, நேர்மை, கருணை, பணிவு, சமநோக்கு என்பவைகளாகும். இவைகளை பெளத்தனாக இருக்கும் ஒவ்வொருவனும் கடைபிடிக்க வேண்டும். இதை கடைபிடிக்காதவன் எவனாக இருந்தாலும் அவன் பெளத்தன் அல்ல. இத்தகைய உயர்ந்த நன்னெறிகளை கடைபிடிக்க ஒரு மனிதனுக்கு உறுதியான மனம் வேண்டும். அலைபாயும் மனமுடைய எவனும் உயர்ந்த கோட்பாடுகளை வாழ்க்கை பாதையாக கொள்ள இயலாது. எனவே புத்தர் உறுதியான மனநிலையை ஒருவன் அடைய மும்மணிகள் என்ற தாரக மந்திரத்தை தந்திருக்கிறார். அது 
புத்தம் சரணம் கச்சாமி 

சங்கம் சரணம் கச்சாமி 

தர்மம் சரணம் கச்சாமி 

என்பதாகும். இந்த தாரக மந்திரம் எங்கே ஒலிக்கிறதோ எவன் மனதில் இடையறாது ரீங்காரம் இடுகிறதோ அங்கே ஆசை இருக்காது. மோகம் இருக்காது. கோபம் இருக்காது. லோபம் இருக்காது. அமைதியும், சாந்தமும், சகோதரத்துவமும் எப்போதும் விலகாது நிலையாக இருக்கும். சாந்தம் தவழுகின்ற மனதே பேரானந்தம் நிலவுகின்ற இடமாகும். பேரானந்தம் எங்கு உள்ளதோ அங்கு முத்தி என்ற பரிநிர்வாணம் தானாக தேடி வரும்.



Contact Form

Name

Email *

Message *