Store
  Store
  Store
  Store
  Store
  Store

அம்மா என்றழைக்க வா மகனே !
      ரியாதைக்கும் வணக்கத்திற்குரிய குருஜி அவர்களுக்கு சங்கர நாராயணன் எழுதுவது ஐயா நான் இப்போது இங்கிலாந்தில் இருக்கிறேன். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என் மனைவியும் பணிபுரிகிறாள் பொருள் கஷ்டம் என்று இதுவரை கடவுள் எங்களுக்கு எதுவும் தரவில்லை. ஆனால் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. என் மனைவி கர்ப்பமே தரிக்கவில்லை என்றாலும் கூட ஒரு ஆறுதல் இருக்கும். ஆனால் மூன்று முறை கரு உருவாகியும் தங்காமல் கலைந்து விட்டது என்பது பெரிய சோகம். மருத்துவர்கள் முழுமையாக பரிசோதனை செய்து மனைவியின் உடம்பில் எந்த குறையும் இல்லை என்கிறார். எனக்கும் மருத்துவப்படி குறைகள் இல்லை. ஆனாலும் ஏனோ தெரியவில்லை இப்படி நடக்கிறது. ஆரம்பத்தில் சற்று தைரியமாக இருந்த என் மனைவி இப்போது மனம் உடைந்து கவலை படுகிறாள். உறவினர்கள் அனைவரும் நாங்கள் பாவம் செய்தவர்களை போல பார்க்கிறார்கள். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எங்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்து எங்களுக்கு குழந்தை இருக்குமா? இல்லையா? அல்லது தத்து குழந்தை எடுத்து வளக்கலாமா? என்பதை தெளிவாக கூறி வழிகாட்ட வேண்டுமாறு அன்போடு வேண்டுகிறேன். உங்கள் ஆசிர்வாதம் கிடைத்தால் கண்டிப்பாக எங்கள் வாழ்க்கையில் நல்ல காலம் பிறக்குமென்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். 
இப்படிக்கு 
சங்கரநாராயணன் 
இங்கிலாந்து 
   ன்பத்தின் அமுத ஊற்று எங்கேயிருந்து சுரக்கிறது என்று ஒரு ஞானியிடம் கேட்ட போது குழந்தை ஒன்று தளர்நடை போட்டு நடந்து செல்லுமே அந்த பாதையில் அமுத ஊற்று பிறப்பெடுக்கிறது என்று பதில் சொன்னாராம். இன்று குழந்தையாக பிறக்கின்ற மனித ஜீவனும் நாளை வளர்ந்து பெரியவனாகி நம்மை போலவே கபடும் சூதும் உடைய மனிதனாகத்தான் ஆகபோகிறான் என்றாலும் இன்று அவன் குழந்தை, அதனால் அவன் இறைவன்! அந்த ஒரே ஒரு காரணத்திற்காகவே மரணம் இல்லாத வாழ்வை தருகின்ற அமுதம் கூட குழந்தையின் காலடியில் ஊற்றெடுக்கிறது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். 

குழந்தையே இல்லாதவர்களுக்குத்தான் பிள்ளை பாசம் அதிகமாக இருக்கும் குழந்தைகளை பற்றிய கனவுகளும் நினைவுகளும் நிறைந்திருக்கும் காரணம் அவர்கள் சதாசர்வகாலமும் குழந்தையின் சிந்தனையாகவே இருப்பதனால் அப்படி இருக்கிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். நானும் கூட அப்படிதான் நினைத்தேன் ஒன்றுக்கு மேல் ஐந்து ஆறு என்று குழந்தை குட்டிகளை பெற்றவர்கள் ஒன்று போனால் என்ன மற்றொன்று இருக்கிறதே என்ற மனோபாவத்தில் வாழ்வார்கள் என்று நினைத்திருந்தேன் அந்த எண்ணத்தை தவிடுபொடி ஆக்கினார் ஒரு என்பது வயது மூதாட்டி. 

சமீபத்தில் தான் அந்த மூதாட்டியை சந்தித்தேன் என்னை நலம் விசாரித்த அவர்கள் எப்படி வாழவேண்டிய பிள்ளை இப்படி இருக்கிறாயே என்று கூறி வருத்தபட்டார்கள். அத்தோடு அவர்கள் நிறுத்தவில்லை நானும்தான் ஏழு பிள்ளை பெற்றேன் அதில் ஒன்று மூன்றாவது பிறந்தது. பிறந்த நான்கு வயதிலேயே பெரியம்மை கண்டு மாண்டு போனான் எப்படி பட்ட பிள்ளை தெரியுமா அவன்? கண்ணும் முழியும் துருதுருவென்று பார்ப்பதற்கு கண்ணபரமாத்மா போலவே இருப்பான் பாவி எமனுக்கு எப்படி மனது வந்ததோ தெரியவில்லை என் பிள்ளையை தூக்கி கொண்டே போய்விட்டான். என்று சொல்லி அழுதார்கள் அவர்கள் அழுத அழுகையும் உணர்ச்சி பெருக்கும் அந்த குழந்தை இறந்து அறுபதுவருடம் ஆகவில்லை நேற்றுதான் அந்த அம்மையாரிடம் இருந்து பிரிந்தது போல இருந்தது.

மக்களை பெற்ற மகராசியான அந்த தாயார் தனக்கு மீதமாக இறைவன் கொடுத்த ஆறு பிள்ளைகளை நினைத்து மனதை தேற்றிக் கொண்டு வாழ்ந்திருந்தால் என்றோ அந்த குழந்தையின் நினைவு அவரைவிட்டு போயிருக்கும். ஆனால் தாய்மை உணர்வை பெற்றவள் தனக்கு கிடைத்த குழந்தைகளை பற்றிய பாச உணர்வை எந்த ஜென்மத்திலும் விடமாட்டாள் ஜென்மாந்திரத்தை கடந்தும் அவளுக்கு அந்த நினைப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் தான் அவள் தாய் என்று போற்ற படுகிறாள். வணங்க படுகிறாள். இரத்தமும் சதையுமான ஒரு பெண்ணை தெய்வ நிலைக்கு உயர்த்துவது தாய்மை என்ற நிலையே ஆகும். அந்த நிலையை குழந்தை மட்டுமே கொடுப்பதனால் நாடு மொழி மதம் இனம் கடந்த நிலையிலும் பெண்கள் தாய்மைப்பேற்றை பெறுவதற்கு போராடுகிறார்கள். 

ஒரு பெண்ணிடம் சென்று உன் உயிரை கொடு என்று கேட்டால் தாரளமாக எடுத்துகொள் என்று பதில் தருவாள். அதே பெண்ணிடம் உன் கணவனின் உயிரை எடுக்க போகிறேன் என்றால் முடிந்தால் எடுத்துப் பார் என்று பதில் சொல்வாள். தன் கணவனின் வீரத்தின் மீது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை. அந்த பெண்ணிடமே உன் குழந்தையின் உயிரை கொடு என்று கேட்டு பாருங்கள் பத்திரகாளி ஆகிவிடுவாள். கோபாவேசத்தோடு பாய்ந்து சென்று குழந்தையின் உயிரை கேட்டவனின் குரல்வளையை கடித்து இரத்தத்தை உறிஞ்சி விடுவாள். அன்பான அமைதியான மென்மையான பெண்மை கூட தாய் பாசத்தால் ஆயிரம் யானை வலிமை கொண்ட மகிசாசூர மர்த்தினி போல ருத்ர தாண்டவம் ஆடிவிடுவாள். 

இப்படி பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருமே தாய்மை என்ற தகுதிக்காக போராடுகின்ற போது தவிக்கின்ற போது சங்கர நாராயணனின் மனைவி மட்டும் அம்மாவாக ஆக முடியவில்லையே என்று வருத்தபடாமல் பாறை போல இறுகியா கிடப்பாள்? தினம் தினம் அந்த பெண் வடிக்கின்ற கண்ணீர் இறைவனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரியும். ஆனால் இறைவன் கருணையானவன் திக்கற்றவர்களுக்கு துணை வருகின்ற தீன தயாளன் அவன். நிச்சயம் தன்னை நம்பிய எவரையும் கைவிட மாட்டான் 

பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டுக்குரிய கிரகம் மறைவாக இருந்தாலும் ஐந்தாம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தாலும் கர்ப்ப தோஷம் உண்டு என்று வராகி மிகிரர் சொல்கிறார். இவர் மனைவி ஜாதகத்தில் அப்படி ஒரு நிலை இருக்கிறது. இந்த மாதிரி ஜாதகம் அமைந்தால் கர்ப்பம் சிதைதல் கர்ப்பபையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைகள் வரும். எனவே உங்களுக்கு மகப்பேறு தள்ளி போவதற்கான காரணம் புத்திர தோஷம் அல்ல கர்ப்ப தோஷம் என்று சொல்லலாம். 

கர்ப்ப தோஷம் விலகுவதற்கு மிக எளிதான பரிகாரங்கள் இருக்கின்றன. அவரவர் பகுதியில் உள்ள ஆலமர விழுதுகளில் செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் சிறிய அளவில் மரத்தொட்டில் செய்து தொங்க விட்டு மரத்தடியில் விளக்கேற்றி வணங்கி ஏழையான கர்பவதி பெண்களுக்கு ஆடை ஆகாரம் தங்களால் முடிந்த காணிக்கை கொடுத்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும். ஆலமரம் கிடைக்காத பகுதியில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளிலேயே சிறிய தொட்டில் செய்து பூஜை அறையில் வைத்து செவ்வாய் கிழமை தோறும் விளக்கேற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால் சரியாக மூன்று மாதத்திற்கு மேல் கர்ப்பம் நிச்சயமாக தங்கும். நம்பிக்கையோடு செய்தால் கைமேல் பலனை பெறலாம்.


Contact Form

Name

Email *

Message *