Store
  Store
  Store
  Store
  Store
  Store

கண்ணுக்கு தெரியாத கயிறு


    காலம் வெகுவாக மாறிவிட்டது விஞ்ஞானம் சந்திரனை ஆராய்வதை தாண்டியும் செவ்வாய் கிரகத்தையும் தொட்டு விட்டது. கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தால் மனித சமூதாயம் எவ்வளவோ முன்னேறி விட்டது இந்த நிலையிலும் மனிதனுக்கு இறை நம்பிக்கை என்பது அவசியமான ஒன்றா? 

      காலம் மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கை தரத்தை மாற்றி இருப்பதும் உண்மை ஆனால் மனிதனின் அறிவு வளர்ந்த அளவு மனது வளரவில்லை மனிதன் மனிதனாக தோன்றிய போது எந்த மாதிரியான மனதை பெற்றிருந்தானோ அதிலிருந்து பெரிய அளவில் அவன் முன்னேற வில்லை 

வளர்ச்சி என்பது வெளியில் கிடைக்கும் பொருள்களை மையமாக கொண்டு தான் தீர்மானிக்க படும் என்றால் அது தவறான தீர்மானமாகும். ஒரு நாற்காலி நாம் செளகரியமாக உட்கார பயன்படுமே தவிர நமது மனநிலையில் செளகரியத்தை தந்து விடாது. மனம் செம்மைப்பட வேண்டுமானால் மனித உழைப்பு புறத்தில் இருக்க கூடாது. அகத்தை நோக்கி அது திரும்ப வேண்டும். சுகத்தையும் இன்பத்தையும் வெளியில் தேடுபவனால் குழப்பங்கள் மட்டுமே நடந்திருக்கிறது. உள்ளுக்குள் தேடுபவனால் மட்டுமே சமூகத்திற்கு அமைதி தர இயலும்.

கடவுள் நம்பிக்கை என்பது ஆனந்தத்தை வெளியில் தேடுதல் என்ற சூத்திரத்தை தவறு என்கிறது. உனக்குள் தேடு உள்ளுக்குள் தேடு என்பதே கடவுள் நம்பிக்கையின் அடிப்படை தத்துவமாகும். மனிதனாக படைக்கப்பட்டவன் எதையாவதை ஒன்றை நம்ப வேண்டும். ஒருவனிடமிருந்து நம்பிக்கையானது விலகுமேயானால் அவனால் தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு வந்து சேரும். 

வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே நிறைந்த பகுதி அல்ல அதில் கல்லும் முள்ளும் மேடு பள்ளமும் நிறைய உண்டு பள்ளத்தில் விழுகின்ற போது நான் எப்படியும் மேட்டுக்கு வந்துவிடுவேன் என்று நம்புகிறவன் மட்டுமே துன்பத்தை தாண்டி இன்பத்தை அடைகிறான். நம்பிக்கை இல்லாதவன் தன்னை தானே மாய்த்து கொள்ளும் இழிநிலைக்கு போய்விடுகிறான். அதனால் வளர்சிகள் வந்து உன் வாசல் கதவை தட்டினாலும் கூரையை பிரித்து கொண்டு கொட்டினாலும் கடவுள் நம்பிக்கை என்பது எல்லா காலத்திலும் அவசியம். 

     ம்பிக்கை இல்லாதவன் தன்னை மாய்த்து கொள்கிறான் என்றால் நாத்திக சிந்தனை தற்கொலை பாதைக்கு மனிதனை அழைத்து செல்லும் என்பது உங்கள் கருத்து என்று எடுத்து கொள்ளலாமா? 

ஒரு மனிதன் எப்போது தற்கொலை செய்து கொள்ள ஆசைபடுகிறான்? தன்னால் எதுவும் முடியாது தனக்கு நடப்பது அனைத்தும் தனது சக்தியை மீறி போய்விட்டது தன்னை காப்பாற்ற தனக்கு ஆறுதல் தர யாருமே இல்லை தான் ஒரு ஆனதை போல ஆகி விட்டோம் என்ற சிந்தனை சிகரத்தை தொடும் போது தன்னை மாய்த்து கொள்ள ஒருவன் சித்தமாகிறான். 

என் வாழ்வில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவரின் வாழ்விலும் துயரம் இருக்கிறது ஒவ்வொரு மனிதனும் தனது இதயத்தில் சுமக்க முடியாத அளவிற்கு துயரத்தை சுமந்து கொண்டு தான் அலைகிறார்கள் என்று நினைக்கும் போது அவர்களை போல நானும் ஒரு சராசரி ஜீவன் என்ற ஆறுதல் கிடைக்கிறது. துயரங்களை அனுபவிக்கும் போது நிதான புத்தி யாருக்கு வருகிறதோ அவன் தனக்கு துன்பம் எதனால் வந்தது என்று சிந்திக்க ஆரம்பிப்பான் 

தனது துயரத்திற்கு தானே கரணம் என்று ஒருவனது சிந்தனை முடிவு வந்தால் அவன் தன்னை ஒழுங்கு படித்தி கொள்ளவும் தன்னிடமுள்ள தவறுகளை சீர்படுத்தி கொள்ளவும் முனைவான். அப்படி முனையும் போது தனது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் தான் விரும்பியபடி நடக்கவில்லை ஏற்கனவே தீர்மானித்தபடி யாரோ ஒருவரின் அல்லது எதோ ஒரு சக்தியின் சூட்சம கயிற்றால் ஆட்டுவிக்க படுகிறது என்பதை உணர்வான். 

எனது செயலால் நான் துன்பப்படவில்லை கண்ணுக்கு தெரிந்த அல்லது தெரியாத எதிரியால் அல்லது எதிர்வினை செயல்களால் துன்பத்தை அனுபவிக்கிறேன் என்ற முடிவிற்கு வருபவன் இதிலிருந்து என்னை காத்து கொள்ள என்னைவிட வலிமை பொருந்திய ஒரு சக்தியிடம் முழுமையாக சரணடைந்து விட்டால் நான் காப்பாற்ற படுவேன் என் வாழ்வும் இன்பமயமாக ஆகிவிடும் என்ற நிலைக்கு வருவான் 

தன்னை சீர்படுத்தி கொள்பவனும் தன்னை இறைவனிடம் அர்பணித்து கொள்பவனும் நிச்சயம் துன்பத்திலிருந்து விடுதலை அடைவான் விடுதலை அடைந்த மனம் தற்கொலையை நாடாது வாழ்க்கை என்பது நிர்மூலமாக்கி கொள்வது அல்ல நிர்மாணிப்பது என்ற தெளிவு தானாகவே கிடைத்து விடும். 

கடவுளை நம்பாதவனை நாத்திகன் என்று நாம் பொதுவாக சொல்கிறோம் நாத்திகன் என்பவன் கடவுளை மட்டுமல்ல தன்னையும் நம்பாதவன் ஆவான். நான் கடவுளை நம்பவில்லை என்னை மட்டுமே நம்புகிறேன் என்று சொல்பவன் நாத்திகன் அல்ல நாத்திகனாக இருப்பவனுக்கு மனதில் தெளிவு ஏற்படுவதற்கு வழியே இல்லை அவன் தன்னை முடித்து கொள்வதில் தான் ஆர்வம் காட்டுவான். 

    ண்மையாகவே நமது வாழ்வை கண்ணுக்கு தெரியாத சூட்சம கயிறு ஆட்டி வைக்கிறதா?

நம் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை மேலோட்டமாக எடுத்து கொண்டால் அதனுடைய தொடர்ச்சி என்பது நமக்கு புரியாது. ஆழமாக சிந்திக்கும் போது ஒவ்வொரு சம்பவத்திற்கும் நுணுக்கமான தொடர்பு இருப்பது புரியவரும் ஆயிரம் தான் நாம் பரிணாம வாதம் பேசினாலும் நமது குணத்தில் நமது செயலில் நம் மரபையும் தாண்டிய சாயல் இருக்கும் அந்த சாயலின் தொடர்ச்சி நமது கடந்த பிறப்பிலிருந்து வருவதை பலநேரங்களில் ஒப்பு கொள்ள மாட்டோம் ஆனால் அது தான் உண்மை 

நமது பாட்டனுக்கு இல்லாத தகப்பனுக்கு இல்லாத ஏன் நமது வர்க்கத்தில் யாருக்குமே இல்லாத தனியான ஒரு ஞானம் நமக்கோ நம் குழந்தைக்கோ இருக்கலாம். நேற்றுவரை சுவற்றுக்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்த நாம் இன்று தீடிர் என்று நமக்குள் இருந்து கவிதைகள் ஊற்றெடுத்து வருவதை உணரலாம் இது எப்படி வந்தது யார் தந்தது நிச்சயம் நமது கடந்த கால பிறப்பின் மிச்ச வடிவமே இப்போதைய வெளிப்பாடு இதை நம்புவது சற்று கடினம் ஆனால் மிக ஆழமாக சிந்தித்தால் உண்மை என்பது தெரியவரும். 

சம்மந்தமே இல்லாத ஞானம் நமக்குள் இருந்து வேலை செய்வதை போல நமது வாழ்வின் நிகழ்வுகளும் பல நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதற்கு நேர்மாறாகவே நடக்கும் ராணுவத்தில் சேர விரும்பிய அனைவருக்குமே இடம் கிடைப்பதில்லை இடம் கிடைத்த அனைவருமே அதில் சேர விரும்பியது இல்லை நாம் நினைத்தது நடைபெறாதது போலவே நினைக்காததும் நடந்து கொண்டே இருக்கிறது. விரும்புகிறோமோ இல்லையோ கசப்போ இனிப்போ பல சம்பவங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நம்மை மீறி நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் கண்ணுக்கு தெரியாத சூட்சம கயிறு நம்மை பிணைத்துள்ளது அந்த கயிற்றின் மறுமுனை இறைவன் கையில் இருக்கிறது. 

   மது அறிவும் குணநலமும் பரம்பரையாக வருவது இல்லையா?

நிறையப்பேர் அப்படி தான் நினைக்கிறார்கள் இதனால் சில பழமொழிகள் கூட அந்த நினைப்பை உறுதி படுத்துவது போல் உள்ளது சன்யாசம் வாங்கினாலும் ஜாதி புத்தி போகாது என்பது போன்ற பழமொழிகளும் நிலத்தளவே ஆகுமாம் நீராம்பல் மாந்தர்தம் குலத்தளவே ஆகுமாம் குணம் என்பது போன்ற பழம் பாடல்களும் மனிதனது அறிவு தரமும் குண இயல்பும் அவனது பரம்பரையை ஒட்டியே அமைகிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. உண்மையில் ஆதிகால இந்தியாவில் இத்தகைய நம்பிக்கை இருந்ததில்லை பிறப்பின் அடிப்படையில் ஜாதி எப்போது தீர்மானிக்க பட்டதோ அப்போதிலிருந்தே இந்த எண்ணம் வலுவடைந்து விட்டது. 

இந்த எண்ணம் தவறானது அறிவுக்கு புறம்பானது என்பதை எடுத்து காட்ட எத்தனையோ உதாரனங்கள் உண்டு பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரை எடுத்து கொள்வோம் அவரது தாய்தந்தையார் அந்தண குலத்தை சார்ந்தவர்கள் ஆனால் ராமகிருஷ்ணரிடம் வைதீகமான கட்டுபட்டி தனம் எதுவும் கிடையாது அவரது மனது ஆகாசத்தை போல பறந்து விரிந்தது அறிவோ சமுத்திரத்தை விட ஆழமானது ஏசுநாதர் கூட ஒரு தச்சனின் குமாரர் தான் ஆனால் ஏசு பழுதுபட்டு போன சமூகத்தையும் மனித மனதையும் சீர்படுத்தும் தச்சராக இருந்தாரே தவிர நாற்காலி மேஜை செய்யும் தச்சராக இருந்தது இல்லை.

எனவே குணம் குலத்தை சேர்ந்தது அல்ல அதே நேரம் குணம் சுற்றுபுற சூழலாலும் தீர்மானிக்க படுவது அல்ல திருடர்கள் மத்தியில் வாழ்பவன் திருடனாகதான் இருப்பான் என்பதும் விபச்சாரிகளிடம் வாழ்பவள் ஒழுக்கம் கெட்டவளாகத்தான் இருப்பாள் என்பதும் மிக தவறுதலான கணிப்பாகும். குப்பையிலும் மாணிக்கம் கிடைக்கும் சாராய கடையில் கூட காந்தியின் தொண்டன் இருப்பான் மனிதர்களின் வாழ்வு எப்படி இறைவனால் தீர்மானிக்க படுகிறதோ அதே போலவே அவனது குணமும் இறைவனால் தீர்மானிக்க படுகிறது.




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *