Store
  Store
  Store
  Store
  Store
  Store

இலங்கையை புத்தர் சபிக்கிறார்...!     ருணை என்ற வார்த்தையை கேட்டவுடன் நமது கண் முன்னால் உடனடியாக தோன்றும் உருவம் இரண்டு ஒன்று அண்ணல் மகாத்மா காந்தியின் திருவுருவம் மற்றொன்று ஆசிய ஜோதியான கெளதமபுத்தரின் புனித உருவம். புத்தன் ஒரு புதிய பாதையை உருவாக்கியதே கருணை என்ற உணர்வு மக்கள் மத்தியில் பரவ வேண்டும் என்பதற்காக ஆசையை விடு என்று சொன்னதும் பற்றுகளை அறு என்று சொன்னதும் கருணை உணர்வு மக்கள் மனதில் ஊற்றெடுத்து பெருகி பொங்கி பிரவாகமாக நாலாபுறமும் பாய வேண்டும் என்பதற்காகவே. அன்று புத்தன் நடந்த பாதை எங்கும் கருணை மலர்கள் கணக்கின்றி மலர்ந்தது புத்தனின் நிழல்பட்ட பாறைகூட அன்பு நெருப்பால் உருகி ஓடியது. அப்படிப்பட்ட புத்தனின் கொள்கைகளை கடைபிடிக்கிறேன் அதன்படியே ஆட்சி செய்ய முற்படுகிறேன் என்று இலங்கையின் அதிபர் அவரது நாட்டில் பலமுறை பேசி இருக்கிறார். 

கொலை தொழில் செய்வதையே தனது கோட்பாடாக வாழ்வின் லட்சியமாக கொண்ட ஒருவன் அன்பை பற்றியும் அஹிம்சையை பற்றியும் பேசுவது போல இருக்கும் அவரது பேச்சு. ஒரு நாட்டு அதிபரை குறை சொல்ல வேண்டும் இழிவு படுத்த வேண்டும் என்பது நமக்கு நோக்கமல்ல. ஒரு அதிபர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது நாட்டு நலத்தை காப்பாற்றுவதற்காக சில வன்முறைகளை கையாளுவது அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அதே நேரம் நாட்டு நலன் என்று சொல்லி கொண்டு சொந்த நாட்டு மக்களை பழிவாங்க வேண்டும் இன ரீதியில் வேரறுக்க வேண்டும் என்று செயல்பட்டால் மனித சமூகம் வேடிக்கை பார்த்து கொண்டு அது உள்நாட்டு விவகாரம் அதில் தலையிட கூடாது என்று இருக்க முடியாது. இலங்கை அதிபரின் செயல் இதுவரை உலகத்தில் ஆட்சி செய்துள்ள சர்வதிகாரிகள் எவருமே செய்திராத படுபாதக செயலாகும். 

ஹிட்லர் யூதர்களை இரக்கமே இல்லாமல் கொலை செய்தவராக இருந்தால் கூட அதற்கு அரசியல் காரணம் சில இருந்தது கொலைகளை நியாயபடுத்த முடியாது என்றாலும் ஹிட்லரின் தேச பற்று அந்த கொலைகளை மறைக்க கூடியதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால் ராஜபச்சேயின் கொலை தொழில் தேச பற்றால் வந்தது அல்ல நிரந்தரமாக பதவியில் அமர்ந்து கொள்ள போடுகின்ற கோர நாடகம் என்பதை அறியும் போது மனிதாபிமானமே இல்லாதவனுக்கு கூட மனம் கொதிக்கும். 

இலங்கையில் விடுதலை புலிகள் செய்தது அனைத்துமே தவறு என்று வைத்து கொள்வோம் அவர்களை ஒழித்து கட்டினால் தான் தேசம் நன்மை பெரும் என்று அதிபர் நம்பியது சரியென்றே ஒரு வாதத்திற்கு ஒத்துகொள்வோம் அதற்காக என்ன செய்ய வேண்டும்? அரசுக்கு எதிராக போராடுபவர்களின் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கலாம் யுத்தத்தில் பங்கு பெற்ற விடுதலை புலிகளை நேருக்கு நேராக நின்று சுட்டும் தள்ளலாம். யுத்தகால கோபம் உச்சிக்கு போய்விட்டால் கைதானவர்களை சரணடைந்தவர்களை சட்டங்களை மதிக்காமல் கொன்றும் போடலாம். அதற்காக ஒன்றுமே அறியாத அப்பாவிகளை அரசியலுக்கு அப்பாற்பட்ட மனித உயிர்களை காவு கொள்வது எந்த வகையில் நியாயம்? 

பசியால் துடிதுடிக்கும் காட்டு புலி கூட பட்சிளம் குழந்தையை கண்டால் தின்னாது விட்டு விடும் என்று கற்பனையான கதைகளில்  படித்திருக்கிறோம். முரட்டு தனம் செய்யும் சண்டி காளைகள் கூட தான் ஓடி வருகின்ற போது வீதியிலே குழந்தைகள் வந்தால் அவர்களை தாண்டி ஓடுவதை கண்ணுக்கு நேராகவும் கண்டிருக்கிறோம் மாற்று இனத்து  குஞ்சி என்று  தெரிந்தால் கூட காகம் குயில் குஞ்சிக்கு இரை கொடுப்பதை கேள்வி பட்டிருக்கிறோம். பகுத்தறிவு இல்லாத ஐந்தறிவு மிருகங்கள் கூட குழந்தைகள் என்று வரும் போது கரிசனத்தோடு நடந்து கொள்வதை மறுக்க முடியாது. ஒரு கொலைகாரன் கூட குழந்தையை கொல்வதற்கு அஞ்சுவான் மனம் பேதலித்து போன பைத்தியகாரன் மட்டுமே குழந்தைகளை கொலை செய்வான். 

இரத்த வெறியில் பித்து பிடித்து போன மனிதனாகவே இலங்கை அதிபரை காண முடிகிறது. படித்த நாகரீகம் கொண்ட ஒரு மனிதராக அவரை எண்ணி பார்ப்பதற்கு  மனம் கூசுகிறது. பிரபாகரனுக்கும் அவருக்கும் தான் தகராரே தவிர  பிரபாகரனின் மகனுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் என்ன தகராறு? பத்து வயது பையனுக்கு அரசியலை பற்றி என்ன தெரியும்? அவனை கொலை செய்ய வேண்டிய அவசியம் ஒரு அரசாங்கத்திற்கு என்ன இருக்கிறது.  பிரபாகரனே இல்லை என்று ஆனபிறகு அவரது சின்னஞ்சிறிய மகன் சர்வ வல்லமை பொருந்திய இலங்கை அரசை என்ன செய்து விட முடியும்? பிறகு எதற்க்காக அவனை கொல்ல வேண்டும்? 

இலங்கையின் வரலாறு தெரியாத எவரும் ஒரு இராணுவ வெறியாட்டத்தின் தவறுதலான விளைவே இந்த படுகொலை என்று நினைப்பார்கள். தெரிந்த எவரும் இதை அப்படி நினைக்க மட்டார்கள். இலங்கையில் தமிழன் என்பவன் வேண்டாத குப்பை . வெறுத்து ஒதுக்க வேண்டிய கள்ளி  செடி அவனை அழிக்க வேண்டும். சாதாரணமாக அல்ல வேரோடு பூண்டற்று போகும் படி அழிக்க வேண்டுமென்ற என்ற வெறி சிங்க அரசியல்வாதிகள் , சிங்கள அதிகாரிகள் ஒவொருவரின்  இரத்தத்திலும் துடியாக துடித்து கொண்டிருப்பதே இந்த செயலின் புறவடிவம் என்று உணர்ந்து கொள்வார்கள். 

யாகத்தில் பலியிட வைத்த ஆட்டுக்குட்டிக்காக தனது உயிரையே கொடுக்க துணிந்தார் புத்தர். அவரது புனித உடமைகளை சொந்தமாக வைத்திருக்கும். நாட்டில் ஆடுகள் மட்டுமல்ல குழந்தைகளும் பலியிட படுகிறார்கள். இத்தகைய கொடுமை செய்த இவர்கள் இன்று சிரிக்கலாம் ஆனால் இந்த சிரிப்பு நிரந்தரமல்ல என்று நாளைய சரித்திரம் கண்டிப்பாக உலகிற்கு எடுத்து காட்டும் காரணம் புத்தன் அவர்களை சபிக்க துவங்கி விட்டான். அன்பானவன் நெஞ்சிலிருந்து அனலான வார்த்தை வந்தால் அது அகிலத்தையே சாம்பலாக்கும்.Contact Form

Name

Email *

Message *