Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாபா முத்திரையின் பலன்


     கைகளை மடக்கி கடவுளை பார் என்ற தலைப்பில் முத்திரையின் மகத்துவத்தை பற்றி ஒரு பதிவை நான் எழுதியிருந்தேன் அதை படித்து விட்டு நிறைய வாசகர்கள் தொலைபேசி வழியாக விரல்களை முறைப்படி மடக்கி நீட்டுவதனால் இத்தனை பயன்களா? அவைகளை பற்றி எங்களுக்கு அவ்வளவாக விஷயம் தெரியாது நீங்கள் எழுதியது நல்ல விஷயமாகவும் இருக்கிறது பலருக்கு பயனுடையதாகவும் இருக்கிறது. எனவே முத்திரைகளின் ரகசியங்களை பற்றி நாங்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதுங்கள் என்று பலரும் கேட்டார்கள் சிலர் மின்னஞ்சல் வழியாகவும் தபால் வழியாகவும் கூட கேட்டார்கள். 

அவர்களின் ஆர்வத்தை பார்க்கும் போது மறைபொருளான நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு தகுந்த நேரத்தில் எடுத்து சொல்ல சிலர் மட்டுமே இருப்பதனால் தேவை ஏற்படும் போது அவைகள் கிடைப்பதில்லை என்ற உண்மை தெளிவாக தெரிந்தது. வேதங்கள் உபநிசதங்கள் போல முத்திரைகள் ஒன்றும் அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி அதிகமாக மறைத்து வைக்க படவில்லை பகிரங்கமாகவே தெரியபடுத்த பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் அவைகள் சரியான முறையில் சரியான கோணத்தில் மக்களிடம் எடுத்து செல்ல படவில்லை என்ற உண்மையும் நாம் மறுப்பதற்கில்லை. 


நவாரண பூஜை என்ற தேவி பூஜையின் நடைமுறையை கற்றுகொள்ளும் போது பலவிதமான முத்திரைகளை நான் அறிய நேரிட்டது. அப்போது அவைகளிலுள்ள ஆன்மீக ரகசியங்கள் தெரிந்ததே ஒழிய முத்திரை என்பது உடல் நலத்தையும் பேணி பாதுகாக்க வல்லது என்ற உண்மை எனக்கு தெரியவில்லை அல்லது நான் அதை அறிந்து கொள்ளவில்லை ஆனால் எப்போது யார் எந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சர்வ வல்லமை படைத்த இறைவன் நினைக்கிறானோ அப்போது அவன் எந்த வழியிலாவது அதை நமக்கு கண்டிப்பாக தெரியபடுத்தியே தீருவான். 

இரண்டாயிரத்தி ஒன்பதாவது வருடம் பிறந்த அன்று விழுப்புரம் அருகில் உள்ள அரசூர் என்ற ஊரில் புத்தாண்டுக்கான சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தினார்கள். அந்த பூஜையை துவக்கி வைத்து திருவிளக்கு வழிபாட்டின் பெருமையை எடுத்து சொல்ல என்னை அழைத்திருந்தார்கள் ஒரு அம்மன் கோவில் மண்டபத்தில் விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்ய பட்டிருந்தது. நிறைய ஜனம் கூடி இருந்தார்கள் பூஜையை துவக்கி வைத்து அதன் மகத்துவத்தை நான் சொல்லி கொண்டிருந்த போதே என் வயிறு இரைச்சல் போட்டது என்னால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை உடனடியாக காரில் கிளம்பி வந்து விட்டேன். 

அன்று சிறிய அளவில் ஆரம்பித்த வயிற்று போக்கு இரண்டு நாட்கள் என்னை பாடாய் படுத்தியது. பிறகு சிறிது குணமானவுடன் நெஞ்செரிச்சல் ஆரம்பித்தது அதுவும் ஒருவாரம் என்னை உண்டு இல்லை என்று பண்ணியது. அதன் பிறகு ஒரு பத்து பதினைந்து நாள் உடல் உபாதை இல்லாமல் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். தீடிர் என ஒரு நாள் இரவு இடுப்பில் துவங்கிய வலி பாதம் வரையில் பரவியது. என்னென்னவோ வைத்தியம் செய்து பார்த்தேன். ஒன்றும் பயனில்லை அந்த வலியோடு ஆறு மாதங்கள் போராடி இருப்பேன். பல பரிசோதனைகள் நடத்தியும் வலிக்கான காரணம் கண்டுபிடிக்க படவில்லை. கடேசியில் நானாக சிறுநீரகத்தில் எதாவது கோளாறு இருக்குமோ என்று சந்தேகப்பட்டு அதை பரிசோதனை செய்தேன். ஒரு வழியாக விடை கிடைத்தது. சிறுநீரகத்தில் கல்லும் முத்திரை பை வீக்கமும் இருப்பது தெரிய வந்தது. நோய் இன்னது தான் என்று தெரிந்த பிறகு அதை நீக்குவது பெரிய காரியமல்ல.

அதற்க்கான சிகிச்சையை மேற்கொண்டேன் அப்போது எனக்கு தெரிந்த யோகா மாஸ்டர் ஒருவர் நீங்கள் என்ன மாதிரியான வைத்தியம் பார்த்தாலும் அபான முத்திரையை பயன்படுத்தி பாருங்கள் உங்கள் உடல்நிலையில் துரிதமான முன்னேற்றத்தை காண்பீர்கள் என்று சொன்னார். எனக்கு உடனடியாக நம்பிக்கை வரவில்லை விரல்களை மடக்கி ஒன்றோடு ஒன்று இணைத்து வைப்பதினால் நோய் தீரும் என்பதற்கு என்ன ஆதாரம் என்று அவரிடம் கேட்டேன். அவர் சீன நாட்டு வைத்திய முறையான அக்குப்பிரசரில் இருந்து சில விளக்கங்களை எனக்கு சொன்னார். அந்த சீன நாட்டு வைத்திய முறையே நம் நாட்டு முத்திரைகளை அடிப்படையாக கொண்டு உருவானது தான் என்றும் எனக்கு அவர் விளக்கினார். 

ஆனாலும் அவர் சொல்வதில் எனக்கு பரிபூரணமான நம்பிக்கை ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் அவர் மீது நான் கொண்ட மரியாதையால் அதையும் தான் செய்து பார்ப்போமே என்று அபான முத்திரையை செய்ய துவங்கினேன். அபான முத்திரை என்றவுடன் அது சித்த வைத்தியத்தில் சொல்லபடுகிற அபான வாயுவோடு சம்மந்தபட்டது என்ற நினைத்து விடாதீர்கள். இது வேறு என்பதை மனதில் வையுங்கள். அபான முத்திரை என்றால் நடு விரலும் மோதிர விரலும் இணைந்து பெருவிரலை தொட வேண்டும் அதே நேரம் ஆள்காட்டி விரலும் சுண்டு விரலும் தனித்தனியாக பிரிந்து விரைத்து கொண்டு நிற்க வேண்டும். இன்னும் சுலபமாக சொல்ல வேண்டுமென்றால் பாபா என்ற திரைப்படத்தில் காட்டபடுமே அந்த முத்திரையின் பெயர் தான் அபான முத்திரை என்பது. 


இந்த முத்திரையை செய்வதனால் மூன்று விதமான பலன்கள் கிடைக்கிறது ஒன்று நல்ல உடல் இயக்க பயன் இரண்டு நல்ல அறிவு இயக்க பயன் மூன்று நல்ல உயிர் இயக்க பயன் ஆக உடல் உயிர் அறிவு ஆகிய மூன்றிருக்கும் இந்த முத்திரை ஒரு புதுவிதமான சிலிர்ப்பையும் விழிப்பையும் தருகிறது என்று தயங்காது சொல்லலாம். இந்த முத்திரையை தொடர்ந்து மூன்று மாதம் செய்து வந்தாலே சிறுநீரகம் நல்ல முறையில் வலுவடைகிறது சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக அடைப்பு விலகுகிறது நமது தோலில் உள்ள துவாரங்களில் அடைப்பு இருந்தால் அதை நீக்கி சரியான முறையில் வியர்வை வெளியேற வழி செய்கிறது. இது மட்டுமல்ல உடம்புக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கழிவு துளைகளின் அடைப்புகளை நீக்குகிறது. இதைவிட அதிகபடியான பலனான மனதில் உள்ள கெட்ட எண்ணங்களையும் நீக்கி இறைவனோடு இணையும் மார்க்கத்தை சுலபமானதாகவும் ஆக்குகிறது. 

இந்த முத்திரையை சாதாரணமாக இருக்கும் நேரமெல்லாம் நான் செய்து வந்தேன். உண்மையாகவே நல்ல பயன் கிடைத்தது. சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இயல்பாக வீட்டில் அலுவலகத்தில் இருக்கும் போதும் வாகனங்களில் பயன்படும் போதும் இந்த முத்திரையை செய்து வரலாம். கண்டிப்பாக பலன் உண்டு என்று என்னால் உறுதியாக சொல்ல இயலும் 

பொதுவாக நமது விரல் நுனிகளில் பிரபஞ்சத்தின் ஆற்றலும் நமக்குள் உள்ள குண்டலினி ஆற்றலும் எப்போதுமே நிறைந்திருக்கும் இவைகளை ஒன்றோடு ஒன்று அழுத்துமாறு செய்தால் அந்தந்த உடல் உறுப்புகளில் உள்ள செயல்படாத சோர்ந்து போன நாடி நரம்புகளை தூண்டி விட்டு நல்ல முறையில் செயலாற்ற வைக்கும். நம் உடம்பிற்குள் உள்ள நரம்புகள் தங்கு தடை இல்லாமல் செயல்பட துவங்கினாலே பல வியாதிகள் நம்மை விட்டு ஓடி போகும் முத்திரைகள் என்பது நமது நரம்புகளை இயங்க வைக்கின்ற ஆற்றலை பெற்றதாக இருக்கிறது. மிக சுலபமான அந்த பயிற்சியால் நமக்கு நாம் பெரிய நன்மைகளை செய்து கொள்ள முடியும். 

இப்படி பல பயன்தரும் முத்திரைகளை சில தொடர் பதிவுகளில் நாம் பார்க்கலாம். முத்திரைகளை பற்றி பேசும் போது அவைகளால் நீங்கும் நோய்களை பற்றி மட்டுமே சொல்ல போகிறேன் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் முத்திரைக்குள் பல ஆன்மிக ரகசியங்களும் தத்துவங்களும் மறைந்திருக்கிறது. சில குறிப்பிட்ட பிராத்தனைகளை கூட முத்திரைகளை பயன்படுத்தி நிறைவேற்றி கொள்ளலாம். எனவே முத்திரைகளில் உள்ள அனைத்து விஷயங்களையும் எனக்கு தெரிந்த வரையில் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். என்று நினைக்கிறேன். இறைவனின் அருள் இருந்தால் நிச்சயமாக அது நலமாக நடக்கும்.Contact Form

Name

Email *

Message *