( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

உடம்பின் உள்ளே சிவலிங்கம் !இந்து மத வரலாற்று தொடர் 47

     ருகாலத்தில் நாடுகளுக்கு மத்தியில் நிலவி வந்த மண்ணாசை உலக அமைதிக்கு எதிராக இருந்தது. நடந்து முடிந்த இரண்டு உலகமாக யுத்தங்களும் நாடு பிடிக்கும் ஆசையால் தோன்றியது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இரண்டாம் உலகமாக யுத்தம் முடிந்த பிறகு வல்லரசுகளுக்கு இடையில் நிலவி வந்த பனிபோர் எந்த நிமிடமும் உலகத்தை அழித்துவிடும் ஜனசமூகத்தை பூண்டற்று போக செய்துவிடும் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரவலாக வைத்திருந்தது. ஆயுதங்கள் கொண்டு மனிதர்களை பயமுறுத்துகிற காலம் போய் இன்று மதங்களை வைத்து கிலிமூட்டுகிற காலம் வந்திருக்கிறது. 

மதங்கள் என்பது மனிதனை பண்படுத்த கூடியது காட்டாற்று வெள்ளம் போல தாறுமாறாக திரிக்கின்ற மனதை ஒரு நிலை படுத்தி இறைவனை பற்றி சிந்திக்க செய்து கண்ணுக்கு தெரிகின்ற இவ்வுலக வாழ்வையும் கண்ணுக்கு தெரியாத அவ்வுலக வாழ்வையும் சீராக செப்பனிட்டு வைத்து கொள்ளும் கருத்துக்களை ஆழமாக ஊன்றுவது மதங்களின் தலையாய பணி. துன்பம் இல்லாத மனிதனே இவ்வுலகில் இல்லை என்று சொல்லல்லாம். இப்படி துன்பங்கள் வந்து மனிதனை வாட்டி வதைக்கும் போது அவன் தன் மனதிற்குள் போட்டு குமைந்து கொண்டு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிர்க்கும் போது இறை நம்பிக்கையும் மத உணர்வும் மனிதனுக்கு கை கொடுத்து மனித உறவுகளால் கொடுக்க முடியாத ஆறுதலையும் தேறுதலையும் மதங்கள் கொடுக்கிறது என்று துணிந்து சொல்லல்லாம். 

மதம் என்ற ஒன்று இல்லை என்றால் மனிதர்களில் முக்கால்வாசி பேர் மனநோயாளியாக ஆகியிருப்பார்கள். அல்லது நினைத்து பார்க்கவே முடியாத பெரிய குற்றங்களை செய்துவிட்டு சிறைச்சாலைகளில் இருப்பார்கள். தாய்தந்தையர் பாசம் அண்ணன் தம்பி நேசம் மாமன் மச்சான் உறவு இன்றும் இருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் மதமே ஆகும். சமூக உறவுகளில் விரிசல்கள் வரும் போது மதமும் மத சடங்குகளும் அந்த விரிசல்களை சமபடுத்துகின்றன. ஆனால் சில அறிவாளிகளின் கண்களில் இத்தகைய நல்ல அமசங்கள் எதுவும் படுவது இல்லை. அவர்கள் கண்களை மூடி கொண்டு மதம் என்றாலே கொடுமை கொடுரம் மூடத்தனம் என்று வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 

அப்படி அவர்கள் பேசுவதற்கு காரணங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இதுவரையில் நடந்த இரண்டு சிலுவை போர்களில் மனித சமூகம் பறிகொடுத்த உயிர்களின் எண்ணிக்கை மிக அதிகம். போப் ஆண்டவர்கள், மவுலவிகள், சமய குருமார்கள் என்று சொல்லி கொண்ட ஒரு சிலரால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை பார்க்கும் போது அணுகுண்டுகளால் இறந்தவர்களை விட மதங்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமோ என்று தோன்றிகிறது. ‘ 

இன்று நாடு பிடிக்கும் ஆசை யாருக்கும் இல்லை அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு வல்லரசுகள் ஆயுத போட்டியை நிறுத்தி விட்டன. அப்பாடா உலகம் இனியாவது அமையாதாக இருக்கும் என்று நினைத்த போது மத வெறி என்பது பெரும் பிசாசாக எழுந்து நின்று நம்மை அச்சுறுத்துகிறது. இதுவரை உலகத்தில் தோன்றிய கொடுங்கோலர்களை விட மிக அதிகமான கொடுக்கோன்மையை இந்த இடைப்பட்ட காலத்தில் மத வெறியர்களால் நிகழ்த்தப்பட்டு விட்டதை நமது கண்களாலேயே பார்த்து விட்டோம். எனவே மதம் என்பதே அராஜகத்தின் இன்னொரு வடிவம் தானோ என்று அமைதியை விரும்புபவர்கள் நினைக்க துவங்கி விட்டார்கள். 

மனித மனதில் செம்மையை கொடுக்கவேண்டிய மதம் வெறியை கொடுப்பது ஏன்? பொதுவாக மனிதர்கள் தற்பெருமை பாராட்டி கொள்வதில் விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். பள்ளி பருவத்திலேயே என் பேனாதான் உயர்ந்தது என் புத்தக பைதான் சிறந்தது என்ற எண்ணம் தலைதூக்கி மற்றவர்களிடம் இருப்பது அனைத்துமே மட்டமானது என்ற எண்ணம் வலுவடைந்து விடுகிறது. இந்த எண்ணமே காலம் வளர வளர என் குடும்பம் உயர்ந்தது என் ஊர் உயர்ந்தது என் சமூகம் உயர்ந்தது என் ஜாதி உயர்ந்தது என்ற வகையில் வளர்ந்து கடேசியில் என் மதம் மட்டுமே சிறந்தது என்ற முடிவிற்கு மனிதனை கொண்டு நிறுத்தி விடுகிறது. 

நான் உயர்ந்தவன் என்று நினைத்து கொள்வதில் தவறு அல்ல ஆனால் நான் மட்டுமே உயர்ந்தவன் மற்றவர்கள் அனைவருமே தாழ்ந்தவர்கள் என்று நினைக்கும் போது தான் பிரச்சனைகள் உருவாக துவங்குகின்றன. தன்னை உயர்ந்தவனாக நினைக்கும் ஒருவன் தன்னை சார்ந்த அனைத்துமே சிறந்தது என்று கருதி மற்றவர்களுக்கு சொந்தமானவைகளை கீழ்த்தரமாக பார்ப்பதோடு அல்லாமல் அவைகளை அழிக்கவும் துணிந்து விடுகிறான். இந்த வகையில் மற்ற மதங்களை தாக்க துணியும் போது மற்றவர்களும் இதே வேலையை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அமைதியான உலகம் போர்களமாக மாறிவிடுகிறது. 

மனிதர்கள் இப்படி சண்டையிட்டு மாய்வார்கள் இதனால் உலக அமைதி கெடும் என்பதை சித்தர்கள் தீர்க்க தரிசனமாக உணர்ந்தார்கள். இதனால் இது என் கடவுள் அது உன் கடவுள் என் கடவுள் உயர்ந்தவர் உன் கடவுள் தாழ்ந்தவர் என்றெல்லாம் சச்சரவு இட்டு வெறியை வளர்த்து கொள்வதை மிக வன்மையாக கண்டித்தார்கள். 
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ அங்குமிங்கும் ஆகி நின்ற ஆதி மூர்த்தி ஒன்றலோ அங்குமிங்கும் ஆகி நின்ற ஆதி மூர்த்தி ஒன்றெனில் வங்க வாரம் சொன்ன பேர்கள் வாய்புழுத்து மாய்வரே 

என்று சிவவாக்கியர் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களால் சாடுகிறார். கிராமத்தில் அநியாய வட்டி வாங்குபவர்களை நியாய தர்மங்களுக்கு கட்டுபடதவர்களை அடுத்தவன் மனைவியை கெடுத்தவரை ஊரான் நிலத்தை அபகரித்தவரை வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியவரை புழுத்துதான் சாவான் என்று சாபம் இடுவார்கள். அதாவது பஞ்சமா பாதகங்கள் என்ற கொடிய செயல் செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் சாபம் இது. இதே சாபத்தை கடவுளில் பேதம் காண்போரை மதவெறியை தூண்டுவோரை கலவரத்தை ஏற்படுத்தி விட்டு வன்முறை நெருப்பில் குளிர்காய்பவர்களை பார்த்து சிவவாக்கியர் இடுகிறார். சித்தர்களின் மனதில் எந்த அளவு சமூக கொடுமைகளுக்கு எதிரான எண்ணம் இருந்திருந்தால் இத்தகைய சாபங்களை அவர்கள் கொடுப்பார்கள் என்பதை நாம் எண்ணி பார்க்க வேண்டும். 

சித்தர்களின் சித்தாந்தம் பரோலோக ராஜ்யத்திற்கு மனிதர்களை வழிநடத்தி செல்வது என்று பலர் நினைக்கிறார்கள். இதை முற்றிலும் சரியானது என்று சொல்ல முடியாது. காரணம் வாழுகின்ற பூமியில் சரிவர வாழாமல் ஒருவன் மத நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் வைத்து கொண்டு சொர்கத்தில் நுழைந்துவிட முடியாது என்பது சித்தர்களின் உறுதியான எண்ணம். எனவே தான் அவர்கள் சமூகத்தில் இருக்கின்ற கொடுமைகளை நீக்குவதற்கு மனிதன் முதலில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். என் மதம் மட்டுமே உயர்ந்தது என்று எண்ணுவது எப்படி மூடத்தனமனதோ அதே போலவே நான் உயர்ந்த ஜாதி மற்றவர்கள் தாழ்ந்த ஜாதி என்று எண்ணுவதும் ஆகும். 

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்ப தெக்காலம

என்று பத்திரகிரியார் இறைவனிடம் முறையிட்டு கேட்கிறார் அதாவது சாங்கிய யோகம் என்ற தத்துவ பிரிவை வேத காலத்தில் உருவாக்கிய கபில மகரிஷி மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே மனிதர்கள் மட்டும் அல்லாது பறவைகளும் விலங்குகளும் கல் மண் முதலியவைகளும் கூட ஒரே ஆத்மாவின் வடிவமே என்று புரட்சிகரமான ஒரு பாதையை உருவாக்கினார். அந்த பாதையின் படி செல்பவர்களுக்கு மனிதர்களில் ஏற்ற தாழ்வு பார்ப்பது மிகவும் கடினம். எனவே கபிலர் சொன்ன எல்லோரும் சமம் என்ற சித்தாந்தப்படி நடந்தால் மட்டுமே உலகம் உருப்படும் என்று பட்டினத்தாரின் சீடரான பத்திரகிரியார் நினைக்கிறார். நினைவை நிஜமாக்க இறைவனிடமும் முறையிடுகிறார். இதே கருத்தை 

சாதியாவது ஏதடா சலந்திரண்ட நீரெல்லாம் பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ காதில் வாளி காரைகம்பு பாடகம்பொன் ஒன்றலோ சாதிபேதம் ஓதுகின்ற தன்மையென்ன தன்மையே 

என்று சிவவாக்கியரும் ஜாதிதன்மையை தெளிவாக புரியும் படி விளக்கி ஜாதியின் ஏற்ற தாழ்வுகளை தவறு என்று நமக்கு காட்டுகிறார். அதாவது காதில் போடுகிற கம்மல் கழுத்தில் அணிகின்ற அட்டியல் பாம்படம் கைகாப்பு என்று ஆபரணங்கள் பலவகையாக இருதாலும் அவை அனைத்தும் தங்கம் என்ற ஒரே மூல பொருளிருந்து உருவானது ஆகும். அதே போல மனிதர்களில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற குண பேதங்கள் மாறி மாறி அமைந்திருந்தாலும் அவர்கள் அனைவரும் அடிப்படையில் மனிதர்களே சமமாக பார்க்க பட வேண்டியவர்களே ஆகும் என்பது சிவவாக்கியரின் சீரிய கருத்தாகும். 

கடவுள் நம்பிக்கை என்பது மனிதனுக்கு அவசியமான ஒன்று என்பதில் சித்தர்கள் சந்தேகப்பட வில்லை அதே நேரம் கடவுள் நம்பிக்கையால் மற்ற மனிதர்களை எந்த வகையிலும் இம்சை அடைய கூடாது என்பதில் அவர்கள் கருத்தாக இருந்தார்கள் மக்களில் பலர் பசியாலும் பட்டினியாலும் வாடுகின்ற போது அவர்களை கவனிக்காமல் கோவில்களில் அபிசேக ஆராதனைகள் செய்வது வீணானது இறைவனை போய் அத்தகைய வழிபாடுகள் எப்போதுமே சேராது என்ற உயர்ந்த தத்துவம் சித்தர்கள் மத்தியில் இருந்தது. 

படமாட கோயிற் பகவர்க்கு ஒன்று ஈயின் நடமாட கோவில் நம்பர்கங் காகா நடமாடும் கோவில் நமபர்கென்று ஈயில் படமாட கோவில் பகவர்க்கு அது ஆமே 

என்று திருமூலர் ஒரு புதிய சித்தாந்தத்தை மனித குலத்திற்கு முதல் முறையாக வகுத்து தருகிறார். அதாவது இறைவனுக்காக பொன்னும் பொருளையும் படைத்தால் அது அடியார்கள் என்ற பக்த ஜனங்களை போய்சேராது. மாறாக எளியவர்களுக்கு என்று வழங்கப்படும் பொருள்கள் கண்டிப்பாக இறைவனுக்கு போய்சேரும் என்று திருமூலர் சொவ்லத்தை ஆழமாக ஆராய்ந்தால் உலகில் பொதுவுடைமை என்ற கொள்கை எங்கே இருந்து அது முதல் முறையாக தோன்றியது என்ற உண்மை தெளிவாக நமக்கு தெரியும். 

திருமூலர் வழிபாடு நடத்துவதற்காக பெரிய பெரிய கோவில்களை கட்டுவதை அடியோடு வெறுத்தார். எங்கும் நிறைந்த இறைவனுக்கு கோவில்கள் பெரிய அளவில் அமைத்து நீ இங்கே அமர்ந்திரு என்று கட்டளை போடுவது மிக பெரிய அறியாமை எனவே அத்தகைய அறியாமை செயல்களை நிறுத்தி விட்டு கடவுள் இருக்கும் இடம் எதுவென்று உனக்குள் தேடு உன் உடம்பே கடவுளின் ஆலயமாக இருப்பதை அறிவாய் என்று தெளிவாக சொல்கிறார். 

உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம்பு ஆலயம் வள்ளல் பிரானருக்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளாமணி விளக்கே 

இது திருமூலரின் புகழ்பெற்ற பாடல். உள்ளத்தில் தெளிவு ஏற்பட்ட பிறகு வஞ்சகம் செய்கின்ற ஐந்து புலன்கள் கூட இறைவழிபாட்டிற்கு உதவும் மனியோசையை ஒலிக்க செய்யும் பணியாளர்களாக மாறுவார்கள் மனிதனின் உடம்பே கோயிலாகவும் வார்த்தைகளை பேசும் வாய் கோபுர வாசலாகவும் உயிர் என்ற ஜீவனே மூல கருவறையின் சிவலிங்கமாகவும் திகழும் இப்படி திகழ்ந்தால் மட்டுமே இறைதரிசனம் என்பது முழுமையாக பெற்றுவிட்டோம் என்பதாகும். அதை விட்டு விட்டு அதாவது ஆன்ம தெளிவு பெற செய்ய வேண்டிய பணிகளை விட்டு விட்டு ஆலயம் எழுப்புதல் கும்பாபிஷேகம் நடத்துதல் போன்றவைகள் செய்தால் எந்த பயனும் இல்லை என்கிறார். தேரிழுத்து திருவிழா கண்டு ஊரே கொண்டாடுவது சரீரத்திற்கு இன்பம் தருவதாக இருக்குமே தவிர உடம்பில் உள்ளே உறைகின்ற ஆத்மாவிற்கு தெளிவு தருவதாக இருக்காது. எனவே புறகாரணங்களை பற்றி கொண்டு செயல்படாமல் அககாரணத்தை கருத்தில் கொள்வதே சிறந்தது என்பது திருமூலரின் கருத்தாகும். 

இறைவனுக்காக ஆலயங்கள் சமைப்பதும் வானளாவி உயர்ந்து நிற்கும் மலைகளை குடைந்து சிற்ப கூடங்கள் அமைத்தலும் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களால் ஆலய கூரைகளை அலங்கரிப்பதும் இறைவனை இறை அன்பை பெறுவதற்கான வழிகள் இல்லை என்றால் பிறகு எப்படி இறைவனை நெருங்குவது. மனித பிறப்பின் இறுதி முடிவான இறைவனின் பாதார விந்தங்களை எப்படித்தான் சரணடைவது என்று கேள்விகள் யாருக்காவது தோன்றினால் அவர்களுக்கு உள்ளம் தெளிவடைய திருமூலர் ஒரு பதிலை தருகிறார். ஆலயம் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆடம்பரத்தை வெளிபடுத்துவதற்காக ஆலயங்களை நிர்மாணிப்பது சரியல்ல என்பதே என் கருத்து பூஜைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் நமது ஆணவத்தை வளர்க்காமல் அன்பையும் கனிவையும் இறைவன்பால் கொண்ட காதலையும் வெளிபடுத்துவதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்பதற்காக தங்க கட்டிகளை இறைவனுக்கு படைப்பதற்கு பதில் உள்ளன்போடு கபடம் இல்லாத மனதோடு ஒரு சிறிய பச்சிலையை கூட அவனுக்கு சமர்ப்பணம் செய்தால் அவன் அதை முழு மனதோடு ஏற்றுகொல்வான் என்ற கருத்தில் யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை என்று அழகாக சொல்கிறார். 

திருமூலரே புறகாரணங்கள் புறச்செயல்பாடுகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் இனி நான் கோவிலுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை ஒழுக்கம் நியாய தர்மங்களை முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவையும் இல்லை. எனது உடம்பே அவன் உறைகின்ற ஆலயமாக இருக்கும் பொழுது அவனை தேடி வெளியில் அலைவதும் வீண் உள்முகமாகவே செயல்பட்டால் போதுமானது என்ற முடிவிற்கு யார் வந்தாலும் 

இந்த உடம்பு என்பது உணர்சிகளால் நிரம்பி வழியும் ஒரு அசிங்கமான பாத்திரம் அற்ப மோகத்திற்காக உணர்சிகளை கொந்தளிக்க செய்து நம்மை பாதாள படுகுழியில் வீழ்த்த கூடிய ஒரு கொடூர ஆயுதம் எவ்வளவு விரைவில் இந்த உடம்பை பட்டினி போட்டு விரதமிருந்து நைந்து போக செய்கிறோமோ அந்த அளவு மோச்ச ராஜ்யத்தை நோக்கி ,மனிதன் நடைபோட முடியும் எனவே உடம்பை அலச்சிய படுத்து அதை பேணுவதை கைவிட்டு விடு என்று யார் சொன்னாலும் இந்த இரு கருத்துகளையும் தவருதலானது அபாயகரமானது என்பதை விளங்கவைக்க திருமூலர் 

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்படு மெய்ஞானம் சேரவும் மாட்டர் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே 

என்று தெளிவான பதிலை நமக்கு தந்து சந்தேகங்களை போக்குகிறார். நீ உடம்பை பட்டினி போட்டு விரதங்களால் சக்கையாக பிழியப்பட்டு இறைவனை அடைய முடியும் என்று நினைக்காதே உடம்பை அழித்து உயிரை வளர்க்க எவராலும் இறைவனது பாத நிழலை கூட பார்த்துவிட இயலாது எனவே ஐயம் தெளிவடைய ஆண்மையோடு மனதை ஒருநிலைபடுத்த வாழ்வில் ஏற்படும் சகலவிதமான தாக்குகதல்களுக்கும் ஈடுகொடுக்கும் வண்ணம் உடம்பை பலபடுத்தி கொள் என்பதே திருமூலரின் கருத்தாகும். 

உடம்பை வளர்த்தால் போதும் ஆத்மா தானாக வளர்ந்து விடும் எனவே நாம் உடம்பை வளர்க்க ஆனந்தபடுத்த வாழ்வில் உள்ள அனைத்து இன்பங்களையும் நுகர்ந்து சுகம் பெற உடல் மட்டும் திடகாத்திரமாக இருந்துவிட்டால் போதும் என்று சிலர் திருமூலரின் கருத்துக்களை தவறுதலாக புரிந்து மிக அபாயகரமான செயல் ஒன்றை செய்துவருகிறார்கள். அதாவது உடம்பிற்கு போஷாக்கையும் உயிருக்கு விஷத்தையும் கொடுத்துவருகிறார்கள். 

குளித்து முடித்து சுத்தமாக இருந்தால் போதும் மகாலஷ்மி வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் இருக்கும் இவர்களை சித்தர்கள் உத்தமர்கள் என்று ஏற்றுகொள்வது இல்லை. உடம்பில் உள்ள அசுத்தங்களை போக்கி அதை ஆரோக்கியமாக வைத்துகொண்டால் மட்டும் போதும் என்ற கருத்து மிகவும் தவருதலானது காரணம் ஒரு மனிதன் இறைவனின் சன்னிதானத்திற்கு போகும் போது ஆடம்பரமாக எல்லோரும் பார்த்து வியக்கும் வண்ணம் போனாலே போதும் இறைவன் அருள் செய்துவிடுவார் என்று நினைப்பதும் தவறு. காரணம் உடல் சுத்தம் மட்டும் ஆண்டவனை ஈர்ப்பது இல்லை. மிக முக்கியமாக மன சுத்தம் வேண்டும் அப்போது மட்டுமே ஒரு சாதாரண மனிதனால் கடவுளை அடைய முடியும் என்பது சித்தர்களின் கருத்தாகும். 

மனதகத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகாள் வனத்தகத்து இருக்கினும் மனதகர்த்து அழுக்கு அறார் மனதகத்து அழுக்கு அறுக்க மவுனஞான யோகிகாள் முலைதடத்து இருக்கினும் பிறப்பறுந் திருப்பாரே 

மனதிலே இருக்கின்ற காமம் மோகம் லோபம் கோபம் போன்ற மாச்சரியங்களை கழுவி களையாமல் மனித சஞ்சாரம் இல்லாத வனாந்தரத்தில் சென்று கடுந்தவம் செய்தாலும் எந்தவிதமான பயனும் இல்லை. மனதில் இருக்கும் மாசுகளை அகற்றிவிட்டால் மனைவியோடு படுக்கையில் இருந்தால் கூட சுத்தமான யோகிகள் ஈஸ்வரனை அடைவார்கள். எனவே அறுக்க வேண்டிய பற்று என்பது மன மாசுகள் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். என்று சிவவாக்கியர் சொல்கிறார். இதை தான் திருமூலரும் மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று பேசுகிறார். 

எனவே இந்து மதத்தில் உள்ள மிக முக்கிய பிரிவாகிய சித்தார் மார்க்கம் புரட்சிகரமான பல தத்துவங்களை தனக்குள் வைத்திருக்கிறது. வளர்ந்து வரும் நாகாரீக சமூகத்தில் அநியாயங்கள் எந்த அளவு வளர்ந்து வருகிறதோ அந்த அளவு ஆன்மீக நாட்டமும் வளர்ந்துவருகிறது. அந்த ஆன்மீக நாட்டமானது ஆடம்பரமாகவும் ஆராவாரமாகவும் போய்விடாமல் அமைதியாக ஒரு தெளிந்த நீரோடை போல இறைவனை நோக்கி மட்டுமே செல்ல வேண்டுமென்றால் அதற்கு சித்தர்கள் சொன்ன தத்துவங்கள் நிச்சயமாக கைகொடுக்கும். காரணம் சித்தர்கள் எவரும் இறைவனை வெளியிலே கண்டவர்கள் அல்ல தங்களுகுள்ளயே இறை தரிசனத்தை பெற்று தாங்களே சிவஜோதி பிழம்பாக ஆனவர்கள். 

இறைவன் என்பவன் வெட்டவெளியில் இல்லை கட்டிய கோவிலில் இல்லை உயிரோடு ஒட்டிபிறந்த உடம்புகுள்ளே ஆத்மாவாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறான் என்ற ஞானத்தை முதல் முறையாக உபநிஷத கால யோகிகள் தெளிவுபடுத்தி பொதுமக்களுக்கு வெளிபடுத்தினார்கள். உபநிஷத கருத்தக்களை தங்களது வாழ்வில் அனுபவ படுத்தி பார்த்து அவை அனைத்தும் சத்திய வார்த்தைகளே என்பதை உணர்ந்து நம்மை போன்ற சாதாரண ஜனங்களும் சம்சார சாகரம் என்ற பிறப்பிறப்பு கடலுக்குள் கிடந்தது அவதி படாமல் கரையேற வேண்டும் என்ற எண்ணத்தில் சித்தர்கள் நாம் புரிகின்ற வண்ணம் நமது பாஷையில் சொன்னார்கள் எனவே வேதாந்தம் என்ற உபநிஷத கருத்துக்களே சித்தர்களின் சித்தாந்தமாக வெளிபடுத்தப்பட்டு உலகில் வேறு எந்த மதத்திலும் இல்லாத ஆன்மீக அறிவு தெளிவை விஞ்ஞான பூர்வமாக இந்து மதத்தில் நிலைத்திருந்து வருகிறது என்று உறுதியாக சொல்லலாம். 

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திர சத்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே 

என்று வள்ளலார் சொல்வதும் சித்தர்களின் உண்மையான இதையத்தின் வெளிபாடே என்று சொல்ல வேண்டும். எனவே இந்து மதத்தின் மகுடத்தில் சித்தர் மார்க்கம் என்பது மிக பெரிய வயிரம் என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது. சித்தர் தங்களது மார்க்கத்தில் தத்துவங்களை மட்டும் சொல்லவில்லை மருத்தவ விஞ்ஞானம் வானியல் விஞ்ஞானம் தாந்திரிக விஞ்ஞானம் என்று பலவாறு உள்ள விஷயங்களை நமக்கு மிக எளிமையாக தருகிறார்கள் அவைகளை எல்லாம் அலசி ஆராய வேண்டுமென்றால் அதுவே ஒரு தனி நூலாக விரியும். நமது நோக்கம் இந்து மதத்தில் சித்தர்களின் சித்தாந்தம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி நமது சனாதன தர்மத்திற்கு வளர்ச்சியை தந்திருக்கிறது என்பதை பார்ப்பது மட்டுமே ஆகும். அதை சிறிதளவு தான் நாம் செய்திருக்கிறோம் என்றாலும் இந்த அளவு மனநிறைவு அடைந்து நமது மதத்தில் உள்ள வேறு பல கருத்துகளை ஆராய்ச்சி செய்ய துவங்குவோம்.
+ comments + 6 comments

migavum sari guruji madaveri mattrum inaveriyai thoodi vidbawarkalukku sivakkiyarin sabame sariyanadhu

Anonymous
10:34

we are not a religious animal.. all are being humen..

M.KARTHICK
18:59

ALL SCRIPTURES SAID ONLY ONE GOD .
ARE YOU KNOW THE ANCIENTINDIAN RELIGIOUS WAR.WHY ANCINT INDIAN SAIVAS,VAINAVAS ARE ABOLISH THE BUTHA AND SAMANA (JAINISM).

ariyathor namsivayam sivavakkiyar kaapu sivayavasi

Respected Guruji, Vanakkam. I no nothing about Kapilar. Please publish as many informations about Kapilar and Thirumoolar.


Next Post Next Post Home
 
Back to Top