Store
  Store
  Store
  Store
  Store
  Store

நிழலைப் பார்த்துக் காதலி !

ராமாயண தொடர் பாகம் 2


     மிதிலை நகரத்திற்குள் விஸ்வமித்திரர் துணையோடு ராமனும் லஷ்மணனும் வருகிறார்கள். ராமன் மிதிலைக்கு வருவதை வால்மீகி இளைய சூரியன் உச்சி வானத்திற்கு வந்தோடு ஒப்பிடுகிறார். ராமாயணம் முழுவதும் சூரியனோடு ராமன் ஒப்பிட படுவதை காணலாம். அதற்கு காரணம் சூரியன் வானத்தில் மின்னுகின்ற ஒரு நட்சத்திரமாக இருந்தாலும் கூட அதனோடு ஒப்பிட கூடிய அளவிற்கு வேறு எதுவும் கிடையாது. சூரியனின் வெளிச்சம் அனைவருக்கும் சொந்தமானது அனைவரையும் வளர்ப்பது வாழ்விப்பது ராமனும் அப்படி தான் அவன் தசரத குமாரனாக இருந்தாலும் அயோத்தி மக்கள் ஒவ்வொருவருமே அவனை சொந்த குமாரானாகவே கண்டார்கள். ராமனுக்கு ஒரு மேன்மை என்றால் அது தாங்கள் பெற்ற மேன்மை ராமனுக்கு ஒரு கீழ்மை என்றால் அது தங்களுக்கு வந்த கீழ்மை என்று கருதினார்கள். ராமனும் தான் சொந்தங்களுக்கு மட்டுமே உரியவன் அல்ல உறவு முறைகள் என்ற சொந்தபந்தங்களை தாண்டி அனைவருக்கும் உரியவன் என்ற எண்ணத்திலேயே வாழ்ந்தான் வளர்ந்தான். 

விஸ்வமித்திர மகரிஷி அயோத்தி நகரத்திற்கு வந்த போது நேராகவே மன்னனை காண அரண்மனை சென்றார். ஆனால் அதே மகரிஷி மிதிலைக்கு வந்தபோது ஜனக மன்னனை காண அரண்மனைக்கு போகவில்லை. நகரத்திற்கு வெளியே தங்கி இருந்தார். அவரை காணவே மன்னன் வந்தான். இதற்கு காரணம் என்ன? அயோத்தி அரசன் பெரியவன் பரந்த தேசத்தை ஆளுகின்ற சக்கரவர்த்தி அதனால் அவனுக்கொரு மரியாதை சிறிய நாட்டை ஆள்வதனால் ஜனகனுக்கு ஒரு மரியாதை என்று பேதம் பாரட்டியா அரண்மனைக்கு போகவில்லை? என்ற சிந்தனை நமக்கு வரும். விஸ்வமித்திரர் அதை அப்படி கருதவில்லை. அவர் தசரதனிடம் சென்றது உதவி கேட்க. ஜனகனிடம் வந்தது உதவி செய்ய. உதவியை நாடி போய் கேட்டால் தான் மரியாதை நாமாக நாடி சென்று உதவி செய்தால் உதவி என்பதற்கு மரியாதை இல்லை. என்பதற்காகவே அவர் அரண்மனைக்கு செல்லவில்லை. ஆனாலும் மகரிஷி வந்திருக்கும் செய்தி மன்னனுக்கு எட்டியது மல்லிகைபூ வாசனை மூடி வைத்தாலும் எல்லை தாண்டி போவது போல் நல்லவர்களின் வரவும் தடைகளை தாண்டி சென்றே தீரும். 

நாட்டை ஆளுகின்ற மன்னன் காட்டில் வாழுகின்ற முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்குகிறார். கால்களில் விழுவது மன்னனா மக்களா என்று மகான்கள் காண்பதில்லை அனைவரையுமே ஆசிர்வதிப்பது அவர்களின் மரபு தவமுனியும் அதையே செய்தார். எழுந்து நின்ற மன்னன் பழுத்து முதிர்ந்து கிளைகள் பரப்பி விழுதுகள் விட்ட மரத்தின் அடியில் இரண்டு இளங்கன்று மரங்கள் நிற்பது போல நின்ற ராம லஷ்மணர்களை கண்டான். ஆடைகள் உடுத்தி வந்த ஆதவனை போல இருக்கின்ற இவர்கள் இருவரும் முனி குமார்களா? அரச குமாரர்களா? அல்லது மனிதர்களே இல்லாத தேவ குமாரர்களா? என வியாந்தான் வியப்பை அடக்காமல் மகரிஷியிடம் ஐயா யார் இவர்கள் அஸ்வினி குமாரர்கள் போல் தோற்றம் அளிக்கிறார்களே! இவர்கள் மனிதர்களா? தேவர்களா? என கேட்டான். மகரிஷி சொன்னார் மன்னா நீ நினைப்பது போல் இவர்கள் வானத்திலிருந்து வந்த தேவர்கள் அல்ல அயோத்தியிலிருந்து வந்த ராஜ குமாரர்கள். தசரத புத்திரர்கள். என்று சொல்லவும் மன்னனின் மனம் சற்று துணுக்குற்றது. இரண்டு இளைஞர்களை பார்த்தவுடன் அதுவும் இவர்கள் இளவரசர்கள் என்று தெரிந்தவுடன் மகிழவேண்டிய மன்னன் துனுக்குற்றதன் காரணமென்ன? 

தசரதனுக்கு மூன்று பட்டததரசிகள் அதில் மூத்தவள் கெளசல்யா இளையவள் சுமித்திரா மூன்றாவது அரசி கைகேயி இவள் கேகைய நாட்டு இளவரசி பல போர்களில் தசரதனுக்கு துணை நின்றவள். மிகபெரும் வீராங்கனை அரசியலில் ராஜதந்திரங்களை கற்று தேர்ந்தவள். தசரதனின் பல வெற்றிக்கும் நல்ல அரசு முறைக்கும் மூளையாக இருந்து செயல்படுபவள். இவளின் தந்தைக்கும் மிதிலை மன்னன் ஜனகனுக்கும் அரசியல் ரீதியான போட்டி உண்டு சில போர்களங்களையும் கண்டதுண்டு. நீறு பூத்த நெருப்பாக பகை இன்னும் புகைந்து கொண்டிருக்கிறதே தவிர தீர்ந்தபாடில்லை. அந்த நிலையில் கைகேயின் உயிருக்கு உயிரான மகனென்று கருதபடுகிற ராமன் தன் நாட்டிற்கு வந்ததை நல்லெண்ணம் என்று எடுத்து கொள்வதா? பகையின் தொடர்ச்சி என்று கருதுவதா? என்றே அவன் துணுக்குற்றான். ஆலகால விஷத்தையே உண்ட பரம்பொருளை உணர்தவரான மகரிஷி மன்னனின் மன இயல்பை உணராமலா இருப்பார்! நொடி பொழுதில் உணர்ந்து கொண்டார். அதனால் மிதிலை மன்னனே உனது அரண்மனையில் சிவதனுசு என்ற வில் இருக்கிறதாமே அதை காண்பதற்காக இளவரசர் இருவரும் வந்திருக்கிறார்கள் அதை பார்ப்பதற்கு ஏற்பாடு செய் என்று சொன்னார். மன்னன் மகிழ்ந்தான் பகைமுடிந்து உறவு பிறக்கும்  எல்லையில் அமைதி வருமென்று சிறிதளவு நம்பினான். 

அடுத்த நாள் காலை மிதிலை அரண்மனை வழக்கம்போல் துவங்கியது. தவமுனிவர் ஒருவர் அரசனை காண இரண்டு இளைஞர்களோடு வந்திருக்கிறார் என்ற செய்தி எங்கும் பரவியது. அதனால் மக்களின் கூட்டம் அரண்மனை வளாகத்தில் சற்று அதிகமாகவே இருந்தது. அந்த காலத்தில் ஆலயத்திற்கு சென்று ஆண்டவனை வழிபடுவதை விட தவம் செய்கின்ற அடியார்களை வழிபடுவதை மக்கள் பெரும் பாக்கியமாக கருதினார்கள் காரணம் உலகத்தையே தனக்குள் ஒடுக்கி கொண்ட இறைவனை தனக்குள் அடக்கி கொண்ட தொண்டர்களே வழிபடுவதற்கு ஏற்றவர் என்பது அப்போதைய சித்தாந்தம். அதனாலையே முனிவரை கண்டு வணங்க கூட்டம் அதிகம் இருந்தது. முனிவரும் வந்தார். அவர் பின்னால் இரண்டு இளைஞரும் வந்தார். முதலில் முனிவரை கண்ட மக்கள் அவர் பின்னால் நடந்து வருகின்ற இரண்டு குமாரர்களையும் கண்டவுடன் முனிவரை மறந்தார்கள் அவர் தவ வலிமையையும் மறந்தார்கள். இரண்டு இளைஞர்களின் இணையற்ற அழகில் தங்களையே மறந்து போனார்கள். என்றும் சொல்லலாம். அரண்மனைக்கு சென்ற மூவருக்கும் மரியாதையை செலுத்தப்பட்டது. இருக்கைகள் கொடுக்க பட்டது. சிவதனுசு என்ற மிக பிரமாண்டமான வில் ஒன்று அங்கே கொண்டு வைக்க பட்டது. 

ராமனும் லஷ்மணனும் வில்லை பார்த்தார்கள். ஒரு தாமரை மலர் சூரியனை கண்டால் எப்பாடி மலர்ந்திருக்குமோ அப்படியே இருவரின்  முகமும் மலர்ந்திருந்தது. தன் முன்னால் இருப்பது வலுவான ஆயுதம் இதை படைத்தது வைத்து பாவித்தது பரமேஸ்வரன் என்ற உணர்வு அவர்களுக்கு இல்லை. அழகான யானை குட்டி ஒன்றை ஆவலோடு பார்ப்பது போல அதை பார்த்தார்களே தவிர மிரட்சி அடையவில்லை. மன்னன் சொன்னான் மகரிஷி அவர்களே இந்த வில்லை வளைக்க மன்னர்கள் பலர் முயன்றிருக்கிறார்கள் மா வீரர்கள் பலர் தோள்தட்டி வந்திருக்கிறார்கள். வந்தவர் எவருமே இதை தூக்கி நிறுத்தும் திறமை கூட பெறவில்லை. தொட்டு தோற்றவர்கள் பலர் தொடாமலே ஓடியவர்கள் சிலர் என்று விளக்கம் சொன்னான். 

ஒரு மலரை தழுவும் சூரிய கதிரை போல சிவதனுசை இரண்டு இளைஞர்களும் பார்ப்பதை கவனிக்கிறார் மகரிஷி இவர்கள் இருவரும் தனுசை பார்த்து அச்சமடைந்திருந்தால் இந்த பார்வை இவர்களிடமிருந்து வராது. அனுபவத்தில் குறைந்தவர்கள் என்றாலும் நெஞ்சுரத்தில் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற முடிவுக்கு வந்த அவர் ராமா குழந்தாய் இந்த வில்லை எடுத்து வளை என்கிறார். ராமனை விஸ்வமித்திரர் குழந்தாய் என்று அழைப்பதை கவனிக்க வேண்டும் ராமன் அயோத்தியை விட்டு கிளம்புகின்ற போது அவனுக்கு பதினாறு வயது பூர்த்தியாகவில்லை என்று தசரதன் வருத்தபட்டான் என்பதை கவனித்தோம் பதினாறு வயது கூட நிரம்பாத பருவத்தான் என்று தகப்பன் வருத்தப்படலாம் காரணம் தான் பெற்றவனுக்கு அறுபது வயதானாலும் ஆறு வயது குழந்தையாக நினைப்பது தான் பெற்றோரின் சுபாவம் ஆனால் ராமன் உண்மையாகவே பதினாறு வயதும் நிரம்பாத பாலகன் அல்ல பதினெட்டு வயதை தொட்டுவிட்ட இளைஞன். ஆனாலும் விஷ்வாமித்திரரால் ராமன் குழந்தை என்றே அழைக்கபடுகிறான் அது ஏன்? தகப்பனைவிட பெரியவன் ஆசான் ஒரு குழந்தையின் தகப்பனே அதன் குருவிற்கு குழந்தை தான் அதனால் மகரிஷிக்கு ராமனும் குழந்தை தான் அவனது தந்தை தசரதனும் குழந்தைதான்.

ராமன் குழந்தையா? இளைஞனா? என்ற குழப்பம் கம்பனிடம் காணமுடியவில்லை கம்பனது பார்வையில் மிதிலைக்கு வருகின்ற ராமன் மீசை அரும்புகின்ற விடலை பருவமல்ல நன்கு வளர்ந்த வாலிபன் அதனால் ராமனும் சீதையும் கலப்பதை காந்தர்வ மணத்தோடு காண்பித்து கவிதா ரசனையை நமக்கு வளர்க்கிறார். மிதிலை நகரத்து ராஜ வீதியில் நடந்து செல்லுகின்ற போது கன்னி மாடத்தில் நிற்கும் சீத்தாவின் நிழல் பூமியில் தெரிவதை பார்க்கிறான். இதுவரை அவன் பார்த்த நிழல்கள் அனைத்துமே நிழலாகவே அவனுக்கு தெரிந்திருந்தது ஆனால் இப்போது பார்க்கும் அந்த நிழல் அவனுக்கு வெறும் நிழலாக தெரியவில்லை. ஒரு மோகன உருவத்தை பூமியில் வரைந்ததை போல இருந்தது. நிழலுருவே இத்தனை அழகென்றால் நிஜம் எத்தகைய அழகாக இருக்கும். என்ற எண்ணத்தில் நிழல் விழுந்த கன்னிமாடத்தை தலைநிமிருந்து பார்க்கிறான் உயரத்தில் நிற்கும் ஜானகியும் ராமனை பார்க்கிறாள். நடந்து செல்வது யாரென்று அவளுக்கு தெரியாது கன்னிமாடத்தில் நிற்பது இளவரசியா? பணிப்பெண்ணா? என்பதும் ராமனுக்கு தெரியாது. இருவரும் அதை பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் இருவருக்கும் காதல் வந்தது ஆள்பார்த்து அந்தஸ்து பார்த்து வருவதல்ல காதல் என்பதற்கு இந்த காட்சியே அத்தாச்சியாக இன்றுவரை இருக்கிறது.

ஜனகனின் மகள் சீதை மிகவும் அழகானவள் அவள் அழகை வர்ணனை செய்வதற்கு உலகில் உள்ள எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை அழகின் தெய்வமான மன்மதனே அவள் உருவத்தை வரைந்து பார்க்க ஆசைபடுவானாம் அதற்காக தேவர் உலகத்தில் கிடைக்கின்ற அமுதத்தை கொண்டுவந்து எழுதுகோலை தோய்த்து வரைய ஆரம்பித்தானாம் ஆனாலும் அவளது எல்லை இல்லாத வனப்பை வரைந்துவிட சக்தி அற்றவனாக விளுந்துவிட்டானாம் இதை கம்பன் 
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்னை 

யாதெனத் திகைக்குமல்லால் மதனர்க்கும் எழுத ஒண்ணாச் சீதை 

              என்று வியப்போடு கவிபுனைகிறான். இவளை பார்த்து நெஞ்சம் பறிகொடுத்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. அதனால் கம்பனின் கவிதை வெள்ளம் இன்னும் பெருக்கெடுத்து ஓடுகிறது. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற புகழ்பெற்ற கவிதை வரி அடுத்த அடியில் பாலில் விழுகின்ற பழத்துண்டாக வருகிறது. 

எண்ணரு நலத்தினாள் இனையள் நின்று உழிக் 

கண்ணோடு கண்ணினை கவ்வி ஒன்றை ஒன்று 
உண்ணவும் நிலைபெறாதுணர்வும் ஒன்றிட 
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் 

          இப்படி ஒருவரை ஒருவர்  கண்களால் பார்த்து காதலில் கட்டுண்டனர் இந்த காதலை விளக்குவதற்கு கம்பன் புராணங்களை துணைக்கழைக்கிறான் திருபாற்கடலில் பள்ளிகொண்ட திருமாலும் திருமகளும் அவதாரம் செய்வதற்காக தனித்தனியாக பிரிந்து பிறகு காலநேரம் வந்தவுடன் சந்திக்கிறார்கள் பிரிந்தவர் சந்தித்தால் பேசவும் வேண்டுமோ? அன்பால் பலகாலம் இணைந்து நீ இன்றி நானில்லை நானின்றி நீ இல்லை என்று வாழ்ந்தவர்கள் விதிவசத்தால் பிரிந்து மீண்டும் சேருகின்ற போது உணர்வுகள் மட்டுமே மேலோங்கி நிற்கும் வார்த்தைகளை உச்சரிக்க முடியாத அளவிற்கு நாவரண்டு விடும். இது எதார்த்தமான உண்மை இந்த உண்மையே காதலோடு கலக்கும் போது இன்னும் வலுவுடையதாக அழகானதாக மாறிவிடுகிறது. ராமன் சீத்தா இருவரின் சந்திப்பையும் சொல்லிக்கொண்டு வந்த கம்பன் திடிரென்று திருமலையும் திருமகளையும் அழைப்பது ஏன் என்ற கேள்வி நமக்கு வரும். இந்த உலகில் காதல் மணத்தை விரும்புகிறவர்களும் இருக்கிறார்கள் முகம் சுளிக்கிறவர்களும் இருக்கிறார்கள் இருதரப்பாரையுமே திருப்தி படுத்துவது கவிஞனின் கடமை. அதனால் தான் கம்பன் காதலை சொல்லும் கையோடு பழைய உறவையும் சுட்டிக்காட்டுகிறான். 

வீதியை கடந்து ராமன் சென்றுவிடுகிறான் ஆனால் சீதையின் மனதை கடந்து அவன் செல்லவில்லை. அழியாத ஓவியமாக அவள் மனதில் நிரந்தரமாக இடம்பிடித்து விடுகிறான். நேற்றுவரை உல்லாசமாக நெஞ்சில் பாரமில்லாமல் வாழ்ந்த சீதை இன்று இதயத்திற்குள் இனிய காதலன் புகுந்துவிட்டதனால் நெஞ்சுப்பாரம் தாங்க முடியாமல் தள்ளாடுகிறாள். காதல் என்ற நெருப்பு அவள் உடல் முழுவதும் பற்றி எரிய ஆரம்பிக்கிறது. உடல் கொதிக்கிறது தோழிகள் செய்கின்ற உபசாரங்கள் எதுவும் பயனில்லை மலர்கள் விரிக்கப்பட்ட பஞ்சணையில் அவள் படுக்க வைக்கபடுகிறாள். சீதையின் கோமள உடம்பை தொட்டவுடன் மென்மையான மலர்கள் கருகி விடுகின்றன அந்த அளவு அவள் காதல் நெருப்பால் தகிக்கிறாள். உடல் நோய்க்கு மட்டுமே மருந்து கொடுத்து பழக்கப்பட்ட அரண்மனை வைத்தியர்கள் உள்ளத்து நோய்க்கு என்ன மருந்து கொடுப்பது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள் அந்த மருந்து அடுத்த நாள் காலை அரண்மனை வளாகத்தில் வில்லை வளைப்பதற்கு வந்து நிற்கிறது. விஷ்வாமித்திரர் வில்லை வளை என்று சொன்னவுடன் ராமன் வில்லை தூக்கி நிருத்திகிறான் அது மட்டும் தான் அவையோர் கண்ணில் தெரிந்தது அடுத்ததாக அது உடைந்து விழுந்த ஓசை தான் கேட்டது. எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் என்று நொடிபொழுதில் நிகழ்ந்து விட்டதை கம்பன் பட்டு தெரித்தார் போல் வார்த்தையை சுருக்கி நம் கற்பனையை பெருக்கி விடுகிறார். 

அங்கு உடைக்கப்பட்ட சிவதனுசு சாதாரணமான வில் அல்ல சபைக்கு வந்த வில்லை எடுத்துவருவதற்கே பல மல்லர்கள் தேவைபட்டார்கள். இதற்கு முன்னால் வில்லை தொட்டவர்கள் சாதாரண நோஞ்சான்கள் அல்ல மலைப்போல உடம்பும் கடல்போல வீரமும் படைத்தவர்கள் அவர்களில் சிலருக்கு இதை தூக்க முடிந்தது சிலருக்கு அது கூட முடியவில்லை. அப்படிப்பட்ட வில்லை ராமனால் மட்டும் மிக சுலபமாக எப்படி வளைக்க முடிந்தது? கன்னிமாடத்தில் சீதையை கண்ட ராமன் தனது கூடாரத்திற்கு சென்றவுடன் அவள் நினைவாக உறங்க முடியாமல் தவிக்கிறான். வானத்திலிருந்து இறங்கிவந்த மின்னலை போலல்லவா அவள் இருக்கிறாள். ஒரே ஒரு பார்வை மட்டுமே என்னை நேருக்கு நேராக பார்த்தாள் அடடா  என்ன கொடிய விஷம் அவள் பார்வையில் அவள் விழியிலிருந்து வழிந்து வருகின்ற காதல் என்ற விஷம் தொடாமல் வெறும் கண்ணால் பார்த்த போதே இந்த அளவு என் சிந்தையை மயக்குகிறதே தொட்டால் கேட்கவே வேண்டாம் . மயக்கத்தில் சுயநினைப்பு இன்றி ஆண்டுகள் பல மயங்கியே கிடப்பேன் எங்கு பார்த்தாலும் பொன்மயமான அவள் உருவம் மட்டுமே தோன்றி என்னை தூங்க முடியாமல் தத்தளிக்க செய்கிறதே இதிலிருந்து விடுபட என்ன வழி என்று இரவு முழுவதும் உறங்காமல் தவித்து கொண்டிருந்த ராமன் எதிரே வில்லையும் சீதையையும் ஒரு சேர பார்த்த அவன் வில்லை வளைத்தால் தான் அவள் கிடைப்பாள் என்ற ஒரே நோக்கில் அவளுக்கு காதல் பரிசாக பூச்செண்டு கொடுப்பது போல் உடைந்த வில்லை கொடுத்தான் என்று கம்பன் வர்ணிக்கிறான். 

தங்கத்தின் பிரகாசம் மலர்களின் நறுமணம் சந்தனத்தின் குளிர்ச்சி மின்னல் போன்ற பளபளப்பு அன்னம் கூட அஞ்சி நடைபழகாமல் ஒதுங்கி நிற்கும் ஒய்யார நடை இவையெல்லாம் ஒருங்கே திரண்ட சீதை தோழியர்கள் புடைசூழ மண்டபத்திற்கு வருகிறாள் நட்சத்திரங்கள் மத்தியில் சுடர்விடும் முழு நிலாவை போல வந்த அவள் ராமனுக்கு மாலை இடுகிறாள். சபையோர் மகிழ்கிறார்கள் ஆனந்த ஆரவாரம் செய்கிறார்கள் மகனை அனுப்ப மாட்டேன் என்று அடம்பிடித்த  அரசன் தசரதன் நன்றி பெருக்கால் விஷ்வாமித்திரை கால்களில் பலமுறை விழுந்து வணங்கிறான். தனியாக சென்ற மகன்   பெறுவதற்கரிய பொக்கிஷத்தோடு அல்லாவா திரும்பி வந்திருக்கிறான் மிதிலை நகரமே தன் வீட்டில் தன் பிள்ளைக்கு திருமணம் நடப்பது போல விழா கோலம் பூண்டுவிட்டது ஆரவாரம் வேத கோசம் மேளதாளம் முழங்க ராமனுக்கும் சீத்தாவுக்கும் திருமணம் நடக்கிறது கூடவே அவன் தம்பிமார்களுக்கும் சீதாவின் சகோதரிகளுக்கும் மணம் முடிகிறது. எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது மகனையும் மருமக்களையும் அழைத்து கொண்டு தசரதன் அயோத்திக்கு வருகிறான். வருகின்ற வழியில் பாதையை மறைத்து கொண்டு பரசுராமன் நிற்கிறான் தசரதன் வெற்றியை மட்டுமே இதுவரை அறிந்தவன் முதல் முறையாக அச்சத்தோடும் நடுக்கத்தும் பரசுராமன் கால்களில் விழுகிறான்.
Contact Form

Name

Email *

Message *