Store
  Store
  Store
  Store
  Store
  Store

சித்தர்கள் என்பது யார்...?

இந்து மத வரலாற்று தொடர் 45


     லகத்தில் எந்த மதத்திலும் இல்லாத புதுமை நமது ஹிந்து மதத்தில் உண்டு கடவுளுக்கு உருவம் உண்டு பூஜை வழிபாடுகள் அவருக்கு தேவை அவருக்கு தொண்டு செய்வதே மனிதனின் கடமை என்று சொல்பவர்களும் ஹிந்துக்களே கடவுளுக்கு உருவம் இல்லை அவரை தனிப்பட்ட ரீதியில் சுட்டிக்காட்ட எந்த குறியிடும் உதவாது பார்க்கும் பொருள் ஒவ்வொன்றிலும் அவர் இருக்கிறார் அவருக்கு ஆலயமோ வழிபாடோ தேர் திருவிழாக்களோ அவசியம் இல்லாதது என்று சொல்பவர்களும் ஹிந்துக்களே. 

கடவுள் மனித வடிவமாக இருக்கிறார் கஷ்டப்பட்டு துன்பப்பட்டு வேதனையில் அல்லலுறும் தரித்திரனுக்கு தொண்டு செய்வதே இறைவனுக்கு வழிபாடாகும் என்று அஹிம்சை சேவையை பற்றி அக்கறையோடு பேசுபவர்களும் யாக குண்டம் என்பது மனித உடம்பு அதில் எரிகின்ற நெருப்பு மனிதனது ஞானம் அதில் போடப்படுகிற ஆகுதி பொருள்கள் எல்லாம் காமம், மோகம், லோபம் போன்ற ஆணவத்தின் கழிவு பொருள்களே என்று ஞான மார்க்கம் பேசுபவர்களும் சதா சர்வகாலம் இறைவனை பற்றியே சிந்தனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை காரணம் இறைவன் இவன் தன்னை நினைக்கிறானா? இல்லையா என்பதை கண்காணிப்பவனாக எப்போதும் இல்லை தனக்கு இடபட்டிருக்கின்ற கடமையை சரிவர செய்கிறானா? என்பதை மட்டுமே பார்க்கிறான் என்று கர்ம யோகம் பேசுகிறவர்களும் ஹிந்துக்களே. 

கடவுளும் இல்லை அவனை அடைவதற்கு வழிகளும் இல்லை இல்லாத பொருளை இருப்பதாக நினைப்பதும் அதை அடைவதற்கு பாடு படுவதும் அறியாமையின் வெளிபாடு நாம் கண்களால் பார்ப்பது மட்டுமே காதுகளால் கேட்பது மட்டுமே நிஜமானது நமது புலங்களுக்கு அப்பாற்பட்டு எந்த சக்தியும் கிடையாது இந்த உலகமும் இதிலுள்ள பொருள்களும் ரசாயனங்களால் தானாக உருவானதே தவிர இதை கடவுள் படைக்கவில்லை படைப்பதற்கு கடவுள் என்ற சக்தி தனியாக தேவை இல்லை என்று நாத்திகம் பேசுபவர்களும் ஹிந்துக்களே இது மட்டும் தான் ஹிந்து மதத்தின் தனித்தன்மை என்று அடித்து சொல்லல்லாம். வேறு எந்த மதத்திலும் கடவுள் இல்லை என்று சொல்லி கொண்டு அந்த மதத்திலேயே இருக்க முடியாது. கடவுள் இல்லை என சொல்பவர்கள் ஒன்று ஒதுக்க படுவார்கள் அல்லது ஒழித்து கட்ட படுவார்கள். இது தான் மற்ற மதங்களில் நடக்கும் ஆனால் ஹிந்து மதத்தில் மட்டுமே நாத்திகம் பேசுகின்றவனும் கடவுளின் குமாரனே என்று அரவணைக்கும் தன்மை இருக்கிறது. 

இப்படி வழிபாட்டு சுகந்திரத்தை வாரி வழங்கி இருப்பதில் பல இடர்பாடுகள் இருப்பது உண்மை என்றாலும் அறவழி நின்ற அறிவுவழி வென்ற பல ஞானிகளும், யோகிகளும், சித்தர்களும் இந்தியாவில் மட்டுமே குறிப்பாக ஹிந்து மதத்தில் மட்டுமே மிக அதிகமாக தோன்றினார்கள். மற்ற மதங்களில் ஒரே ஒருவரை மட்டும் கடவுளின் குமாரர் இறை தூதர் என்று போற்றி புகழ்வார்கள். மற்றவர்களின் அறிவு வெளிச்சமும் கருணையின் ஈர பதமும் வலுகட்டாயமாக மூடி மறைக்கப்பட்டு விடும். ஹிந்து மதம் அப்படி அல்ல எத்தனை மகான்களோ இந்த பூமியில் அத்தனை பேருக்கும் வந்தனம் என்று யாரையும் விட்டு விடாமல் போற்றி வணங்குகிறது. 

இத்தகைய சுதந்திரம் உள்ள மதத்தில் பல அருளாளர்கள் தோன்றுவார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. நமது மதத்திலும் பல ஞான புருஷர்கள் தனியாகவும் கூட்டாகவும் தோன்றி இருக்கிறார்கள். அப்படி பட்ட ஒரு அருள் கூட்டமைப்பே சித்தர்கள் என்ற திருபெயரால் அழைக்க படுகிறார்கள். ஹிந்து மதத்தில் வைஷ்ணவம் சைவம் சாக்தம் காணபத்யம் கெளமாரம் செளரவம் என்ற பிரிவுகள் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ அவ்வளவு முக்கியம் வாய்ந்தது சித்தர் மரபு என்ற பிரிவு. தட்டி கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட பிரசண்டன் என்று சொல்வார்கள். அதாவது தன்னிச்சையாக ஒருவனை செயல்பட விட்டால் அவன் தான் தோன்றி தனமாக நடந்து மற்றவர்களுக்கு கேடு செய்வான் என்பது இதன் பொருளாகும். இதே போலவே நமது ஹிந்து மதத்திலும் அவ்வப்போது தன்னிச்சையான செயல்பாடுகள் பல தோன்றி மக்களை தவறான மார்க்கத்தில் அழைத்து போன காலங்களும் உண்டு அப்படி பட்ட காலங்கள் தோறும் இறைவன் அவதாரங்கள் எடுத்து தடுத்தாட்கொண்டு நமது தர்மத்தை காப்பாற்றி இருக்கிறான். தான் வராத போது தனது கணங்களில் யாரையாவது ஒருவரை அனுப்பி நம்மை கரை சேர்ப்பான் என்பது ஐதீகம். அப்படி பாழ்பட்டு கிடந்த மக்களை கரை சேர்ப்பதற்கு அவ்வப்போது இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட அருளாளர்களின் கூட்டத்தின் பெயரே சித்தர்கள் என்பதாகும். 

இறைவனின் அடியார்கள் சித்தர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆனால் சித்தர்கள் என்ற சொல்லுக்கு நிஜமான அர்த்தம் என்னவென்று இதுவரை எவராலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. சித்தம் என்ற சிந்தனையை அடக்கியவர்கள் அதில் வெற்றி கண்டவர்கள் சித்தர்கள் என்று ஒருசாராரும், ஸித்தி என்ற அமானுஷ்யமான வெற்றிகளை அடைந்தவர்கள் சித்தர்கள் எனவே தான் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று ஒரு சாராரும், பண்டைய கால யோக சாஸ்திரம் அஷ்டமா சித்துகளை பற்றி பேசுகின்றன அந்த எட்டுவகை சித்துக்களை பெற்றவர்கள் இவர்கள் எனவே இவர்களை சித்தர்கள் என்று அழைக்கிறோம் என ஒருசாராரும் சித்தர்கள் எப்போதுமே ஒரே இயல்பில் இருப்பவர்கள் அல்ல மனம் போனபடி செயல்படுபவர்கள் அதனால் அவர்களை சித்தர்கள் என்று அழைக்கிறோம் என ஒரு சாராரும் சொல்கிறார்கள். இதில் எது சரி? எது தவறு? என்று முடிவு சொல்ல கூடிய தகுதி இதுவரை பூமியில் எவருக்கும் இல்லை. அதனால் இவைகள் எல்லாம் அடங்கிய ஒட்டுமொத்த வடிவமே சித்தர்கள் என்று நாம் முடிவு செய்து கொண்டால் அது தவறு அல்ல. 

சித்தர்கள் என்ற வார்த்தையை கேட்டவுடன் இன்று பலருக்கும் ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் சித்தர்களிடம் சாதாரணமான மனித செயல்கள் மறைந்து அசாதாரணமான சக்திகள் இருக்கிறது என்ற நம்பிக்கையே ஆகும். அசாதாரணமான சக்திகள் என்றால் அது அவர்களிடம் நிறைந்திருக்கும் ஸித்தியை ஆகும். அத்தகைய ஸித்திகளை பற்றி நமது பண்டைய நூல்கள் என்ன சொல்கின்றன என்பதை ஓரளவு தெரிந்து கொண்டால் நமக்கும் சித்தர்களை பற்றி எளிதாக புரிந்து கொள்ளும் வகை ஏற்படும். 

பொதுவாக ஸித்தி என்பதை சாதனைகள் என்று சொல்லல்லாம். சாதனைகள் என்ற பொருள் வந்தவுடன் அது நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் நிகழ்த்துகின்ற செயற்கரிய செயல்களை போன்ற சாதனைகளோ என்ற ஐயம் ஏற்படும். ஆனால் சித்தர்களின் சாதனைகள் மனித சாதனைகளை போல் சாதாரணமானது அல்ல அதிஅற்புதம் நிறைந்தது மனித புலன்களுக்கு அப்பாற்பட்டது அமானுஷ்யமானது இது மட்டுமல்ல மனிதனை இறவாத பெருநிலைக்கு அழைத்து செல்ல கூடியது. 

நமது ஹிந்து மதத்தில் மிக முக்கியமாக எட்டுவகை சித்துகளை பற்றி தகவல்கள் உள்ளன அவைகள் அணிமா, லகிமா, மஹிமா, ப்ராஹாம்யம், ப்ராப்தி, வாசித்வம், ஈஷ்டித்வம், காமாவாசாயித்வம் என்பவைகள் ஆகும். இதை தமிழில் சொல்வது என்றால் கண்ணுக்கு தெரியாத கடுகை போல மிக சிறிய உருவத்தை எடுப்பது மிகவும் மேலான நிலையை அடைவது ஆயிரம் கண்களாலும் பார்க்க முடியாத மிக பிரம்மாண்டமான உருவத்தோடு தோன்றுவது. கூடுவிட்டு கூடு பாய்தல் உட்பட நினைத்த காரியங்கள் அனைத்தையும் நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பது. விரும்பியதை அடைவது ராஜாதி ராஜன் என்றலும் அவனை காலடியில் விழ செய்வது. நூற்றில் ஒருவராக இல்லமல் அனைவரையும் விட மேலான நிலையில் இருப்பது எல்லாவிதமான ஆசைகளையும் அடக்குவது என்று சொல்லல்லாம். 

இத்தகைய ஸித்திகளை பற்றி இந்திரியங்களை வென்று நிலையான சித்த்தத்தை உடையவனாக திகழ்ந்து என்னிடமே மனதை அசையாது வைத்த யோகிக்கு அனைத்து விதமான ஸித்திகளும் தானாக வந்தமையும் என பகவான் கண்ணன் ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடுகிறார். அவர் மேலும் இத்தகைய ஸித்திகளை பற்றி உத்வர் என்பவரிடம் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். தன்னால் பத்தினெட்டு வகையான ஸித்திகள் படைக்க பட்டதாகவும் அவற்றில் எட்டுவகை ஸித்து புகழ்பெற்றது என்றும் கூறுகிறார். அதாவது நாம் மேலே பார்த்த அஷ்டமா ஸித்திகளை தவிர வேறு பத்துவகை ஸித்திகளும் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளன. 

அனுர்மிதத்துவம் என்ற பசி தாகம் இல்லாமல் பல காலம் வாழ்வது, தூரச்ரவணம் என்ற வெகு தொலைவில் எழும்புகின்ற ஓசைகளை கேட்பது, தூரதர்ஷனம் என்ற தூரத்து காட்சிகளை உட்கார்ந்த இடத்திலேயே பார்ப்பது மனோஜவம் என்ற மிக வேகமாக உடம்பை கொண்டு கடந்து போகுதல் காமரூபம் என்ற விரும்பிய படி தனது உருவத்தை மாற்றி அமைத்து கொள்ளல் பராகாயபிரவேசம் என்ற பிற உயிர்களின் சரிரத்திற்குள் தனது உயிரை செலுத்தி விரும்பும் காலம் வரை வாழ்தல். ஸ்வச்சந்தம்ருத்யு என்ற நினைத்த நேரத்தில் மரணத்தை அடைதல் ஸககிரீடானுதர்சனம் என்ற தேவ மாதர்களை நேருக்கு நேராக பார்த்தல் சங்கல்பசம்ஸித்தி என்ற விரும்பிய பொருளை அடைதல் ஆக்ஞை என்ற சர்வ சுதந்திரமாக அனைத்து இடங்களுக்கும் சென்று வருதல் என்ற பத்து வகை ஸித்திகளும் அதிகபடியாக பாகவதத்தில் தரப்பட்டிருக்கிறது. 

சித்தர்கள் என்பவர்கள் பொன்னாசை, பொருளாசை, பெண்ணாசை ஆகிய மூன்று வகையான ஆசைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். அவர்களில் மிக முக்கியமான நோக்கம் ராஜாக்களை போல் பூமியில் வாழ்வது அல்ல சர்வ வல்லமை படைத்த சர்வேஸ்வரனின் பாத கமலங்களை சென்றடைவதே சித்தர்களின் முதலும் முடிவானமும் நோக்கம் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாக இந்த பதினெட்டு வகை சித்துகளும் இல்லை என்பது சிறிய குழந்தைகளுக்கு கூட தெரியும். தங்களுடைய இறுதி லட்சியத்திற்கு தேவைபடாத இந்த சித்துகளை அவர்கள் விரும்பி பெறுவதற்கு காரணம் என்ன? அவற்றால் அவர்கள் அடைந்த நன்மைகள் என்ன? என்பதை மேலோட்டமாக பார்த்தால் நம்மால் புரிந்து கொள்ள இயலாது. பாதாளத்தை தோண்டி பகிரதன் கங்கையை வெளிக்கொண்டு வந்ததை போல சித்தர்களின் செயல்பாடுகளை ஆழாமாக ஆராய்ந்தால் மட்டுமே அதற்கான விடைகள் கிடைக்கும். அந்த விடைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.
Contact Form

Name

Email *

Message *