Store
  Store
  Store
  Store
  Store
  Store

எனக்கான மந்திரம் எது...?





    சில மதங்களுக்கு முன்பு திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருந்தேன் சுவாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்தபோது ஒரு பெரியவரை சந்தித்து பேசிகொண்டிருந்தேன். அவர் பல ஆன்மீக விஷயங்களை சுவாரஷ்யமான முறையில் சொல்லிக்கொண்டே வந்தார். தனது பேச்சின் இடையில் நீ முன்னேற வேண்டுமானால் உனக்கான தாரக மந்திரத்தை தவறாமல் ஜெபித்து வா நல்ல முன்னேற்றத்தை அடைவாய் என்று சொன்னார். 

நான் அவரிடம் தாரக மந்திரம் என்றால் என்ன? அதில் எனக்கான தாரக மந்திரம் எது என்பதை எப்படி அறிந்து கொள்வது என்று கேட்டேன். காலம் வரும் போது எல்லாம் தெளிவாகும் அப்போது உன் தாரக மந்திரம் எது என்ற தெளிவு பிறக்கும் என்று சொன்னார். நான் அவரிடம் எவ்வளவோ வற்புறுத்தி கேட்டும் அதற்குமேல் அவர் பதிலை சொல்லவில்லை. இருந்தாலும் சில மாதங்களில் நவீன தகவல் கருவி வழியாக ஒரு மனிதரை நீ சந்திப்பாய் அவர் வைஷ்ணவ சின்னம் தரித்து நடக்க முடியாதவராக இருப்பார் அவரிடம் உன் கேள்விக்கான பதிலையும் தாரக மந்திரம் உனக்கு என்று உரியது எது என்பதையும் கேட்டு தெரிந்து கொள் என்று மட்டும் கூறினார். 

அவர் சொன்னதை சில நாட்கள் நினைவில் வைத்திருந்தேன் பிறகு என் வேலையில் சுத்தமாக மறந்துவிட்டேன். சென்ற வாரம் இணையத்தில் ஆதிசங்கரரை பற்றிய விபரங்களை தேடும் போது உங்களது உஜிலாதேவி இணையதளத்தை பார்த்தேன் அதில் உங்கள் எழுத்துக்களையும் உங்கள் புகைப்படத்தையும் கண்ட நான் ஈர்க்க பட்டேன். உங்கள் எழுத்துக்களை முழுமையாக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உங்களை பற்றிய வாழ்க்கை குறிப்பை நீங்கள் கொடுத்திருந்தும் அதை நான் படிக்காமல் விட்டுவிட்டேன். 

இரண்டு நாட்களுக்கு முன்பே உங்களது வாழ்க்கை குறிப்பை படித்தேன் அதில் உங்கள் உடல் நிலையை பற்றி எழுதியிருப்பதை அறிந்து ஒரு நிமிடம் ஆடி போய்விட்டேன் திருசெந்தூரில் சந்தித்த பெரியவர் உங்களை பற்றி தான் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் அவர் சொன்ன நபர் நீங்களே தான் என்று நான் ஆழமாக நம்ப துவங்கி விட்டேன். குருஜி அவர்கள் என்னை ஆசிர்வதிக்க வேண்டுமாறும் எனக்கான தாரக மந்திரம் எது என்று சொல்லுமாறும் தாழ்மையோடு கேட்கிறேன். தயவு செய்து இந்த ஏழைக்கு வழிகாட்டி உதவுமாறு வேண்டுகிறேன். 
இப்படிக்கு 
துரைராஜ் 
நாகபட்டினம் 




    குண்டுகள் இல்லாத துப்பாக்கி எதற்கும் உதவாது என்பது போல லச்சியம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் உதவாது உலகத்தில் நிறைய மனிதர்கள் தோல்விகரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் தனது லட்சியம் இது தான் என்ற அடையாளம் தெரியாததே ஆகும். 

தனது நோக்கம் லட்சியம் இதுவென தெரிந்த பிறகு எவனும் அதை நோக்கி உழைக்காமல் இருக்க இயலாது. அப்படி உழைப்பவரை பார்த்து மற்ற மனிதர்கள் வாழ்வில் செல்வாக்கை பெறுவது மட்டுமே இவரது நோக்கம் தனது உயர்வு என்பதே இவரின் தாரக மந்திரம் என்று சொல்வார்கள். 

ஆக நோக்கம் லட்சியம் இறுதியில் பெறக்கூடிய வெற்றி இவைகள் அனைத்தையுமே தாரகமந்திரம் என்ற ஒரே சொல்லில் அடங்குகிறது. அதாவது எவராலும் எந்த காலத்திலும் அழிக்க முடியாததும் எத்தகைய இக்கட்டுகள் வந்தாலும் கைவிட்டு நழுவி போகாமல் இருப்பதும் இறுதி நோக்கமாக அமைதியையும் ஆனந்தத்தையும் இதற்கெல்லாம் மேலானதாக இருக்கின்ற மன திருப்தியையும் தருவது எதுவோ அதுவே தாரக மந்திரம். 

இந்த வார்த்தை லட்சியத்தை மட்டும் பொருளாக கொள்ளவில்லை. காரணம் லட்சியங்கள் என்பது பல நேரங்களில் சுய தேவைகளை மட்டுமே முக்கியமானதாக கொண்டது. அதாவது மனித வாழ்விற்கு தேவையான புறவளர்ச்சியையும் அக வளர்ச்சியையும் தருவது எதுவோ அதுவே தாரக மந்திரம். 

பொருள் வளர்ச்சியை தரும்போது உள்ள தாரக மந்திரமும் அருள்வளர்ச்சியை தரும் தாரக மந்திரமும் ஒன்றை போல் தோன்றினாலும் இரண்டும் ஒன்றல்ல காரணம் அருள் வளர்ச்சியை தரும் தாரக மந்திரம் என்பது ஒரு மனிதனை அவனது ஆத்மாவை வளம்பெற செய்யும். பொருள் வளர்ச்சியை தரும் தாரக மந்திரம் என்பது உடலையும் சமூகத்தையும் வளர்ப்பதாகும். உங்களை செந்தில் ஆண்டவன் சன்னதியில் சந்தித்த நபர் சொன்ன தாரக மந்திரம் என்பது நிச்சயம் பொருள் சார்ந்ததாக இல்லாமல் அருள் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். 

தாரக மந்திரங்கள் ஒரேழுத்தாக வரும் போது ஓம் என்றும் ஈரேழுத்தாக வரும் போது ராம் என்றும் மூன்றெழுத்தாக வரும் போது சக்தி என்னும் ஐந்தெழுத்தாக வரும் போது நமசிவாய என்றும் ஆறேழுத்தாக வரும் போது சரவணபவ என்றும் எட்டெழுத்தாக வரும் போது ஓம் நமோ நாராயணாய என்றும் ஆறுவகையாக இருக்கிறது . 

இதில் எந்த தெய்வத்திற்குரிய மந்திரம் நமக்கு பிடித்தமாக இருக்கிறதோ அதை எடுத்து கொண்டு தொடர்ந்து உச்சாடனம் செய்தால் அதுவே நமக்கு தாரக மந்திரமாக இருந்து பல வகையிலும் உயர்வை தருகிறது. மந்திரங்களை நம்பிக்கையோடு மனனம் செய்யும் போது கிடைக்கும் பலன் நூறு சதவீகிதம் உண்மையானது. 

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது குணபேதங்களின் இயல்பை பொறுத்தவாறு தனித்தனியான மந்திரங்கள் இருக்கின்றன இதில் குருவாக இருப்பவர் நமக்கு எந்த மந்திரத்தை சொன்னால் நன்மை ஏற்படுமோ அதை நமக்கு கண்டிப்பாக தருவார். காரணம் சாதாரண மனிதர்கள் ஒருவனது புறசெயல்களை வைத்தே அவனது அறிவும் திறமையும் கணக்கிடுகிறார்கள். ஆனால் இறைவனின் அருள் பெற்ற அபரோஷ அனுபூதிமான்கள் ஒருவனது ஆத்மாவில் கபடு அற்ற நிலையை வைத்தே கணக்கிடுகிறார்கள். கபடு இல்லாத மனிதனே சிறந்த மனிதன். அவனிடம் இருப்பதே தாரக மந்திரம். 

அன்பரே இங்கே நாம் சொல்லியிருக்கின்ற ஒரேழுத்து மந்திரத்தில் துவங்கி எட்டெழுத்து மந்திரத்தில் முடியும் தாரக மந்திரங்கள் பொதுவானது இது தவிர ஒவ்வொரு மனிதனுக்கென்றே தனித்தனியான தாரக மந்திரம் இருக்கின்றன. இதை குறிப்பிட்ட நபருக்கு தேவையானது எதுவென்று தேடி கண்டுபிடித்து கொடுப்பது பெரிய சிரமம் அதற்கு மந்திரத்தை கொடுப்பவரும் வாங்குபவரும் நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் 

உண்மையை சொல்வது என்றால் உங்களுக்கென்று உடைய தாரக மந்திரத்தை நேரில் மட்டுமே சொல்லவேண்டுமே தவிர மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ தேர்விப்பது என்பது நல்லதல்ல எனவே உங்களுக்கான தாரக மந்திரத்தை அறிந்து கொள்ள நீங்கள் நேரிலையே வந்தால் மட்டுமே முடியும்.





Contact Form

Name

Email *

Message *