Store
  Store
  Store
  Store
  Store
  Store

இரண்டு பெண்கள் இரண்டு தத்துவம் !


ராமாயண தொடர் பாகம் 1



யோத்தி 

       ந்த பெயரை உச்சரித்த மாத்திரத்தில் உதடுகளும் உள்ளமும் தித்திப்பால் சிலிர்த்து போகும். மாணிக்க வீடுகட்டி வைரத்தில் விளக்கேற்றி பவளத்தில் கம்பளம் விரித்து மரகதத்தால் விசிறி செய்து கோமேதக இருக்கையில் அமர்ந்து கொண்டு வீசினால் அப்படி ஒரு காட்சி நம்மால் பார்க்க முடிந்தால் அது அயோத்தியாக மட்டுமே இருக்கும். அழகு என்றால் அழகு ஓவியன் எழுதிவைத்த அழகு. பூமியில் எந்த பகுதிக்கும் இல்லாத அழகு அயோத்திக்கு மட்டும் எப்படி கிடைத்தது? அங்கு ஓடிய ஸரயூ நதியில் சாதாரண தண்ணீரே உண்டு அங்குள்ள மலைகளும் குன்றுகளும் சாதாரண கற்களால் ஆனதே. மரங்களும் செடிகளும் மலர்களூம் கூட எங்கும் காணக்கூடியது தான். ஆனால் அவைகளில் இல்லாத சிறப்பு இங்குமட்டும் எப்படி வந்தது? அனைத்து வார்த்தைகளை உச்சரிக்கும் போதும் கிடைக்காத இனிமை அயோத்தியின் பெயரை சொல்லும் போது மட்டும் எப்படி கிடைக்கிறது? எல்லாம் அந்த பூமியில் ஸ்ரீ ராமன் என்ற அவதார புருஷன் பிறந்ததால் மட்டுமே 

அயோத்தியின் அரசன் பெயர் தசரதன் இவன் சூரியகுலத்தில் தோன்றியவன் தசரதன் என்ற பெயர் அர்த்தம் பொருந்தியது. இதற்கு நேரான விளக்கத்தை பார்த்தால் பத்து ரதங்களை கொண்டவன் என்பது பொருளாகும். அதற்குள் இன்னொரு பொருளும் மறைந்திருக்கிறது. மனிதனுக்கு ஐந்து புலன்கள் உண்டு என்று பலரும் சொல்கிறார்கள். கண், காது, செவி, மூக்கு, உடம்பு என்ற இந்த ஐந்து புலங்களையும் ஞானேந்திரியங்கள் என்று அழைக்கும் பெரியவர்கள் கர்மேந்திரியங்கள் என்ற இன்னுமொரு ஐந்து புலன்களையும் சொல்கிறார்கள். சொற்கள், கரங்கள், கால்கள், பிறப்புறுப்பு, கழிவுபாதைகள் என்பது இதன் வகைகளாகும் இந்த பத்து இந்திரியங்களை அடக்கி தன்வசபடுத்தி வாழ்பவன் யோகி பத்து இந்திரியங்களின் வழி செல்பவன் போகி தசரதனும் பத்து இந்திரியங்களை ரதம் போல கொண்டு அதன் மேல் பயணம் செய்பவன் அதாவது புலன்கள் இழுத்த இழுப்புக்கு ஆட்படுபவன் என்பது பொருளாகும். 

தசரதனுக்கு அக்கால மன்னர்களின் மரபுப்படி நிறைய மனைவிமார்கள் உண்டு கட்டியவள் அனைவரும் மனைவி என்றாலும் மனைவிகள் அனைவரும் அரசியாகிவிட முடியுமா? அக்கால அரசியலில் திருமணம் என்பதே ஒரு ராஜ தந்திரம் அதனடிப்படையில் தசரதனின் கோசலை கைகேயி சுமித்திரை ஆகிய மூன்று மனைவிகள் பட்டத்து அரசிகளாக இருந்தார்கள். தசரதனுக்கு எல்லாம் இருந்தது. அவனிடம் இல்லாதது குழந்தை செல்வம் மட்டுமே அரண்மனையில் இசைவாணர்கள் மீட்டிய யாழின் ஒலியும் வீணையின் நாதமும் அவன் மனதை கவர்ந்தது ஆனாலும் அவன் ஆத்மாவை தொட்டு அவைகளால் ஆறுதலை தர முடியவில்லை அந்த ஆறுதலை தருவது மழலை வாய்மொழி என்ற அமுத இசை அல்லவா? எனவே அரசன் மழலை இசை கேட்க யாகம் ஒன்று செய்தான் அந்த யாகத்தின் விளைவாக் நான்கு குமாரர்களை பெற்றெடுத்தான். 

வால்மீகி ராமாயணத்தில் எடுத்த எடுப்பிலேயே ராமன் பிறந்ததை சொல்லிவிடுகிறார். நாட்டு வர்ணனை மன்னனின் குல சிறப்பு அவனது வீர பராக்கிரமம் போன்றவைகளை விவரித்து பேசவில்லை. அதற்கு அவசியம் இல்லை என்று வால்மீகி நினைத்தாரோ என்னவோ தசரதனின் குமாரர்களான ராமன், பரதன், லஷ்மணன், சத்ருக்கன் ஆகிய நான்கு பேரின் திறமைகளை தர்மங்களை விவரிப்பதில் உள்ள சுகம் தசரதனை விவரிப்பதில் அவருக்கு கிடைக்கவில்லையோ என்னவோ 

நான்கு மகன்களில் ராமன் மட்டும் தனியான ஒளி பொருந்தியவனாக இருந்தான். அரண்மனையில் உள்ள அனைவருமே அவனை நேசித்தார்கள் அரசிமார்கள் மூன்றுபேரும் தமது குமாரர்களை பாராட்டி சீராட்டி வளர்த்தார்கள் என்றாலும் ராமன் பெயரில் மட்டும் அவர்களுக்கு தனியான கரிசனமும் அக்கறையும் பாசமும் இருந்தது. தம்பி லஷ்மணன் ராமனை விட்டு பிரியாதவனாக அவனின் நிழலை போலவே கூடவே இருந்தான். பரதன் சத்ருக்கன் இரண்டு பேரும் ராமன் மீது காதல் கொண்டவர்கள் என்றாலும் தங்களுக்குள் தனியான இணக்கத்தை வைத்திருந்தார்கள். 

தசரத குமாரர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது தகப்பனுக்கு பூரிப்பை தந்தது அவர்களை கல்வி கற்க வைத்தான் அரசகுமாரர்களுக்கு தேவையான யுத்த முறைகளையும் கற்க செய்தான் இத்தனையும் செய்துவிட்ட அவனுக்கு பிள்ளைகளுக்கு மீசை அரும்பியவுடன் திருமணம் செய்துவைக்க ஆசை வந்தது மந்திரிகளையும் ஆலோசனை வழங்கும் சான்றோர்களையும் அழைத்து எந்த நாட்டு இளவரசியை அயோத்தியின் மருமக்களாக கொண்டுவரலாம் என்று கலந்தாலோசித்து கொண்டிருந்த போது சேவகன் ஒருவன் வந்து மன்னனை வணங்கி அரசர் பெருமானுக்கு வணக்கம் வாசலில் தவத்தில் சிறந்த விஸ்வமித்திர மகரிஷி வந்திருக்கிறார் என்று வணங்கி சொல்லி விடை பெற்றான். 

விஸ்வம் என்றால் உலகம் மித்திரன் என்றால் அன்பன் நண்பன் என்ற பொருள்களை கொள்ளலாம். விஸ்வமித்திரர் என்றாலே உலகத்தை அன்போடு பார்ப்பவர் என்று தான் பொருளாகும். ஆனாலும் ஏனோ அவரை கண்டவுடன் மன்னர்களுக்கெல்லாம் ஒரு நடுக்கமுண்டு தங்களை போல இருந்த கெளசிக மன்னன் தவம் செய்து அதையும் வதம் செய்ய இந்திரன் வந்த போதும் அதையும் வென்று மாமுனியாக உயர்ந்து நிற்கிறாரே அவர் ஆண்மையின் கம்பீரம் எங்கே நாம் எங்கே? என்ற நாணமாக கூட இருக்கலாம். அல்லது இவர் தவம் செய்து பழக்கப்பட்ட பிராமண குளத்தில் பிறக்காமல் யுத்தம் செய்து பழக்கப்பட்ட ஷத்திரிய குலத்தில் பிறந்தவர் அதனால் இவருக்கு கோபம் அதிகமாக இருக்கும் என்ற தவறான கருத்தோ என்னவோ மற்ற மன்னர்கள் பயந்தது போலவே தசரதனும் பயந்தான். வாசலுக்கு ஓடி சென்று தவமுனிவரை வணங்கி வரவேற்று அமர செய்து தான் அமராமல் நின்றான். 

ராஜரிஷியாகிய தாங்கள் இன்று எனது அரண்மனைக்கு வருகைதந்திருப்பது நானும் என் மக்களும் என் முன்னோர்களும் செய்த பாக்கியம் ஐயா அவர்கள் எதை கேட்டாலும் செய்து தர தயாராக இருக்கிறேன் இது சத்தியம் என்று எடுத்த எடுப்பிலே உறுதி தந்தார். முனிவர் சிரித்தார் மன்னா பேசுகின்ற வரைக்கும் வார்த்தை நமக்கு கட்டுப்பட்டது பேசிய பிறகு வார்த்தைக்கு நாம் கட்டுப்பட்டு விடுகிறோம். யோசிக்காமல் தர்மம் செய்யலாம் யோசிக்காமல் வார்த்தைகளை வெளியிட கூடாது என்று சொன்னார். மன்னன் பேசவில்லை மெளனமாக நின்றான். முனிவரே தொடர்ந்தார். தசரதா உலகமும் உலக உயிர்களும் உன்னை போன்ற மன்னவர்களும் என்னை போன்ற சின்னவர்களும் நலமோடு வாழ்வதற்கு நானொரு யாகம் செய்கிறேன். அந்த யாகத்தை சரியான முறையில் நடத்தி முடிக்காமல் தாடகை மாரிசன், சுபாகு போன்ற அசுரர்கள் கொடும் செயல்களை செய்து தடை செய்கிறார்கள் அவர்களிடமிருந்து தொல்லைவராமல் தடுத்து யாகத்தை நல்லமுறையில் நடத்த உன் மகன் ராமனை என்னோடு அனுப்பு என்றார் முனிவர். 

எதையும் தருகிறேன் என்று வாக்கு கொடுத்த தசரதன் பெரிய மீனை விழுங்கி விட்ட சிறிய மீனை போல் தவித்து நின்றான். என்ன சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அதனால் ஐயா முனிவரே தாடகை என்பவள் யார்? என்று பேச்சை திசை திருப்ப ஒரு கேள்வியை கேட்டான். அதற்கு ராவணணன் என்றொரு அரக்கன் இலங்கையை ஆள்கிறான் அவன் பிரம்ம தேவனிடம் வரம்பெற்று சகல உலகத்தையும் ஆட்டிபடைக்கிறான். பாவம் மனிதர்கள் போனால் போகட்டும் என்று உன்னையும் உன்னை போன்ற மன்னர்களையும் விட்டு வைத்திருக்கிறான். ஆனால் தேவாதி தேவர்களை அவன் செய்யும் கொடுமை வார்த்தைகளால் சொல்ல இயலாது. அவனது தங்கை இந்த தாடகை அண்ணன் ராவணனின் பலத்தை மூலதனமாக கொண்டு அட்டகாசம் புரிகிறாள். தனக்கு வேண்டியவர்கள் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் என்ற மமதையில் ஆடுபவர்கள் அனைவரும் ஒருநாள் மண்ணை கவ்வ வேண்டும். அந்த நிலைமை தாடகைக்கு வரபோகிறது அதனால் உன் குமாரன் ராமனை என்னோடு அனுப்பு என்று விட்ட விஷயத்தை மீண்டும் தொட்டு பேசுகிறார். 

மன்னவனின் தவிப்பு இன்னும் அதிகமாகிறது ஐயா ராமன் சிறியவன் எந்த போர்களத்திலும் பங்குபெற்று இதுவரை அனுபவம் இல்லாதவன் எதிரிகள் இப்படி இருப்பார்கள் என்ற அடையளாம் கூட அவனுக்கு தெரியாது. அப்படி பட்ட சிறியவனை ஒரு பெரிய காரியத்திற்கு தாங்கள் அழைப்பது முறையல்ல போர்க்களம் பல கண்டவன் நான் என் உடம்பில் ஆயிரக்கணக்கில் விழுப்புண்கள் உண்டு எதிரிகளின் தலைகளை பந்தாடி பழக்கப்பட்டவன் நான் நானும் எனது சேனையும் உங்களது யாகத்தை பாதுகாக்க வருகிறோம். என்னை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று பணிவோடு கேட்டான். அவன் பணிவிற்குள் மறைந்திருப்பது பாசமும், பயமும் என்பது முனிவனுக்கு தெரியாதது அல்ல. ஆனாலும் அவர் ராமனே வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். மன்னன் மறுத்தான் முனிவருக்கு ஆத்திரம் வந்தது சரி ராமனை தராவிட்டால் போ யாகத்தை நானே பார்த்து கொள்கிறேன் என்று எழுந்து நடக்க எத்தனித்தான். மன்னன் தவித்தான் தத்தளித்தான் என்ன செய்வது என்பது அறியாமல் திகைத்து அவர் கால்களில் விழுந்தான் நிலைமையை உணர்ந்த தசரதனின் ராஜகுரு வசிஷ்டர் மன்னனையும் முனிவரையும் சமாதானபடுத்தி எல்லாம் நல்லவிதமாக நடக்கும் முனிவர் பின்னால் ராமனை அனுப்பிவை என்று அறிவுரை சொன்னார். வேறு வழியே இல்லமல் தசரதன் ஒத்துகொண்டான். ராமனும், லஷ்மணனும் முனிவரின் பின்னால் நடந்தனர். 

ராமனை மட்டும்தான் விஸ்வமித்திரர் அழைத்தார் லஷ்மணனை பற்றி அவர் பேச்சே எடுக்கவில்லை ஆனாலும் கூடவே தம்பியும் கிளம்பிவிட்டான் இது ஏன்? முனிவரை காக்க ராமன் என்றால் ராமனை காக்க தம்பி லஷ்மணன் சகோதரன் என்பவன் சுகபோகங்களை அனுபவிக்கும் போதும் மட்டுமே கூட இருப்பவன் அல்ல துன்பங்களை அனுபவிக்கும் போதும் கூடவே இருக்க வேண்டும். சகோதரன் என்ற வார்த்தையே சக உதரன் என்பதிலிருந்து தான் தோன்றியது. அதாவது உடம்பில் ஓடுகின்ற உடம்பை இயக்குகின்ற உதிரம் சகோதரன் என்பது பொருளாகும். அதை காட்டுவது தான் லஷ்மணனின் நிழல் போன்ற தொடர்ச்சி முனிவரோடு வனம் செல்கின்ற அரசகுமாரர்கள் யாகத்தை தடுக்கவரும் தாடகையை வதம் செய்து முடிக்கிறார்கள். இந்த இடத்தில் மறைமுகமாக ராமனுக்கும் ராவணனுக்கும் பகமை தோன்றிவிடுகிறது. அது முற்றிலுமாக இலங்கையில் வெளிப்படுகிறது. மனிதன் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் வருங்கால நிகழ்வுகளுக்கும் கண்ணுக்கு தெரியாத தொடர்ச்சி எப்போதுமே உண்டு. அந்த தொடர்ச்சியை வால்மீகி மிக அழகாக நமக்கு சித்தரித்து காட்டுகிறார். யாகத்தை முடித்து அரசகுமாரர்களை மிதிலை நகருக்கு முனிவர் அழைத்து செல்கிறார். 

மிதிலையை நெருங்கும் போது வனாந்திரத்தில் ஒரு பாழடைந்த பர்ணசாலை இருக்கிறது. இது யாருடைய குடில் என்று ராமன் முனிவரிடம் கேட்கிறான். இது கெளதம முனிவரின் ஆசிரமம் இப்போது இங்கே அவர் மனைவி அகலிகை யார் கண்ணிலும் படாமல் வாழ்ந்து வருகிறாள் என்று சொல்கிறார் ஒரு பெண் தன்னந்தனியாக கொடிய விலங்குகள் வாழுகின்ற காட்டில் யார் கண்ணிலும் படாமல் வாழ்வது ஏன் என்று ராமன் அடுத்த கேள்வியை கேட்கிறான் அதற்கு முனிவர் ஒரு கதையை சொல்கிறார். 

அகலிகை மிகவும் அழகானவள் பிரம்மதேவன் நின்று நிதானித்து சிரமப்பட்டு பார்த்து பார்த்து படைத்த அழகு பொக்கிஷம் அவள் ஒருமுறை கண்டவர்கள் மீண்டும் மீண்டும் அவளை பார்க்க துடிப்பார்கள் அப்படிப்பட்ட அழகு தேவதை கெளதம மகரிஷியின் பத்தினியாக வந்தாள் ஒருநாள் மகரிஷி வெளியில் சென்றபோது பர்ணசாலையின் வாசலில் தேவந்திரன் வந்து நின்றான். நான் உன் அழகில் மயங்கி விட்டேன் என்று காதல் மொழி பேசினான் அகலிகைக்கு தேவர்களின் தலைவனே என்னை கண்டு மயங்கி விட்டானே என்ற பெருமை வந்தது இதனால் அவள் மதி இழந்தாள் இந்திரனின் வசமாக விழுந்தாள். அவனது காதல் விளையாட்டுக்கு மனமிசைந்தாள் அனைத்தும் முடிந்தது வெளியில் சென்ற கணவனின் நினைவு அவளுக்கு வந்தது. மகரிஷி வந்துவிடுவார் விரைந்து செல்லுங்கள் என்று இந்திரனுக்கு அறிவுரை சொன்னாள் ஆனாலும் இந்திரன் போவதற்கு முன்பே கெளதமர் வந்துவிட்டார். கட்டிய மனைவி மாற்றானோடு இருப்பதை நேருக்கு நேராக கண்டார். கோபம் அடைந்தார். இந்திரனை சபித்து துரத்தினார் மனைவிக்கு இங்கேயே இந்த இடத்திலேயே கிடந்தது அழு உன் தவறை நினைத்து நினைத்து மனம் புழுங்கு இறைவனே மனித வடிவம் கொண்டு உன்னை எப்போது வந்து பார்க்கிறானோ அப்போதே உனக்கு பாவ விமோசனம் என்று கூறி அடர்ந்த காட்டிற்குள் சென்று விட்டார். என்று கதையை சொன்னார் விஸ்வாமித்திரர். 

ராமனுக்கு அகலிகையை காணவேண்டும் என்ற ஆர்வம் வந்தது முனிவரிடம் அனுமதி கேட்டு குடிலுக்குள் சென்றான் பாழடைந்த பர்ணசாலைக்குள் புகைபடிந்த ஓவியமாக கிடந்த அகலிகையை கண்டான். வெள்ளை நிறத்து ஆடையில் ஒரு தபஷ்வினி போல் தென்பட்ட அகலிகையின் பாதங்களில் ராமன் வீழ்ந்து வணங்குகிறான். ராமனை கண்டவுடன் தனது கணவன் கொடுத்த சாபம் இன்றோடு முடிந்தது என்பதை அகலிகை உணர்ந்தாள். கண்விழித்து ராமனை பார்த்து அவளும் கையெடுத்து கும்பிட்டாள் அந்த வேளையில் அவள் கணவரும் அங்கு வந்து சேர்ந்தார். அகலிகை தவருசெய்வது மனித இயல்பு செய்த தவறை திருத்தி கொள்ள நினைப்பவர் எவரும் உயர்ந்து விடுகிறார்கள். நீ இத்தனைநாளும் ஒழுக்கம் தவறியதை நினைத்து நினைத்து உருகி இறைவனை நோக்கி பிராத்தனை செய்தாய் கடும்தவம் கொண்டாய் அதன் விளைவே இன்று ராம தரிசனத்தை பெற்று உயர்ந்த நிலையை அடைந்து விட்டாய். என்று கணவரே அவளை வாழ்ந்தினார். 

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரும் முனிவரிடம் சாபம் பெற்ற அகலிகை கல்லாக தானே கிடந்தாள் ராமன் பாதம் பட்டவுடன் பெண்ணாக மாறினாள் என்று தானே ராமாயணத்தில் படித்திருக்கிறோம். அதை விட்டு விட்டு இந்த கதை வேறு மாதிரியாக இருக்கிறதே என்று தோன்றும். ஆனால் இப்படி தான் வால்மீகி சொல்கிறார். கம்பன் காலத்தில் பத்மபுராணத்தில் அகலிகை கல்லாக கிடந்தாள் என்ற கதை வலுவடைந்து விட்டதனால் அகலிகையை இந்திரனோடு இருந்தாள் என்பதையும் சொல்ல மனமில்லாத கம்பன் ராமன் பாதம் பட்டு பெண்ணாக மாறினாள் என்று சொல்கிறான். கம்பனின் அந்த பாடல் இலக்கிய உலகில் மறக்க முடியாத மறைக்க முடியாத அறிய பொக்கிஷம். 

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம் 
உய்வண்ணம் அன்றிமற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்ட்டோ 
மைவண்ணத்தரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன் 
கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்குகண்டேன் 


வண்ணம் என்ற வார்த்தையை வைத்து கொண்டு கம்பன் விளையாடுகின்ற வார்த்தை விளையாட்டு எவ்வளவு சுகமாக இருக்கிறது பாருங்கள். இன்னொரு சந்தேகமும் வரும் கம்பன் நேரடியாக அகலிகை கெட்டுபோனவள் என்று சொல்லவில்லையே வால்மீகி சொன்னது கம்பனுக்கு தெரியாதா? என்று கேட்க தோன்றும். கம்பன் அறியாதது அல்ல இது. அதனால் தான் 

உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் 
தக்கதென்று என்ன ஒராள் தாழ்ந்தனள் 


என்று சொல்கிறார் அதாவது தன் கணவனின் வடிவில் இருப்பது வேறொருவன் என்பதை உணர்ந்தே அவள் இருந்தாள் என்று கம்பன் தெளிவாக சொல்கிறான். இதே நமது ஆய்வாளர்கள் நமக்கு தெரியபடுத்துவது இல்லை. 

இங்கே ராமன் முதல்முறையாக அரண்மனைக்கு வெளியே இரண்டு பெண்களை சந்திக்கிறான் ஒருவள் கொடுமையே வடிவெடுத்த அரக்கி மற்றொருவள் தவறு செய்த மாது ஒருத்தி தான் செய்வது தவறு என்பதை உணராமலே ராமனோடு சண்டைபோட்டு மாய்கிறாள் வேறோருத்தியோ உணர்ச்சி வேகத்தில் தவறு நடந்துவிட்டது தான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் அதை நான் இன்னொரு முறை செய்யவே மாட்டேன் அதற்காக என் உணர்வுகளை அடக்கி ஆள்வதற்கு பழகி கொள்வேன் என்று தவம் செய்தவள். தனது தவத்தால் பரிசுத்தமும் அடைந்தவள். இந்த இரண்டு மாதரை நமக்கு காட்டிய வால்மீகி குற்றம் செய்வது இயல்பு என்றாலும் அதை உணர்ந்து திருந்தினால் மிக உன்னத நிலையை அடையலாம் என்பதை நமக்கு காட்டுகிறார். தன கணவனை விட்டு வேறொரு ஆடவனோடு இருந்தாலும் கூட அவள் அதை உணர்ந்து திருந்தினால் அவளும் பத்தினி என்ற அந்தஸ்தை அடையலாம் என்பதற்காகவே பஞ்சகன்யா தோத்திரத்தில் அகலிகையும் ஒரு பத்தினியாக சேர்த்து வைத்து வணங்க படுகிறாள். 

குற்றம் செய்தவன் குற்றவாளியாக மட்டுமே காலம் முழுவதும் இருக்க வேண்டும் அவனது பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. என்பது மனிதனை கீழ்நிலை படுத்திவிடும். குற்றம் செய்துவிட்டாயா நீ செய்ததை தவறு என்று உணர்ந்து விட்டாயா செய்த குற்றத்திற்கான தண்டனையை நியாயப்படி ஏற்றுக்கொண்டு அதிலிருந்து மீண்டுவர முயற்சி செய் அதுவே உன்னை பரிசுத்தவானாக மாற்றும் என்பதே நமது பண்பாடு இது தான் ராமாயணத்தில் நமக்கு காட்டப்படும் முதல் வாழ்க்கை சித்திரம்.



Contact Form

Name

Email *

Message *