Store
  Store
  Store
  Store
  Store
  Store

சுந்தரகாண்டம் ஏன் படிக்க வேண்டும்?


   (யோகி ஸ்ரீ ராமானந்த குரு அவர்களை சந்திக்க வருகின்ற பல அன்பர்கள் பலதரப்பட்ட கேள்விகளை கேட்டு அவரிடம் பதில் பெறுவார்கள் அந்த கேள்விகள் அரசியல் அறிவியல் தத்துவம் இலக்கியம் பொது விஷயங்கள் உட்பட நிறைய இருக்கும். அவற்றில் ஆன்மீகம் என்பது ஆதார சுருதியாக எப்போதுமே விளங்கும் சில நேரம் ஆன்மீக விஷயங்களோடு சாஸ்திரங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆச்சார அனுஸ்டானங்கள் போன்றவைகளும் மிகுந்து காணப்படும் அத்தகைய ஆன்மீக விஷயங்களை மட்டுமே தொகுத்து இந்த பகுதியில் தரபட்டிருக்கிறது. இது நிச்சயம் வாசகர்களுக்கு நல்ல பலனை தரும்.)
     ராமாயணம் ஒரு அழகான காவியம் அதில் ஏராளமான தத்துவங்கள் உள்ளன ராமாயணத்தின் நாயகன் ஸ்ரீ ராமனின் மகிமைகள் சொல்லில் அடக்க முடியாத அளவிற்கு மேன்மையானது அப்படிப்பட்ட ராமாயணத்தை கண்களால் பார்த்தாலே புண்ணியம் ஆனால் ராமாயணத்தின் ஒரு சிறு பகுதியான சுந்தரகாண்டத்தை மட்டும் நல்ல காரியங்கள் நடக்க படி என்று சொல்கிறார்களே ராமாயணத்தின் முழுமையான பகுதியில் கிடைக்காத நன்மை சுந்தரகாண்டத்தில் மட்டும் கிடைக்குமோ? அதை பற்றி சற்று விளக்குங்களேன் 

     ராமாயணம் காவியமாக பார்த்தால் அழகு பொருந்தியது அதை ஆன்ம விளக்கமாக பார்த்தால் தத்துவங்கள் சமூத்திரத்தை போல் பறந்து விரிந்து கிடப்பது. அறிவுக்கு மட்டும் வளத்தை கொடுப்பதல்ல ராமாயணம் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வளத்தை கொடுப்பதாகவும் ராமாயணம் இருக்கிறது. அந்த காலத்தில் கவிஞர்களால் எழுதபடுகின்ற பக்தி நூல்கள் எதுவாக இருந்தாலும் அதில் இதை படித்தால் செல்வம் பெருகும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் மனையில் மகிழ்ச்சி நிலவும் என்ற வார்த்தைகள் இடம்பெற்றுப்பதை பார்பீர்கள் உதாரணத்திற்கு கந்த சஷ்டி கவசத்தில் ஓதி ஜெபித்து உவந்து நீறணிந்தால் என்று துவங்கும் அடியிலிருந்து படித்து பாருங்கள் சஷ்டி கவசம் படிப்பதனால் கிடைக்கும் பயன்களை தேவராய சுவாமிகள் பட்டியல் போட்டு காட்டிருப்பதை காண்பீர்கள் இந்த நீயதி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ ராமாயணத்திற்கு கண்டிப்பாக பொருந்தும் 

ராமன் வனவாசத்தில் சீதையை பறிகொடுத்து விடுகிறாள் அவள் எங்கே இருக்கிறாள் என்று பரமனான ராமன் மனிதனாக இருந்ததனால் தெரியாமல் தவிக்கிறான் அவளை காண மாட்டோமா கண்டு ஒரு வார்த்தை பேச மாட்டோமா அன்பு வடிவான அவளை இன்னொருமுறை தொட்டு பார்க்க முடியுமா என்று ராமன் வருந்துகிறான் நெக்குருகி நெகிழ்ந்து அழுகிறான் துன்பங்கள் எல்லாமே தாங்க முடியாத அளவிற்கு கஷ்டங்கள் நிறைந்தது அதில் சந்தேகமில்லை ஆனால் துன்பங்களிலேயே ராஜ துன்பம் என்று ஒரு துன்பம் இருக்கிறது அது துன்பங்களுக்கெல்லாம் துன்பமான தலைமை துன்பம் அது என்ன துன்பம் என்றால் நமக்கு மிகவும் பிரியமான ஒருவரை இன்னெதென்று அறியமுடியாத வண்ணம் இழந்து விடுவதாகும்.

நமது அன்புக்கு பாத்திரமான ஒருவர் இறந்து போய்விட்டால் அவர் இறந்து விட்டார் இனி பிழைத்து எழ மாட்டார் ஆண்டாண்டு காலம் அழுது புலம்பினாலும் மாண்டார் வருவதில்லை என்ற அறிவு மேலோங்கி இறப்பால் ஏற்பட்ட இழப்பை தாங்கிகொள்ள முயற்சிப்போம். அவர்களே ஒரு நோய்நொடியில் படுத்து விட்டால் அவர்களுக்கு பணிவிடை செய்து நமது மனத்துயரை குறைத்து கொள்ள பாடுபடுவோம். அவருக்கு நோயும் இல்லை சாகவும் இல்லை எங்கே இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்று தெரியாமல் பிரிந்து தவியா தவிக்கும் துன்பம் இருக்கிறதே அதை வார்த்தையில் சொல்லிவிட முடியாது அனுபவித்து பார்த்தால் தான் அதன் நெருப்பு தன்மை என்னவென்று தெரியும். இனம் புரியாத பிரிவு துயரம் மனித மனதை நெருப்பில் போட்ட புழுவை போல் துடி துடிக்க செய்து விடும். எப்பேர் பட்ட வீராதி வீரனாக இருந்தாலும் தனக்கு இனிமையானவர் காணமல் போய்விட்டார் என்று தெரிந்தவுடன் தனது வீர தீரமெல்லாம் தவிடு பொடி ஆவது போல் ஆகிவிடுவார். ராமனும் அந்த துயரில் தான் இருந்தார் 

இந்த துயர நேரத்தில் தான் சுந்தரகாண்டம் ஆரம்பமாகிறது. வாயு குமரன் என்ற ஆஞ்சநேயன் வருகிறான் அவன் காற்றின் மைந்தன் காற்று உயிர் கொடுப்பது உயிர்களுக்கு சக்தி கொடுப்பது சக்தி என்பதே காற்றில் தான் இருக்கிறது. அனுமனும் காற்றாக வந்து பிரிவு துயரத்தால் நிலை தடுமாறி கிடக்கும் ராமனுக்கு உயிர் கொடுக்கிறான் ராமன் உயிருக்கு சக்தி கொடுக்கிறான் ராமன் இதுகாறும் அனுபவித்த கஷ்டமெல்லாம் சுந்தரகாண்டத்தின் முடிவில் காற்றில் தூசி பறப்பது போல பறந்து விடுகிறது. சுந்தரகாண்டத்தில் ராமனின் கஷ்டம் நீங்குவது படிப்படியாக சொல்லபடுவது போல நானும் அந்த காண்டத்தை படித்தால் எனது கஷ்டமும் படிப்படியாக நீங்கி விடும் துயரத்தால் புத்திதடுமாறி கிடந்த ராமன் வெற்றி வீரனாக ஆவதற்கு ஆயத்தமானது போல நானும் வாழ்க்கை போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்று நம்புகிறான். சுந்தரகாண்டத்தை படிக்கும் சாதாரண மனிதன்.

சுந்தரகாண்டம் வெறும் நம்பிக்கையை மட்டும் தருகின்ற பகுதி அல்ல அதற்குள் கண்ணுக்கு தெரியாத இன்னெதென்று விளக்கி சொல்ல முடியாத எதோ ஒரு சூட்ச சக்தி மறைந்திருக்கிறது. அந்த சக்தி சுந்தரகாண்டத்தை பாடிய புலவர்களில் மொழியில் இருக்கலாம் அல்லது அதன் கதாபாத்திரங்களில் உள்ள தெய்வீக தன்மையில் இருக்கலாம். இல்லை என்றால் அதில் நிகழும் நிகழ்வுகளை வரிசையாக சிந்தித்து பார்ப்பதனால் ஏற்படும் மன ஒருமை பாட்டால் இருக்கலாம் வெற்றி என்னவோ சர்வ நிச்சயமாக கிடைக்கிறது. நானறிந்தவரை சுந்தரகாண்டத்தை படித்து திருமணம் முடிந்த வயது கடந்த வாலிபர்கள் வாலிப பெண்கள் ஏராளம் ஏன் அவ்வளவு தூரம் போவானேன் நானே ஐந்து வருடங்களுக்கு முன்பு சில நம்பிக்கைகளின் காரணமாக பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கடன் பட்டிருந்தேன் சுந்தரகாண்டத்தை படி கடன் தீரும் என்று ஒரு பெரியவர் சொன்னதனால் நம்பிக்கை இல்லாமல் படித்தேன் நம்பும் படியாக கடன் தீர்ந்தது. 

சுந்தர காண்டம் முழுக்க முழுக்க அனுமனின் செயல்களை அடிப்படையாக வைத்தே நகர்கிறது. இந்த காண்டத்தில் அனுமன் முழுமையான சுந்தரனாக செளந்தரியம் நிறைந்தவனாக நமக்கு தெரிகிறான். ஆஞ்சநேயன் குரங்கை போன்ற உருவம் உடையவன் அவனுக்கும் அழகுக்கும் சம்மந்தம் இல்லை என்று சிலர் நினைக்கிறோம். ஆனால் ஆதி கவிகளான வால்மீகியும் கம்பனும் அப்படி நினைக்கவில்லை அழகே வடிவான ராமனுக்கு கூட சுந்தரன் என்ற பெயர் தரப்படவில்லை மந்தியின் வடிவமான அனுமனுக்கு தான் அந்த பெயர் தரப்பட்டிருக்கிறது.

   ஆதிகால மக்கள் எதை பேசும் போதும் அமங்கலமான எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். பழம் மிகுந்த சோலைக்குள் காய்களை பறிப்பவன் முட்டாள் என்பது அவர்களின் கருத்து அதை அடிப்படையாக கொண்டு அனுமனை அவலட்சணன் என்று சொல்வதற்கு பதிலாக சுந்தரன் என்று சொன்னார்களோ என்னவோ அப்படியும் இருக்கலாம் தானே?

        ந்த கால மனிதர்களை விட அக்கால மனிதர்கள் சகல விஷயங்களிலும் மனிதாபிமானம் மிக்கவர்களாகவும் எதையும் சீர்தூக்கி பார்க்கும் அறிவு படைத்தவர்களாகவும் வருங்காலத்தை மனதில் வைத்து முடிவு எடுப்பவர்களாகவும் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை அழிவு வேலைக்கு மிக அதிகமாக பயன்படும் அணுவாயுத சோதனை நடத்தி வெற்றி பெற்றதை அன்பே வடிவான புத்தர் பெருமானின் திருபெயரை குறிப்பிட்டு புத்தர் சிரித்தார் என்று வியாக்கியானம் செய்யும் புத்தி நமக்கு தான் உண்டே தவிர அவர்களுக்கு கிஞ்சித்தும் கிடையாது. அதற்காக அவர்கள் குரங்கு வடிவான அனுமனை அவலட்சணன் என்று அழைப்பதற்கு பதிலாக சுந்தரன் என்று அழைத்தார்கள் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவர்கள் அப்படி நினைத்திருந்தால் அனுமனை வானர இனமாக காட்டிருக்க வேண்டிய அவசியமில்லை அழகு பொருந்திய மனிதனாகவே காட்டியிருக்கலாம் 

இங்கே அஞ்சனை குமாரனை சுந்தரன் என்று அழைப்பதற்கு அர்த்தம் பொருந்திய வேறு ஒரு காரணம் உண்டு பொதுவாக நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் அழகு என்றவுடன் அது வெளியில் தெரியும் பொருளை வைத்து மட்டுமே அர்த்தம் காண்கிறோம். அதாவது உடம்பு மட்டும் அழகு என்ற எண்ணம் நம்மிடம் உள்ளது. இது தவறு அழகு என்பதற்கு வேறொரு பொருளும் இருக்கிறது. அழகு என்றால் நித்தியம் அழியாதது என்ற பொருளும் இருக்கிறது. உடலழகை மட்டுமே அழகாக எடுத்து கொண்டால் அது அழியக்கூடியது நமது உடம்பும் ஒவ்வொரு நாழும் ஏன் ஒவ்வொரு மணிநேரம் கூட அழிந்து கொண்டே இருக்கிறது. அப்படி அழியும் பொருள் அழகு பொருந்தியது என்று கருதினால் அது தவறாகும். உடலை தாண்டி உள்ள மனதை அன்பை அறிவை அழகு என்று சொல்வதில் பொருள் உண்டு காரணம் உடல் அழிந்தாலும் அறிவும் அன்பும் அழிவதில்லை. எனவே மனத்தால் அழகான அனுமனை சுந்தரன் என்று அழைப்பதில் வேறு மாதிரியான கருத்துக்கள் கிடையாது. 

அனுமனுக்கு வேறொரு பெயரும் உண்டு அது சொல்லின் செல்வன் என்பது. அதாவது அறிவு கூர்மை மிகுந்த சொற்களை மட்டுமே பேச வல்லவன் அனுமன் அவனது அறிவு திறத்திற்கு ஏராளமான சான்றுகள் ராமாயணம் முழுவதும் காணக்கிடைக்கிறது. அன்னை சீதா தேவியை தேடி நாலாபுறமும் வானர வீரர்கள் போகிறார்கள் போனவர்கள் பலர் வெறும் கையோடு திரும்பி வருகிறார்கள். யாருக்குமே ராமனிடம் சொல்ல நல்ல செய்தி இல்லை தினசரி வந்து சேருகின்ற தோல்வி செய்தியே ராமனின் இதய பாரத்தை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நாயகியின் பிரிவும் வானரர்கள் தருகின்ற தகவலும் ராமனை சோர்ந்து போக செய்து விட்டது. அவன் உண்ணவில்லை உறங்கவில்லை உயிரை கையில் பிடித்து கொண்டு நடமாடுகிறான். அந்த நேரம் அனுமன் வருகிறான் ஆவலோடு இவனாவது நல்ல செய்தியை தரமாட்டானா என்று ராமன் பார்கிறான் ராமனின் பார்வையில் உள்ள துக்கத்தை ஏக்கத்தை ஒரே வினாடியில் புரிந்து கொண்ட அனுமன் கண்டேன் கற்பின் கனலை என்று சொல்கிறான். 

அவன் சீதையை கண்டேன் என்று சொல்லியிருக்கலாம் ஆனால் சீதை என்ற வார்த்தையை சொல்லும் போதே அவள் இப்பொழுதும் கிடைக்கவில்லையோ என்ற எண்ணம் ராமனுக்கு வந்துவிட கூடாது. அதனால் அவன் மனக்கலக்கம் அதிகமாகி விட கூடாது. என்று கணக்கு போட்ட அனுமன் கண்டேன் என்ற சுப செய்தியை முன்னால் வைக்கிறான். கண்டேன் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதாது அவள் உயிரோடு மட்டுமல்ல உயிரைவிட மேன்மையான ஒழுக்கத்தோடும் இருக்கிறாள் என்பதை காட்டவே கற்பின் கனலை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான். பேச தெரிந்தால் மட்டும் போதாது எந்த வார்த்தையை எங்கே பயன்படுத்த வேண்டும் என்ற இங்கிதமும் தெரிந்தவனே அறிவாளி அந்த வகையில் அனுமனின் அறிவின் அழகு மாசுமருவற்ற சுந்தரமானது அதனால் அவனை சுந்தரன் என்று அழைப்பது தவறு அல்ல. 

ராம ராவண யுத்தத்தில் இந்திரஜித் பயன்படுத்திய கணையால் இளையபெருமாள் உட்பட ஏராளமான ராம சேனை வீரர்கள் பாதிப்படைந்து விடுகிறார்கள். இலக்குவணன் இறந்து போனதாகவே ராமன் நினைத்து கண்ணீர் வடிக்கிறான். அந்த நிலையில் சஞ்சீவி மலையை கொண்டு வந்து அனைவரையும் உயிர்பிழைக்க செய்கிறான் அனுமன் அதனால் அவனுக்கு சஞ்சீவி என்ற பெயரும் அமைகிறது. சஞ்சீவி என்றால் பாதுகாப்பவன் என்பது பொருளாகும். அனுமன் இந்த நேரத்தில் மட்டும் சஞ்சீவியாக இருக்கவில்லை யுத்தம் துவங்குவதற்கு முன்பே இலங்கையில் அல்ல கிஷ்கிந்தாவிலே நல்ல செய்தியை சொல்லி ராமனையும் மன துயரிலிருந்து காத்திருக்கிறார். அப்படி பட்ட அருஞ்செயல் செய்த அவன் சுந்தரன் என்பது சந்தேகமில்லை காரணம் தனது செயலால் அவன் அழகு பொருந்தியவனாக இருக்கிறான். 

     னுமன் ராமனை காத்ததாக சொல்கிறீர்கள் அதுமட்டுமல்ல அவன் இலஷ்மணனையும் பல வானர வீரார்களையும் காத்திருக்கிறார். அத்தோடு அசோகவனத்தில் உயிரை மாய்த்து கொள்ள இருந்த சீத்தா பிராட்டியையும் காத்திருக்கிறான் அப்படி பட்ட அனுமனை வெறும் சேவகனாக மட்டுமே காவியங்கள் காட்டுகிறதே அது எந்த வகையில் சரியானது?

     ஞ்சநேய சுவாமியை சேவகன் என்று குறைவாக மதிப்பிடுவது மிகவும் தவறு அவர் சாதாரண ராஜாக்களின் சேவகன் அல்ல சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமசந்திர மூர்த்திக்கே சேவகன் மகாலஷ்மியான தாயாருக்கும் எம்பெருமானுக்கும் தூதாக சென்று இருவரையும் சேர்த்து வைத்து அழகு பார்க்கும் தகுதி ஆஞ்சினேயருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது ஜனகமகராஜனும் தசரதனும் பெற்ற பேரை உலகமே புகழும் வண்ணம் மீண்டுமொருமுறை மாருதி மட்டுமே பெற்றார். இதுமட்டும் அல்ல ராமாயணத்தில் ராமனுக்கு இணையாக அவன் அருகில் அமரும் தகுதி சீத்தா தேவிக்கு பிறகு அனுமனுக்கே கிடைத்தது. ராமன் அருகில் உட்காரும் தகுதியை பெறுவதை விட இந்த உலகில் வேறு என்ன நற்பேறு வேண்டும். 

ராமனின் அருகில் இருப்பது அனுமனின் பெருமையை மட்டும் காட்டவில்லை நிஷ்காமியமாக அதாவது பயனை எதிர்நோக்காமல் பகவானுக்காக சேவை செய்கின்ற எவனும் அவர் அருகில் போக முடியும். அவருக்கு இணையாக பக்கத்திலையே அமர முடியும் கடவுள் அருகில் அமருகின்ற தகுதி சுயநலமற்ற அனைவருக்குமே உண்டு என்பதை காட்டுவதே அனுமனின் பக்தி தத்துவம் அப்படி பட்ட உயர்ந்த பக்திமானான அனுமனின் புகழை பாடும் சுந்தரகாண்டத்தை படித்தால் உலக நன்மைகள் மட்டுமல்ல உலகத்தை கடந்த பிறகும் கிடைக்க வேண்டிய நன்மைகள் தானாக கிடைக்கும். இது ஆசை வார்த்தை அல்ல அனுபவ வார்த்தை நம்பிக்கையோடு சுந்தர காண்டத்தை படியுங்கள் நிச்சயம் உங்கள் வாழ்வில் கசந்த காலங்கள் மாறி வசந்த காலங்கள் உருவாகும். http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *