Store
  Store
  Store
  Store
  Store
  Store

சிந்துவெளியில் நாகங்கள்...!

இந்து மத வரலாற்று தொடர் 49


    பாம்புகளை வழிபடுவது அவற்றின் மீதுள்ள அச்சமே காரணம் என்ற கருத்து தவருதலானது பாம்புகளுக்குள் பல சூட்சம சக்திகள் நிறைந்துள்ளன எனவே தான் பாம்புகளை மக்கள் வழிபட துவங்கினார்கள் என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். கிரேக்கம், ரோமாபுரி ஆகிய மேற்கத்திய நாகரீகத்தில் நாக வழிபாடு என்ற பாம்பு வணக்கம் மிகுதியாக இருந்தது என்றாலும் அந்த வழிபாட்டிற்கு பல காலத்திற்கு முன்பே இந்தியாவில் பாம்புகளை வழிபடும் முறையானது எல்லா இடங்களிலும் பரவி இருப்பதற்கான ஆதாரங்கள் நிறையவே கிடைக்கின்றன. 

வேத காலம் முற்பட்டதா? சிந்துசமவெளி நாகரீக காலம் முற்பட்டதா? என்ற வாதங்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பலகாலமாக நீடித்துவருவது நமக்கு தெரியும். நிச்சயமாக அவர்களால் சிந்துசமவெளி பகுதிகளில் கிடைத்த எழுத்துக்களை சரியான முறையில் படித்தறிய முடியாத காலம் வரை காலத்தால் முற்பட்டது இது தான் என்ற தீர்வுக்கு வர இயலாது. ஆனாலும் நாம் இரண்டையுமே சமமான கண்ணோட்டத்தோடு பார்த்து நமது இந்து சமய வரலாற்று ஆய்வில் சில வழிபாட்டுக்குரிய காலநிலையை கணக்கிடும் போது எடுத்துகொள்ள வேண்டும். அப்படி எடுத்த்கொண்டால் மட்டுமே பக்கசார்பு இல்லாமல் அதாவது வடபுலத்து வழிபாடு தென்புலத்து வழிபாடு என்ற பேதங்கள் இல்லாமல் முழுமையனவற்றை சிந்தனை செய்ய முடியும். 

இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள சிந்துசமவெளி முத்திரைகள் செப்பேடுகள் போன்றவற்றின் நாகங்களை தெய்வங்களாக சித்தரிக்கும் சில சின்னங்கள் கிடைத்துள்ளன. தெய்வீ க சின்னங்களை தனியாக அடையாள படுத்தி காத்துவதற்கு என்னமாதிரியான குறியீடுகளை அக்கால மக்கள் பயன்படுத்தினார்களோ அதே போன்ற குறியீடுகளை நாக வடிவங்களை சித்தரிக்கும் போது கையாண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட இரண்டு முத்திரைகள் இதுவரை கிடைத்துள்ளன. இன்னும் சில முத்திரைகள் சிதைந்த வடிவத்தில் இருப்பதனால் அவற்றை ஆராய்கின்ற பணியும். நடந்து வருகிறது. 

சிந்துவெளி நாகரீகத்தில் பாம்புகளை வழிபட்டதன் அடையாளமாக சில முத்திரைகளை நாம் காண்பதை போலவே வேதகாலத்திலும் நாக வழிபாட்டுக்குரிய சின்னங்கள் வேத பாடல்களின் வடிவமாக நமக்கு கிடைக்கிறது. ரிக் வேதத்தில் அதிகமாக நாகங்களை பற்றிய குறிப்பு இல்லை என்றாலும் யஜுர் வேதத்தில் பல இடங்களிலும் நாகங்கள் சிறப்பித்து கூறபடுகின்றன. நோய்களை அகற்றி மக்களை ஆரோக்கியத்தோடு வாழ செய்வதற்கு நாக தெய்வங்கள் உதவி புரிவதாக வேத பாடல்கள் பல போற்றி புகழ்கின்றன. 

நாம் நினைப்பது போல வேதங்கள் பாம்புகளை நாகங்கள் என்றோ சர்பங்கள் என்றோ அழைக்கவில்லை அஹி என்ற பெயரில் நாகங்கள் அழைக்க படுகின்றன. அஹி என்ற சொல்லுக்கு பாம்பு என்ற பொருள் மட்டுமல்ல அணிகலன்கள் என்ற பொருளும் இருக்கின்றன. பாம்புகள் இறைவனான சிவபெருமானின் அணிகலன்களாகவும் இருப்பதனால் இந்த சிறப்பு பெயர்களை வைத்து அவைகளை அழைக்கபட்டிருக்கலாம் என்று எண்ணுவதற்கும் அதிக இடம் இருக்கிறது. பொதுவாக யஜூர் வேத பாடல்கள் பல பாஞ்சால நாட்டில் வாழ்ந்த ரிஷிகள் பலரால் கண்டறிய பட்டதாகும். பாஞ்சால நாட்டின் தலைநகரமே அஹிசத்திரம் என்ற பெயரை கொண்டது. இதை வைத்து பார்க்கும் போதும் இந்நகரத்தின் காவல் தெய்வமாக ஆதி நாகம் என்ற நாகம் இருப்பதாக சொல்லபடுவதை பார்க்கும் போதும் பாஞ்சால நாட்டில் நாக வழிபாடு சிறப்பாக இருந்தது என்ற முடிவுக்கும் நம்மால் வர முடிகிறது. 

இதுமட்டும் அல்ல பாஞ்சால தேசத்து அரசர்களில் மிக புகல்பெற்றவர்களான அக்கினி மித்திரன் பானு மித்திரன் போன்றோர் காலத்து நாணயங்களிலும் பாம்பு உருவங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதர்வண வேதத்திலும் அதற்கு பின்பு தோன்றிய மற்ற பல நூல்களிலும் நாகங்கள் தெய்வாம்சம் பொருந்தியவைகள் என்ற குறிப்புகள் இருப்பதோடு நாகர்கள் என்ற இனமும் தெய்வ தன்மை வாய்ந்தது என்ற சிறப்பு குறிப்பும் இருக்கிறது. 

பொதுவாக இந்தியாவில் எந்தவொரு தனி மனிதனும் தன்னை பற்றியும் தனது வம்சத்தை பற்றியும் குறிப்பிடும் போது தாங்கள் ஓர் அரசனின் வழிவந்தவர்களாகவோ செல்வந்தர்களின் வாரிசுகளாகவோ சொல்லி கொள்வது கிடையாது. மாறாக ஒருமுனிவரின் ரிஷியின் வழிதோன்றல்களாகவே சொல்லி கொள்வார்கள். உதாரணமாக காஷியப கோத்திரம், கெளடல்ய கோத்திரம் என்று அழைக்கபடுவது எல்லாம் ரிஷிகளின் பெயர்களே ஆகும். அந்த வகையில் நாகர்கள் என்ற கோத்திரம் நாகங்களின் வாரிசுகள் என்றே சொல்லலாம். 

மனித நிலையிலிருந்து மாற்றம் அடைந்து தெய்வ நிலைக்கு ஒருவன் செல்வதற்கு வழிகாட்ட கூடிய பாதை யோக மார்க்கம் என்று நமக்கு தெரியும். இந்த யோக மார்க்கத்தை உருவாக்கியவர் பதஞ்சலி மகரிஷி ஆவார். பதஞ்சலி மகரிஷியின் உருவத்தை சிலையாக வடிக்கும் வழிவகைகளை காட்டுகின்ற பல சில்ப சாஸ்திர நூல்கள் அவரை நாகத்தின் தலை கொண்டவராகவே அடையாளம் காட்டுகின்றன. இதை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது நாகர்கள் என்ற இனத்தின் மூதாதையாக பதஞ்சலி மகரிஷியே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆதிகால இந்திய வரலாற்றில் நாகர் இனம் ஆற்றியிருக்கும் தொண்டுகள் மிக பெரியது. 

நாகர் வம்சத்தில் வந்த அரசர்களை பற்றி குறிப்புகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மலிந்து கிடக்கின்றன. அவற்றின் துணை கொண்ண்டு ஆராயும் போது நாகர்கள் ஆரியர்கள் அல்லாத தனியினத்தை சார்ந்தவர்கள் என்று தெரிகிறது. மகததேசத்தை அரசாண்ட சைசுநாகர் என்ற மன்னரே நாக மன்னர்களில் மிகவும் காலத்தால் முற்பட்டவர் என்று சொல்லலாம். அவருக்கு பின்வந்த சிசுநாகன் நாகதர்ஷகன் போன்றோர்களும் குறிப்பிட தக்க அரசர்களே ஆவார்கள். இவர்கள் அனைவருமே நாகங்களை வழிபடுவதில் முனைப்பு காட்டினார்கள் என்ற விவரங்கள் தாரளமாக கிடைக்கின்றன. 

குஷானர்களின் ஆதிக்கம் குறைந்த பிறகு விதிஷா, காந்திபுரி, மதுரா, பத்மாவதி போன்ற இடங்களில் அரசாண்ட நாக மன்னர்களை பற்றிய விவரங்களை புராணங்கள் தருகின்றன. அவர்களில் சேஷன், சந்திராம்ஷன், போகி போன்றவர்கள் விதிஷா நகரை தலைநகராக கொண்டு அரசாண்டார்கள். கி.பி நான்காம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் பல பகுதிகளில் நகர்களின் அரசாங்கம் இருந்ததாக நாணயங்கள் சாசனங்கள் போன்றவைகள் தெளிவாக காட்டுகின்றன. தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூர் நகரத்தில் கி.பி நான்காம் நூற்றாண்டை சேர்ந்த செப்பேடு ஒன்றில் நாகபட்டன் என்ற அரசனின் மகனான மகேந்திர நாகன் என்பவனது சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அதே போல வாகடக அரசன் ருத்ர சேனனின் தாய்மாமனான குவேர நாகன் என்பவனும் செயற்கரிய பல செயல்களை செய்து மக்களுக்கு வேளாண்மை வழியில் தொண்டுகள் புரிந்ததாக அறிய முடிகிறது. 

குவேர நாகன் மூன்றாம் நூற்றாண்டின் கடேசி பகுதியிலோ நான்காம் நூற்றாண்டின் துவக்கத்திலோ வாழ்ந்திருக்க வேண்டும். இவன் சிவபெருமானின் வடிவமான சிவலிங்கத்தை தோள்களில் சுமந்தவன்னமே வாழ்வின் பெரும் பகுதியை கழித்ததாகவும் இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் இவனை பராசிவ குலத்து மன்னனாக ஆகியதாகவும் ஒரு ஐதீகம் இருக்கிறது. பராசிவ குலம் என்பது ஆகாயத்திலிருந்து கங்கையை பூமியை நோக்கி இறங்கி வர செய்த பகிரதனின் குலம் என்றும் சொல்கிறார்கள். 

குஷானர்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பலமிக்க அரசகுலமாக பராசிவ நாகர்குலம் இருந்தது என்பது குறிப்பிட தக்கதாகும். இந்த குலத்தில் வந்த பவனாகன் என்ற மன்னனின் பெயர் எழுதிய நாணயங்கள் பல பதம் பவாய எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குவாலியருக்கு அருகில் உள்ள நர்வார் என்ற நகரத்தின் அருகில் உள்ள பகுதியாகும். இதன் புராண கால பெயர் பத்மாவதி நாகர்களோடு குப்த வம்சத்து மன்னர்கள் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். சமூத்திர குப்தனின் மகனான இரண்டாம் சந்திர குப்தன் நாகர் வம்சத்து இளவரசியான குபேரநாகை என்பவளை மணந்து தனது பட்டத்து ராணியாக ஆக்கி கொண்டான். குப்த வம்சம் பெரும்புகழ் பெற்றது என்றால் அது நாகர்களின் பலம் பொருந்திய தொடர்பால் மட்டுமே என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

நாகர்கள் இந்தியாவில் வடக்கே இருந்து தெற்கு வரை பல பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள். அல்லது தனது வீர முத்திரைகளை பதித்திருக்கிறார்கள். அதன் விளைவாகவே நாகபட்டினம், நாகர்கோவில் போன்ற ஊர்களுக்கு நாகர்களின் பெயர்கள் வைக்கபட்டிருக்கின்றன. நாகத்தை மட்டுமே வழிபடுகின்ற மக்களாக நாகலாந்து மக்கள் பண்டைய காலத்தில் இருந்ததனால் அந்த பகுதி நாகலாந்து அல்லது நாக பூமி என்ற பெயரை பெற்றது. ஒரு வம்சமே நாகர் குலம் என்று அழைக்கபட்டிருப்பதினால் நாக வழிபாடு இந்தியாவில் எத்தகைய சிறப்பு பெற்றதாக இருந்தது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். 

வடமொழியில் எழுதப்பட்ட கிருஹய சூத்திரம் என்பது நாகர்களின் சிறப்புகளை விரிவாக எடுத்து சொல்கிறது. நாகர்கள் வணக்க தக்கவர்கள் பூலோகம் வானுலகம் சொர்கலோகம் போன்ற உலகங்களின் நான்கு திசைகளுக்கும் அதிபதிகளாக இருப்பவர்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. நித்தேஷ என்ற பெளத்த மத நூலும் நாக வழிபாட்டின் சிறப்புகளை பலவாறு புகழ்ந்து சொல்கிறது. அந்த நூல் பகவா நாகோ என்ற சிறப்பு பெயரை பாம்புகளுக்கு தருகிறது. அதாவது வணக்கத்திற்குரிய நாகம் என்பது இதன் பொருளாகும். 

நாகங்களுக்கு என்று தனித்தனியான வழிபாட்டு கூடங்களை ஏற்படுத்துவதற்கு அக்காலத்திய மன்னர்கள் பலர் விரும்பி இருக்கிறார்கள். பொதுமக்கள் புனித காரியங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகின்ற நீர் நிலைகளின் அருகில் நாக சிலைகள் வடிவமைத்து மக்கள் வழிபட செய்திருக்கிறார்கள். ஹாவிஷ்க என்னும் குஷான மன்னன் பிரதிஷ்டை செய்த நாகங்களுக்கான கோவில் சில முஸ்லிம் மன்னர்களால் தரைமட்டமாக்க பட்டது. அந்த கோவிலின் மிச்ச மீதி அடையாளமாக கிடைத்த ஒரு சிறிய நாக சிலையும் கனிஷ்க மன்னன் எட்டாம் நூற்றாண்டில் செதுக்கிய நாக வடிவம் ஒன்றும் மதுரா அருகாட்சியகத்தில் இன்றும் வைக்கப்பட்டுள்ளது. 

சிவன் விஷ்ணுவை தனி தெய்வமாக மக்கள் வழிபட்டதை போலவே நாகங்களையும் மக்கள் தனி தெய்வமாக ஆதி காலத்தில் வணக்கி இருக்கிறார்கள். அதன் பிறகே நாகங்கள் பரிகார தெய்வங்களின் அந்தஸ்தை பெற்று கீழ்நிலை படுத்த பட்டிருக்கிறது. காலம் செல்ல செல்ல நாகங்கள் இறந்து போன மூதாதையர்களின் வடிவங்களாக கருதி ஆவி வழிபாட்டில் நாக தேவதைகள் இணைக்கப்பட்டு விட்டார்கள். இருந்தாலும் நாக வழிபாட்டின் தாக்கம் என்பது மக்கள் மனதை விட்டு சிறிது கூட விலகவில்லை என்று உறுதியாக சொல்லலாம். வைதீக சமயமான சனாதன தர்மம் சற்று அமைதியாக இருந்த போது புத்துயிர் பெற்றிருந்த பெளத்த மதம் நாக வழிபாட்டை கைவிட்டு விடவில்லை. முஷிலிந்த எலாபத்த என்ற இரண்டு நாகங்கள் புத்தரை சரணடைந்ததாகவும் அவர் அதற்கு அபயம் வழங்கியதாகவும் பெளத்த மத புராணங்கள் கூறுகின்றன. 

புத்த மதத்திற்கு முந்திய மதமான ஜைன மதத்தில் பார்ஷ்வ நாதர் என்ற ஜைன தீர்த்தங்கரின் முக்கிய சின்னமாக பாம்புகள் மட்டுமே திகழ்கின்றன. இந்து மத இலக்கியங்களில் மிகவும் புகழ்பெற்ற பாகவத புராணத்தில் ஸ்ரீ மத் கிருஷ்ண பரமாத்மா காளிங்கன் என்ற நாகத்தின் தலையின் மீது நர்த்தனம் ஆடியது புகழ்பெற்ற நிகழ்வாகும். இது தவிர இந்து மத புராணங்களில் பல இடங்களிலும் பாம்குகளுக்கு சிறப்பான தனியிடம் கொடுக்கபட்டிருக்கிறது. சிவன் துர்க்கை சூரியன் கணபதி போன்ற தெய்வங்களுக்கு நாகங்களே ஆபரணங்களாக அமைந்துள்ளதை மறக்க முடியாது. ஹரி வம்சம் என்ற நூல் ஆதி சேஷனின் அவதாரமான பலராமனை வழிபடுவதன் மூலம் சகல சுகங்களையும் பெறலாம் என்று தெளிவாக சொல்லுகின்றன. மகாபாரத அனுஷாசன பர்வதத்தில் இந்த கருத்து கூறபட்டிருப்பதை நினைவு கூற வேண்டும். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நீ யாரை வழிபட்டாலும் கடேசியில் வந்து என்னிடமே சேர்வாய் என்று சொல்கிறார். அதாவது மாமன் மச்சான் என்று ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஒரு மனிதனின் இறப்பிற்கு பிறகு அவன் கூடவே வருவது அவனது நியாய தர்மங்களே என்பது நமது மதத்தின் ஆதார சுருதியாகும். நியாய தர்மங்கள் இருந்தால் மட்டுமே மகாவிஷ்ணுவின் நெருக்கம் கிடைக்கும் என்பது மகாபாரதத்தில் உள்ள அனுஷாசன பர்வத்தின் குறிப்புகளாகும். நியாய தர்மங்களை மட்டுமே வாழ்க்கை துணையாக கொண்டு கடந்து செல்வதற்கு ஆதிஷேசனின் அம்சமான பலதேவனின் அருள் இருக்க வேண்டும் என்று சொல்லபடுகிறது. பலதேவனை வழிபடுவதன் மூலமாக வராக அவதாரத்தின் அனுக்ரகத்தை அடையலாம் என்று நம்பப்படுகிறது. 

பல தொன்மைவாய்ந்த சிற்பங்களில் பகவான் வராக அவதாரத்தில் வருகின்ற போது அவரது திருபாத கமலங்களை தாங்கி கொள்வதற்கு சேஷன் தயாராக இருக்கிறான். என்பதை எடுத்து காட்ட வராக சிற்பத்தின் ஒற்றை காலை தாங்கி பிடித்த வண்ணம் சேஷன் இருப்பதை அறியலாம். இந்தியாவின் மூலை முடுக்குகளில் கிடைக்கின்ற பல சிற்பங்களிலும் ஓவியங்களிலும் நாக வழிபாட்டின் சிறப்புகள் பரவி கிடப்பதை அறிய முடிகிறது. மனித உடம்பும் பாம்பு தலையும் அல்லது பாம்பு உடம்பும் மனித தலையும் உடைய படைப்புகளை பார்க்கும் போது மனிதனுக்கும் நாகத்திற்கும் உள்ள தொடர்பு எந்த அளவு பின்னிபிணைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. 

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம் ஆனால் அதே பாம்பை வழிபட கூடிய நிலையில் வரும் போது இந்தியாவில் யாரும் அவைகளை பார்த்து பயந்ததாக தெரியவில்லை. புறநானூறு போன்ற பழைய தமிழ் இலக்கியங்களில் சீறிவரும் புலியை சிறு முறத்தை கொண்டு தாக்கி விரட்டிய பெண்மணிகளை பற்றி அறிய முடியறது. அது நிஜமா? நடக்க கூடுயதா? என்ற சந்தேகம் நமக்கு வருகின்ற போது நாக பஞ்சமி தினத்தன்று நமது பெண்கள் படமெடுத்து ஆடுகின்ற நல்ல பாம்பை தைரியமாக தொட்டு குங்குமம் வைத்து கற்பூர ஆராத்தி காட்டி வழிபடுவதை பார்த்தால் இவள் புலியை விரட்டியது புளுகு மூட்டையல்ல என்று தோன்றும். 

எந்தவொரு வழிபாட்டு முறையும் காரண காரியம் இல்லாமல் வருவது கிடையாது. அதுவும் குறிப்பாக நாக வழிபாடு என்பது சிந்துசமவெளி நாகரீக காலம் தொட்டே மனிதர் வாழ்வில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது என்றால் அதற்கு ஆழமான காரணங்கள் இல்லாமல் இருக்க முடியாது. அந்த காரணம் என்னவென்று தெரிந்து கொண்டால் மட்டுமே நாக வழிபாட்டின் சிறப்புகளை நம்மால் உணர முடியும். எனவே அதை பற்றி அடுத்து சிந்திப்போம்.



Contact Form

Name

Email *

Message *