( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மானும் சிங்கமும் உன் முன்னால்...      ன்பெனும் தேரில் ஏறி கருணையின் வடிவாக வந்த குருவென்ற ஞான பொருளே! உன்னை தினம் தினம் தொழுவது எப்படி? குளிர்ந்த உன் பாதத்தில் வீழ்ந்து என் பாவத்தை கழுவும் படி அழுவது எப்படி? அஞ்ஞானம் என்ற பாதாள சிறையில் இருந்து மீண்டு நான் எழுவது எப்படி? கசடும் அசடும் நிறைந்த என் மனதில் தத்துவ விதைகளை ஊன்றி வெளிச்ச பயிர் வளர உழுவது எப்படி? 

கன்னக்கோல் பிடித்த கள்வரின் கூட்டத்தில் நாயகனாக நானிருக்கிறேன். தங்கமும் வெள்ளியும் தகதகவென மின்னுகின்ற வயிர குவியலும் என் நெஞ்சத்தை ஈர்க்கிறது. பஞ்சு மெத்தையின் மேல் பண கட்டுகளை விரித்து தூங்காமல் காத்திருக்கும் பொழுதுக்காக ஏங்குகிறேன் ஏங்கி ஏங்கி கண்ணீர் வடித்து நீ கொடையாக கொடுத்த ஒவ்வொரு மணித்துளியையும் வீணடித்து விளையாடுகிறேன். 

சின்ன இடையழகும் சிங்கார நடையழகும் சிருங்கார நகைப்பழகும் முத்து பல்லழகும் முடிந்து வைத்த முடியழகும். கத்தும் குயில் ஓசையாய் கண்டத்தில் எழும்புகின்ற வார்த்தை இசையழகும் வரிசங்க கழுத்தழகும் வண்ணமுகில் தவழும் மார்பழகும் சுண்ட்டி இழுத்தென்னை வில்லாக வழைக்கிறது. 

தேனுக்குள் விழுந்துவிட்ட சிற்றெறும்பு போல பாலுக்குள் விழுந்துவிட்ட பட்டாம் பூச்சியை போல நூலுக்குள் சிறைபட்டு கொண்ட வண்டினை போல மனித ஊனுக்குள் அகப்பட்டு காமம் என்ற மத்து கடைய விஷமில்லாத நாகம் பசி கொண்டு துடிப்பது போல துடிதுடித்து பதைபதைத்து ஒளிபொருந்திய கண்கள் குருடாகி வாழ்க்கை பாதையெல்லாம் தடுமாறி கிடக்கிறேன். 

கண்ணுக்கு எட்டும் நிலமெல்லாம் என் கைவசம் வேண்டும். கண்ணாடி மாளிகைக்குள் இருந்து நான் அரசாள வேண்டும். மன்னாதி மன்னரெல்லாம் வந்து என் வாசலில் காத்திருக்க வேண்டும். என் உத்தரவு பெற்ற பிறகே சூரியனும் உதித்து எழ வேண்டும். சீறுகின்ற கடலலையும் என் பெயரை சொன்னால் சுருட்டி கொண்டு பின்னாலே நகர வேண்டும். என் பெயரை உச்சரித்த மாத்திரத்தில் சூறாவளி காற்றும் சும்மா இருக்க வேண்டும். ஆகாயம் பூமியெல்லாம் என் அதிகார கொடி மட்டுமே பட்டொளி வீசி பறக்க வேண்டும். 

இப்படியே என் ஆசை நதி பெருக்கெடுத்து ஓடியது எப்படியும் சாகாமல் கல்பகோடி காலம் வாழ்வோம் என்ற அகங்கார ஊழி காற்று என்னிடம் மட்டுமே சுழன்று சுழன்று வீசியது தேடிய பணமெல்லாம் ஒருநாளில் கரையும் மயான வாசல் வரை கூட அது துணைக்கு வராது சொர்க்கத்தில் இடம் தேடி தராது. ஞானம் இல்லாமல் நிழலை நிஜமென்று பின்தொடர்ந்து சென்ற நான்..... 

நூலில்லாத பட்டம் வானத்தில் பறக்காது சோறு இல்லாத பானை சுகத்தை தராது. நீர் இல்லாத குளம் கொக்குகளை கவராது பால் இல்லாத பசுக்கு புல் கூட கிடைக்காது. என்பதை அறிந்தவுடன் கன்னத்தில் அறையப்பட்ட கயவன் போல் ஒருநிமிடம் நின்றேன். அப்போது என் குருவே உன் திருவடி நிழலை தரிசனம் கண்டேன். 

இரத்த நதி நரம்பு பாதையில் நடைபோடும் காலம்வரை மங்கையரின் மேல் மயக்கம் தொடரும் தசைகள் சுருங்கி உடல் ஆட்டம் கண்டால். நூர்க்காத இராட்டினம் போல் மூலையில் கிடப்பாய். அதிகாரம் கைவிட்டு போனால் ஆட்டு குட்டி கூட உந்தன் கூந்தலை கடிக்கும் பணமும் பதவியும் பகட்டு என்றாவது ஒருநாள் மறைந்து போகும். எப்போதும் மறையாத எப்போதும் அழியாத ஆனந்த சரினத்தை உனக்கு காட்டுகிறேன் என்று கரம் நீட்டி என்னை அழைத்தாய். 

உன் விரல் பற்றி சோலைக்குள் நடந்தேன் சீறுகின்ற பாம்பு கூட உனக்கு குடை பிடிப்பதை கண்டேன். கொல்லவரும் புலியும் உன் பாதம் பணிவதை கண்டேன். அஞ்சி ஓடுகின்ற புள்ளிமான் கூட்டம் உன் நிழலின் சலனத்தை உணர்ந்த பிறகு சிங்கத்தின் முன்னால் நின்று குட்டிக்கு பால் கொடுப்பதை கண்டேன். 

இருளை போக்குவது குருவென்றாய் இதத்தை தருவதும் அவரென்றேன் அருளை தருவது குருவென்றாய் அமுதை தருவதும் அவரென்றேன் மருளை நீக்குவது குருவென்றாய் மயக்கம் போக்குவதும் அவரென்றேன் திருவை தருவது குருவென்றாய் தீர்க்கம் தருவதும் அவரென்றேன் 

உருவில் சிறியவர் ஆனாலும் உணர்த்தும் அறிவில் பெரியவர் அவரன்றோ கருவில் இருக்கும் குழந்தைக்கும் அறிவை தருவது அவரன்றோ தெருவில் கிடக்கும் ஏழைக்கும் தீன தயாளன் அவரன்றோ மறைந்த உண்மை தெரிந்து மன்னவன் திருவடி தொழ நினைத்தேன் 

அன்பெனும் தேரில் ஏறி கருணையின் வடிவாக வந்த குருவென்ற ஞான பொருளே உன்னை தினம் தொழுவது எப்படி? குளிர்ந்த உன் பாதத்தில் வீழ்ந்து என் பாவத்தை கழுவும் படி அழுவது எப்படி? அஞ்ஞானம் என்ற பாதாள சிறையில் இருந்து மீண்டு நான் எழுவது எப்படி? கசடும் அசடும் நிறைந்த என் மனதில் தத்துவ விதைகளை ஊன்றி வெளிச்ச பயிர் வளர உழுவது எப்படி?
Next Post Next Post Home
 
Back to Top