Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாம்பு உடம்பே தியான பீடம் !

இந்து மத வரலாற்று தொடர் 48


     பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று பழமொழி இருக்கிறது. கவசம் தரித்து ஆயுதங்கள் பூண்டு எதிரிகளின் தலையை பந்தாட வருகின்ற படைவீரர்கள் கூட தங்களது அணிவகுப்பிற்குள் பாம்பு புகுந்துவிட்டால் அஞ்சிநடுங்கி சிதறி ஓடிவிடுவார்கள். என்பது இந்த பழமொழியின் கருத்தாகும். கால்கைகள் இல்லமல் மண்ணில் ஊர்ந்து வரும் அப்பாவி ஜீவன்களான பாம்புகளை பார்த்து வீராதி வீரர்கள் கூட எதற்காக பயப்பட வேண்டும்? பாம்பு கடித்தால் அல்லது கொத்தினால் மரணம் அடைந்து விடுவோம் உயிர் போய்விடும் என்ற மரண பயமே பாம்பின் மேல் பயமாக வந்துவிட்டது எனவே மனிதன் பாம்பை விலகிவைக்க துவங்கி விட்டான் என்று சிலர் கருதுகிறார்கள். 

வானத்தை கிழித்து கொண்டு தெறித்து விழுகின்ற மின்னலை பார்த்து மனிதன் பயந்தான் அதை எதிர்க்க தன்னால் இயலாது என்பதை உணர்ந்து அதை வணங்க துவங்கினான் காதை கிழிக்கும் பேரோசையோடு வருகின்ற இடியை பார்த்தும் பயந்தான் அதனால் வணங்கினான். மழையை பார்த்து காற்றை பார்த்து பயந்தான் அதனால் அவைகளையும் வணங்கினான். காட்டு மரங்களை எரித்து சாம்பலாக்கும் நெருப்பையும் பார்த்து அஞ்சி நடுங்கினான் அதனால் அதனையும் வணங்கினான். இப்படி பயத்தின் அடிப்படையிலேயே இறைவழிபாடு என்பது தோன்றியது அதன் விரிவாக்கமே மதங்கள் என்று சில அறிஞனர்கள் கருதுகிறார்கள். இக்கருத்து முற்றிலும் சரியானது தானா? என்பதை எண்ணி பார்க்க வேண்டும். மனிதனால் கண்டறியபட்ட ஆதிகால வேதங்கள் நான்கும் இயற்கை சக்திகளை வணங்குகிறது. அதனால் இந்து மதமும் கூட பயத்தின் அடிப்படையில் உருவானது என்ற கருத்து பலராலும் நம்பப்பட்டு வருகிறது. இதுவும் முற்றிலும் சரிதானா? என்பதையும் சிந்திக்க வேண்டும். 

இந்துமதம் தவிர்த்த மற்ற மதங்கள் குறிப்பாக ஐரோப்பாவிலும் அரேபியாவிலும் தோன்றிய மதங்கள் இறைவன் மீது அச்சப்பட வேண்டும். என்ற கருத்தை வலியுறுத்தி இறை அச்சத்தை முன்னிறுத்தி பேசுகின்றன. ஆனால் இந்து மதத்தின் ஆதிகால நூல்களாக இருக்கட்டும் அதற்கு பிறகு வந்த நூல்களாக இருக்கட்டும். அவற்றில் எதிலும் கடவுளை பார்த்து பயப்படு என்ற கருத்து வரவேயில்லை அதர்மம் செய்வதற்கு பயப்படு கோழையாக இருப்பதற்கு அச்சப்படு என்ற கருத்துக்கள் தான் இருக்கிறதே தவிர மற்ற மதங்கள் சொல்வது போல இந்துமதம் இறை அச்சத்தை பற்றி பேசவே இல்லை. அதனால் தான் நான்கு வேதங்கள் இயற்கையின் நிகழ்வுகளை போற்றி வணங்கினவே தவிர அஞ்சி நடுங்கி என்னை தாக்காதே என்று முறையிடவில்லை. 

இதை இங்கே எதற்காக சொல்கிறேன் என்றால் கிருத்தவ மதத்திலும் சரி இஸ்லாம் மதத்திலும் சரி பாம்புகளை சாத்தானின் வடிவமாக அச்சப்பட கூடிய உருவமாக கருதுகிறார்கள். அதே போலவே பாம்புகளின் மீது கொண்ட அச்சத்தின் வளர்ச்சியே இந்து மதத்தின் நாக வழிபாடாக வந்திருக்க வேண்டும். என்ற கருத்து நிலவி வருகிறது. ஹிந்து ஜனங்கள் பயத்தின் காரணமாக எதையும் வழிபடவில்லை எனும் போது பாம்புகளை மட்டும் கண்டு ஏன் அஞ்சி வழிபட வேண்டும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும். 

இந்துமத வரலாற்றை தொடராக சொல்லிவருகின்ற போது அதனுடைய தத்துவங்களை வழிபாட்டு பிரிவுகளை சொன்னிர்கள் அதில் நியாயம் இருக்கிறது இந்து மதத்தின் கிழைகள் தான் ஜைனம், பெளத்தம், சீக்கியம் என்றீர்கள் அதையும் ஒத்து கொள்ளல்லாம். அந்த வகையில் நமது சிந்தனை விரிவடைந்து வரும் போது தீடிர்ரென பாம்புகளை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன என்று சிலருக்கு தோன்றும். நாம் இங்கே இதை பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது என்ன கட்டாயம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்து மதத்தை தாக்குபவர்கள் எதிர்த்து விமர்சனம் செய்பவர்கள் நம் மீது வைக்கின்ற மிக முக்கிய குற்றசாட்டு நீங்கள் கல்லை சிலையாக வடித்து இது கடவுள் என வழிபாடுகிரீர்கள். ஓடுகின்ற ஆற்றையும் உயர்ந்து நிற்கின்ற மலைகளையும் சாமி என்று கையெடுத்து கும்பிடுகிறீர்கள் போனால் போகட்டும் என்று விட்டு விடுகிறோம். ஆனால் சின்ன சின்ன பிராணிகளை கூட நீங்கள் விட்டு வைப்பதில்லை சிங்கம், புலி, யானை சிலந்தியை கூட வணங்குகிறீர்கள் இது என்ன பைத்தியகாரத்தனம் கொல்லவரும் பாம்பை கூடவா வழிபட வேண்டும் உங்கள் அர்த்தமற்ற வழிபாட்டிற்கு எல்லையே இல்லையா? என்று கிண்டல் செய்கிறார்கள் இது மட்டுமல்ல எங்கள் புனித நூல்கள் பாம்புகளை சாத்தான்கள் என்று வர்ணனை செய்கின்றன ஆனால் உங்கள் தெய்வ திருமேனிகளிலோ பாம்புகள் நர்த்தனம் செய்கின்றன அப்படி என்றால் உங்கள் சாமிகள் சாத்தானின் கூட்டாளியா என்று நம்மை பார்த்து கேட்கிறார்கள். 

மாற்று மதத்தினரின் சிறுபிள்ளை தனமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்றாலும் நம்மில் பலருக்கு கூட பாம்புகளை வழிபடுவதன் உண்மை நோக்கம் என்னவென்று தெரியாது. அவர்களுக்கு அதை விளங்க வைத்தால் தான் பறந்து விரிந்த இந்துமத கருத்துக்களை ஓரளவாவது புரிந்து கொள்ளும் வகை ஏற்படும். ஏனென்றால் நாக வழிபாடு என்பது அர்த்தமற்ற சடங்கு அல்ல. அதனுள் ஆயிரம் ஆயிரம் தத்துவ கருத்துக்கள் மறைந்து கிடக்கிறது. அவைகளை சாம்பல் நீக்கி நிஜமான நெருப்பு துண்டுகளாக வருங்கால தலைமுறையினருக்கு எடுத்து கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு கண்டிப்பாக இருக்கிறது. 

பாம்புகள் இல்லாத இந்துமத பிரிவுகள் இல்லை என்றே சொல்லலாம். ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆண்டவனாகிய நாராயணன் படுத்து கொண்டிருப்பதே பாம்பனை மீதுதான். ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற சிவபெருமானின் உடல் முழுவதுமே பாம்புகள் அலங்கார வளையங்களாக தொங்குகிறது அன்னை ஆதிபரா சக்திக்கு குடை பிடிப்பதும் விநாயகரின் இடை ஆபரணமாக இருப்பது முருகபெருமானின் திருவடியில் வீழ்ந்து கிடப்பதும் பாம்புகளே ஆகும். இதை மட்டுமல்லாது நாக தேவதை என்ற தனி தெய்வமும் உண்டு கிராமபுறங்களில் உள்ள சிறு தெய்வங்ககுக்கு கூட பாம்புகள் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இந்து மதத்தில் இருந்து பிரிந்த புத்த மதத்திலும் பாம்புகளுக்கு பஞ்சமில்லை அஹிம்சா மூர்த்தியான மகாவீரருக்கு குடை பிடிப்பதே ஐந்து தலை நாகம் தான் இப்படி இந்தியாவில் உள்ள சமய நம்பிக்கைகள் அனைத்திலுமே பாம்புகளுக்கு அதி முக்கிய இடம் கொடுக்கபட்டிருப்பதில் காரணம் இல்லாமல் இல்லை. 

முதலில் பாம்புகளை பற்றிய தவறான நம்பிக்கைகள் பல மக்களிடம் உலக முழுவதுமே இருக்கிறது.. அதில் முதலாவது இடத்ததை பிடிப்பது பாம்பு கடித்தால் மரணத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பது இது மிகவும் தவறுதலான கருத்தாகும். பாம்புகள் எவரையும் திட்டமிட்டு காத்திருந்து கடிப்பது இல்லை. தன்னை தற்காத்து கொள்ளவே கடிக்கிறது. அதுவும் பல பெரிய பாம்புகள் விஷத்தை இரக்காமல் நம்மை பயமுருத்துவவே கடிக்கிறது. பாம்பு கடிபட்டு செத்தவர்களை விட ஐயோ பாம்பு கடித்து விட்டதே என்ற பயத்தில் செத்தவர்களே அதிகம். கடிக்காத பாம்பை கண்டு நடுநடுங்குவது மனிதனின் தவறே தவிர பாம்புகளின் தவறு அல்ல. 

ஒரு பாம்பை அடித்து கொல்ல செல்லும் போது அந்த பாம்பு ஏதோ ஒருவகையில் நம்மிடம் அகப்படாமல் தப்பி ஓடிவிட்டது என்றால் அல்லது சரியான முறையில் அடிபடாமல் மரண காயத்தோடு தப்பிவிட்டது என்றால் அடிபட்ட அந்த பாம்பு அடித்த நம்மை அடையாளம் வைத்து கொண்டு தேடி வந்து எப்படியாவது கொத்தி கொன்றுவிடும் என்ற ஒரு நம்பிக்கை பரவலாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனாலேயே பாம்பை தற்காப்பிற்காக தாக்க செல்பவர்கள் கூட அதை கொல்லாமல் திரும்ப கூடாது என்ற எண்ணத்தில் கண்ணில் படுகின்ற மற்ற உயிர்களையும் சாகடித்து விடுகிறார்கள். 

நம்மை ஒரு எதிரி அநியாயமான முறையில் தாக்கிவிட்டாலோ அல்லது நாம் அநியாயம் செய்து எதிரிகளிடமிருந்து தப்பித்து விட்டாலோ பாதிக்கபட்டார்கள் கண்டிப்பாக காத்திருந்து நேரம் பாத்திருந்து தாக்க வருவார்கள். பழிக்கு பழி வாங்குவது மனிதர்களின் இயல்பு இந்த இயல்பை பாம்புகளின் மீதும் சுமத்தி பார்ப்பது மனிதனின் பழக்கமாக இருக்கிறது. இதனாலேயே அப்பாவிகளான பாம்புகளை பழிவாங்கும் பிராணிகள் என்று தவறுதலாக நம்புகிறோம். கிராமங்களில் ஒரு அழகான கற்பனை கதை உண்டு கொம்பேறி மூக்கன் என்று ஒரு பாம்பு இருக்கிறதாம் அந்த பாம்பு கடித்து விட்டால் கடிபட்ட மனிதன் செத்துவிட்டானா? அவன் உடலை மயானத்திற்கு கொண்டு வந்துவிட்டார்களா? என்பதை அறியாமல் பாம்புக்கு அமைதி ஏற்படாதாம். அதனால் அது மயானத்தில் உள்ள எதாவது மரத்தின் உச்சி கிளையில் ஏறி காத்திருக்குமாம். உண்மையில் கொம்பேறி மூக்கன் என்று அழைக்கப்படும் பாம்பை சுருட்டை பாம்பு இனம் என்று சொல்லலாம் இது கடித்தால் கடிவாயில் எறும்பு கடித்தது போல ஒரு சிறு வீக்கம் வருமே தவிர வேறு எதுவும் செய்யாது. ஆனால் நமது பயம் கொம்பேறி மூக்கனை மரண தேவனாகவே பார்க்க வைத்து விட்டது. 

இவைகள் எதார்த்தமான பயம்கள் இவற்றையும் தாண்டி அமானுஷ்யமான பயங்களும் நம்பிக்கைகளும் மக்கள் மத்தியில் சற்று ஆழமாகவே இருக்கிறது எனலாம். பாழடைந்த கட்டிடங்கள் பழையகால அரண்மனைகள் போன்றவற்றில் பேய்பிசாசுகள் வாழ்வதாகவும் அந்த பேய்களுக்கு காவல் செய்யவும் ஏவல் செய்யவும் பாம்புகள் இருப்பதாகவும் ஒருசாரார் நம்புகிறார்கள். இதுமட்டும் அல்ல புதையல்களை பாதுகாப்பதற்கு மாய பாம்புகள் பல இருக்கிறது அவைகள் மனிதர்களை மிக கொடிய முறையில் மரணமடைய செய்துவிடும் குடும்பங்களையே அழித்துவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இப்படி எத்தனையோ தவறுதலான எண்ணங்கள் பாம்புகளை பற்றி நாம் வைத்திருக்கிறோம். அவைகள் அனைத்தும் சரியென்று நம்புவது மிகவும் தவறானது. 

மக்கள் பாம்புகளை இப்படி நம்புவது நமது முன்னோர்களுக்கு தெரியாதா? அப்படி தெரிந்திருந்தும் அவர்கள் அவைகளை வணக்கத்திற்குரிய பொருள்களாக கருதுவது ஏன்? என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியாது. பாம்புகளை வழிபாட்டிற்கு கொண்டுவந்ததற்கான மூல காரணம் அச்சங்கள் அல்ல அதற்குள்ளும் அர்த்தங்கள் இருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். இந்த உலகில் இறைவனால் படைக்க பட்ட அனைத்து உயிர்களிடத்திலும் சங்கலி தொடர் போன்ற ஒருவித தொடர்பு இருக்கிறது. இதில் சில தொடர்பு கண்ணுக்கு தெரியும் சில தெரியாது. 

மனிதனது வெளிப்புற தோற்றத்திற்கும் சில குணங்களுக்கும் குரங்குகளோடு தொடர்பு இருப்பதாக நவீன விஞ்ஞானம் கூட சொல்கிறது. குரங்கில் இருந்துதான் மனிதனே பரிணாமம் அடைந்தான் என்று விஞ்ஞானம் சொல்வதில் சில வாத பிரதிவாதங்கள் இருந்தாலும் அவற்றை உண்மை என்று பலரும் நம்பி வருகிறார்கள். மனிதனது வெளித்தோற்றத்தோடு குரங்குகள் எப்படி நெருக்கமாக சம்மந்தபடுகிறதோ அதே போல நமது உள்ளுறுப்புகளோடு சில விலங்குகளின் உள்ளுறுப்புகளும் நெருக்கமாக சம்மந்தபடுகிறது. 

உதாரணமாக பன்றிகளின் இதயமும் நுரையீரலும் மனிதனது உறுப்புகள் போலவே இருப்பதாக மருத்துவ விஞ்ஞானம் சொல்கிறது. பன்றியின் மரபணுக்களில் மனிதனது மரபணுக்களை கலந்துவிட்டால் அவைகளின் இரத்தமும் மனிதனது இரத்தத்தை போலவே ஆகிவிடும் அதன் உறுப்புகளும் அந்த இரத்தங்களை ஆதாரமாக கொண்டு இயங்க தோன்றிவிடும் அதன் பிறகு நோய்பட்ட மனிதர்களுக்கு செயற்கை இதயம் செயற்கை நுரையீரல் பொருத்துவதை போல பன்றிகளின் நுரையீரலையும் இதயத்தையும் எடுத்து கூட பொருத்திவிடலாம் என்று சொல்கிறார்கள். இதற்கான ஆராய்ச்சி தொண்ணூறாம் ஆண்டு முதற்கொண்டே இங்கிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. 

மனிதனது உருவத்திற்கும் உள்ளுறுப்புகளுக்கும் எப்படி சில விலங்குகள் நெருக்கமாக வருகிறதோ அதே போலவே சில உயிரினங்களின் உடல்வாகு மனிதனது ஆத்மாவோடு மிக நெருக்கமாக வருகிறது என்று நமது முன்னோர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். பசு, காகம், பாம்பு போன்றவைகள் அந்த விலங்குகளாகும். பசுவடிவில் தேவர்களும் முன்னோர்களும் இருப்பதாகவும் காகத்தின் வடிவில் பித்ருக்கள் வருவதாகவும் சொல்லபடுவது நமக்கு தெரியும். ஆனால் பாம்பு வடிவாக மனித ஆத்மாக்கள் வருவதாக யாரும் சொல்லி கேள்விபட வில்லையே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அதற்கான விளக்கம் தரவேண்டியது கடமையாகும். 

பொதுவாக நமது மக்கள் நல்ல பாம்பு என்ற நாகபாம்பை அடித்து கொள்வதற்கு யோசிப்பார்கள். காரணம் அவைகள் நமது வழிபடும் தெய்வங்களோடு மிக நெருக்கமான சம்மந்தம் வைத்து கொள்வது என்று நமக்கு தெரியும். ஆனால் இதுமட்டும் அல்லாமல் இதையும் தாண்டிய மறைபொருளான காரணங்கள் இருக்கிறது. அவற்றை பார்க்கும் போது அதிசயமாகவும் வியப்பாகவும் இப்படியும் இருக்குமா? என்று நம்பப முடியாததாகவும் இருக்கலாம். ஆனால் நான் இப்போது சொல்லபோவது ஆன்மீக உலகில் பலகாலமாக ரகசியமாக பாதுகாக்க பட்டுவரும் சத்தியமான உண்மைகள். 

இறைவனை அடைவதற்கு மனிதனுக்கு உள்ள ஒரே வழி உடம்பையும் மனதையும் ஒடுக்கி தவம் செய்வதே ஆகும். அந்த தவமானது இறையனுபவத்தை நேரடியாக பெறுகின்ற வரை தொடர வேண்டும். அப்படி தொடர்வதற்கு உடம்பு என்பது அவசியம் தேவை ஆனால் ஒருவன் உடம்பை பெறுவதும் இழப்பதும் அவனவன் கர்மாவை பொறுத்தே அமைகிறது. கர்மப்படி குறுகிய காலத்தில் உடல் அழிந்து போகவேண்டிய சூழல் இருந்தால் அந்த உடலுக்கு சொந்தமான ஆத்மா தனது ஆன்மீக பயணத்தை வேறொரு உடம்பு எடுத்து தான் மேற்கொள்ள வேண்டும். அதாவது இன்னொரு பிறப்பு தேவை ஆனால் சில தவஞானிகள் மீண்டும் பிறக்க விரும்புவது இல்லை இதனால் நைந்து போன தங்களது பழைய உடல்களை விட்டுவிட்டு காலம் முடிந்து போன பாம்புகளின் உடல்களில் புகுந்து கொள்கிறார்கள். 

பாம்புகளாக வாழ்வதில் ஞானிகளுக்கு பல லாபங்கள் இருக்கின்றன. அதில் முதல் லாபம் பாம்புகள் இருக்கும் இடங்களுக்கு அதிகமாக மனிதர்கள் வருவது கிடையாது. மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளே தவம் செய்வதற்கு சிறந்த இடங்கள். அடுத்தது பாம்புகளின் உடல் இயங்குவதற்கு அதிகபடியான உணவுகள் தேவையில்லை. ஒருமுறை உணவு எடுத்து கொண்டால் சில மாதங்கள் வரை உணவே இல்லாமல் வாழலாம். உட்கார்ந்த இடத்திலேயே நகராமல் ஆடாமல் அசையாமல் தவம் செய்வதற்கு இதைவிட வேறு என்ன வசதிகள் தேவை. எனவே பல சித்தர்கள் சர்பங்களின் வடிவில் தவம் செய்வதற்கே விரும்புகிறார்கள். அதிலும் நாகபாம்புகளை தேர்ந்தெடுப்பதற்கு சிறப்பான காரணங்கள் இல்லாமல் இல்லை. மக்கள் நாகத்திடம் கொண்ட அச்சம் மற்ற பாம்புகளின் மீது கொள்வது சற்று குறைவு எனவே மனிதன் அச்சபடுகின்ற வடிவத்தில் இருந்தால் அவனது தொல்லை முற்றிலுமாக இருக்காது. 

இதனால் தான் நமது பெரியவர்கள் நாகங்களை தேவையில்லமல் அடிக்க கூடாது என்று சொன்னார்கள். நாம் அடிக்கும் நாகத்தில் ஏதாவதொரு சித்தர் இருந்து தவம் செய்யலாம். கொலை செய்வதை விட கொடிய பாவம் தவத்தை கலைப்பதாகும். அந்த பாவத்தை அறியாமல் கூட செய்துவிட கூடாது. எனவே அதை நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் செய்து கர்ம பாரத்தை அதிகமாக சுமக்க கூடாது என்ற நல்ல எண்ணத்திலேயே பாம்புகளை அடிக்காதே வணங்கு என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். இது மட்டுமல்ல பாம்புகளை இறைவடிவமாக வழிபடுவதற்கு இன்னும் அழுத்தமான ஆழமான காரணங்கள் இருக்கின்றன அவற்றை அடுத்து சிந்திப்போம்.



Contact Form

Name

Email *

Message *