( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

காகங்களின் உரிமைக் குரல் !


     நாடு நகரமெங்கும் காக்கைகளின் மாநாடு பற்றி தோரணங்கள் பதாதைகள் பரபரப்போடு கண்ணில் பட்டன தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் சரமாரியான காக்கைகள் சென்னையை நோக்கி பறந்து போக ஆரம்பித்தன. மெரீனா கடற்கரையில் காக்கைகளின் மாநாட்டு பந்தல் அமைக்கபட்டிருந்தது. அண்டங்காக்கை முதல் குஞ்சி காக்கை வரை கூடி இருந்தன. காகங்களின் தேசிய கீதமான கா... கா... கா.. என்ற பாடல் (அது என்ன பாடல் என்று யாரும் நினைக்க வேண்டாம் நமது தலைவர் கலைஞர் அவர்கள் வசனம் எழுதி சிவாஜி கணேசன் அறிமுகமானாரே அதே பாரசக்தில் உள்ள பாடல் தான்) சுருதி பிசகாமல் பாடப்பட்டது.

மாநாடு துவங்கியது. மாநாட்டுக்கு வருகைதந்திருக்கும் காக்கைகளையும் காக்கா தலைவர்களையும் மாநாட்டு ஒருங்கிணைப்பு காகம் வரவேற்க துவங்கியது. காக்கை சொந்தங்களே என்று அது தன உரையை துவங்கியது தான் தாமதம் மாநாட்டு பந்தலில் விசில் பறந்தது. சிறகுகளை விரித்து படபடவென அடித்து ஆரவாரித்தன தொண்டர் காகங்கள். உரை தொடர்ந்தது. காக்கை சொந்தங்களே உங்களை இப்படி அழைப்பதனால் இந்த மாநாடு பெருமையடைகிறது. இந்த நாட்டில் மனிதர்களின் எண்ணிக்கையை விட நமது எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் நமக்கான அங்கிகாரம் கிடைத்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். மனிதர்களால் காக்கை இனம் எப்படியெல்லாம் இழிவுபடுத்த படுகிறது என்று நமது மாநாட்டு செயலாளர் காகத்வஜ அண்ணாச்சி இப்போது உங்களிடம் பேசுவார் என்று சொல்லி தனது உரையை சுருக்கமாக முடித்து கொண்டது. 


தொண்டையை செருமியவாறு காகத்வஜ அண்ணாச்சி பேச துவங்கினார். செத்த எலி அழுகிய கோழித்தலை ஊசிப் போன இட்லி என்று மனிதர்கள் தூக்கி போடும் எல்லாவிதமான குப்பைகளை நாம் சுத்த படுத்துகிறோம். அதற்காக ஆகாயதோட்டி என்ற பெயரை மட்டும் நமக்கு தந்து விட்டு இந்த மனிதர்கள் நமக்கு தரும் இம்சை தாங்க முடியவில்லை. ஒவ்வொரு பயலும் தெருவில் நடக்கும் போதும் பெண்டாட்டியை கொஞ்சும் போதும் செல்போன் இல்லாமல் இருப்பதில்லை இவர்களின் அலைபேசியில் அலைவரிசை கிடைக்க வேண்டும் என்பதற்காக வானளாவிய இரும்பு கோபுரங்களை கட்டி நமது சிட்டு குருவி தங்கைகளின் முட்டைகள் அனைத்தும் மலடாக போக செய்து சிட்டு குருவி இனமே இல்லாது செய்தது போல நமது காக்கை இனத்தையும் அழிக்க தயாராகி விட்டார்கள். நாம் முட்டை இட்டு குஞ்சுபொரிக்க வேண்டிய மரங்களை வெட்டி போட்டு விட்டு மாடி வீடுகளை கட்டி நமக்கு பலவகையிலும் தொந்தரவு தருகிறார்கள். இனியும் நாம் பொறுமை காத்தால் நமது இனம் பூண்டற்று போய்விடும். அதை தடுக்க இந்த மாநாடு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும். என்று கூறி இருக்கையில் போய் அமர்ந்தது காகத்வஜ அண்ணாச்சி. 


அடுத்ததாக பேச எழுந்தார் அண்டங்காக்கை பாண்டியனார் இந்த மனிதர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை கூழை கும்மிடு போட்டு அடுத்தவன் காலை பிடித்து வாழுகின்றவர்களை காக்கா பிடிக்க தெரிந்தவன் என்று அனாவசியமாக நம் பெயரை இழுத்து இழிவு படுத்துகிறார்கள். நமது காக்கையில் ஒருவராவது என்றாவது ஒருநாள் என் மகனுக்கு மந்திரி பதவி கொடு மகளுக்கு நல்ல பதவியாக பார்த்து கொடு என் பேர பசங்களை போலீஸ் பிடிக்காமல் காப்பாற்று என்று யாரையாவது பார்த்து தியாக தீபமே அன்னையின் வடிவே என்று துதிபாடி இருக்கிறோமா? இல்லையே நாமுண்டு நமது வேலை உண்டு என்று இருக்கிறோம். நம்மை உசுப்பி விடுகிறார்கள். அவர்களை பார்த்து எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன். எங்களை சீண்டினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும். ஜாக்கிரதை என்று உறுமி விட்டு போய் அமர்ந்தார். அண்டங்காக்கை பாண்டியனார். அவர் காதுகளில் அதிக சத்தமாக பேசாதீர்கள் யாரவது கூட்டத்தில் கல்லெறிந்தால் நம் ஆட்கள் எல்லோரும் சிதறி ஓடிவிடுவார்கள் என்று கிசுகிசுத்தார் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர். 

காக்கா என்றால் இழிவா நாங்கள் கருப்பா இருக்கிறோம் என்ற பாகுபாடா நாங்கள் மட்டும் தான் கருப்பா? உங்கள் கடவுள் கண்ணன் கருப்பு இல்லையா? காளி கருப்பு இல்லையா? உங்களை எல்லாம் பிடித்து ஆட்டுகிறாரே அந்த சனீஸ்வரன் அவரை சுமக்கும் வாகனம் நாங்கள் சனீஸ்வரன் கூட கருப்பு தான் எங்களை கேலி செய்யும் நீங்கள் நெஞ்சில் தைரியம் இருந்தால் அவரை கேலி செய்து பாருங்கள் அப்போது புரியும் எங்கள் சக்தி என்னவென்று. உங்கள் பாட்டனும் முப்பாட்டனும் ஏன் உங்கள் அப்பனும் கூட செத்து போன பிறகு எங்கள் மூலமாகத்தான் உணவு உண்ண வேண்டும். நாளைக்கே நீங்கள் செத்தாலும் எங்கள் தயவு இல்லாமல் ஒன்றும் நடக்காது. ஒரு அமாவாசையில் நாங்கள் சோறு எடுக்காவிட்டால் நீங்கள் பட்டினி கிடக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். எங்களை மாதிரி தான் குயிலும் கருப்பாக இருக்கிறது. கூடுகட்ட தெரியாத குருட்டு குயிலை கொஞ்சுகிரீர்கள். உங்கள் காதலியின் குரலோடு ஒப்பிட்டு பாராட்டுகிறீர்கள் நாங்கள் வாய்திறந்து பாடினால் மட்டும் கரையாதே போவென்று கல்லால் அடிக்கிறீர்கள். உடனே நீங்கள் நிறுத்தாவிட்டால் நாங்கள் நிறுத்த வேண்டியது வரும். என்று ஒரு உபதலைவர் காகம் காரசாரமாக பேசி முடித்து அமர்ந்தது.


மீண்டும் ஒருகினைப்பாளர் காகம் ஒலிபெருக்கி முன்னால் வந்து நின்று வணங்கி நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த நமது தானை தலைவர் தன்மான சிங்கம் அகம் சுருங்கா தாமரை சத்திய தாய் ஈன்றெடுத்த தத்துவ மைந்தன் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் வெண்ணிற எண்ணன் நிரந்தர தலைவன் உலக காகங்களின் உரிமை குரல் போர்வாள் காக்கை பாடினியார் என்று ஆன்றோரும் சான்றோரும் அழைத்து மகிழும் ஒரே ஒப்பற்ற தலைவன் ராஜ ராஜ காக்கை சோழன் அவர்கள் இதோ உங்கள் முன்னால் பேச போகுறார். இவர் சாதாரண தலைவர் அல்ல இதுவரை சரித்திரம் காணாத புதுமை தலைவர் இவர் மகனுக்காகவும் மகளுக்காகவும் கவலைப்பட மாட்டார். அவர்களுக்காக சொத்து சுகங்களை சேர்த்து வைக்க மாட்டார் காரணம் இவருக்கு பிள்ளை குட்டிகளே இல்லை மனைவிக்கு ஒரு வீடு துணைவிக்கு ஒரு பங்களா இணைவிக்கு ஒரு அரண்மனை என்று பாகம் பிரித்து கொடுக்க மாட்டார். காரணம் இவருடைய எல்லா மனைவிகளும் இப்போது எங்கோ ஓடி விட்டார்கள்.

இவரை பார்க்க கால்கடுக்க நாம் காத்திருக்க வேண்டியது இல்லை நினைத்த நேரத்தில் சென்று பார்க்கலாம். காரணம் இவருக்கு தோழி என்று யாரும் கிடையாது. இன்று ஒருவருக்கு பதவி நாளை வேறொருவருக்கு பதவி என்று தினமொரு பதவி பறிப்பு நிகழ்சிகளை நடத்த மாட்டார். காரணம் இவருக்கே இன்னும் பதவி இல்லை நூலகத்தை பிரித்து மருத்துவமனையாகவும் மாட்டுகொட்டகையை பிரித்து கம்யூட்டர் செண்டராகவும் மாற்ற மாட்டார். காரணம் இன்னும் இவருக்கு ஒப்பந்தகாரர்களின் நட்பு கிடைக்கவில்லை. சிறகடிப்பதற்கும் வாயை திறந்து அழகாக கரைவதற்கும் மாளிகையில் உள்ள அம்மாவின் உத்தரவுக்காக காத்திருக்க மாட்டார். காரணம் இவர் யார் வீட்டிலும் இன்னும் குமாஸ்தாவாக வேலைக்கு சேரவில்லை சுதந்திரமாக தும்முவார் இருமுவார் தூங்க கூட செய்வார். மனிர்களின் பிரதம மந்திரியை போல் இவர் அடிமை இல்லை. நிருபர்கள் ஏடாகூடமாக என்ன கேட்டாலும் தாறுமாறாக பேச மாட்டார் பேசி விட்டு வழக்கு வம்பு என்று மாட்டி கொள்ளவும் மாட்டார். நமது அமைப்பிலுள்ள யாரவது இருவர் எதிர் அமைப்பு தலைவரை போய் சந்தித்தால் தானும் சந்திக்க வேண்டுமென்று அடம்பிடிக்க மாட்டார். மொத்தத்தில் இவர் தெளிவாக இருப்பார். அத்தகைய பெருந்தகையின் வீர உரையை இப்போது கேட்போம். என்று மிக நீண்ட வரவேற்புரையை ஆற்றி விட்டு அமர்ந்தது.

தலைவர் எழுந்தார் கூட்டம் ஆரவாரித்தது விசில் சத்தம் காதை பிளந்தது. பல காகங்கள் கா...கா...வென உரக்க கத்தி மகிழ்ச்சியை தெரிவித்ததன தொண்டையை செருமி கொண்டு தலைவர் ராஜ ராஜ காக்கை சோழர் பேச துவங்கினார். காக்கை இன சொந்தங்களே என் ரத்தத்தில் ஊறிய பந்தங்களே உங்களுக்கு என் வணக்கம்! இங்கே மாநாட்டு பேருரையாற்றிய தலைவர்கள் பலர் மனிதர்களின் மீது கோபம் கொண்டார்கள். அவர்கள் கோபம் நியாயமானது நீதியானது ஆனாலும் நாம் உண்மையை சிறிது சிந்தித்து பார்க்க வேண்டும். கூழை கும்மிடு போடுகிரவனையும் சோப்பு போடுகிரவனையும் காக்கா பிடிப்பவன் என்று அவர்கள் தரக்குறைவாக பேசினாலும் ஒன்றாக இருக்க வேண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வரும் போது காக்கா கூட்டத்த பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க என்று பாடவும் செய்திருக்கிறார்கள். அது நமக்கு பெருமை இல்லையா? குளிக்காத அழுக்கு பிடித்த மனிதர்களை பார்த்து காகம் கூட இரண்டு வேளை குளிக்கிறது அதை போல் நீயும் குளி என்று சொல்கிறார்கள். அதே நேரம் சரியாக குளிக்காமல் அரைகுறையாக குளிப்பவனை பார்த்து காக்கா குளியல் போடாதே என்றும் நம்மை கேலி செய்கிறார்கள்.

கருப்பு என்றும் குப்பை தொட்டிகளில் உலாவுகின்ற ஜீவன்கள் என்றும் நம்மை பேசுகின்ற அதே மனிதர்கள் நாம் அவர்கள் தலை மீது எச்சம் செய்து விட்டால் உன்னை பிடித்த சனியன் தொலைந்து விட்டான் காக்காவுக்கு நன்றி சொல்லு என்றும் பேசுகிறார்கள். நாம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்று நம்மை தீர்கதரிசியாகவும் அழைத்து மகிழ்கிறார்கள் நமக்கு சோறு வைத்த பிறகு தான் சாப்பிடுவது புண்ணியமென்றும் சில மனிதர்கள் சொல்கிறார்கள். ஆகவே மனிதர்கள் நம்மை புகழவும் செய்கிறார்கள் புகழும் அளவிற்கு இகழவும் செய்கிறார்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் மனிதர்கள் யாருக்கும் நிலையான புக்தி இல்லை சரியான அறிவு இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


தனக்கு தானே ஆறறிவு இருப்பதாக கருதுகின்ற மனிதன் ஐந்தறிவு என்று நம்மை ஒதுக்குகின்ற மனிதன் சிட்டு குருவி இனத்தை மட்டுமல்ல தன் இனத்தை தானே அழித்தும் வருகிறான். எந்த காக்காவும் தன்னை விஞ்ஞானி என்று சொல்லி கொண்டு தன் இனத்தை அழிக்க வில்லை காக்காவிடம் விபாச்சாரம் இல்லை கற்பழிப்பு இல்லை மது அருந்தி விட்டு மதிகெட்டு போகும் உன்மத்தம் இல்லை. ஒருவன் சொத்தை வேறொருவன் பிடுங்க வேண்டுமென்ற பேராசை இல்லை. சிறிய உணவு கிடைத்தால் கூட நம் இனத்தாரை அழைத்து உண்ணுவோமே தவிர மனிதர்களை போல் மறைத்து உண்பது இல்லை. எனவே நாம் யாரும் மனிதர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நாம் ஒற்றுமையாக இருந்தால் மரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் மனிதர்களின் தலையில் கூடு கட்டி உல்லாசமாக வாழலாம் எனவே கலங்காதீர்கள் வருங்காலம் காக்கை இனத்திற்கே சொந்தம். என்று பேசி முடித்தார் ராஜ ராஜ காக்கை சோழர் . 

மாநாடு கலைந்தது அதிசயத்திலும் அதிசயம் எந்த டாஸ்மார்க் கடையிலும் காக்கைகளை காண முடியவில்லை மாநாடு பந்தலில் குப்பை கூழமில்லை கோஷ்டி சண்டையால் செருப்புகள் தாறுமாறாக கிடக்கவில்லை. முக்கியமாக கவனிக்க வேண்டியது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு யாருக்கும் மண்டை உடையவில்லை மொத்தத்தில் அந்த காலத்தில் காந்தி நடத்திய மாநாடுகளுக்கு பிறகு காக்கைகளின் மாநாடே அமைதியாக நடந்தது.

+ comments + 4 comments

unmai giruji

unmai giruji

நல்ல பதிவு ஐயா.
மனிதர்கள் தான் திருந்த வேண்டும். தெருவில் விளையாட வேண்டிய நாய் மடியிலும் மடியில் விளையாட வேண்டிய குழந்தை தெருவிலும் விடப்படுகிறது. மனிதனை திருந்தச் செய்ய இது போன்ற படைப்புகள் தேவை. தேவையறிந்து கொடுத்தமைக்கு நன்றி

ராஜ்.ரமேஷ்
vedhajothidam.blogspot.in

Anonymous
09:10

superp


Next Post Next Post Home
 
Back to Top