Store
  Store
  Store
  Store
  Store
  Store

கன்னிகளுக்கு கன்னி பூஜை !

இந்து மத வரலாற்று தொடர் 53


       னக்கு அப்போது ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் என் பாட்டி வீட்டில் சொந்தகாரர்கள் நிறையப்பேர் கூடி இருந்தார்கள். சூரியன் மறைந்து இருள் வர துவங்கியவுடன் நடு முற்றத்தில் உரலை வைத்து அரிசி மாவு இடிக்க ஆரம்பித்தார்கள். அப்போது எங்கள் ஊரில் மின்சார வசதி அவ்வளவாக கிடையாது. தெருவில் கூட இரவு வந்தவுடன் கண்ணடி பெட்டியுடன் கூடிய கல் தூணில் விளக்கு ஏற்றி வைப்பார்கள். விளையாடுவதாக இருக்கட்டும் படிப்பதாக இருக்கட்டும் அந்த கல் தூண் விளக்கு தான் எங்களுக்கு அப்பொழுது கண்ணை கூச செய்யும் பெரிய வெளிச்சம். எட்டு மணிக்கு மேல் ஒட்டுமொத்த ஊரே அடங்கி விடும். தெருவில் மருந்துக்கு கூட ஆளை பார்க்க முடியாது. ஆனால் அந்த நேரத்திலும் அன்று என் பாட்டி வீட்டில் மளமளவென்று சில காரியங்கள் நடந்தன. இடித்த மாவில் பனை வெல்லத்தை பாகாக காய்த்து ஊற்றி பிசைந்தார்கள். ஏலக்காய் உள்ளிட்ட எதோ பொருள்களையும் அதில் போட்டார்கள். இதற்கு முன்பு அப்படி செய்து நான் பார்த்ததில்லை அதனால் எனக்கு அது விளையாட்டாகவும் விந்தையாகவும் இருந்தது. எதற்காக செய்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு சிறிது கூட தெரியாது. 

மாவு பிசைந்து முடிந்த பிறகு நடுவீட்டில் மூன்று கருங்கல்கள் வைத்து தற்காலிக அடுப்பு செய்யப்பட்டது. அதில் பெரிய வாணலி வைத்து எண்ணெய் ஊற்றினார்கள். பிசைந்த மாவை உருண்டை உருண்டையாக பிடித்து அதில் போட்டார்கள். கம்பியால் குத்தி வெளியில் எடுத்த பிறகு தான் அது பணியாரம் என்பது எனக்கு தெரிந்தது. அதை பார்த்தவுடன் என் நாவில் நீர் ஊறியது. இனிப்பான பணியாரத்தை சூடு ஆறுவதற்கு முன்பு இரண்டு கைகளிளிலும் மாறி மாறி போட்டு உருட்டி வாயால் ஊதி சிறிது சிறிதாக ஆவி பறக்க பிய்த்து தின்பதில் உள்ள சுகம் வேறு எதில் இருக்கிறது? ஆகவே எனக்கு பணிகாரம் தரும்படி கேட்டேன் ஒரு பெரிய கூட்டத்தில் நியாயவான் ஒருவனுடைய தனிக்குரல் எப்படி எடுபடாதோ அப்படியே அங்கு என் கோரிக்கை எடுபடவில்லை. சும்மா இரு சாமிக்கு படைத்த பிறகு தான் சாப்பிட வேண்டுமென்று தடுத்து விட்டார்கள். எனக்கு மிக பெரியதாக் ஊதிய பலுனை ஊசியால் குத்தியது போல் புஸ் என்று ஆகிவிட்டது. இருந்தாலும் நீரில் துடிக்கின்ற நாக்கு கண்களின் மேல் விழுந்த தூக்கத்தை துரத்தி அடிக்க எப்போது படைப்பார்கள் என்று காத்திருந்தேன்.

நேரம் ஓடி கொண்டே இருந்தது. பெரிய தாம்பள தட்டில் பனியாரங்க்களை குவியலாக வளர துவங்கியது. அதற்குள் என் பாட்டி பரன் மேலிருந்து ஒரு பெரிய பெட்டியை இறக்கினார்கள். மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அந்த பெட்டியின் நிறம் எனக்கு ஞாபகம் இல்லை என்றாலும் அதன் மீது செதுக்க பட்டியிருந்த பாம்பின் தலை இன்று கூட பசுமையாக என் நினைவில் இருக்கிறது. அப்போது நான் அதை தொட்டு பார்க்க கூட பயப்பட்டேன். ஒருவேளை பொம்மை பாம்பு கூட கடித்துவிட்டால் என்ன செய்வது? என்ற பயம் எனக்கு. அந்த பெட்டி திறக்கப்பட்டது. அந்த பெட்டிக்குள் இருந்து சிவப்புவண்ண பட்டு சேலை, பச்சை வளையல், கண்மை, சாந்து பொட்டு முகம்பார்க்கும் கண்ணாடி இன்னும் எனக்கு அடையாளம் தெரியாத வேறு சில பொருள்கள் அனைத்தும் எடுக்கப்பட்டது. அவைகளை ஒரு மனைபலகையில் வைத்து சிவப்பு நிறத்து அரளி பூவை அதன் மேல் வைத்தார்கள். மணி பனிரெண்டு ஆகட்டு பொறுத்திருப்போம் என்று அனைவரும் காத்திருந்தார்கள். 

என் பாட்டி வீட்டில் கடிகாரம் எதுவும் கிடையாது. அப்போது எங்கள் ஊரில் பஞ்சாயத்து அலுவலகத்திலும் பள்ளி கூடத்திலும் தான் கடிகாரம் இருந்ததாக அறிகிறேன். பகல் நேரத்தில் மணி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் காலை ஏழு மணிக்கும் ஒன்பது மணிக்கும் மதியம் பனிரெண்டு மணிக்கும் பிறகு இரவு ஏழு மணி ஒன்பது மணி ஆகிய நேரங்களில் மட்டும் கிருஸ்தவ தேவாலயத்தில் பெரிய மணியோசை எழுப்புவார்கள். அதன் சத்தம் பக்கத்து ஊர் வரை கூட தெளிவாக கேட்கும். இரவு பனிரெண்டு மணியை இவர்கள் எப்படி தெரிந்துகொள்வார்கள். என்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனாலும் அனைவரோடு சேர்ந்து நானும் விழித்திருந்தேன். என் பார்வை அடிக்கடி பலகாரத்தின் பக்கம் போவதை என் இரண்டாவது அக்கா பார்த்திருப்பாள் போல் தெரிகிறது. அவள் என்னை தனியாக தூக்கி போய் ஒரு இடத்தில் வைத்து இரண்டு பனியாரத்தை தந்தாள். எப்படி கிடைத்தது என்று அவளிடம் கேட்டேன். பாட்டி பார்க்காத போது தூக்கி வந்துவிட்டேன் என்று சொன்னாள். சாமிக்கு படைக்கும் முன் நாம் சாப்பிடலாமா? என்று பயத்தோடு அவளிடம் கேட்டதற்கு சின்ன பசங்க தப்பு செய்தால் சாமி ஒன்னும் செய்யாது. நீ சாப்பிடு என்று எனக்கு தைரியம் கொடுத்தாள். அவள் கொடுத்த தைரியத்தில் பனியாரத்தை வாயில் வைத்தேன் அமிர்தம் என்று சொல்வார்களே அப்படி இருந்தது அது. எப்போதுமே திருட்டு பொருளுக்கு தனி சுவை இருக்கும் போல் தெரிகிறது. 

பழைய காலத்து கதைகள் எதையெதை எல்லாமோ பேசினார்கள். என் பெரியம்மா முத்துக்குட்டி சுவாமியை தொட்டிலில் கட்டி திருசெந்தூருக்கு தூக்கி கொண்டு போனார்கள் கடலில் குளித்தவுடன் அவருடைய தொழுநோய் குணமானது என்று கதை சொன்னார்கள் எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. நானும் கூட எத்தனையோ முறை திருசெந்தூர் கடலில் குளித்திருக்கிறேன். அப்போது கூட எனக்கு குணமாகி எழுந்து நடக்க முடியவில்லையே என்று சிந்தித்தேன். அதை உடனையே என் பெரியம்மாவிடம் கேட்டதற்கு முத்துக்குட்டி சுவாமி சேவை செய்ய பிறந்தார் அதனால் முருகன் அவரை குணபடுத்தினார் நீனும் சேவை செய்வதாக நினைத்து கொள் உன்னையும் குணபடுத்துவார் என்று சொன்னார். நானும் சரியென்று தலையாட்டி கொண்டேன் ஆனால் எனக்கு சேவை செய்வது என்றால் என்னவென்று புரியவே இல்லை. ஒருவேளை பெரியவனானதும் புரியுமோ என்று நினைத்து கொண்டேன்.

சிறிது நேரத்திக்கு பிறகு என் பாட்டி வெளி முற்றத்திற்கு சென்று வானத்தை அன்னாந்து பார்த்தார் மணி பனிரெண்டு ஆகிவிட்டது என்று சொன்னார். பகலில் நிழல் விழுவதை வைத்து மணி சொல்வதில் என் பாட்டி கில்லாடி அவருக்கு இரவிலும் மணி பார்க்க தெரியும் என்பது அப்போது தான் எனக்கு தெரிந்தது. என் பாட்டியிடம் பல திறமைகள் உண்டு மணலில் பதிந்திருக்கும் காலடி சுவடுகளை வைத்தே அது உள்ளூர் காரர்களின் காலடியா? வெளியூர் காரருக்கு சொந்தமானதா? உள்ளூர் காலடி என்றால் அது யார் காலடி என்பதை தெளிவாக சொல்லிவிடுவார். அந்த பழக்கம் என்ன அம்மாவிடம் கூட இன்றும் இருக்கிறது. அவர்கள் எப்படி காலடியை வைத்து மனிதர்களின் அடையாளங்களை கண்டுபிடிக்கிறார்கள் என்பது புரியவில்லை. அவர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் சொல்ல தெரியவில்லை. அது பழகினால் தானாக தெரியும் என்று தான் கூறுகிறார்களே தவிர அவர்களிடமும் தக்க பதிலில்லை. இப்படி விபரம் சொல்ல தெரியாமலே எத்தனையோ கலைகள் மறைந்து கொண்டே வருகிறது. 


மணி பனிரெண்டு என்று பாட்டி சொன்னவுடன் அனைவரும் பரபரப்போடு காரியங்களில் ஈடுபட்டார்கள் பனியாரங்களை எடுத்து பெரிய வாழை இலைகளில் அடுக்கி வேறொரு இலையில் தேங்காய் பழம், வெற்றிலை, பாக்கு, அவல், பொறி போன்ற பொருள்களையும் வைத்து பூஜையை ஆரம்பித்தார்கள். என் பாட்டியின் தம்பி பூஜை செய்தார். ஏதேதோ சடங்குகள் நடந்தன எதுவம் எனக்கு புரியவில்லை பூஜை முடிவதற்கு நெடுநேரம் ஆகிவிட்டது. நான் சிறிது நேரம் தூங்கி விட்டேன். தூங்கி விழித்த பிறகு பார்த்தால் சூரிய வெளிச்சம் வர துவங்கி இருந்தது. அந்த நேரம் தான் பூஜை முடிந்து கற்பூர தீபம் காட்டினார்கள். இரவில் சுட்ட பனியாரத்தை விடிந்த பிறகே சுதந்திரமாக சாப்பிட முடிந்தது. அதன் பிறகு தான் எதற்காக பூஜை செய்தார்கள் என்ற நினைப்பு வந்து என் அம்மாவிடம் கேட்டேன். என் பாட்டியின் தங்கை திருமணம் முடியாமல் கன்னியாகவே இறந்து போய்விட்டார்களாம். அவர்கள் நினைவாக பூஜை நடந்ததாம் அதன் பெயர் கன்னிக்கு கொடுத்தல் என்பதாம். அப்போது எனக்கு அதன் அர்த்தம் எதுவும் புரியவில்லை. செத்து போனவர்களுக்கு செய்த பூஜை அப்படி என்றால் இரவில் பூஜையை ஏற்றுகொள்ள செத்து போனவர்கள் வந்திருப்பார்கள் பேய் வருகின்ற போது அந்த இடத்தில் நாம் உறங்கி கொண்டிருந்தோமே தப்பி தவறி பேயின் காலில் நாம் அகப்பட்டு நசுங்கி போயிருந்தால் என்ன ஆயிருக்கும் என்ற பயம் எனக்கு வர ஆரம்பித்து விட்டது. அன்று முதலே கன்னிக்கு கொடுத்தல் என்ற வார்த்தையை கேட்டாலே என்னையும் அறியாமல் பயம் வந்துவிடும். 

இப்படி ஒரு சம்பவத்தை நான் மட்டுமல்ல நமது தமிழ் நாட்டில் பலரும் அனுபவத்திருப்பார்கள். இறந்தவர்களை வணக்குவது என்பது அவர்களை உள்ளன்போடு நினைத்தல் நன்றி செலுத்துதல் என்ற நிலை மட்டுமல்லாது அவர்களை தெய்வமாகவே பாவித்தல் என்ற நிலை நமது நாடு முழுவதும் இருக்கிறது. இறந்து போன மனிதனுடைய தொடர்பு அவனது மரணத்தோடு முடிந்து விடுகிறது என்று பலர் நினைப்பது இல்லை. மரணத்திற்கு பிறகும் இறந்தவர்கள் நம்மை நினைத்து கொண்டிருக்கிறார்கள் நமக்கு அருள் தரவோ தண்டனை தரவோ அவர்களால் முடியும் என்று ஆத்மார்த்தமாக நம்புகிறார்கள். அதன் வெளிப்பாடு தான் இத்தகைய சடங்குகள். ஒரு மணமகளை வீட்டுக்கு அழைப்பது போல இறந்து போனவர்களையும் வீட்டுக்கு அழைப்பதில் நம் மக்களுக்கு அலாதியான பிரியம் தொன்று தொட்டே இருக்கிறது. வடதமிழ் நாட்டில் மயான பூமியிலிருந்து இறந்தவர்களை வீட்டுக்கு அழைத்து வர மேள தாளத்தோடு கூடிய சடங்கு இருக்கிறது அது இன்று வரையிலும் குறைவு படாமலேயே நடக்கிறது. மனிதனது பாச உணர்ச்சியானது மங்கி போகிற வரையில் இத்தகைய சடங்குகள் குறைவில்லாமல் நடந்தே தீருமென்று நான் நினைக்கிறேன். 

இறந்த பிறகு ஒரு மனிதனுக்கு வாழ்க்கை இருக்கிறதா? இல்லையா? என்பது வாத பொருளாக இருந்தாலும் உலகில் உள்ள பல பாகங்களிலும் உயிர் என்பது உடலை விட்டு போனாலும் கூட அழிந்து போகாது மீண்டும் மீண்டும் சுழற்சி அடிப்படையில் பூமியோடு இறந்த ஆத்மாக்கள் எதாவது ஒருவகையில் தொடர்பு வைத்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இந்த நம்பிக்கை மதம் கடந்தது மொழி கடந்தது பண்பாடு கலாச்சாரம் அனைத்தையும் கடந்தது என்று துணிந்து சொல்லலாம். மரணத்தை பற்றியும் மரணத்துக்கு பிறகு உள்ள உயிர்களின் நிலை பற்றியும் மதங்கள் வெவ்வேறான கருத்துக்களை கொண்டிருந்தாலும் அதையும் தாண்டி முன்னோர் வழிபாடு என்பது உலக சமூதாயம் முழுவதுமே இருந்து வருகிறது. உடல் அழிந்தாலும் ஆத்மா அழியாது அது மீண்டும் வந்து பிறக்குமென்று வைதீக மதம் சொல்கிறது. புத்த மதத்தின் ஒரு சாரார் ஆதமா என்பதே இல்லை என்று சொன்னால் கூட புத்தர் காலம் தோறும் வெவ்வேறு புத்தராக அவதரித்தார் என்று நம்புகிறது. ஆக நாத்திகம் பேசுகின்ற புத்தமதமாக இருந்தால் கூட உடல் இல்லாமல் இருக்கும் ஆத்மாவை ஏற்றுகொள்கிறது. புத்தமதம் போல் அல்லாமல் ஜைன மதம் ஆத்மா என்பது நிஜம் அது மரணத்தோடு அழிவதில்லை என்று சொல்கிறது. 

இந்தியாவிற்குள் மூல வேர் இல்லாத இஸ்லாம் கிருஸ்தவம் போன்ற அந்நிய மதம் கூட மரணத்தோடு அழிவது உடல் மட்டும் தான் உயிர் அழிவதில்லை அந்த உயிரானது கடவுள் கொண்டு வருகின்ற இறுதி தீர்ப்பு நாள் வரையில் உறைந்த நிலையில் இருக்கும் என்று சொல்கிறதே தவிர ஆதமா என்பது மரணத்திற்கு பிறகு அழிந்துவிடும் என்று சொல்லவில்லை. போலியாக நாத்திகம் பேசுகின்ற பகுத்தறிவு வாதிகளின் கூட்டம் எதையும் பகுத்து பார்க்காமல் தான் தோன்றி தனமான கருத்துக்களை வாரி இறைத்து வருவதனால் முன்னோர்களை வழிபடுகின்றவர்கள் அதை நிறுத்த வில்லை. நிறுத்துவதாக வார்த்தைக்கு கூட சொல்லவில்லை அந்த அளவுக்கு முன்னோர்கள் வழிபாடு ஆழமாக இருப்பதற்கு என்ன காரணம் என்றால் நமது இந்துமதம் மிக தெளிவான பதிலை நமக்கு தருகிறது. 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் முதலில் தன் குழந்தையை காப்பாற்றும் கடமையும் சமூதாயத்திற்கு தன்னால் இயன்ற ஒத்தாசைகளை செய்கின்ற கடமைகளையும் தனது முன்னோர்களை நினைத்து பார்க்கும் கடமையும் விட்டு விடவே கூடாது அப்படி விட்டு விட்டால் மனித வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும் எனவே பிதுர் வழிபாடு பிதுர் கடன் போன்றவைகளை கண்டிப்பாக செய்யவேண்டுமென்று நமது வேதங்களும் உபநிசதங்களும் தெளிவாக நமக்கு தெரிவிக்கின்றன. எனவே நமது இந்துமதத்தில் நாக வழிபாடு விருஷ வழிபாடு போன்றவைகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிதுர் வழிபாடு என்பதாகும் என்று சொல்லபட்டிருக்கிறது. எனவே இந்து மத வரலாற்றை தொடர்ச்சியாக அறிந்து வரும் நாம் முன்னோர்களை வழிபடுவது ஏன்? எதற்கு? என்பதை கண்டிப்பாகஅறிய வேண்டும்,. எனவே இனி நம் மதத்தில் உள்ள பிதுர் வணக்க காரண காரியங்களை ஆராய துவங்குவோம்.



Contact Form

Name

Email *

Message *