Store
  Store
  Store
  Store
  Store
  Store

செயல் மட்டுமே இறைவனைக் காட்டும் !

இந்து மத வரலாற்று தொடர் 44


     ரு மனிதன் நன்றாக இயங்க வேண்டுமென்றால் அவனது இதயம் திறம்பட வேலை செய்ய வேண்டும் ஒரு ஓவியம் பார்ப்பதற்கு அழகாவும் பார்ப்பவரை ஈர்ப்பதாகவும் இருக்க வேண்டுமானால் அதை வரைந்தவனுக்கு அபரீதமான கற்பனை வளம் இருக்க வேண்டும். ஒரு கட்டிடம் விண்ணை நோக்கி கம்பீரமாக எழுந்து நிற்க வேண்டுமானால் அதற்கு ஆழமான வலுவான அஸ்திவாரம் அமைந்திருக்க வேண்டும் அதே போலவே ஒரு மதமானது காலகாலத்திற்கு நிலைத்து நின்று பலதரப்பட்ட மக்களை தம்பால் அரவணைத்து வளர்ந்து செழிக்க வேண்டுமானால் அதற்கு வளமையான ஆழமான அறிவு பூர்வமான அனுபவத்திற்கு ஒத்துவரக்கூடிய தத்துவம் தேவை தத்துவம் இல்லாத மதம் மூளை இல்லாத மனிதனை போல விபரீதமான செயல்களை செய்து தானும் அழிந்து மற்றவர்களையும் அடிச்சுவடு இல்லாதவாறு அழித்துவிடும். 

நமது இந்தியாவில் தோன்றிய குறிப்பாக இந்து மதத்தின் ஆதார விழுதுகளில் இருந்து தோன்றிய எந்த மதத்திற்கும் தத்துவங்களில் குறைபாடுகள் என்பதே கிடையாது என்று துணிந்து சொல்லலாம். இன்றைய நாகரீக உலகம் வியந்து பார்க்க கூடிய அளவிற்கு அறிவார்த்தமான தத்துவங்களை தனக்குள் கொண்டுள்ளது இந்திய மதங்கள். குறிப்பாக சொல்வது என்றால் இந்து மதத்தின் மிக உறுதியான கிளைகளில் ஒன்றான சீக்கிய மதத்தின் தத்துவங்கள் மனதை கவரக்கூடியது மட்டுமல்ல மனிதனை மனிதனாக மாற்ற கூடியதாகவும் இருக்கிறது. காரணம் சீக்கிய சமயம் கண்ணுக்கு தெரியாத புலங்களுக்கு அகப்படாத மாயமாக இருக்கிறதா? இல்லையா? என்ற வாதபிரதிவாதங்களுக்கு உட்படுத்த பட்ட எந்த விஷயத்தை பற்றியும் பேசவில்லை அல்லது அவைகளை பற்றி கவலை அடையவில்லை சீக்கியம் கண்ணுக்கு நேரே தெரிகின்ற விஷயங்களை பற்றி மட்டுமே பேசுகிறது அதற்கான விளக்கங்களையும் தருகிறது. 

சுவாமி விவேகானந்தர் ஒருவன் கீதை படிக்கும் நேரத்தில் கால்பந்தாட்டம் ஆடினால் நன்றாக இருக்கும் என்று சொல்வார். இதன் அர்த்தம் கீதை படிப்பது வீணான வேலை என்பது அல்ல. கருத்துக்களும் தத்துவங்களும் பலகீனமான மனதில் படியும் என்றால் அவைகள் அனர்தமனமான வடிவங்களையே அடையும். உறுதியான பலம் பொருந்திய சரிரத்தில் இருக்க கூடிய கருத்துக்கள் கட்டுப்பாடு மிக்கதாகவும் கட்டி அனைத்து செல்வதாகவும் இருக்கும். அதனால் தான் விவேகானந்தர் முதலில் வலுவான உடம்பை பெரு அதன் பிறகு அறிவையும் மனதையும் விசாலபடுத்து என்கிறார். சுவாமி விவேகனந்தர் இந்த கருத்தை வேதங்களிலும் உபநிசதங்களிலும் இருந்து பெற்றுப்பார் என்பதில் மாற்று கருத்து கூறிவிட முடியாது. ஆனாலும் இந்த கருத்தில் மிக உறுதி தன்மை அவருக்கு சீக்கிய மதத்தை பற்றிய நல்ல எண்ணம் உதித்த பிறகே தோன்றி இருக்கலாம் என்று நமக்கு தோன்றினால் அதில் தவறு இல்லை. 

இந்த உலகம் நிலை இல்லாதது அழிய கூடியது இதில் காணுகின்ற பொருள்கள் அனைத்துமே மனித வாழ்வை கீழ்நிலை படுத்திவிட கூடியவைகள் மனித வாழ்க்கை கூட அநித்தியமானது உண்மையை சொல்வது என்றால் கானல் நீரை நோக்கி பயணப்படும் மாயை என்பதே ஆகும் என்ற கருத்து நமது இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதுமே பல கோணங்களில் பரவி இருக்கிறது. இந்த கருத்தை சீக்கிய மதம் முற்றாக முழுமையாக மறுக்கிறது. அப்படி மறுக்கும் சீக்கிய சமய கோட்பாட்டின் பெயர் மீரி பீரி கொள்கை என்பது. மீரி என்றால் கண்ணுக்கு தெரிகின்ற உலகம் என்பது பொருளாகும். பீரி என்றால் உலகை கடந்த ஆன்மிகம் என்பது பொருளாகும். 

இந்த மீரி பீரி என்ற வார்த்தைகளின் ஆழமான பொருள் என்னவென்றால் இந்த உலகமும் இதை கடந்து செல்கின்ற ஆன்மீக உணர்வும் வேறு வேறானது அல்ல ஒன்ற ஒன்று தாக்கி அழிக்க கூடியதும் அல்ல இரண்டும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இறை உணர்வு என்ற ஆன்மீக பேரானந்தம் கிடைக்கும் என்று சொல்வதற்காகவே உருவாக்க பட்டதாகும். சீக்கிய மதத்தை கட்டி எழுப்பிய குருநானக்கின் காலத்திலேயே மீரி, பீரி கோட்பாடு ஆரம்பமாகி விட்டது என்று சொல்லலாம். 

குருநானக்கின் காலத்தில் பஞ்சாப் பிரேதேசம் முழுவதும் அங்கிங்கெனாதபடி எங்கும் கோரக்நாதர் மரபில் வந்த சித்தர்கள் பரவி கிடந்தார்கள். இந்த மகாபுருஷர்கள் மக்களுக்கு இறையனுபுதி பெறுவதற்க்கான எளிய பல வழிகளை காட்டி கொண்டிருந்தார்கள். இதே நேரத்தில் பஞ்சாப் பகுதி அடிக்கடி மாற்று மதத்தினரின் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி நாடு முழுவதுமே இரத்த ஆறு ஓடிகொண்டிருந்தது. வெட்டி வீழ்த்தவரும் எதிரியின் கொடுவாளுக்கு மக்கள் அஞ்சவில்லை என்றாலும் கோரக்நாதர் சித்தர்களின் சித்தாந்தப்படி எதிரிகளை தாக்காமல் அமைதி பாராட்டுபவர்களாக இருந்தார்கள். மக்களின் இந்த போக்கை குருநானக் விரும்பவில்லை தாக்க வருகின்ற கரங்களுக்கு தங்க பூண் போடுவது கோழைகளின் வேலை கொல்லவரும் கைகளை வெட்டி வீழ்த்துவதே உயர்தரமான ஆண்மை அதுவே இறைவனுக்கு உகந்த செயலாகும் என்று அவர் கருதினார். 

அடித்தட்டு மக்கள் ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையினால் அவதிப்படும் போது படையெடுப்புகளால் அல்லலுறும் போது ஜாதி இன ஒதுக்களால் கீழ்மை படும் போது அவர்கள் மத்தியில் சென்று ஆன்ம விடுதலைக்காக பேசுவதும் முயற்சிப்பதும் தவறு என்பது குருநானக்கின் மிக முக்கிய கோட்பாடாகும். துறவிகளின் தன்னலமற்ற ஞானம் ஆன்ம விடுதலையை மட்டும் குறிகோளாக கொண்டு செயல்பட கூடாது சமூக விடுதலைக்காகவும் செயல்பட வேண்டும் என விரும்பினார். தன் ஒருவனின் மோட்சத்திற்காக தவம் செய்யும் ஞானிகளை அவர் கண்டித்தார். இந்தியாவில் இதுவரை இருந்துவரும் ஆன்மீக ஞானம் மக்களை உலக வாழ்வில் இருந்து தனியாக பிரித்து மரணத்திற்கு பிறகு வரும் ஆன்மீக வாழ்வையே நோக்கமாக கொள்ள செய்து விட்டது என கருதி அதை தவிர்பதற்காக பாடுபட்டார். 

உலகத்தின் உண்மை தன்மையை ஆன்மிகம் ஏற்றுகொள்ள வேண்டும் உலகை செயல்பட கூடியதாக ஆன்மிகம் மாற்ற வேண்டும் உலக செயல்பாடுகளுக்கு ஆணி வேறாக ஆன்மீகத்தின் உயர்ந்த மதிப்பீடுகள் இருக்க வேண்டும் ஆன்மிகம் உலகத்தாலும் உலகம் ஆன்மீகத்தாலும் செழுமை அடைய வேண்டும் என்று சீக்கிய சமயம் கருதுகிறது. உலகத்தை வெறுத்து துறவை மேற்கொள்வதனால் சமூக வாழ்வில் பல சீர்கேடுகள் தலை தூக்கிவிட்டன எனவே உலகத்தை வெறுக்கும் மனோபாவம் மாறி உலகத்தை திருத்தவே முடியாது என்ற எண்ணம் மறைந்து உண்மையான அன்பு வளர வேண்டும் என்பதே சீக்கியத்தின் ஆழமான தத்துவமாகும். 

மீரி, பீரி கோட்பாடு சீக்கிய மதத்தின் வரலாற்று பக்கங்களை பல்வேறு விதமாக வளர்த்தது குருநானக்கின் பாடல் வரிகளில் பல இடங்களில் சமூக அக்கறை அடித்தளமக்களின் சார்பு தன்மை சமூக அடக்கு முறைகளுக்கு எதிரான ஆவேசம் ஜாதி எதிர்ப்பு போன்றவைகளை காணலாம். சீக்கிய மதத்தில் லங்கர் என்ற விருந்து நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது இதில் ஏழை பணக்காரன் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடு பார்க்க படாமல் அனைவருக்கும் சமமான போஜனம் நடைபெறும் கபீர் தாசர் பசித்த வயிற்ருக்கு உணவு தராமல் பிராத்தனை செய்ய என்னை அழைக்காதே என்று பாடியதை அடிப்படையாக கொண்டே இந்த லங்கர் விருந்து அமைகிறது. 

பல சீக்கிய குருமார்கள் இறைவனை தனிவொரு பொருளாக பார்க்காமல் செயல்பாடுகளின் கூட்டு வடிவமாகவே கண்டார்கள் அதாவது செயல் ஒன்றே இறைவனின் வடிவம் என்பது இவர்களின் ஆதார கருத்துக்களாகும். உருகிய இரும்பே இறைவன் இருபுறமும் கூர்கொண்ட வாளே இறைவன் என்ற குரு கோவிந்தரின் பாடல் வரிகள் இந்த கருத்தை மெய்பிப்பதாக இருக்கிறது. அடக்குமுறை அராஜகம் போன்றவற்றை அணிகலன்களாக கொண்ட அன்றைய இஸ்லாமிய மன்னர்களை எதிர்த்து போராட சாதாரண மக்களை ஆயுததாரிகளாக மாற்றுவதற்கு குருகோவிந்தரின் இந்த சித்தாந்தம் பயன்பட்டது என்று அழுத்தமாக சொல்லலாம். 

ஆன்மிகம் சமூகம் மட்டுமல்ல சீக்கியத்தின் பார்வை தனிமனிதனையும் ஒருவித கரிசனத்தோடே பார்க்கிறது. ஒரு மனிதன் எதுவோடும் சம்மந்தமில்லாத தனித்த ஜீவன் அல்ல அவன் இறைவனோடும் உலகத்தோடும் மற்ற மனிதர்களோடும் கண்ணுக்கு தெரியாத பாச கையிற்றால் பிணைக்க பட்டவனே ஆவான் மனித வாழ்வு என்பது கீழ்த்தரமானது அல்ல அது புனிதமானது இறைவனது படைப்பில் மிகவும் அரிதானது மனித வாழ்வு எனவே அதை எக்காரணத்தை முன்னிட்டும் இகழ கூடாது இறைவனை அடைவதற்கு மனிதனுக்கு கொடுக்க பட்டிருக்கும் மிக பெரிய கோடையே வாழ்க்கை ஆகும். 

கடலை கடந்து அக்கறையை அடைவதற்கு ஓடம் எப்படி பயன்படுகிறதோ அதே போலவே மனித வாழ்வை புனித மிக்கதாக லட்சியம் கொண்டதாக ஆக்குவதற்கு அவனது உடல் பயன்படுகிறது. எனவே உடல் என்பது உணர்வுகளால் மனிதனை பந்த பாச தலைக்குள் பிணைக்க வைக்கும் இழிவான கருவி அல்ல மாறாக அதுவும் உயர்ந்ததே. காரணம் உயிர் எப்படி இறைவனால் படைக்க பட்டதோ அது போலவே உடலும் இறைவனால் படைக்க பட்டது இறைவனால் கொடுக்க பட்ட எதுவும் இழிவானது என்று கருதகூடியதாக இருக்காது மனிதனது உடலில் பிரபஞ்சத்தின் மொத்த சக்திகளும் சிறிய அளவில் நிறைந்திருப்பதாக குருக்கிரந்தத்தில் ஒரு பாடல் இருக்கிறது அதில் ஆத்ம விடுதலையை நோக்கி யாத்திரைகள் மேற்கொள்வது தீர்த்தங்கள் ஆடுவது விரதங்கள் மேற்கொள்வது ஆகியவற்றை விட தன்னிலே ஒளிந்திருக்கும் உண்மையை கண்டறியும் உழைப்பே மேலானது என்றும் சொல்லபட்டிருக்கிறது. 

மீரி, பீரி கோட்பாட்டை போலவே சீக்கிய சமயத்தில் ஹெளமைன் என்ற கோட்பாடும் சிறப்பு வாய்ந்ததாகும். ஹெளமைன் என்ற வார்த்தைக்கு நான் எனது என்பது பொருளாகும் அதாவது அகங்காரம் ஆணவம் தனித்துவம் ஆகிய வற்றை இது குறிக்கும் மனித வாழ்வில் உண்மையை நோக்கிய பயனத்திற்கு இத்தகைய அகங்கார புக்திகள் தடையாக இருக்கிறது. அரசர்கள், புரோகிதர்கள் சில துறவிகள் இத்தகைய அகங்கார வசப்பட்டு செய்ய கூடாதவைகளை செய்து மக்களையும் தங்களையும் கீழ்நிலை படுத்துகிறார்கள். வானத்தில் உயரத்தில் பறக்க வேண்டிய காற்றாடி அறுந்து விழுவதற்கு பலகீனமான மாஞ்சா கயிறு எப்படி காரணமாக இருக்கிறதோ அப்படியே இறைவனை நோக்கிய மனித பயணம் சகதியில் வீழ்வதற்கு ஹெளமைன் என்ற ஆணவம் காரணமாக இருக்கிறது. எனவே முன்னேற துடிக்கும் எந்த மனிதனும் ஆணவத்தின் வசம் சிக்கிவிட கூடாது என்று சீக்கியம் எச்சரிக்கை செய்கிறது. 

மனிதன் தான் வேறு உலகம் வேறு இறைவனும் வேறு என்று நினைத்ததனாலே மற்றவைகளை தனது ஆட்சிக்கு கொண்டு வந்து அனுபவிக்க வேண்டும் என ஆசை படுகிறான். உண்மையாவே தான்தான் இவை அனைத்துமாக இருக்கிறோம் என்ற ஞானம் அவனுக்கு இருந்தது என்றால் மற்றவற்றை வலிந்து பெற போராட வேண்டிய அவசியம் இல்லை ஆசையில் வீழ்ந்து அவதிப்பட வேண்டிய தேவையும் இல்லை. 

தன்னை உணர்ந்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து அதனுள் ஐக்கியமானவனை வைதீக தர்மம் முக்தி பெற்றவன் என்று அழைக்கிறது. தன்னையும் தன்னை சூழ்ந்துள்ள அனைத்து உயிர்களையும் தன்னை போலவே நேசிக்கும் மனோபாவம் பெற்ற ஞானியை ஜைனம் தீர்தங்கன் என்று பாராட்டுகிறது. புலன்களை ஒடுக்கி ஆசையை வென்று ஞானம் பெற்றவனை புத்தன் என்று போற்றி வணங்குகிறது பெளத்தம். ஆணவத்தை கொன்று நிஷகாமிய கர்மம் என்ற ஆசையற்ற செயல்களை செய்து தன்னையும் மற்றவனையும் இறைவனின் அம்சமாகவே காணுகின்ற உயர்ந்த மனிதனை சீக்கிய சமயம் குருமுகன் என்று அழைத்து பணிந்து வணங்குகிறது. 


மனிதனாக பிறந்தவன் தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறுகதைகள் பேசி மனம் வாட பல செயல்கள் புரிந்து பெருங் கூற்றுக்கு இறையன பின்மாயும் வேடிக்கை மனிதனாக இல்லாமல் தானும் வாழ்ந்து மற்றவரையும் வாழ வைத்து தான் வாழ்ந்த நாட்டையும் வீட்டையும் உலகத்தையும் சமமாக இறைவனாக கருதி செயற்கரிய செயல்களை மக்களுக்காக செய்து இறந்த பிறகும் இறவாத தன்மை பெரும் குருமுகனாக ஒவ்வொருவனும் மாற வேண்டும் வாழ வேண்டும் என்பதே சீக்கிய சமய பிரிவின் மிக முக்கிய கோட்பாடாகும். இவைகளை பார்க்கும் போது இந்து மத தத்துவங்கள் எதுவும் மற்ற கருத்துக்களை பின்பற்றுவர்கள் அனைவரும் சாத்தானின் குழந்தைகள் அவர்களை ஒழித்து கட்டுவதே இறைபணி என்று சொல்லாமல் அனைவரும் இறைவனது குழந்தைகளே அவனது வடிவமே ஆகும் என்று சொல்கிறது என்பதை மிக எளிமையாக உணர்ந்து கொள்ள முடிகிறது.



Contact Form

Name

Email *

Message *