Store
  Store
  Store
  Store
  Store
  Store

முதியவருக்கு உதவு வேலை கிடைக்கும்...


     ன்புள்ள குருஜி அவர்களுக்கு கனடா நாட்டிலிருந்து ராகவசுந்தரம் வணக்கத்துடன் எழுதும் கடிதம் என் வாழ்க்கை பிரச்சனையை எழுதுவது என்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டும் அப்படி எழுத என்னாலும் முடியாது உங்களாலும் பொறுமையாக உட்கார்ந்து படிக்க முடியாது. என் சோதனை நான் பிறந்த போதே ஆரம்பித்து விட்டடது எனலாம். நான் தற்போது இருப்பது கனடா என்றாலும் பிறந்தது இந்தியாவில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் நான் பிறந்த போது என் தகப்பனார் இருக்கிறாரா? இல்லையா? என்பது என் அம்மாவுக்கே தெரியாது. இலங்கையில் நடந்த கலவரத்தில் ஆர்மிகாரர்கள் அவரை விசாரணைக்காக அழைத்து போனார்களாம். நான் பிறந்து வளர்ந்து முப்பது வருடமாகியும் அவரை பற்றி எந்த தகவலும் தெரியாது. தனது புருஷன் இருக்கிறாரா இல்லையா தான் சுமங்கலியா அமங்கலியா என்பது தெரியாமலேயே எனது தாயார் இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டார். 

தப்பி தவறி படித்து சில உறவினர்களின் ஒத்துழைப்போடு ஏழு வருடங்களுக்கு முன்பு கனடாவிற்கு வந்து சேர்ந்தேன். கனடாவில் வந்து கைநிறைய சம்பாதிக்கலாம் புதிய வாழ்க்கையை பெறலாம் குறைந்த பட்சம் அம்மாவிற்கு நல்ல காஞ்சிபுரம் புடவையாவது எடுத்து கொடுக்கலாம். என்று கனவு கண்டேன். கனவுகள் அனைத்துமே தண்ணீர் மேல் போட்ட கோலமாக கலைந்து போய்விட்டது. இந்த நாட்டிற்கு வந்த சில வாரங்களிலேயே விசா பிரச்சனையால் சிறைச்சாலை செல்ல வேண்டிய நிலை உருவானது. ஆண்டவன் அருளால் வெளியில் வந்த போது எந்த வேலையும் கிடைக்காமல் இரண்டு வருடம் கஷ்டப்பட்டேன். வேலை கிடைக்கவில்லை என்று சொல்வதை விட கிடைத்த வேலை எதுவும் நிரந்தரமாக அமையவில்லை என்றே சொல்லலாம். வெட்கத்தை விட்டு சொல்வதாக இருந்தால் செருப்பு துடைத்து சம்பாதிக்க கூட தயாராக இருந்தேன் எதுவும் அமையவில்லை.

இந்த நிலையில் சில நண்பர்கள் வண்டி ஓட்ட பழகு வேலை கிடைக்கும் என்று சொன்னார்கள். பழகினேன் வேலையும் கிடைத்தது ஆனால் இரண்டொரு மாதத்தில் மூன்று விபத்துக்களை சந்தித்ததனால் அதையும் தொடர முடியவில்லை . மளிகை கடையில் பீர் பிராண்டி கடையில் என்று என்னென்னவோ வேலை பார்த்தேன் எதுவும் சரியாக இல்லை. சொந்த தொழில் செய்தால் நன்றாக இருக்குமா என்று அதற்கும் நண்பர்கள் துணையோடு முயன்று பார்த்தேன் போட்ட முதல் கற்பூரம் போல கரைந்ததே தவிர லாபம் வரவில்லை இதுவரை ஓடுகிறேன் ஓடுகிறேன் வாயிற்று பிழைப்பை நடத்தி கொள்ள திசை தெரியாமல் ஓடுகிறேன் எந்த வழியும் எனக்கு பிறக்கமாட்டேன் என்கிறது. 

திருமணம் செய் கரம்பிடித்து வந்தவளின் ராசியில் உனக்கு நல்ல வாழ்க்கை அமையுமென்று சிலர் சொல்கிறார்கள். என்னை நம்பி யார் பெண் தருவார்? அல்லது எந்த பெண்தான் என்னை நம்பி கழுத்தை நீட்டுவாள்? என் ஒருவனின் வாயிற்று பாட்டை சரி செய்யவே என்னால் இயலவில்லை இதில் இன்னொரு ஜீவனை வாழ்வில் இணைத்து அவளையும் அவதிபடுத்த என் மனதில் துணிச்சல் இல்லை. எதேச்சையாக உங்கள் உஜிலாதேவி இணையதளத்தை பார்க்க நேர்ந்தது மிகவும் இக்கட்டான கேள்விகளுக்கு கூட நல்ல பதிலை சொல்லி பலருடைய வாழ்க்கையில் தன்னம்பிக்கை விளக்கை நீங்கள் ஏற்றி வைத்திருப்பது எனக்கு தெரிந்தது. அதனால் குருஜி அவர்களுக்கு என் ஜாதகத்தை அனுப்புகிறேன் இதை பாருங்கள் பார்த்து விட்டு என் வாழ்வில் விடிவு காலம் என்பது இருக்கிறதா? இல்லையா? என்று மறைக்காமல் சொல்லிவிடுங்கள் நீங்கள் சொல்லும் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அதன் படி நடப்பேன் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு 

ராகவசுந்தரம்
கனடா 
    ளமையில் வறுமை கொடியது என்று ஒளவையார் சொல்வார். சொல்வது ஒளவையாராக இருந்தாலும் வேறு எந்த பெரியவராக இருந்தாலும் அதில் மாற்று கருத்து இருக்கிறது என்றால் தெளிவாக சொல்லிவிட வேண்டும். இதனால் பெரியவர்களை அவமரியாதை செய்த குற்றம் வருமோ? என்று பார்ப்பதை விட மாற்று கருத்தும் நல்லதாக இருந்தால் மக்களுக்கு நல்லது தானே என்று பார்க்க வேண்டும். 

இந்த வகையில் இளமையில் வறுமை என்னை பொருத்தவரை கொடியது அல்ல என்றே தோன்றுகிறது. சிறிய வயதில் கஷ்டங்கள் வராமல் இன்பங்கள் மட்டுமே தொடர்ந்து வந்துகொண்டிருந்தால் மனிதனுக்கு நல்லது கெட்டது தெரியாது ஏற்ற தாழ்வுகள் புரியாது ஒருவித ஆணவம் வந்துவிடும் நாளைய காலத்தில் தோல்வியை அனுபவிக்க வேண்டிய ஒரு நிலை வந்தால் அனுபவம் இல்லாமல் அதிர்ந்து போய் எழுந்து நடக்கவே முடியாமல் அப்படியே உட்கார்ந்து விடுவார்கள். 

உடம்பில் தெம்பும் அறிவில் புதுமையும் இருக்கும் போது கஷ்டங்கள் வந்தால் எதிர்த்து போராட கூடிய துணிச்சல் வரும் எது எது செய்தால் தோல்விகள் ஏற்படும் என்ற அனுபவம் வரும். சந்தர்ப்ப சூழ்நிலை நல்ல விதத்தில் வரும் போது முன்பு வாழ்க்கையில் பட்ட அடி நல்ல முதிர்ச்சியை கொடுத்து வெற்றி பாதையை நோக்கி அவனை நடக்க செய்யும் நிரந்தரமான உயர்ந்த வாழ்க்கையை அமைத்து கொள்ள உதவியாகவும் இருக்கும். 

மாறாக முதுமையில் வறுமை வந்தால் எதிர்த்து போராட மனதில் துணிச்சல் இருந்தாலும் உடம்பு ஒத்துழைக்காது. வெற்றிகளையே பார்த்து பழக்க பட்ட பிறகு தோல்வயின் பாதை இப்படிதான் இருக்குமென்று சரியான முறையில் அடையாளம் கண்டுகொள்வதிலும் சிரமம் இருக்கும். எனவே ஒளவையார் சொன்னபடி இளமையில் வறுமை கொடியது அல்ல முதுமையில் வறுமையே மகா கொடியது ஆகும். 

இந்த கேள்வியை கேட்டிருக்கும் அன்பருக்கு முப்பது வயது தான் பூர்த்தி ஆகிறது இன்னும் அவர் கடக்க வேண்டிய காலம் எவ்வளவோ இருக்கிறது சரியான முறையில் தனது அறிவையும் திறமையும் பயன்படுத்தி அவர் உழைத்தால் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதனால் மனசோர்வு அடையவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. 

பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் சனியும் இணைந்து விட்டால் புதன் எந்த பலனையும் தராது. அதே போல புதனும் குருவும் இணைந்தால் குருவுவின் சக்தி வீணாகி விடும். சூரியனும் செவ்வாயும் இணைந்திருந்தாலும் செய்யும் வேலையில் இடர்பாடு வரும் பதவி பறிபோகும். சூரியனோடு பத்தாமிடத்து அதிபதி இணைந்தாலும் நிலையான உத்தியோகம் அமையாமல் மாறி கொண்டே இருக்கும். இது பொதுவான விதி.

நல்ல வேளையாக இவரது ஜாதகத்தில் சூரியனோடு பத்தாமாதி இணைந்திருக்கிறார். அதனால் தான் எந்த வேலையையும் தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை. இவருக்கு வேலை மாறிக்கொண்டே இருப்பது ஒரு தொல்லை என்றாலும் பத்தாமிட அதிபதி குரு என்பதனால் அது கடகத்தில் உச்சம் பெற்று இருப்பதனால் வாழ்நாள் முழுவதும் வறுமை தொடரும் என்ற பேச்சிற்கே இடமில்லை. கோச்சாரப்படி இன்னும் இரண்டு வருடத்தில் மிகவும் நல்ல வாழ்க்கை இவருக்கு அமைய வாய்ப்புள்ளது. 

மேலும் நான் மேலே சொன்னபடி கிரக சேர்க்கை அமைய பெற்றவர்கள் நம் ஜாதகம் இப்படி இருக்கிறதே அதனால் நாம் முன்னேற முடியாதோ என்று பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாதிரியான கெட்ட கிரக அமைப்புகள் இருந்தாலும் அவற்றிலிருந்து விடுதலை அடைந்து முன்னேற்றம் அடைய சில எளிய பரிகாரங்கள் இருக்கிறது அவற்றை நம்பிக்கையோடு செய்தால் பலன் நிச்சயம்உண்டு . 

நவக்கிரக சன்னதி அமையபெற்றுள்ள ஆலயங்களுக்கு சனிகிழமை சென்று நெய்விளக்கு ஏற்றி வழிபட்டாலும் சூரியன் செவ்வாய் புதன் குரு சனி ஆகிய கிரகங்களின் ஆதிக்க திருத்தலங்களுக்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை சென்று வழிபாடு செய்தாலோ நல்ல பலனை கைமேல் அடையலாம். இத்தகைய ஆலயங்கள் இல்லாத பகுதியில் வாழ்பவர்கள் குறிப்பாக வெளிநாட்டில் வசிப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களால் முடிந்த பண உதவியை வயது முதிர்ந்தவர்களுக்கு செய்தாலும் அன்னதானங்களுக்கு ஒத்தாசை புரிந்தாலும் நல்ல பலன் கண்டிப்பாக கிடைக்கும். எனவே கவலையை விட்டு காரியங்களை செய்யுங்கள் கடவுள் நிச்சயம் அருள்வார். 


Contact Form

Name

Email *

Message *