Store
  Store
  Store
  Store
  Store
  Store

தூக்கு தண்டனை அவசியமா?


அன்பார்ந்த வெகுஜனங்களுக்கு யதார்த்த வாதியின் கடிதம் 


      தார்த்த வாதி வெகுஜன விரோதி என்று சொல்வார்கள் இதை அப்படியே நம்பி விட்ட பலர் யதார்த்தம் என்றால் உண்மை அதனால் உண்மையானவர்கள் பொதுமக்களின் பகைவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் உண்மையாக நடப்பதையே தள்ளி போட்டு விடுகிறார்கள் 

ஆனால் இந்த பழமொழிக்கு இது தான் பொருளா? இது தான் பொருளென்றால் உண்மை பேசுவது தவறு என்ற முடிவிற்கு வரவேண்டிய நிலை வருமே என்று நிறையப்பேர் சிந்திப்பது கிடையாது. உண்மையில் யதார்த்த வாதி வெகுஜன விரோதி என்ற பழமொழிக்கு சமய சந்தர்ப்பம் தெரியாமல் எதை எங்கே பேச வேண்டும் என்ற அர்த்தம் புரியாமல் நடந்து கொள்கிறானே அவனை தான் இப்படி அழைத்தார்களே தவிர உண்மையை சொல்பவனை விரோதி என்று யாரும் சொல்ல வில்லை 

சரி பழமொழிக்கு விளக்கம் கூறுகின்ற சங்கதியெல்லாம் இருக்கட்டும் இத்தனை நாளும் வராத யதார்த்த வாதி இப்போது எங்கிருந்து வந்தான் எதற்காக வந்தான் என்று நீங்கள் நினைக்க கூடும். இவன் வெகுநாட்களாகவே வரவேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தவன் காலநேரம் சரியாக அமையவில்லை என்பதனால் இப்போது வந்திருக்கிறேன். அதுவும் நேரடியாக அல்ல கடிதம் மூலமாக

குழந்தை பிறந்தவுடன் தகப்பனோ தாயோ இறந்து போய்விட்டால் அந்த குழந்தையை அதிகமாக யாரும் பாராட்டி சீராட்டுவது இல்லை. அதிஷ்டம் கெட்ட சனியன் கூடாத நேரத்தில் பிறந்து வாழவேண்டியவர்களுக்கு கொள்ளி வைத்து விட்டதே என்று காலம் முழுவதும் திட்டி தீர்ப்பார்கள் இந்த குழந்தை பிறக்கவில்லை என்றலும் இறக்க வேண்டிய நேரத்தில் யாராக இருந்தாலும் இறந்து தான் ஆக வேண்டும். ஆனால் அந்த நியாயம் யாருக்கும் தெரியாது. 

அதே போல வரவேண்டிய நேரமெல்லாம் வராமல் அஜ்மல் கசாப் தூக்கிலிடபட்ட நேரத்தில் இவன் வந்திருக்கிறானே என்று வெகுஜனங்கள் என்னை திட்டி தீர்ப்பார்கள். அதை பற்றி நான் கவலைப்பட முடியாது. காரணம் காய்த்த மரம் கல்லெறி பட்டே தீரும். நான் வந்த நேரத்தையும் கசாப் தண்டனை நிறைவேற்ற பட்ட நேரத்தையும் ஒன்றாக கருதுவதனால் சில விஷயங்களை இந்த கடிதத்தில் குறிப்பிட விரும்புகிறேன். 

ஊர் உலகமெல்லாம் நாகரீகத்தில் முற்றி விழைந்து விட்டது மனிதாபிமானமும் அன்பும் கருணையும் எல்லா இடங்களிலும் கொடிகட்டி பறக்கிறது இந்த நேரத்தில் இன்னும் கற்கால மனிதனை போல ஒரு மனிதனை பிடித்து தூக்கில் தொங்க விட்டு கொலை செய்யலாமா? அப்படி ஒரு தண்டனை கொடுப்பது மனிதாபிமானத்தின் படி சரியானது தானா? அதுவும் காந்தி பிறந்த நாட்டில் சட்ட பூர்வமாக உயிரை பறிக்கலாமா? என்று சிலர் கேட்கிறார்கள். 

மனிதன் ராக்கெட் செய்யலாம் நாற்காலி மேஜை செய்யலாம் பச்சை மண்ணெடுத்து அடுப்பு கூட கட்டலாம். இது மனிதனால் முடியும். ஆனால் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் அறிவாளி என்று புகழப்பட்டாலும் அந்த மனிதனால் ஒரு புதிய உயிரை உருவாக்கிவிட முடியுமா? மனித உயிரை கூட வேண்டாம் ஒரு மண்புழு உயிரையாவது உருவாக்க இயலுமா? நிச்சயமாக முடியாது. 

அப்படி நம்மால் உருவாக்க முடியாத கடவுளால் மட்டுமே உருவாக்க கூடிய ஒரு உயிரை சாகடிப்பதற்கு நமக்கென்ன உரிமை இருக்கிறது. மகான்களும் மகரிஷிகளும் உலகத்து உயிர்களை எல்லாம் தன்னுயிர் போல் பாவிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். அதை கடைபிடிக்க வேண்டிய நாம் மகான்களை வழிபடும் பொருளாக மட்டும் வைத்து விட்டு அவர் கொள்கைகளை தூக்கி பரண்மீது போட்டு விட்டது சரிதானா? முறைதானா? என்று அவர்கள் உணர்ச்சி மேலிட கேட்கிறார்கள். 

நாமும் நமது கோபதாபங்களை ஒதுக்கி வைத்து விட்டு ஆற அமர உட்கார்ந்து சிந்தித்து பார்த்தால் இவர்கள் கூறுவது கூட சரியாகத்தான் இருக்கிறது. என்று தோன்றுகிறது. மகாத்மா காந்தி கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று போனால் மனித குலத்தில் முக்கால்வாசி பேர் குருடர்களாகவும் பல் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள் என்று சொன்னார். அதாவது ஒருவன் முட்டாள் தனமாக கொலை தொழிலை செய்கிறான் என்றால் நாமும் அவனை போல் செயல்பட கூடாது என்பது இதன் கருத்து. 

ஜெர்மன் நாட்டு அறிஞரான மார்க்ஸ் முல்லர் நமது நாட்டை பற்றி சொல்லும் போது மிக அழகாக ஒரு கருத்தை வெளியிடுவார். இந்தியா ஒரு புனித பூமி மட்டுமல்ல அதுவொரு விசித்திரமான பூமியும் ஆகும். இந்தியாவில் தான் கடவுள் மனிதனாக பிறப்பார் மனிதன் கடவுளாக மாறுவான் என்று வெகுவாக பாராட்டி சொல்வார். கடவுள் அழிப்பவர் அல்ல படைப்பவர். எனவே இந்தியர்கள் கொலைத்தொழில் செய்யலாமா? என்று கூட நமக்கு தோன்றும். 

இவைகள் எல்லாம் நல்ல கருத்துக்கள் என்பதில் ஐயமில்லை ஆனால் ஒன்றை மட்டும் நாம் சிந்திக்க வேண்டும் தனது வாழ்நாள் முழுவதும் அஹிம்சை பேசி அஹிம்சை வழியிலே நின்று நமக்கெல்லாம் வழிகாட்டிய மகாத்மா காந்தி இந்தியாவின் மீது பாக்கிஸ்தான் வலுகட்டாயமாக சண்டையை திணித்த போது நமது இராணுவ விமானங்களுக்கு ஆசி கூறி வழியனுப்பினார். விமானங்கள் சென்றது அமைதி புறாவை பறக்க விட அல்ல எதிரி நாட்டின் மீது குண்டுகளை போட. 

இதிலிருந்து தெரிவது என்ன? ஒரு மனிதன் அல்லது ஒரு நாடு அஹிம்சை வழியில் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டும் ஹிம்சை தேவைப்படும் இடத்தில் அதை விட்டுவிடாமல் கடைபிடிக்க வேண்டும். நம்மை ஒரு காட்டு விலங்கு தாக்க வருகிறது என்றால் அந்த நேரத்தில் நான் ஒரு வீரன் மார்பை நிமிர்த்தி கொண்டு நிற்பேன் என்று ஜம்பம் பேச கூடாது. அதே போலவே விலங்கை தாக்குவது பாவம் அதன் முன்னால் நான் கைகளை கட்டிக்கொண்டு நிற்பேன் என்று பத்தாம் பசலி போல நிற்கவும் கூடாது. எதிர்க்க வேண்டுமென்றால் எதிர்த்து ஆகவேண்டும். தப்பி ஓட வேண்டுமென்றால் ஓடியே தீரவேண்டும். 

அஜ்மல் கசாப் மனிதனாக பிறந்தவனாக இருக்கலாம். ஆனால் அவனிடம் மனித தன்மை கிஞ்சித்தும் கிடையாது. கையில் துப்பாக்கியை பிடித்து கொண்டு ஈவு இரக்கமில்லாமல் கண்ணில் படுபவரை எல்லாம் சுட்டு வீழ்த்தினான் அப்படி செய்ய அவன் ஒரு பைத்தியக்காரன் அல்ல திட்டமிட்டே மனமறிந்தே தான் செய்வது இன்னது அதன் விளைவுகள் இன்னதென்று புரிந்தே செய்தான். ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் கூட தனது மேலதிகாரிகளின் கட்டளைக்கு பணிந்தே கொலை செய்தான். ஆனால் அஜ்மல் அப்படி அல்ல கொலை செய்தால் மட்டுமே தனது சித்தாந்தம் வெற்றிபெறும் என்ற நோக்கத்தோடு கொலை செய்தான். 

எனவே அவனை தூக்கில் போட்டது எந்த வகையிலும் பாதக செயல் அல்ல ஒருவிதத்தில் பார்க்க போனால் ஒரு நோய் பரவாமல் இருக்க எடுத்து கொள்ளும் தடுப்பு முறை என்றே சொல்லலாம். இவனுக்கு கொடுக்கபட்டிருக்கின்ற தண்டனை கசாப் போல நாளை எவரும் தீவிரவாத செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும். தீவிரவாதம் செய்தால் அப்பாவி பொதுஜனங்களை கொன்று குவித்தால் தண்டனை உறுதி மரணம் நிச்சயம் என்ற அச்சத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி ஒருவகையில் தீவிரவாதத்தின் வேகம் மட்டுப்பட செய்யும். 

அஜ்மல் தூக்கிலிடப்பட்டதை சிலர் மதச்சாயம் பூச பார்க்கிறார்கள் இது விபரீதமான எண்ணம். காரணமே இல்லாமல் கொலை செய்பவனை கொலைகாரனாக பார்க்க வேண்டுமே தவிர அவன் இன்ன மதத்தான் இன்ன ஜாதியான் என்று பார்க்கவே கூடாது. அப்படி பார்க்க துவங்கினால் சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல நாட்டு நிர்வாகமே கெட்டுவிடும். இந்த மாதிரியான எண்ணங்கள் ஜனங்கள் மத்தியில் வளர்ந்தால் நாளைக்கு தண்டனை சட்டத்திலும் இட ஒதுக்கீடு தாருங்கள் என்று போராட்டங்கள் துவங்கினாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. 

அதே போல ஒரு குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தால் அது சட்டம் தன் வேலையை செய்தது என்று மட்டுமே கருத வேண்டும் அதை பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாட கூடாது. அப்படி கொண்டாட அதில் என்ன இருக்கிறது. தூக்கில் போடுவது மனித உரிமையற்ற செயல் என்று போராடுபவர்கள் சற்று நிதானமாக சிந்தித்து இத்தகைய கொண்டாட்டங்கள் கூடாது என்று சொல்லலாம் அது நன்றாக இருக்கும். ஒரு மரணத்தை கொண்டாடுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதும் ஒன்றும் அதிக வித்தியாசம் இல்லை. 

மேலும் இந்த யதார்த்த வாதி வேறொன்றையும் இந்த கடிதத்தில் குறிப்பிட விரும்புகிறான். மனித உரிமைகள் பேசுகிறவர்கள் அனைவருமே இறந்து போன அல்லது சாகடிக்க பட்ட குற்றவாளிகளுக்காக பரிந்து பேசுகிறார்களே தவிர பயங்கரவாதிகளின் தாக்குதலால் மரணமடையும் போலீஸ்காரர்களை பற்றியும் இராணுவ வீரர்களை பற்றியும் கவலைபடுவதே கிடையாது. அவர்கள் கொலை செய்யப்படும் விதத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவது இல்லை ஒருவேளை மனித உரிமை ஆர்வலர்களின் அகராதியில் போலிஸ் மற்றும் இராணுவத்தில் பணிபுரிபவர்கள் மனிதர்கள் என்று சொல்ல படவில்லையோ என்று நமக்கு தோன்றுகிறது. 

கடேசியாக சொல்வது என்னவென்றால் கடுமையான தண்டனை முறைகள் இருந்தால் தான் குற்றம் செய்பவர்களுக்கு மனதில் ஒரு அச்சம் வரும். தண்டனைகள் நெகிழும் தன்மையில் இருந்தால் சில காலம் மட்டும் தானே சிறைச்சாலையில் இருக்க வேண்டும். இருந்து விட்டு வந்தால் போகிறது என்ற மதர்ப்பு ஏற்பட்டு விடும். அதே நேரம் ஒரு குற்றவாளியை மதக்கண்ணாடி வழியாகவோ அரசியல் கட்சி மற்றும் ஜாதியின் போர்வையிலோ பார்க்க கூடாது. இந்த எண்ணங்கள் வலுவாக இருந்தால் நாட்டில் குற்றம் குறையும் சிறைச்சாலைகள் அறச்சாலைகளாக மாறும்.

இப்படிக்கு 

யாதர்த்தவாதி

Contact Form

Name

Email *

Message *