Store
  Store
  Store
  Store
  Store
  Store

நகை வாங்க சிறந்த நாள் எது...?


      மது தமிழ் நாட்டில் முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல், சரஸ்வதி பூஜை போன்ற திருநாட்களும் அந்தந்த பகுதியை சேர்ந்த கோவில் விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த நாளில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருமே சந்தோசமாக இருப்பார்கள். ஒன்றுக்குமே வழியில்லாதவர்கள் கூட அன்றைய பொழுதை சிறப்புடன் கழிக்க கடன்வாங்கியாவது செலவு செய்வார்கள். ஆனால் இப்போது நமது தமிழகத்தில் அட்ஷய திருதியை என்றொரு நாள் கொண்டாடப்படுகிறது. உண்மையாகவே அரை சம்பளத்தில் குடும்பம் நடத்தும் நடுத்தர கணவர்கள் விழிபிதுங்கி போய்விடுகிறார்கள். பத்து வட்டிக்கு கடன்வாங்கியாவது நகை வாங்கி கொடு என்று அடம்பிடிக்கும் மனைவியை திருப்தி படுத்த வழியில்லாது தவிக்கிறார்கள். இந்த அட்ஷய திருதியை என்றால் என்ன? அன்று நகை வாங்குவதனால் அப்படி என்ன சிறப்பு வந்துவிட போகிறது. 

    கண்ண பரமாத்மாவை தெரியாதவர்கள் நம்மில் யாருமே இருக்க முடியாது. சிறு மயில் இறகையும் புல்லாங்குழலையும் பார்த்தாலே போதும் ஆயர்பாடி கண்ணன் நம் கண் முன்னால் தோன்றி அழகிய பசு ஒன்றில் சாய்ந்து மனதை மயக்கும் வேணுகானத்தை இசைக்க துவங்கி விடுவான். அப்படிப்பட்ட கண்ணன் தீன தயாளன் ஏழையர் தோழன் திக்கற்றவர்க்கு வழிகாட்டும் தெய்வம் என்று நமக்கு தெரியும் புராண இதிகாசங்களில் மட்டுமல்ல பல பக்தர்களின் வாழ்வில் தற்காலத்தில் கூட தனது லீலா விநோதங்களை நடத்தி வருகிறார். 

அப்படிப்பட்ட கண்ணன் தனது தேவியான ருக்மணியோடு துவாரகையில் உல்லாசமாக ஊஞ்சலாடி கொண்டிருக்கிறான். தேவியானவள் தாம்பூலம் மடித்து ஸ்ரீ கிருஷ்ணனின் பவளவாயில் கொடுத்து கொண்டிருக்கிறாள் தாம்பூலம் போதும் இனிமேலும் நீ கொடுத்து கொண்டே இருந்தால் வாய் நிறைந்து விடும் இத்தோடு நிறுத்து என்று சொல்வதற்காக கைகளை மேலே தூக்குகிறான். அந்த நேரத்தில் ஒரு மின்னல் கீற்று போல் அவன் மனக்கண்ணில் ஒரு காட்சி வந்து போகிறது. தனது இறப்பை கூட புன்னகையோடு வரவேற்ற அந்த கருணாசாகரன் தன மனக்கண்ணில் தோன்றிய காட்சியை பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்து விட்டான். ஒருவினாடி அவனுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை 

கண்ணனின் மனதில் தோன்றியது இந்த காட்சியே கெளரவர்கள் அரசவை கூடி இருக்கிறது. பாண்டுவின் புதல்வர்களான ஐவரும் தலைகுனிந்து அடிமைகளை போல நிற்கிறார்கள். ஐவருக்கும் தேவியான பாஞ்சாலி சபைநடுவே கைகளை உயர்த்தியபடி கதறிய வண்ணம் நிற்கிறாள். அவளது புடவையை துரியோதனனின் தம்பி துச்சாதனன் இரக்கமே இல்லாமல் பிடித்து இழுக்கிறான். காப்பாற்ற வேண்டிய கணவர்கள் காப்பாற்ற முடியாமல் உயிர் இருந்தும் ஜடங்களாக போய்விட்டார்கள். நீதி சொல்ல வேண்டிய பீஷ்மரும் துரோணரும் வாயிருந்தும் ஊமைகளாகி விட்டார்கள். தர்மமாக இருக்க வேண்டிய அரசன் திருதராஷ்டிரன் நிஜமாகவே குருடு எனவே அவனால் அபலை பெண்ணை காப்பாற்ற இயலாது. வேறு வழியே இல்லாமல் கண்ணா கோவிந்தா மாதவா மதுசூதனா என் மானத்தை காப்பாற்று என்று கூக்குரலிடுகிறாள். அவளது கண்ணிரீன் கதறல் கருணா மூர்த்தியான கண்ணனின் இதயத்தில் எதிரொலித்து விட்டது. 

பாஞ்சாலியின் புடவையில் அந்த பாதகர்கள் கைவைக்கும் போது பரந்தாமன் மட்டும் அங்கு இருந்திருந்தால் பெண்ணென்றும் இறக்கம் பார்க்காத பேடிகளை தலைமுரித்து கொன்றிருப்பான். சூதாட்டம் ஆடுவதற்கு முன்பு பாண்டுவின் புத்திரர்கள் பார்த்தசாரதியின் பாதங்களை நினைத்து சிறிது நேரம் தியானித்திருந்தால் கூட சூதும் வாதும் வேதனை தருமென்று உணர்த்தியிருப்பார். ஆனால் என்ன செய்வது தர்ம புத்திரனின் சூதாட்ட வெறியும் பாண்டுமக்களின் தலைவிதியும் இப்படி நடக்க வேண்டுமென்று உறுதியாக இருக்கும் போது பகவானே தடுத்தாலும் விட்டில் பூச்சிகள் விளக்கில் விழாமலா போகும். ஆனாலும் கண்ணன் இவர்கள் நம்மை கலக்கவில்லையே ஆபத்து என்று வந்த பிறகும் அழைக்க நினைக்கவில்லையே என்று கெளரவம் பார்ப்பானா என்ன? பரிதாப ஜீவன்கள் எங்கே அழைத்தாலும் அங்கே ஆபத்பாந்தவனாக சென்று விடுபவன் அல்லவா அவன்! 

கைகளை உயர்த்தும் போது கருத்தில் வந்த காட்சியை நெருப்பிலே சூடுபட்டது போல் உணர்ந்த கண்ணன் ஓடோடி சென்று அபலைக்கு அபயம் அளிக்க நினைத்தான் ஆனால் செல்வதற்குள் நேரம் முந்திவிட்டால் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியிலும் அப்பாவி பெண்ணொருத்தியின் மானம் பறிபோவிட்டால் என்ன செய்வது. உடனே எந்தவித தாமதமும் இல்லாமல் பாஞ்சன்ய திருச்சங்கும் ஆண்டாள் உட்பட தேவியரும் மட்டுமே சுவையறிந்த அவனது திருவாயிலிருந்து அட்ஷய என்ற வார்த்தை உதிர்ந்து விழுந்தது. அட்ஷய என்றால் வளர்த்தல் என்பது பொருள். மாதவனின் வாக்காக ஒலித்த அந்த சொல் முடிவதற்குள் பாஞ்சாலியின் துயில் வளர துவங்கியது. பிடித்து இழுத்து இழுத்து துர்ச்சாதனன் சோர்ந்து விழுந்து விட்டான். 

பாஞ்சாலியின் துயில் உரியப்பட அந்த நாள் ஆவணிமாதம் வளர்பிறையின் மூன்றாவது நாள். கண்ணனின் நினைவாக அன்றைய நாளுக்கு உரிய திதி அட்ஷய திருதியை என்று அழைக்கபடுகிறது. அன்றைய நாளில் குழந்தைகளுக்கு புதியதாக பாடம் துவங்கலாம் அறிவு பசியை தீர்க்கும் புத்தகங்களை வெளியிடலாம் வீடு மனை கிணறு போன்றவைகளை அடிகோலிட்டு துவங்கலாம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாம் புதிய ஒப்பந்தங்களை போடலாம் நெல், கரும்பு, மஞ்சள் போன்ற விவசாய பயிர்களை பயிரிடலாம் இன்னும் பல சுபகாரியங்களை செய்யலாம். நகை மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற நியதி கிடையாது. நற்காரியங்கள் அனைத்துமே அன்றைய நாளில் செய்தால் வளர்ந்து கொண்டே வளம் தந்துகொண்டே இருக்கும் என்பது ஐதீகம். 

   பாஞ்சாலியின் மானம் காக்கப்பட்டது தவிர வேறு எந்த விஷேசங்களும் அந்த நாளில் இல்லையா? 

   நிறைய இருக்கிறது. இருபத்தி ஏழு குழந்தைகளை பெற்று வறுமையில் வாடி தவித்தாரே ஸ்ரீ கிருஷ்ணரின் பள்ளி தோழரான சுதாமா என்ற குசேலர் அவருக்கு அவரது வறுமை நீங்க கண்ணன் அருள் செய்ததும் அந்த நாள் தான். இறைவனான பரமேஸ்வரன் பிச்சாடராக அலைந்து திரிந்து அன்னை ஆதிபராசக்தியின் அன்னபூரணி அவதாரத்திடம் பிச்சை எடுத்து சாப விமோசனம் பெற்றாரே அதுவும் அந்த நாளில் தான். சிலப்பதிகார இலக்கியத்தில் மாதவியின் மகளாக பிறந்த மணிமேகலை புத்த சந்யாசியாக மாறி மக்களின் பசிப்பிணியை போக்க மணிபல்லவா தெய்வத்திடம் அட்ஷய பாத்திரம் பெற்றாளே அது கூட அந்த நாளில் தான். இப்படி எத்தனையோ சிறப்புகள் அட்ஷய திருதியைக்கு உண்டு. 

சாரத்தை விட்டு விட்டு சக்கையை பிடித்து கொள்வதில் நம்மவர்கள் வல்லவர்கள் தங்களது ஆணவத்திற்கும் ஆசைக்கும் எது உகந்ததாக இருக்கிறதோ அதுவே நமக்கு சிறந்ததாக படுகிறது. அட்ஷய திருதியில் நகை வாங்குவது விஷேசம் அப்படி வாங்கினால் வீட்டில் சொர்ணம் வளரும் என்று சாஸ்திரங்கள் சொல்வதாக நீட்டி முழங்குகிறோமே அதே நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கோமாதாவிற்கு ஆகாரம் படைத்து வழிபடவும் சாஸ்திரம் சொல்கிறது. அது எத்தனை பேருக்கு தெரியும். எத்தனை பேர் செய்கிறார்கள். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திர தானம் வித்யா தானம் போன்றவைகளும் செய்ய வேண்டுமென்று சொல்ல பட்டிருக்கிறது. அதை பற்றி யாரவது அறிந்து வைத்திருக்கிறோமா? கிடையவே கிடையாது. 

ஒருவருடத்தில் இந்தியர்களுக்கு 800டன் தங்கம் தேவை படுகிறதாம். அதில் 400டன் தங்கம் தென்னிந்தியாவுக்கு மட்டுமே தேவையாம். அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டுக்கு மட்டும் 300டன் தங்கம் தேவை படுகிறதாம். அந்த அளவு நமது மக்களுக்கு தங்கத்தின் மீது மோகம் இருக்கிறது. நமது தமிழ் நாட்டில் தென் பகுதியில் குறிப்பாக திருநெல்வேலி கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் உள்ள பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை பார்த்தால் மயக்கமே வந்துவிடும். கோவில் சிலைகளில் கூட அந்த அளவு நகை இருக்காது. இத்தகைய நகை மோகத்தால் உருவான திருவிழாவாக அட்ஷய திருதியை இன்று வளர்வது நன்மையின் அறிகுறி என்று சொல்ல இயலாது. மோகம் ஆசை வெறி என்ற வார்த்தைகளில் வேண்டுமானால் சொல்லலாம். 

   ட்ஷய திருதியை நாளில் இறைவனை எப்படி வழிபட வேண்டும்?

     நாம் பூஜைகளை செய்யும் போது சுவாமிக்கு நெய்வேய்தியம் செய்யாமல் இருப்பதில்லை. சாதாரண நாட்களில் சுவாமிக்கு படையல் போடுவதை விட அன்றைய நாளில் படையல் போடுவது பல சிறப்பான விஷேசங்கள் அடங்கி உள்ளது. வைகுண்ட வாசனுக்கு குசேலன் சாதாரண அவலை படைத்தான் ஆனால் குசேலன் பெற்றதோ அளவிட முடியாத கருணை என்ற மகாச்செல்வம். அன்னபூரணி அன்று பகவானுக்கு அன்னம் மட்டுமே படைத்தாள் ஆனால் அவள் பெற்றதோ இறைவனின் ஒருபாகத்தையே தனக்காக பெற்றுகொண்டாள். எனவே அந்த நாளில் மனமுருக பக்தி பெருக இறைவனுக்கு சிறியதாக எதை படைத்தாலும் நமது எண்ணம் மட்டும் சரியாக இருந்தால் அவன் தருவதோ பல கோடி மடங்காக இருக்கும். இறைவனுக்கு படைத்தல் என்றால் ஆலயங்களிலும் பூஜை அறைகளிலும் படைப்பது மட்டுமல்ல.

நதியில் மலையில் கடலில் பெருங்காட்டில் உன்னை தேடினேன் அங்கெல்லாம் நீ கிடைக்கவில்லை ஒரு ஏழையின் சிரிப்பில் நீ இருந்தாய் உன்னை அங்கே கண்டு கொண்டேன் என்று ரவீந்த்ரநாத் தாகூர் கீதாஞ்சலியில் அழகாக சொல்வார். இன்றும் எத்தனையோ ஏழைகள் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் கிடக்கிறார்கள். ஆயிரகணக்கான முதியவர்கள் பாதை பார்த்து நடக்க பார்வை தெரியாமல் ஒரு கண்ணாடி வாங்க கூட வழியில்லமல் திக்குமுக்காடி தெருவில் அலைகிறார்கள். படிக்க ஆர்வம் இருக்கிறது இறைவன் தந்த நல்ல அறிவு இருக்கிறது ஆனால் கல்வி கட்டணம் கட்ட வழியில்லை ஒரு பேனா பென்சில் வாங்க கூட முடியவில்லை என்று எத்தனையோ குழந்தைகள் கனவுகளை இதய மயானத்தில் ஆழ குழி தோண்டி புதைத்து விட்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இறைவனின் அவதாரங்களே காரணம் தரித்திர நாராயணனாக நான் இருப்பேன் என்று பகவான் சொல்கிறான் எனவே ஏழைகளை தேடி சென்று அவர்களுக்கான உதவிகளை செய்வது கூட கடவுளுக்கு செய்யும் மகா நெய்வேய்தியமே அதை அன்று செய்தால் இறைவன் உங்களுக்கு நீங்கள் கேட்டதையும் கேட்காததையும் கொடுத்து அருள்வான். 

சக்கரவர்த்தி அக்பரை பார்த்து தானம் வாங்குவதற்காக ஓர் சாது சென்றாராம் அப்போது அக்பர் மகராஜா கைகளை வானை நோக்கி உயர்த்திய வண்ணம் தொழுகை செய்து கொண்டிருந்தாராம். அவர் தொழுது முடிக்கும் வரை காத்திருந்த சாது அக்பரிடம் நீங்கள் இறைவனின் என்ன கேட்டிர்கள் என்று கேட்டாராம். அதற்கு அக்பர் ஏராளமான செல்வத்தை எனக்கு கொடுக்கும் படி இறைவனின் கேட்டேன் என்று சொன்னாராம். பதிலேதும் பேசாமல் சாது கிளம்பினாராம். ஐயா ஏதோ என்னிடம் கேட்க வந்திர்கள் ஆனால் கேட்காமலே போகிறீர்களே நீங்கள் வேண்டுவது என்ன? என்று அக்பர் சாதுவிடம் கேட்டாராம். அதற்கு சாது ஐயா அரசரே நான் உங்களிடம் பிச்சை கேட்க வந்தேன் நீங்களோ இறைவனிடம் அதை கேட்டுகொண்டிருக்கிறீர்கள் ஒரு பிச்சை காரனிடம் இன்னொரு பிச்சைகாரன் தானம் கேட்பது முறையாகாது நானும் இறைவனிடமே கேட்டு கொள்கிறேன் என்று போய்விட்டாராம். 

மன்னாதி மன்னனாக இருந்தாலும் நாம் அனைவருமே இறைவன் முன்னால் பிச்சைக்காரர்களே அவன் கொடுக்க நாம் பெற வேண்டும். அது தான் நீதி தர்மம். ஆனாலும் சோறுபோடும் அன்னைக்கு அவள் ஊட்டுகின்ற சாதத்தையே குழந்தை எடுத்து அவளுக்கு ஊட்டுவதில்லையா? அது அன்னையின் ஆனந்தத்தின் எல்லையாக இருப்பது இல்லையா? அதே போலதான் இறைவன் படைத்த பொருளை இறைவனுக்கு படைக்கிறோம். அந்த மகிழ்ச்சியில் அவன் நமக்கு தனது எல்லையே இல்லாத கருணா விலாசத்தை வாரி வழங்குகிறான். அட்ஷய திருதியில் நாம் பெறவேண்டியது தங்கம் மட்டும் அல்ல தங்கமும் நமக்கு தேவை தான். வள்ளுவன் கூட பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை அருள் இல்லாருக்கு அவ்வுலகு இல்லை என்று சொல்கிறார். எனவே அருளையும் பொருளையும் இனிதே பெறுகின்ற இன்ப திருவிழாவாக அட்ஷய திருதியை நாம் கொண்டாடினால் அது தவறல்ல. ஆனால் அது நமது பகட்டை ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் திருவிழாவாக இருந்தால் நமது பண்பாட்டை நாமே கேலி செய்தவர்களாக இருப்போம். இதை நினைவில் வைக்க வேண்டும்.


Contact Form

Name

Email *

Message *