Store
  Store
  Store
  Store
  Store
  Store

நரேந்திர மோடி மண் குதிரையா...?


   
     ந்தியர்கள் அனைவரின் முன்னாலும் இப்போது மிக பிரமாண்டமாக எழுந்துநிற்கும் ஒரே கேள்வி நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதே இந்தியராக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுகொள்ளும் உரிமை சட்டப்படி உண்டு தகுதியும் மக்களின் எகோபித்த ஆதரவும் யாருக்கு இருக்கிறதோ அவர் பிரதமர் பதவிக்கு வரலாம் என்பது அடிப்படை சித்தாந்தம். இந்தியாவில் பெருவாரியாக இந்துமக்கள் இருக்கிறார்கள் அதனால் ஒரு இந்து மட்டுமே பிரதமராக வரமுடியும் என்ற நிலை கிடையாது. காரணம் ஒருவரின் தகுதியை நாம் எப்போதுமே மதத்தின் அடிப்படையிலையோ இனத்தின் அடிப்படையிலையோ எடை போடுவது கிடையாது. இங்கு மிக சிறுபான்மையாக இருக்கும் மக்களில் ஒருவர் கூட நாட்டு தலைமை பொறுப்புக்கு வரலாம். இது தான் இந்திய ஜனநாயகத்தின் மிக உயரிய தத்துவம். 

ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரை இந்த தத்துவம் தத்துவமாக ஏட்டில் இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை. ஒருசிலர் இந்த முறையை மீறி பதவிக்கு வந்திருக்கலாம் அது சிறிது கால விதிவிலக்காக இருந்ததே தவிர நிரந்தரமான நிலையாக இன்றுவரை இல்லை. நாடு விடுதலை பெற்ற நாள்முதல் இன்றுவரை நேரு குடும்பமும் அவரது வாரிசுகளும் மட்டுமே ஆள தகுதி பெற்றவர்கள் மற்றவர்கள் அவ்வளவான தகுதியை பெறவில்லை என்பதே நிஜமான நடைமுறை கருத்தாக இருந்து வருகிறது. நேருவுக்கு பிறகு அவர் மகள் இந்திரா பேரன் ராஜீவ் இப்போது அவர் மனைவி சோனியா. சோனியா காந்தி நேரடியாக பிரதமர் பொறுப்பை ஏற்கவில்லையே தவிர மற்றப்படி அதிகாரங்கள் அனைத்துமே அவர் காலடியில் தான் கிடைக்கிறது. 


நேரு குடும்பத்தை சாராத லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், வி பி சிங், வாஜ்பாய் உள்ளிட்ட மற்ற பிரதமர்களும் தற்காலிய ஏற்பாடுகளாக நாட்டை ஆண்டார்களே தவிர அவர்களுக்கு முழுமையான நியாயமான காலக்கெடு கொடுத்து திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை வரலாறு கொடுக்கவில்லை. இதனாலையே நேரு குடும்பம் மட்டுமே நாட்டை ஆளும் தகுதி பெற்றது என்ற ஒரு மாயை மக்கள் மத்தியில் பரவலாக நிலவி வருகிறது. அந்த மாயையின் இன்னொரு வாரிசாக இப்போது அடுத்த பிரதமர் போட்டிக்கு ராகுல்காந்தி தயாராக நிற்கிறார். 

ராகுல் காந்தி பிரதமராக வரக்கூடாது என்றோ அவருக்கு அந்த உரிமை இல்லை என்றோ யாரும் சொல்ல முடியாது. ஆனால் இனத்தாலும் மதத்தாலும் மொழியாலும் பண்பாட்டு கூறுகளாலும் பரந்துபட்டு கிடக்கும் பாரத தேசத்தை ஆளுகின்ற அனுபவமும் தகுதியும் அவருக்கு இருக்கிறதா? என்பதை சிந்திக்க வேண்டும். சிலர் கேட்கிறார்கள் ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னால் அவருக்கு நாட்டை ஆளும் அனுபவம் இருந்ததா? பதவிக்கு வந்தபிறகு அவர் அதை பெறவில்லியா? என்று அவர்கள் தங்களது மனசாட்சியை சரியான முறையில் தட்டி பார்த்தார்கள் என்றால் உண்மை நிலை என்னவென்று புரியும். ராஜீவ் காந்தி இந்திய தலைமைக்கு திட்டமிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலில் வரவில்லை அவரது தாயார் வன்முறையாளர்களால் ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்யப்பட்ட போது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட கூடாது சரபத்பவார் அர்ஜுன் சிங் போன்ற முன்னணி தலைவர்கள் கட்சியை தங்கள் வசம் கொண்டுசென்று விட கூடாது என்பதற்காகவே ராஜீவ் அவசர அவசரமாக பிரதமார்க்க பட்டார். அந்த நேரத்தில் அவர் பிரதமராக வரவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல நாட்டிலும் கூட சில குழப்பங்கள் உருவாகி இருக்கும். அது அவர் வரவால் தடுக்க பட்டது. 

ஆனால் சில நாட்களிலேயே திருவாளர் பரிசுத்தம் என்று அழைக்கப்பட்ட ராஜீவ் காந்தியை சுற்றி துதிபாடிகளின் கூட்டம் என்ற பழம் பெருச்சாளிகள் சூழ்ந்து விட்டார்கள். உண்மையாகவே நாட்டிற்கு எதையாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்த ராஜீவ் காந்தியின் மனம் புகழ் என்ற போதையிலேயே நின்றுவிட்டது. அதன் பிறகு அவரால் நிகழ்ந்த அனர்தனங்கள் எத்தனை என்று நமக்கு தெரியும். ஏறக்குறைய ராஜீவ் காந்தியை போலவே இன்றைய ராகுல் காந்தியும் இருக்கிறார். இவரிடம் அதீதமான கற்பனை வளமும் எதிர்பார்ப்பும் இருக்கிறதே தவிர தெளிவான அறிவு முதிர்ச்சி என்பதை காணமுடியவில்லை. 


ராஜீவ் காந்தியை விட தகுதியை வளர்த்து கொள்ளும் வாய்ப்பை ராகுல் காந்திக்கு இறைவன் அதிகமாகவே கொடுத்திருக்கிறார். இரண்டு முறை இந்தியாவை ஆளுகின்ற வாய்ப்பு அவர் கட்சிக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் பல நல்ல அனுபவங்களை பெற்றிருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யாமல் தகப்பன் சாமி போல நடந்து கொண்டு எனக்கு புத்தி சொல்லும் தகுதி யாருக்கும் இல்லை என்பதாகவே இதுவரை இருந்துவருகிறார். திமிங்கலங்களும் சுறா மீன்களும் வட்டமிடுகின்ற அரசியல் சமுத்திரத்தில் அவைகளோடு நேருக்கு நேராக மோதி வீழ்த்துகின்ற தகுதியை பெறுவதை விட உலாவரும் சுறாக்களில் நானே மிகப்பெரிய சுறா என்பதாக காட்டிகொள்ள விரும்புகிறாரே தவிர தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கவில்லை. 

காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருக்கும் இந்த இரண்டு ஐந்தாண்டுகளில் அரசியல் சாராமல் மக்களுக்காக தொண்டுசெய்தால் தனது கட்சி தானாக வளரும் என்ற ஞானம் அவருக்கு வரவில்லை. கட்சிகாரர்களை எப்படியெல்லாம் ஏவலாளர்களாக பயன்படுத்தலாம் என்பதையும் மலிவான முறையில் விளம்பரம் படுத்திக்கொள்ள என்னென்ன வழிகள் இருக்கிறது என்பதை பற்றியும் சிந்தித்தாரே தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லை. ராகுல்காந்தி உத்திரபிரேதசத்தில் கையாண்ட தேர்தல் யுத்திகள் பயனற்று போனதனால் அவரது அறிவு திறமையை குறைத்து மதிப்பிட கூடாது காரணம் உபி அரசியல் சிக்கல் மிகுந்த ஜாதிகளின் பின்னணியை கொண்டது எனவே அங்கே ராகுலின் நேர்மையான முறை தோற்றுவிட்டது அதற்கு அவர் பொறுப்பல்ல என்று சிலர் வாதிடலாம். 

உபி மாநில காங்கிரஸ் தலைவர்கள் சில தொகுதிகளை சுட்டிக்காட்டி இங்கே நாம் போட்டியிட வேண்டாம் அதற்கு பதிலாக வேறு சில இடங்களில் போட்டியிடலாம் என்றார்கள். ஆனால் அவர்களின் அனுபவபூர்வமான அணுகுமுறையை ராகுல் ஏற்றுக்கொள்ளவில்லை. பிடிவாதமாக தான் தேர்ந்தெடுத்த தொகுதிகளிலேயே வேட்பாளர்களை நிறுத்தினார் கட்சிகாரார்கள் எதிர்பார்த்தபடி தோல்வியும் தழுவினார். இதுவே உபியில் காங்கிரஸ் அடைந்த பின்னடைவிற்கு மூலகாரணமென்று காங்கிரஸ் காரர்களே ஏற்பாடு செய்த ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இதை விட வேறு ஆதாரங்கள் எதுவும் ராகுலின் அரசியல் சாதுர்யத்திற்கு தேவையில்லை. 

ராகுல்காந்தியிடம் அனுபவம் இல்லை அரசியல் சாதூர்யம் இல்லை என்று சொல்வதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் நாடு இன்று எதிர்நோக்கி உள்ள மிக முக்கியமான பிரச்சனைகளை தீர்பதற்கு கொள்கைரீதியான திட்டங்கள் எதையும் அவர் முன்வைக்கிறாரா அது தெளிவானதாக நடைமுறைக்கு சாத்தியமுள்ளதாக இருக்கிறதா என்பதை நாட்டுமக்கள் அறிந்து கொள்ள இன்றுவரை அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவரின் கவனமும் அவர் கட்சியின் தலைமையின் கவனமும் முழுக்க முழுக்க ராகுல் காந்தியை பிரதமர் போட்டிக்காக முன்னிறுத்துவதில் இருக்கிறதே தவிர வேறு எதிலும் இல்லை. 

ஆளும் தரப்பில் தான் தலைமையை அறிமுகபடுத்துவதில் தயக்கமும் மயக்கமும் இருக்கிறது எதிர்முகாம் தெளிவாக இருக்கிறது என்று நம்மால் கூற முடியவில்லை. நடை பெற்றுகொண்டிருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதன் குஜராத் தலைவர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளருக்கு முன்னிறுத்த படுவார் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. அதுமட்டும் அல்ல மோடியே அந்த இடத்திற்கு வரவேண்டும் என்று திட்டமிட்டு சில காய்கள் அவர் கட்சியிலேயே சில வருடங்களுக்கு முன்பிருந்தே நடத்தபட்டு வருகிறது. பாஜகவில் மோடியை தவிர தகுதி வாய்ந்த தலைவர்கள் யாரும் இல்லை என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே சில தலைவர்களின் மீது தேவையற்ற வீண் பழிகளும் சுமத்தப்பட்டு வருகின்றன.


நாட்டில் உள்ள பெருவாரியான ஊடகங்கள் நரேந்திரமோடியின் ஆட்சியால் குஜராத் மாநிலம் பூத்து குலுங்குவதாகவும் விமர்சையாக காட்டி வருகின்றன. மோடியின் அரசு குஜராத் மாநிலத்திற்கு பல நல்லவைகளை செய்திருக்கலாம் அதனால் குஜராத் மாநிலம் முன்னேறிய மாநிலங்களின் வரிசையிலும் இன்று இருக்கலாம். ஆனால் குஜராத் என்பது வேறு இந்தியா என்பது வேறு என்பதை நாம் சிந்திக்க வேண்டும். குஜராத்தில் பொதுவாகவே எப்போதும் வறுமையின் தாக்கம் மிக குறைவு மக்களும் ஓரளவு நெளிவு சுளிவு அறிந்தவர்கள் படித்து வேலைக்கு போகவேண்டும் என்று நினைக்கும் குஜராத்திகள் மிக குறைவு தொழில் செய்ய வேண்டும் அதன் மூலம் தன்னிறைவு வேண்டும் என்று நினைப்பவர்களே அங்கு அதிகம். 

ஆனால் பரந்த இந்தியாவில் இத்தகைய மனப்பாங்கு மிக குறைவு. வடகிழக்கு மாகாணங்களும் சில வடக்கு மாகானங்களும் அடிப்படை வசதிகளை கூட இன்னும் பெறவில்லை. கடலை பார்க்காத இந்தியன் இருக்கலாம். அதில் அதிசயம் இல்லை ஆனால் மின்சார விளக்கை இதுவரை பார்க்காத இந்தியர்களும் இருக்கிறார்கள். அவர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக முன்னேற்ற பாதையில் நடைபோட வைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. மிக கடினமான உழைப்பும் தெளிவான திட்டமிடுதலும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். இவைகள் நரேந்திர மோடியிடம் இருக்கிறதா? 

மோடியின் மேலே மிக தீவரமாக சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்ற முத்திரை குத்தபட்டிருக்கிறது. குஜராத்தில் உள்ள முஸ்லிம்களும் கிருஸ்தவர்களும் கூட மோடியை ஏற்றுகொண்டாலும் மற்ற பகுதியில் உள்ளவர்கள் முழுமனதாக ஏற்றுகொள்வார்கள் என்று சொல்ல இயலாது. காரணம் அவர் மீதுள்ள களங்கமும் அச்சமும் அப்படி. ஒரு முதல்வராக இருக்கும் போது அவருடைய எண்ணங்கள் சொந்த மாநிலத்தை மட்டுமே தாக்கும் அவரே ஒரு தேச தலைவராக வருகின்ற போது நாட்டு மக்கள் அனைவரையும் திருப்தி படுத்துகின்ற மனோபாவம் வேண்டும் அது அவரிடம் இருக்கிறதா? இல்லையா? என்பது நமக்கு தெரியவில்லை. 

சிலர் சொல்கிறார்கள் மோடியின் செயல்பாடுகளிலும் பேச்சுகளிலும் பெரிய மாறுதல்கள் தெரிகின்றன. இரண்டாயிரத்தில் அவர் கருத்துக்களில் அதிகமான இந்துத்துவா அழுத்தம் இருக்கும். இப்போது அது மாறி இருக்கிறது முஸ்லிம்களின் பலதார மணத்தையும் குடும்ப கட்டுபாட்டில் அவர்கள் ஈடுபடாததையும் கடுமையாக விமர்சனம் செய்த நிலை போய் விலைவாசி ஏற்றம் ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகியவைகளையே அதிகம் பேசுகிறார். மேலும் வாஜ்பாய் போன்று மிதவாத கொள்கைகளே நடைமுறைக்கு ஏற்றது என்றும் நம்ப துவங்கி விட்டார் என்கிறார்கள். 

பொதுவாக இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தியையும் நரேந்திர மோடியையும் முன்னிறுத்தி பார்க்கும் போது ராகுலின் திறமையின்மை பளிச்சென தெரிகிறது மோடியின் திறமை அதிகமாக இருப்பது போல தெரிகிறது. ஒருவேளை மோடியின் அதிக திறமை என்பது ஒரு மாய தோற்றமாக கனவு இல்லமாக கானல் நீராக இருக்கலாம். ஆனால் இன்றைய இந்தியன் இந்த இரண்டு குதிரைகளில் ஒன்றின் மீது ஏறியே ஆகவேண்டிய நிற்பந்தத்தில் நிற்கிறான். காரணம் அவன் முன்னால் ஓடக்கூடிய வேறு குதிரைகள் எதுவும் உருப்படியாக இல்லை. குதிரையில் எரிய பிறகு தான் அது மண்குதிரையா அல்லது பந்தைய குதிரையா என்பது தெளிவாக தெரியும்.


Contact Form

Name

Email *

Message *